Sunday 29 June 2014

அடிசில் 83

தேங்காய்ப்பூ இனிப்பு
- நீரா -      

தேவையான பொருட்கள்:
உலர்ந்த தேங்காய்ப்பூ - 200 கிராம்
டின் பால் [Condensed Milk] - 200 கிராம்
ஐசிங் சுகர் [Icing Sugar] - 200 கிராம்
வனிலா - 1 தேக்கரண்டி
கலரிங் - ½ தேக்கரண்டி
பட்டர் - 1 தேக்கரண்டி

செய்முறை: 
1.  ஒரு தட்டத்தில் பட்டரைப் பூசி வைக்கவும்
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சீனி, டின்பால், வனிலா மூன்றையும் சேர்த்து மரக்கரண்டியால் மென்மையாக வரும்வரை நன்றாகக் கலக்கவும்
3. அக்கலவைக்குள் தேங்காய்ப்பூச் சேர்த்து கலந்து உங்கள் கையால் ரொட்டிக்கு மா குழைப்பது போல் பிசைந்து கொள்க.
4.  அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்து இரண்டு பாத்திரத்தில் எடுத்துக் கொள்க.
5.  ஒரு பாத்திரத்தில் இருக்கும் தேங்காய்ப்பூக் கலவையுள் கலரிங்கை விட்டு, தேங்காய்ப்பூ முழுவதும் அந்த நிறத்தில் வரும்வரை நன்றாகப் பிசையவும்.
6.  பட்டர் பூசிய தட்டில் அக்கலவையைக் கொட்டி அழுத்திப் பரவவும்.
7.  அதன் மேல் வெள்ளைக் கலவையைக் கொட்டி மட்டமாகப் பரவி அழுத்தி வைக்கவும்.
8.  அதனை மூடி 5 - 6 மணி நேரம் வைக்கவும்
9.  விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்க.

குறிப்பு:
1. இந்த இனிப்பைச் செய்ய அடுப்போ நெருப்போ தேவை இல்லை. 
2. தேங்காய்ப்பூவை மூன்றாகப் பிரித்து விரும்பிய நிறங்களைக் கலந்தும் செய்யலாம்.

Friday 27 June 2014

தமிழிசை - 1


மனிதமனம் அழகுணர்ச்சி உடையது. இனிமையை விரும்புவது. அந்த இனிமையை இசையில் கண்டவன் மனிதன். இசை மனிதமனத்தைப் பண்படுத்துகின்றது. மொழியிணர்வைக் கடந்து மனிதரை ஒன்றுபடச் செய்யவல்லதும் இசையே. இசைக்கு மொழிவேறுபாடு கிடையாது. ஆதலால் இவ்வுலகின் தனிமொழி இசையாகும். இசை என்ற சொல்லானது மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது என்ற கருத்தைத் தரும். அது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் இன்பத்தைத் தருவது, எழில்மிக்கது, எழுச்சியைக் கூட்டுவது, வீரத்தை ஊட்டுவது, இறையுணர்வை பெருக்குவது யாவும் இசையேயாகும்.

இசையால் இறைவனை இசைவித்தவன் இராவணன். அதாவது இறைவனை தன்வயப்படுத்தியவன். ஆதலால் சமயகுரவர் நால்வராலும் போற்றப்பட்டவன். சிறுகுழந்தையான சம்பந்தரின் மழழையில் “ஏழிசையாழ் இராவணன்” எனப்பாடப்பட்டவன். திருநீற்றின் பெருமையை கூறிய இடத்திலும் “இராவணன் மேலது நீறு” என்று மந்திரம் செய்திருக்கிறார். அவரின் கண்ணுக்கு மற்றைய எல்லோரது உடம்பிலும் பூசிய திருநீற்றைவிட, இராவணன் உடம்பில் இருந்த திருநீறே தெரிந்திருக்கிறது. ஏன்? அவன் தூய்மையான சிவபக்தன். அத்தகைய சிவபக்தனும், இசைவல்லவனுமான இராவணன் வாழ்ந்த நாடு, நம் நாடு. எனவே இசையைப் போற்றி, இசையோடு [புகழோடு] வாழவேண்டியது எமது கடமை.

