Saturday, 25 October 2014

மனிதன் வாழ்வாங்கு வாழ

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

மனிதன் வாழ்வாங்கு வாழ முதலில் தேவையானது அழகோ - பொருளோ - கல்வியோ அல்ல. நல்ல பண்பட்ட மனமும் நோய் இல்லா உடலுமேயாம். பண்பட்ட மனதை உருவாக்கும் வல்லமை அவரவர் கையிலேயே இருக்கின்றது. 

அதற்கு பெரியோர் நேயம் மிக மிக அவசியம். நிலத்தை உழுது மண் வளத்தை பண்படுத்தல் போல மனதை உழுது உளத்தை பண்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கல் - முள் - வேண்டாத செடி, கொடி  போன்றவற்றை எடுத்து எறிந்து உழவர் பண்படுத்துவரே! அதே வேலையை நாம் நம் உளத்திற்கும் செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள இழிவான போட்டி - பொறாமை - வஞ்சனை - சூது - வாது - காமம் - கோபம் - மூர்க்கம் - பேராசை யாவற்றையும் தூக்கி குப்பையோடு குப்பையாகப் போட்டு எரித்துவிட வேண்டும். அப்படி பக்குவப் படுத்திய மனதில் அன்பை - கருணையை - பரிவை - காதலை - பக்தியை - அமைதியை - வீரத்தை - தீரத்தை வளர்த்துக் கொண்டால் உள்ளம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடும். அந்த வெள்ளத்தில் தழைத்த இன்ப மலர்கள் வாழ்க்கையின் வசந்தமாய் வீசும்.

“சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்” நன்கு சித்திரம் வரையும் எமக்கே சித்திரம் பற்றி சொல்வதாக எண்ணற்க. இப்பழமொழி சொல்வது வாழ்க்கைச் சித்திரம். நாம் வாழும் வாழ்வை ஒவ்வொரு கணமும் சித்திரமாக வரைந்தபடி இருக்கின்றோம். வாழ்வெனும் சித்திரத்தை மிக அழகாக வரைய உடல் தேவை. அதற்கு நோயற்ற யாக்கை [உடல்] வேண்டும். அளவான நித்திரை - அளவான உணவு - அளவான உடலுழைப்பு இருக்க வேண்டும். எதுவும் அளவு மீறிப் போகக் கூடாது.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

வளி - காற்று. வளி முதலா எண்ணுதல்: வாதம் - பித்தம் - கபம் [சிலோத்துமம்] என கையின் நாடித்துடிப்பை எண்ணுதல். வாதம் அது வளி - வாயுவால் வருவது, பித்தம் அது அழல் - சூடு - சூட்டால் வருவது. கபம் அது சேடம் - நீர்த்தன்மையான தாதுக்களால் வருவது. இந்த மூன்று நாடிகளில் துடிப்பின் எண்ணிக்கை கூடினும் குறையினும் நோய் உண்டாகும். 

அத்துடன் வள்ளுவர்
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றன் நெடிதுய்க்கும் ஆறு”
எனவும் “துய்க்க துவரப் பசித்து” எனவும் சொல்வர். உண்ட உணவு அற்றுப்போய் நன்றாகப் பசித்த பின்னர் உண்ண வேண்டுமாம். அதுவும் அளவோடு - உண்ணும் அளவை அறிந்து உண்ண வேண்டுமாம்.

படிப்படியாக ஏறி உயரவேண்டும். கல்வியோ, பொருளையோ தேடுதலில், தன்னைப் பேணிக் கொண்டு - தானாகிய முதலைப் பாதுகாத்துக் கொண்டு - நடக்கவேண்டும். நல்ல நண்பர்களையும் பெரியோர்களையும் தேடிக்கொள்ளலும் ஒரு பெரிய செல்வந்தான். மனிதரில் பதரில்லை. எவர்களையும் வெறுக்காது, பகையை வளராது, விரோதம் பாராட்டாது, ஒப்புரவொழுகிப் பழக வேண்டும். ஆபத்துக்கு உதவுவோரை நன்றிமறவாது நினைத்து வாழவேண்டும். என்ன இவை எல்லாம் எமக்குத் தெரியுந்தானே என்று நினைக்க வரும். என்றாலும் மீட்டுப்பார்பதும் நன்றல்லவா?


Friday, 24 October 2014

அடிசில் 87

உழுத்தங்களி
- நீரா -      

தேவையான பொருட்கள்:
உழுத்தம் மா - ½ கப்
அரிசி மா -  ¾ கப்
தேங்காய்த் துருவல் - 1½ கப்
சர்க்கரை - ¾ கப்
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
உப்பு - ½ சிட்டிகை

செய்முறை: 