திருநாவுக்கரசரும் சூலைநோயின் வயிற்றுவலியால் 
“தேற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு
             துடக்கி முடக்கியிட  
ஆற்றேன் அடியேன்”
எனக் கதறுகிறார். அந்த ஆற்றா நிலையிலும்
“சலம்பூவொடு தூப மறந்தறியேன்
           தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்”
என்று தமிழோடு இசைபாடுவதை தான் மறப்பதில்லை என அழுத்திச் சொல்லி இருக்கிறார். 

அதன் உண்மையை சுந்தரமூர்த்தி நாயனார் 
“நீர் தமிழோடு இசை கேட்கும் 
           இச்சையால் காசு நித்தம் நல்கினீர்”
என்று திருவீழிமிழலையில் இறைவன் திருநாவுக்கரசரின் தமிழிசையைக் கேட்டு, காசு கொடுத்ததைச் சொல்லுமிடத்தில் உறுதிப்படுத்துகிறார். 

தமிழ் இசை அது மிகமிகப் பழமையானது. பழந்தமிழ் உரைஆசிரியர்கள் தரும் உரையிலிருந்து தமிழிலே பல தமிழிசை நூல்கள் இருந்திருப்பதை அறியலாம். இசை நூல், இசை நுணுக்கம், இசைக்கூறு, இசை விளக்கம், பாட்டும் பண்ணும், பாடற் பண்பு, பண் அமைதி, பண்வரி விளக்கம், தாள சமுத்திரம், தாளவகையோத்து, சிற்றிசை, பேரிசை போன்ற பலவகைப்பட்ட இசைநூல்கள் அந்நாளில் இருந்ததை பட்டியலிட்டிருக்கிறார்கள். எத்தகைய உன்னத நிலையில் தமிழிசை இருந்திருந்தால் இத்தனை தமிழிசை நூல்கள் உருவாகியிருக்கும்?

பண்டைத் தமிழ்மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும், நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் இராகங்களைப் பாடிவந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன. பழந்தமிழ் இசைநூல்களில் அழிந்ததாகக் கருதப்பட்ட பஞ்சமரபு என்ற நூலில் கிடைத்த பாடல்களைத் தொகுத்து ‘பஞ்சமரபு’ என்ற பெயருடன் வெளியிட்டிருக்கிறார்கள். வாத்திய மரபு என்ற நூல் ஓலைச்சுவடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்திருக்கிறது. இன்றைய இசையறிவுக்கும் எட்டாத பல அரிய கருத்துக்களை இந்நூல்கள் தருகின்றன. பண்டைய தமிழிசை நூல்கள் மட்டுமல்ல கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் யாவுமே தமிழிசையின் தொன்மையைப் புலப்படுகின்றன. இவற்றுக்குக் காரணம் என்ன?  சிந்திப்போமா?
இனிதே,
தமிழரசி.

Wednesday 25 June 2014

காலை நேரக் கடற்கரைக் காட்சி

- எழுதியது வாகீசன் -

கடற்கரையில் நின்றுகொண்டு கதிரவன் உதிப்பதைக் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை என்னுள்ளே பலகாலமாக இருந்தது.  அந்த ஆசையைத் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. என் நண்பன் ஒருவன் தன் வீட்டில் என்னை வந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டான். அவன் வீடு கன்னியாகுமரிக்கு அருகே இருந்ததால் நான் அங்கு சென்றேன்.

அதிகாலையிலே விடிவெள்ளி கிழக்கு வானிலே பவனி வந்தது. கோழிகள் கூவின. குருவிகள் கீச்சு கீச்சு என சத்தம் போட்டன. சங்குகள் முழங்கின.  ஆலயமணிகளின் ஓசை பக்தர்களை அழைத்தன. நான் மெல்லக் கண் விழித்து, என் நண்பனையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றேன்.

குளிர் காற்று என் உடலை வருடிச் சென்றது.  அக்காற்றை நுகர்ந்த போது உடலிலே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. கிழக்கு வானம் சிவந்திருக்க அந்தக் கடல் நடுவே குன்றின் மேல் தெரிந்த விவேகானந்த மண்டபமும், கடற்கரையில் இருந்த குமரி அன்னையின் திருக்கோயிலும், மகாத்மா காந்தி நினைவு மண்டபமும் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டின.