 1. தேங்காய்த்துருவலை மிக்சியில் இட்டு அரைக்கப் தண்ணீர்விட்டு அரைத்து, முதற்பாலை வடித்து எடுத்துக்கொள்க. 
 2. பிழிந்த தேங்காய்த்துருவலுக்குள் நான்கு கப் தண்ணீர் விட்டு மீண்டும் அரைத்து பாலை வடித்து எடுக்கவும்.
 3. இந்தப்பாலை வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, உழுத்தம் மா, அரிசிமா, சர்க்கரை, உப்பு நான்கையும் சேர்த்துக் கரைத்து, முதற்பாலில் அரைவாசியையும் விட்டுக் கலக்கவும்.
 4. அப்பாத்திரத்தை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து துளாவி அடிப்பிடியாது கிண்டவும்.
 5. மாக்கரைசல் இறுகி வரும்போது நல்லெண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிண்டி, களி முழுவதும் திரண்டு, கிண்டும் கரண்டியுடன்  வரும்பொழுது இறக்கவும்.
 6. மிகுதியாக இருக்கும் முதற்பாலில் களியைத் தொட்டு உண்ணலாம்.

Monday, 20 October 2014

ஏழையெனக்கு அருள்வதற்கே!

அன்னைமுன் அமர்ந்து நல்ல
அழகு தமிழ் பாடல் சூட
என்தமிழை உண்ணி மனம்
எங்கும் தேடல் உற்றேன்
கன்னித்தமிழ் தாயவளும் இன்ப
கரும்பென பாடல் தந்தாள்
என்னதவம் செய்திட்டேன் ஏழை
         எனக்கு அருள்வதற்கே

Sunday, 19 October 2014

வாழ்க்கையின் தத்துவம்!


வாழ்க்கையின் தத்துவம் சொல்ல வந்தேன்
வயதில்லை எனக்கென்று எண்ண வேண்டாம்
வாழ்க்கை தந்திடும் பாடங்கள் கோடி
வாடிய வயிற்றுடன் கஞ்சிக்கு ஓடி
வாழ்க்கையின் பாடங்கள் கற்றவர் கோடி
வறுமையின் பிடியினில் வாழ்க்கையைத் தேடி
வாழ்ந்திடக் கற்றவர் கோடானு கோடி
வறுமையைப் போக்க வளமதைத் தேடி
வாழ்ந்திட நினைக்கும் மானுடர் கேட்பீர்!
வறுமை என்பதை வளமது போக்கா
வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டின் நிதம்
வறுமையில் செம்மையாய் வாழ்ந்திட வேண்டும்
வாழ்க்கையின் முடிவே பிடிசாம்பல் தானே
வாழ்க்கையின் தத்துவம் வேறென்ன கண்டீர்!
                                                - சிட்டு எழுதும் சீட்டு 93

      

Saturday, 18 October 2014

ஆசைக்கவிதைகள் - 97

குணமயிலே தூங்காதே!

ஆண்: சடசடென மழை பொழிய
         சரிசாம வேளையிலே
குடைபிடித்து நான் வருவேன்
         குணமயிலே தூங்காதே!
- நாட்டுப்பாடல் (மன்னார்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Thursday, 16 October 2014

குறள் அமுது - (97)

குறள்:
பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை                   - 322

பொருள்:
தம்மிடம் உள்ளவற்றை பிரித்து கொடுத்து உண்பதோடு பல உயிர்களையும் காப்பதே அறிஞர்கள் தொகுத்து தந்த அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாகும்.

விளக்கம்:
உலகவாழ்க்கையின் இயல்பை நன்றாக ஆராய்ந்து கற்றுத் தெளிந்த அறிஞர்கள் மனிதர் எப்படி வாழ்ந்தால் இன்பமாக வாழலாம் என்பதை எமக்காகத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். ‘ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்’ ‘நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை’ ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ ‘செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்’ ‘தன்னைப் போல பிறரையும் நேசி’ ‘உண்டிக்கழகு விருந்தோடு உண்ணல்’ ‘இரந்தோர்க்கு ஈவது உடையோர் கடனே’ என எத்தனையோ விதத்தில் பல நூல்களில் பல அறிஞர்கள் பகுத்து உண்டு வாழ்தல் சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 

உணவை உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்ணவேண்டும் என்பதை எதற்காகத் திருவள்ளுவர் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்கிறார் என்பதை கொஞ்சம் சிந்திக்கவேண்டும். உயிர்களை அடித்துத் துன்புறுத்தி, வெட்டி, குத்தி, சுட்டுக் கொல்வதை மட்டுமே கொலையெனக் கருதுகிறோம். உயிர்களுக்கு உணவைக் கொடுக்காது பட்டினி போட்டும் கொல்ல முடியும். ஆதலால் உண்ண உணவும் நீரும் கொடுத்து உயிர்களைக் காத்தல் தலைசிறந்த செயலாகும். விலங்குகள், தாவரங்கள் யாவுமே உயிர்கள் தான். தாவரங்களுக்கு வேண்டிய நீரை எடுத்துக் கொள்வதால்  அவை நீரின்றி வாடி வதங்கி அழிவதால் நிலம் பாழாகிறது. அதனாலேயே திருவள்ளுவரும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பு’ என்பதை கொல்லாமை அதிகரத்தில் சொல்லியிருக்கிறார்.

தான் சொன்னதை நாம் கேட்காவிட்டாலும் என்ற காரணத்தால் நூல்களை ஆராய்ந்து கற்ற அறிஞர்கள் தொகுத்துத் தந்தவற்றுள் பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் தலை சிறந்தது என்று எடுத்துக் கூறியுள்ளார். தனக்கென வாழாது தன்னிடம் இருப்பவற்றை பிரித்துக் கொடுத்து உண்பதோடு உலக உயிர்களையும் தன்னைக் காப்பது போல பாதுகாத்து பிறர்க்கென வாழ்தலே தலைசிறந்தது என்பதை மனிதர் யாவரும் உணரும் போது இவ்வுலகம் இன்பமயமாகும். 

Wednesday, 15 October 2014

இரு மருந்து

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -


மருந்து - நோய் தீக்க வல்லது. மருந்து செய்வோன் - மருத்துவன். இறைவனுக்கு 'பிறவிப்பிணி மருத்துவன்' என்று ஓர் அழகிய பெயர் உண்டல்லவா?
உலக உயிர்களுக்கு பிறவிப்பிணி இருப்பது போல் பசிப்பிணியும் இருக்கின்றது. பிணி - நோய். பிறவிப்பிணி - உயிர்களை மீண்டும் - மீண்டும், பிறந்து - பிறந்து, வாழ்ந்து - வாழ்ந்து  இறக்கத் தூண்டும் நோய். பசிப்பிணி - உயிர்கள் எவ்வளவுதான் ஆசையோடு உணவை தேடித் தேடி உண்ணினும் மீண்டும் - மீண்டும் பசியைத் தூண்டி உண் - உண் என உண்ணச் செய்யும் நோய். இவ்உலக உயிர்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு முதன்மைக் காரணியாய் இருப்பது பசிநோயே.

இயற்கையோடு உலகவுயிர்கள் ஒன்றும் வரை இவ்விருபிணிகளும் தொடரும். ஆனால் பிறவிப்பிணியை நீக்க தேவர்கள் கண்டுபிடித்து அருந்திய தனிமருந்தே அமிர்தம். தேவர்கள் அமிர்தத்தை உண்ண - அம்பலத்தே ஆடும் மருந்து நஞ்சை உண்ட கதை அறிவீர்கள். அதனால் அவன் பிறவிப்பிணி மருத்துவனானான்.

பசிப்பிணியைப் போக்க இதுவரை மருந்து காண்பாரில்லை. எனினும் நேரத்துக்கு நேரம் ஓரளவு உணவை உண்டு பசியைப் போக்கி, பசி நோயைக் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கலாம். உண்ணாமல் தின்னாமல் பொருள் - பொருள் என்று உழைத்து மாள வேண்டியதில்லை. முதலில் உண்டு, உடுத்து வாழவேண்டும்.

உயிர் வாழ்வதற்கு - பசிப்பிணியைப் போக்க உணவு மட்டும் போதுமா? இல்லை - தண்ணீரும் வேண்டும். உணவையும் நீரையும் தருவோர் யார்? உழவர் அல்லவா! ஆதலால் உழவரை பசிபிணி மருத்துவர் என்பர்.

“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே”
நிலன் - நிலத்தில் விளையும் உணவுகள். நீரும் நிலனும் என்றாலும் நீரும் நெல்லும் என்றாலும் ஒக்கும்.

உயிர்களின் பசியை ஓரளவு போக்கவல்ல மருந்துகள் இரண்டு. அவ்விரு மருந்தையும் ‘நீரும் சோறும்’ - ‘நீரும் நிலனும்’ - ‘நீரும் நெல்லும்’ எனப் போற்றினர். நீரும் உணவும் என இரு மருந்துகள் பசியைத் தீர்ப்பதால் அவை இருமருந்தாயிற்று.

“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்”
புறநானூறு, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நீர் - உணவு ஆகிய இருமருந்து விளைவிக்கும் நல்ல நாட்டுத் தலைவன் என்று புகழ்கிறது. அவன் நீரையும் விளைவித்தான் - குளங்களைக் கட்டினான் - குளத்து முற்றத்திலே துஞ்சினான் - இறந்தான். 

Sunday, 12 October 2014

அடிசில் 86

காளான் பிரட்டல்
- நீரா -      

தேவையான பொருட்கள்: 
காளான்  - 300 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ½ கப்
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - ½ தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
வெந்தயம் - ½ தே.கரண்டி
கடுகு - ½ தே.கரண்டி
சீரகம் - ½ தே.கரண்டி
பால் - 1 மே.கரண்டி 
எண்ணெய் -½ மே.கரண்டி 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. காளானை கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்க.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
3. கடுகு வெடித்ததும் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய்  சேர்த்து பொன்னிறமாக பொரிய விடவும்.
4. அதற்குள் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி, காளானைச் சேர்த்து பிரட்டி, உப்புச்சேர்த்து  மிதமான சூட்டில் வேகவிடவும். [காளான் வேக காளானில் இருக்கும் தண்ணீர் போதுமானதால் தண்ணீர் விடத்தேவையில்லை].
5. காளான் வெந்ததும் பெருஞ்சீரகத்தூள் இட்டுக் கிளறி, பால் சேர்த்து வேகவிட்டு குழம்பு வற்றி பிரட்டலாகவரும் போது இறக்கவும்.