அவை மட்டுமா? நீலக்கடல் அலைகள் ஏறி நுரை சீறி ‘ஓ’ என்று கதறி ஓலமிட்டு விழுந்தன. பாவம் அந்தக் கடலலைகள். இராமனுடன் வந்த வானரர்கள் கடலைக் கடந்து இலங்கை செல்ல மிதித்த வருத்தம் தாங்கமாட்டாது இன்றும் ‘ஓ’ என அழுகின்றன. 

கடற்கரையை அடுத்திருந்த மீனவக் குடிசைகளும், கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகளும் அந்தச் செவ்வானத்தின் ஜாலத்தில் ஒரு திறமை மிக்க ஓவியன் வரைந்த காட்சியாய் விரிந்தன. நடுக்கடலிலே மிகமிகச் சிறிய புள்ளிகளாய்த் தோன்றிய படகுகள், கரையை நோக்கி விரைந்து வந்தன. அமைதியாக இருந்த கடற்கரை படகுகளின் வரவால் மீனவர்களின் சுறுசுறுப்பைப் பெற்று விழித்து எழுந்தது.

கடலில் முத்துக் குளித்து எழுந்து வருபவன்போல சூரியன் செக்கர் வானத்திடையே எழுந்து வந்தான். சூரியனும் தன் இலட்சியத்தை நாடிச் செல்ல, கன்னியாகுமரிக் கடற்கரையில் இருந்த மக்களும் தத்தமது இலட்சியத்தை நாடி நடைபோட்டனர்.

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனைப் பயன் படுத்தலாம்]

இறைவனை அடைய சிறந்த வழி என்ன?




உலக உயிர்கள் யாவும் உயிர் எனும் தன்மையால் ஒன்றுபடுகின்றன. உயிர் என்னும் தன்மை எங்கே  இருக்கிறது? அதாவது உயிர்நிலை எங்கே தங்கி இருக்கிறது? உயிரே அன்பில் தங்கி நிற்கிறது என்கிறார் திருவள்ளுவர்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு’
அன்பு என்பது ஓர் இன்ப ஊற்று. நீர் ஊற்றுக்கள் இடத்துக்கு இடம் நிலத்துக்கு நிலம் மாறுபடுவது போல அன்பும் உயிர்களுக்கு உயிர் மாறுபடுகிறது. ஆனால் அன்பின் வழிப்பட்டதாய் உயிர்நிலை இருப்பதால் அன்பெனும் இன்ப ஊற்றில் திளைக்கும் உயிர்கள் அன்பு வடிவாய் இருக்கின்றன. 'அப்படி அன்பை வெளிப்படுத்த முடியாதோர், உயிர் அற்ற வெற்று எலும்புக் கூட்டை தோலால் போர்த்தியிருக்கும்  பிணமே ஆவர்' என்கிறது இந்தத் திருக்குறள். 

இன்னொரு விதத்தில் சொல்வதானால் அன்பு என்னும் இன்ப ஊற்றாம் அருள் வெள்ளம் பாய்கின்ற வழி உயிராகும். அன்பே சிவம் ஆதலால் சிவத்தின் அருள் வெள்ளம் பாயும் வழியே உயிராகும் என்றும் சொல்லலாம். அதனால் அன்பெனும் சிவத்தின் அருள் வெள்ளம் பாயும் உடலே உயிருள்ள உடம்பாகும். அப்படியில்லாத உடம்பு வெறும் பிணமே. எனவே உடல் இருப்பது அன்பு பாய்ந்து செல்லும் வழியாகிய உயிரைப் பாதுகாக்கவே.

அன்பென்னும் இன்ப ஊற்று பாய்ந்து பாய்ந்து உணர்வோடு ஒன்ற - உள்ளே பாயும் அருள் வெள்ளத்தில் உடல் என்னும் தன்மை கரைந்து உருகிப் போக அதனுள் நின்ற உயிர் அன்பாய் சிவமாகும்.