Saturday, 11 October 2014

கருவின் உயிராய்!

பக்திச்சிமிழ் 83

கருவின் உயிராய் உயிரை இயக்குவது எது? இந்தக் கேள்விக்கு விடை சொன்னவர்கள் எல்லோரும் ஒரே விடையைச் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு பதில்களையே சொல்கின்றனர். அவர்களுள் திருமூலர் அறிவியல் முறைப்படி கொஞ்சம் ஆராய்ந்து சொல்கிறார் எனக்கொள்ளலாம். 

கருவின் உயிராய் உயிரை இயக்கி மானுட வடிவு எடுக்க வைக்கும் பொருள் பற்றி ஆராய்ந்து பல திருமந்திரங்களில் திருமூலர் கூறியிருக்கிறார். இன்றைய அறிவியல் எமக்கு எடுத்துச் சொல்லாதனவற்றையும் சொல்கிறார். அவற்றுள் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தாயின் கர்ப்பப்பையினுள் இருக்கும் கருவின் தொழிற்பாட்டுக்கு தேவையான காற்றின் பாகுபாடு பற்றியும் அத்திருமந்திரம் சொல்கிறது. அத்திருமந்திரம் என்ன சொல்கின்றது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

“போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தெனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே”
                                - (ப.திருமுறை: 10: 2: 14: 7)

போகின்ற எட்டு: நாவில் சுவை, கண்ணில் ஒளி, காதில் ஓசை [சத்தம்], மூக்கில் நாற்றம் [மணம்], மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய எட்டும் ஆண் பெண் இன்ப வேட்கைப் புணர்ச்சியின் கணத்தில் தொழிற்படாது போகும். ஊறு என்று சொல்லப்படும் தொடுகை உணர்வின் உச்சவெளிப்பாடாகவே விந்தின் வெளிப்பாடு அமைவதால் ஐபுலன்களில் ஒன்றான உடல் [மெய்] தவிர்ந்த ஏனைய நான்கு புலன்களின் உணர்வுகளையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று சொல்லப்படும் அந்தக்கரண உணர்வுகளையும் சிற்றின்பப் புணர்ச்சியின் போது உணரமுடியாது.

சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழிவகுத்தது என்பது எமது முன்னோர் கண்ட முடிவாகும். அதனாலேயே பாரதியாரும்
“புலன்களோடு கரணமும் ஆவியும் 
        போந்து நின்ற விருப்புடன் மானுடன் 
நலன்கள் ஏது விரும்புவன் அங்கவை 
        நண்ணுறப் பெறல் திண்ணம்” என்றார்.

உடல் தவிர்ந்த புலன்கள் நான்கும் கரணங்கள் நான்கும் ஆகிய எட்டுமே தொழிற்படாது போகின்ற எட்டாகும்.

புகுகின்ற பத்தெட்டு: பத்து + எட்டு = பத்தெட்டு. உடலின் தொழிற்பாட்டுக்கு தேவையாய் உடலினுள் இயங்கும் பத்து வாயுக்கள். தாய் தந்தையரின் மரபணுக்கள் சுமந்து வரும் எட்டு குணங்கள். ஆகமொத்தம் பதினெட்டு.

பத்து வாயுக்கள்:
பிராணன்: பத்து வாயுக்களிலே தலைசிறந்த வாயு பிராணன். கண், காது, வாய், மூக்கு பகுதிகளில் இருக்கும்.இதனை ஒட்சிசன் என்று கூறமுடியாது. ஆனால் அது போன்றது. உடலெங்கும் இயங்குவது.
வியானன்: எமது உடலின் சக்தியை சமமாகவைத்திருக்க உதவுவது. உடலெங்கும் இயங்குவது. உடலில் இருக்கும் நாடிகள் வழியாக வியானான் இயங்குகிறது.
அபானன்: மூலாதாரப் பகுதியில் இருப்பது. பெருங்குடல் முதல் குதம் வரை இயங்கும். கழிவுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்புகளை இயக்கும். இது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
சமானான்: உண்ட உணவு செரிக்க உதவும். இதுவே செரித்த உணவை உடலெங்கும் கொண்டு சென்று அந்தந்த உறுப்புக்கு தேவையான அளவு சக்தியைக் கொடுக்கிறது. தொப்பூழைச் சுற்றி இருப்பது. அதாவது உடம்பின் நடுவே இருக்கும்.
உதானான்: தொண்டை, நெஞ்சு, மூக்கு, தோள்பட்டை பகுதியில் இருப்பது. உயிருள்ள உடலில் இருக்கும் சூட்டிற்கு உதானனே காரணம். உதானன் வெளியேறுவதாலேயே மரணத்தின் பின் உடல் குளிர்கிறது. அதனால் மரணத்தின் பின் உயிரின் பயணத்திற்கு உதவுவதும் இதன் தொழிலாகும்.
நாகன்: தொண்டைப்பகுதியில் இருப்பது. விக்கல், ஏப்பம், வாந்தி என்பவற்றை உண்டாக்கும்.
கூர்மன்: கண்ணில் இருப்பது. கண் இமைப்பதற்கும், விழித்தெழுவதற்கும் உதவுகின்றது.
கிருகரன்: மூக்கில் இருப்பது. மணங்களை நுகர்வதற்கும், தும்மல், பசி உண்டாக்குவதற்கும் உதவுகின்றது.
தேவதத்தன்: நெஞ்சில் இருப்பது. கொட்டாவி விட உதவுகின்றது.
தனஜ்சயன்: உடலெங்கும் இருப்பது. கருவின் உயிருள் முதல் புகும் வாயு தனஜ்சயனே. உயிர் உடலைவிட்டு போனாலும் இது உடலைவிட்டுப் பிரியாது, உடல் மண்ணோடு மண்ணாகும்வரை இருக்கும். தனஜ்சயன் இறந்த உடலை வீங்கச்செய்து, நாற்றம் எடுக்க வைக்கும். இறந்த பின் மண்ணுள் புதைத்த உடலில் உள்ள மயிரை வளரச்செய்வதும் தனஜ்சயனின் தொழிற்பாடாகும்.

இந்த பத்து வாயுக்களின் தொழிற்பாட்டை ஆராய்ந்து கண்டறிந்தவர்கள் தமிழர்களே என்பதை இவ்வாயுக்களின் பெயர்களில் வரும் இறுதி எழுத்து ‘ன்’ என தமிழுக்கே உரிய ‘ன’கரத்தில் முடிவதால் அறியலாம். 

எட்டுக்குணங்கள்:
காமம்: ஆண், பெண் இனக்கவர்ச்சியால் ஏற்படும் இன்பவேட்கைக் குணமாகும்.
குரோதம்: தீராத பகை. அழியாப் பகையை மனதில் சுமந்து வாழும் குணமாகும்.
உலோபம்: கடும்பற்றுள்ளம். தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்காத குணமாகும்.
மோகம்: அதிகூடிய காமத்தால் மயங்கும் குணமாகும். 
மதம்: அதாவது செருக்கு. தன்னைவிடச் சிறந்தவர் இல்லை என்னும் மமதைக் குணமாகும்.
மாச்சரியம்: மற்றவர்கள் தன்னிலும் நன்றாக வாழ்வதை, படிப்பதை, முன்னேறுவதைக் கண்டு பொறாமை கொண்டு அவர்களைக் கெடுக்க நினைக்கும் குணமாகும்.
தம்பம்: பகட்டுக்கு மயங்கி, ஆடம்பரமாக வாழ நினைத்தல் மற்றவர்களை குறைவாக நினைக்கும் குணமாகும்.
அகங்காரம்: தான் என்ற முனைப்பு. இறுமாப்புடன் செயற்படும் குணமாகும்.
இந்த எட்டுக்குணங்களும் கருவிலே தோன்றி, குழந்தைப் பருவத்தில் தளிர்விட்டு, இளமைப் பருவத்தில் உடன் வளர்ந்து இச்சைப் பருவத்தே மலர்ந்து மணம் வீசி, உயிர் உடலைவிட்டு போகும்வரை இருக்கும். அவற்றின் வெளிப்பாடுகள் உயிர்களுக்கு உயிர் வேறுபடும். பிறந்து வளரும் சூழலும், மரபணுக்களின் தொழிற்பாடுகளும் அதற்குக் காரணமாகும்.

மூழ்கின்ற முத்தன்: உயிர் - ஆன்மா. கருப்பையின் உள்ளே ஒரு திரவம் இருக்கிறது அல்லவா? அதனுள் கரு மூழ்கிக் கிடப்பதால் திருமூலர் மூழ்கின்ற முத்தன் என உயிரைக் குறிப்பிடுகிறார். அதாவது கர்ப்பபையினுள் இருக்கும் அம்நியோட்டிக் திரவத்தினுள் [Amniotic fluid] முத்தாக உயிர் கொண்ட கரு மூழ்கும் என்கிறார்.

ஒன்பது வாய்: 
கண் துவாரங்கள் இரண்டு
மூக்குத் துவாரங்கள் இரண்டு
காதுத்துவாரங்கள் இரண்டு
வாய்த் துவாரம் ஒன்று
மலவாசல் துவாரம் ஒன்று
சலவாசல் துவாரம் ஒன்று
ஆக மொத்தம் மனித உயிருக்கு ஒன்பது வாசல் இருப்பதையே ஒன்பது வாய்தலும் என்றார்.


நாகம்: மூளையின் தொடர்ச்சியாய் தொடர்ந்து வரும் முண்ணானின் அமைப்பை திருமூலர் நாகம் என்று கூறி, மூலாதார சக்தியின் தொழிற்பாட்டைக் குறிப்பிடுகிறார்.