நாம் நாமாக வாழ்ந்து கொண்டு, நம் அன்பை பிற உயிர்கள் இடத்தில் பெருக்கினால் போதும் இறைவனை அடையும் வழியில் நாம் எட்டி நடைபோடத் தொடங்கிவிடுவோம். அதனை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் 
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் - தெய்வம் 
உண்மை என்று தான் அறிதல் வேண்டும்” 
என்றார். தெய்வம் நம்மோடு அன்புவடிவாய் இருக்கும் உண்மையை நாமேதான் அறிந்து கொள்ள வேண்டும்.

எமக்குள் இருக்கும் அன்பாம் சிவனை உணர்ந்து அறிய முடியாதவர்களாக நாம் வாழ்கிறோம். ஆனால் எம்மைப்போல் மானுடனாய்ப் பிறந்த திருமூலர், ‘எலும்பை விறகாக எரித்து, தசையை அறுத்து அந்த நெருப்பில் பொரியலாக வறுத்தாலும் அன்போடு உருகி மனம் குளிர்வார்க்கு அல்லாமல் தன்னைப்போல் தெய்வமணியை [இறைவனை] அடையமுடியாது’ என்று தனது மார்பில் தட்டிச் சொல்கிறார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குளிர்வார்க்கு அன்றி
என்போல் மணியினை எய்தல் ஒண்ணாதே          
                                                -  (திருமந்திரம்: 272)

இறைவனை அடைவதற்கு அன்போடு உருகி மனம் குளிர்வதே சிறந்த வழியாகும் என்கிறது இத்திருமந்திரம். எனவே  கோயில்களிலும், குருக்கள்மாரிடத்திலும், சுவாமிமாரிடத்திலும் இறைவனை அடையும் வழியைத் தேடுவதை விடுத்து திருமூலர் சொல்வது போல் நாமும் அன்போடு உருகி எமது உள்ளத்தே இறைவனைத் தேடுவோம்.
இனிதே,
தமிழரசி.

Tuesday 24 June 2014

கடிந்தாண்டு கொள்வாயா!



எல்லாப் பிழை தனையும்
எனதாக்கிக் கொண்டேனை
சொல்லாமல் வந்து நற்
சோதியும் காட்டி
வல்ல இறைவன் நின்
வகையெலாம் காட்டி
கல்லாய் இருப் பேனைக்
கடிந்தாண்டு கொள்வாயா!

இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்;
சோதி -  மலம் நீங்கிய ஆன்ம அறிவு
நின் வகையெலாம் - இறைவனின் பலவடிவங்கள்
கல்லாய் - உணர்ச்சியற்ற கல்போல்
கடிந்து - கண்டித்து

Monday 23 June 2014

பரிதவித்தேனே!
















ஏரிக்கரை ஓரத்திலே
ஏறிநின்றேன் மரத்தின் மேலே 
மாரிமழைக் காற்றினிலே 
மாறிமாறிக் கிளையசையயிலே 
வீரிக்கொண்டு பாறயிலே 
வேரோடு மரம்வீழ குளத்தினுளே 
நாரிநானும் கிடக்கயிலே 
ஆள்விழுங்கும் வெண்கரடி ஒன்றே 
பீரிக்கொண்டு பீறயிலே 
பாழுடலும் மாள பரிதவித்தேனே!
                                         - சிட்டு எழுதும் சீட்டு 88 

சொல்விளக்கம்:
ஏரி - குளம்
வீரிக்கொண்டு - சத்தத்துடன்
பாறுதல் - சிதருதல் / நொறுங்குதல்
நாரி - பெண்
பீரிக்கொண்டு - வலிமை கொண்டு
பீறல் - பிளத்தல்
பாழுடல் - அழியும் உடல்
மாள - அழிந்துகொண்டிருக்க
பரிதவித்தேனே - துன்பப்பட்டேனே 

Friday 20 June 2014

ஆசைக்கவிதைகள் - 91


சொன்ன சொல்லை அளந்தோம் இல்லையே!

பெண் மனம் ஆழம் காணமுடியாத கடல் என்பது ஆண்கள் கண்ட முடிபு. உண்மையில் எந்த ஒரு மனித மனத்தின் ஆழத்தையும் எவராலும் கண்டறிய முடியாது.