எட்டுடன் நாலு புரவியும்: வெளியுலகில் இருந்து உயிரின் இயக்கத்துக்காகச் செல்லும் எட்டு கெட்டவாயுக்களையும் நான்கு நல்ல வாயுக்களையும் புரவி [குதிரை] என்கிறார். அவை மூச்சுக் காற்றாக எமக்குள் மிக விரைவாக உட்சென்று வெளிவருவதால் குதிரை என்றார். மேலே குறிப்பிட்டவற்றை இயற்கை என்று சொல்லப்படும் பாகன் [இறைவன்] உயிரினுள் புகவிடாவிட்டால் அந்த உயிரின் பிறப்பானது பன்றியைப் போல இழிவானதாக இருக்குமாம்.

இவையாவும் கருவின் உயிராய் உள்புகுந்து இயங்காவிட்டால் உயிரேது? இவ்வுலகேது?
இனிதே, 
தமிழரசி.

Friday, 10 October 2014

என்கண் இரண்டும் உறங்காதே!


நம் தாய் நாடாம் ஈழத்திருநாட்டை விட்டு வந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இரண்டாவது தலைமுறையும் உருவாகிவிட்டது. எனினும் தாய் மடியின் சுகத்தை யாரால் மறக்கமுடியும்? ஈழத்தமிழ் நாட்டின் இயற்கை வளத்திற்கு ஈடாக எதைச் சொல்லமுடியும்? எந்த ஒரு பொருளின் அருமையும் கையில் இருக்கும் பொழுது தெரியாது. எம் கையைவிட்டு நழுவிப்போன பின்பே நாம் எதைத் தொலைத்தோம்? அதன் பெறுமதி என்ன? என்பவற்றை உணரத்தொடங்குவோம். அப்படி தாய்நாடாம் ஈழத்திருநாட்டை நினைத்து அதன் எழிலை அசைபோடும் போதெல்லாம் நெஞ்சம் பாடும் பாட்டிது.

சங்குமுழங்கும் தமிழ்நாடன் தன்னை நினைத்த போதெல்லாம்
பொங்குகடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்களுறங்கும் புள்உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம்
எங்கும்உறங்கும் இராக்காலம் என்கண் இரண்டும் உறங்காதே
                                                         - (விவேகசிந்தாம்ணி - 39)

அதிகாலையில் கோயில்களில் சங்குகள் ஊதும் முழக்கம் கேட்கும் தமிழ்நாடன் [ஈழத்தமிழ் நாடு] தன்னை நினைத்த போதெல்லாம் அவனது நாட்டைச்சூழ [ஈழநாட்டைச் சூழ] சீறிப்பாய்ந்து பொங்கி எழும் கடல் அலை என்றும் உறங்காதிருக்க, பொழுது விடியாது அந்த நாள் நீண்டு செல்ல, நிலவும் மறைய, பறவைகளும் உறங்க, மெல்ல அசையும் தென்றற்காற்றுக் கூட வீசாது உறங்கும், கொஞ்ச நேரமாவது எல்லா இடத்திலும் இரவு நேரத்தில் யாவும் உறங்கும் ஆனால் என் இரண்டு கண்ணும் உறங்காதே!

உண்மையில் இந்தப்பாடல் ஈழநாட்டிற்குப் பாடப்பட்டதல்ல. ஒரு காதலி தன் தமிழ் நாட்டுக் காதலனை நினைந்து பாடிய பாடல். ஆனால் அதே பாடலை கொஞ்சம் மாற்றி

“சங்குமுழங்கும் ஈழநாடு தன்னை நினைத்த போதெல்லாம்
பொங்குகடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
திங்களுறங்கும் புள்உறங்கும் தென்றல் உறங்கும் சிலகாலம்
எங்கும்உறங்கும் இராக்காலம் என்கண் இரண்டும் உறங்காதே!”

எனப்படித்துப் பாருங்கள் என் கண் இரண்டும் உறங்காதது போல் உங்கள் கண்களும் உறங்காது.
இனிதே,
தமிழரசி.

Thursday, 9 October 2014

மகராசியற்கொரு வார்த்தை!

திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

மக்களைப் பெற்றுமகிழ் மகராசியற்கு கொரு
  வார்த்தை சொலக் கேண்மினே
மானுடப் பிறவியிது தேடுதற் கரிதுபெறின்
  மாண்புபெறு கல்வி வேண்டும்
பக்கத்தி லுள்ளவரும் வாழவேண்டும் நீவீர்
  பகையா திருக்க வேண்டும்
பரமனடி தொழவைத்து மதலையரை வளருங்கள்
  பண்புதான் உயர் செல்வமாம்
மிக்கநிதி நீண்டிடில் நீதிக்கு மீயுங்கள்
  மிஞ்சுவது புகழொன்று தான்
மயனாரின் மகளாய் மாந்தைபதி வாழ்ந்தவருள்
  மங்கை மனமகிழ் நாதராய்  
தக்கனையும் எச்சனையும் தடித்த பெருநீதியாய்த்
  தழைத் துலகமான தருவே
தர்மவுரு வாய்வந்து தென்கையிலை மேவிவளர்
  சச்சிதா னந்த மலையே!

Tuesday, 7 October 2014

ஆசைக்கவிதைகள் - 96

வண்ணமலர் சோலையிலே!

ஆண்: வண்ணமலர் சோலையிலே
                   வாசமுண்டு வீட்டினிலே
          சண்பகத்தின் வாசமல்லோ என்
                 தையலுட மேனியல்லாம்.
                                   - நாட்டுப்பாடல் (மன்னார்)  
                                                  -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Monday, 6 October 2014

புங்கைநகர் வளர்ப்போம்!மாடு வளர்ப்போம் மற்றும் அதனருகே
காடு வளர்த்து கழனிகள் செய்வோம்
ஊடே நீர்நிலைகள் சமைத்து நிலத்தின்
பாடு பார்த்து பக்குவம் செய்வோம்
வாடும் வயல்கள் இன்றி வளங்கொழிக்க
ஓடும் நீர்கால்வாய் பலவும் செய்வோம்
தேட மரநிழல்கள் இன்றி தெருக்கள்
வாடும் நிலை தகர்த்தெறியச் செய்வோம்
வீடு சமைக்க நிலமரங்கள் வெட்டும்
கேடு கெட்ட குணத்தை குழிபறிப்போம்
பாடு பட்டே பயிர்வளர்த்து நாளும்
நாடு வளர்ப்போம்! புங்கைநகர் வளர்ப்போம்!
                                            - சிட்டு எழுதும் சீட்டு 92

Sunday, 5 October 2014

குறள் அமுது - (96)


குறள்: 
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று                                - 1000

பொருள்:
பண்பு இல்லாதவனுக்கு கிடைத்த பெருஞ்செல்வம், பாத்திரத்தில் உள்ள அழுக்கால் நல்ல பால் திரிந்து போதல் போலப் பயனில்லாது போகும்.

விளக்கம்:
ஒன்றின் தன்மை அல்லது குணம் பண்பு என்ப்படும். சுடச்சுட ஒளிவிடுதல் பொன்னின் தன்மையாகும். அதனைப் பொன்னின் பண்பு என்றும் சொல்வர். அதுபோல் மனிதருக்கு என்று சில பண்புகள் இருக்கின்றன. அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சியோடு பழகல், இரக்கம், பிறருக்கு உதவுதல், தன்னை நேசிப்பதுபோல் ஏனைய உயிர்களையும் நேசித்தல் போன்றன மனிதப்பண்புகளாகும். அத்தகைய மனிதப் பண்பு இல்லாதோரை திருவள்ளுவர் பண்பிலான் என்கிறார்.

அத்தகைய பண்பில்லாத ஒருவனுக்கு வீடு, காணி, பொன், பொருள், அழகிய நல்ல மனைவி, அறிவுள்ள பிள்ளைகள் என்று பெரிய செல்வம் கிடைத்தாலும் அவை யாவும் வீணாய் அழிந்து ஒழிந்து போகுமாறு செய்வதையே அவன் தனது குணமாகக் கொண்டு தொழிற்படுவான். அவனுக்குக் கிடைத்த அரிய பொருட்களின் பெருமதியை அவன் அறிவதற்கு அவனது மனிதப்பண்பில்லாத்தன்மை அல்லது மூர்க்க குணம், கோபம், தான் எனும் அகங்காரம் என்பன இடம் கொடுக்காது. அதனால் அவன் தமது முன்னோரது சொத்தையும், சீர்தனமாகப் பெற்ற பொருட்களையும் மட்டுமல்லாமல் தான் உழைத்தவற்றையும் வீணே பகட்டுக்கு மயங்கி அழித்தும், ஊதாரித்தனமாகச் செலவு செய்வதோடு தான் பெற்ற பிள்ளைகளையும் மனைவியையும் துன்புறுத்துவதில் இன்பம் காண்பான்.


பண்பில்லாதவனின் இச்செயல்களால் அவனுக்குக் கிடைத்த அளப்பரிய நல்ல செல்வம் அழிந்து போதல், நல்ல பசுப்பாலை பாத்திரத்தில் ஊற்றி வைக்கும் போது அந்தப் பாத்திரத்திலுள்ள அழுக்கு - புளிப்பு - பற்றீரியா போன்ற தன்மைகளால் கெட்டு எவருக்கும் உதவாது திரைந்து போதல் போன்றது. அத்துடன் அப்படித் திரைந்த பால் இருக்கும் பாத்திரமும் உதவாது போதல் போல பண்பில்லாதவனின் குடும்பமும் மற்றவர்களின் முன் தலைகுனிந்து வாழவேண்டிய நிலைக்கு வரும். ஆதலால் நாம் நம் குழந்தைகளுக்கு மனிதப்பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும்.

Friday, 3 October 2014

அடிசில் 85

அன்னாசிக்கறி
 - நீரா -      

தேவையான பொருட்கள்:
சிறிய அன்னாசி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3பொரிக்க
கடுகு - ½ தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
கறிவேற்பிலை - கொஞ்சம் 
செத்தல் மிளகாய் - 2
எள்ளு - 1 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி
பழப்புளி - சிறிதளவு 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 

 1. அன்னாசியின் தோலைச்சீவி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்க.
 2. செத்தல் மிளகாய், எள்ளு, தேங்காய்த்துருவல் மூன்றையும் தனித்தனியே மணம் வரும்வரை வறுத்து அரைத்துக்கொள்க.
 3. ஒருகப் தண்ணீரில் பழப்புளியைக் கரைத்து வைத்துக் கொள்க.
 4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் இட்டுத் தாளிக்கவும்.
 5. தாளிதம் பொன்னிறமாக வரும்பொழுது அதற்குள் வெட்டிய அன்னாசி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளரவும்.
 6. அவை இரண்டு நிமிடம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள கூட்டையும் கரைத்த புளியையும் விட்டு கலந்து வேகவிடவும்.
 7. கறிதடித்து வரும்போது இறக்கவும்.

Thursday, 2 October 2014

மனிதர் அநுபவிக்கும் சுவைகள்

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -


“நீயார்! எல்லாவற்றையும் இயக்கிச் சரிவர ஓர் அணுவும் பிசகாது நடாத்த, அந்த (இறை) இயற்கை இருக்கிறது. அது சரியாய்த் தான் நடாத்துகின்றது. நீர் உம்முடைய வேலையைப் பாரும்” என்று மகரிஷிகள் உணர்ந்து சொல்கிறார்கள். இதனை - இந்த “மகாவாக்கியத்தைக்” கேட்டுக் கந்தருவர் வீண்வம்பு மேசாமல், வீண் விடயங்களில் தலை வைக்காமல், இந்த வானமண்டலத்தில்  காதல் மீதுரக் கலந்து ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து நீந்தி விளையாடி வீணை வாசித்து நடமாடி மகிழ்ந்து வாழ்கிறார்களாம்.

வீண்கதைகள் பேசி, வம்பு வளர்த்து, மனத்தாபாப்பட்டுக் கொள்ளும் வழக்கம் படித்த குடும்பங்களிலும் இடையே நுழைந்து விடுகின்றது. அந்த வழக்கதை துணிவுடன் அகற்றி சிட்டு கணவன் மனைவியர் “கந்தருவர்” வாழ்வு வாழ வேண்டும். கந்தருவர் வாழ்வாவது பிறரைப் பற்றி வீண்வம்பு பேசாது, காதலொருமித்து இன்பமாக வாழ்தலே. இறைவனைச் சரணடைந்து வாழல் எனினும் மிகையாகாது.

எண்சுவை - மனிதன் அநுபவிக்கும் சுவைகள் எட்டுவகை. இவை நாவின் சுவையன்று. மனித உள்ளத்து உணர்வின் சுவை. ஒவ்வொரு மனிதரும் இச்சுவைகளை வெளிப்படுத்துவர். அதனை வள்ளுவர் மிகச்சுருக்கமாக அடுத்தது காட்டும் பளிங்கு போல என்கிறார். இச்சுவைகளைக் கொண்டு மனிதரை எடை போடலாம்.

அவை:
 1. நகை - சிரிப்பு
 2. அழுகை
 3. இழிவரல் - தீராநோய், வருமை இவற்றால் உளதாகும் தாழ்வு மனப்பான்மை.
 4. மருட்கை - அற்புதம்; பூனை ஒன்று ஆனையாகி நடந்து போதல். இப்படியே மனத்தை மருளப்பண்ணும் சத்துவம் [சுவை].
 5. அச்சம் - பயம்
 6. பெருமிதம் - அளவுக்கு மிஞ்சிய செல்வம் - கல்வி - அதிகாரம் - இவற்றால் வருவது.  இறுமாப்பு எனினும் ஒக்கும்.
 7. வெகுளி - கோபம்
 8. உவகை - மகிழ்ச்சி - மேலே சொன்ன கந்தருவச்சுவை. 

இந்த எண்சுவையும் தமிழர் கண்டது - தொல்காப்பியம் பகர்வது.
மனிதரில் நிகழும் சுவைகளை - உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை சத்துவங்கள் என்பர். இந்த எட்டுந்தாண்டிய நிலையில் ஒரு சுவை உண்டு. அது ‘சமநிலை’ - இந்தச் சமநிலை சான்றோரின் மனநிலை. மேலேயுள்ள எட்டில் ஒன்றும் இந்தச் சமநிலை உடையோனை அசைக்காது.
“செஞ்சா தெறியினும் செத்தினும் போழினும்
நெஞ்சஞ் சோர்ந்தோடா நிலை”

எல்லாம் அவன் செயல் என்று நன்றும் தீதும் அவன் தந்தவை. “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்ற மெய்யுணர்வாளர் கண்ட உண்மை நிலை. இந்த நிலையை நாம் பழகிக் கொண்டால் கவலையற்று மகிழ்வோடு வாழலாம். பக்திவயப்பட்டு, தானே அவனான நிலையில் கேட்டதெல்லாம் இறை தரும்.