மாந்தையில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் ஒரு இளநங்கையைக் காதலித்தான். ஏதோ ஒரு காரணத்தல் அவள், அவனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ஏற்பட்ட மனவேதனையால் விண்ணையளந்து எங்கெங்கே கோள்கள், நட்சத்திரங்கள்  நிற்கின்றன? என்பதையும், கடலையளந்து கடலடி மண்ணில் என்னென்ன இருக்கின்றன என்பதையும் அறிந்து விட்டோம் ஆனால் பெண்ணின் சொல்லை அளக்க முடியவில்லையே எனக் கலங்கிய நாட்டுப்பாடல் இதோ.

காதலன்: விண்ணை அளந்தோம் கடல்
            மண்ணை அளந்தோம்
       பெண் சொன்ன சொல்லை 
            அளந்தோம் இல்லையே
                                       -  நாட்டுப்பாடல் (மாந்தை)
                                                        (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இந்த நாட்டுப்பாடல் சொல்வது போல் ஈழத்தமிழர் விண்ணையும் கடலையும் அளந்தார்களா? என்பதற்கான விடையை எமக்கு திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் இராவணனைக் கூறும் இடத்தில்
"மயங்கு மாயம் வல்லராகி
           வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனா
           இராவணன் தோள் நெரித்த
புயங்கரா மாநடத்தன்..."                    
- (ப.திருமுறை: 1: 53: 7)

என பிறரால் விரும்பப்படும் புதியனவற்றை செய்யும் வல்லமை உடையவராய் வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன் என்கின்றார். 

இராவணனாகியோர் விண்ணையும், கடல் மண்ணையும் அளந்து அறிந்திருந்தால் தானே வானிலும் நீரிலும் இயங்கித் திரிந்திருந்திருக்க முடியும்?

Thursday 19 June 2014

குறள் அமுது - (92)

குறள்:
“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்”                                             - 489

பொருள்:
கிடைத்ததற்கு அரிய காலம் கனிந்து வந்தால் அப்பொழுதே செய்வதற்கு அரிய செயல்களை செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:
இக்குறள் காலம் அறிதல் எனும் அதிகாரத்தில் வருகிறது. எய்தற்கு அரியது என திருவள்ளுவர்  காலத்தையே சுட்டுகிறார். இதில் கிடைத்ததற்கு அரிய [எய்தற்கு அரிய] காலம் என்பது பஞ்சாங்கம் பார்த்து, ராகுகாலம், எமகண்டம்  பார்த்து சோதிடர் கணிக்கும் காலம் அல்ல. இக்குறளின்படி காலம் என்பது தக்கசமயம் என்ற கருத்தையே தருகிறது.

ஒவ்வொரு செயலுக்கும் அததற்கேற்ற காலங்கள் தேவையாக இருக்கிறது. உப்பை மழைக்கால வெய்யிலில் காயவிடமுடியுமா? சூரைக் காற்றிடையேயும் கொட்டும் மழை இடையேயும் நெல்லை அறுவடை செய்ய முடியுமா? எனவே எல்லோராலும் செய்ய முடியாத அரியபெரிய காரியங்களைச் செய்வதற்கு கால நேரம் - தக்கசமயம் வாய்க்க வேண்டும். நம் மனதில் பலகாலமாக எண்ணி, செய்ய முடியாது இருந்த செயலாக இருந்தாலும், தற்செயலாக அறிந்து செய்வதாக இருந்தாலும் செய்தற்கு அரிதான செயலைச்செய்ய, கிடைத்ததற்கு அரிய சந்தர்ப்பம் வாய்க்குமானால் அந்த நேரதைத் தவறவிடாது பயன்படுத்தி, அப்போதே அதனைச் செய்ய வேண்டும். 

பிறரால் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்வதற்கு ஏற்ற தருணம் உங்களுக்குக் கிடைக்குமானால் அக்கணமே அந்தச் செயலைச் செய்து முடித்துக் கொள்ள்ளுங்கள்.

Monday 16 June 2014

அடிசில் 82

மைசூர்பருப்பு இறால் வடை
 நீரா -      

தேவையான பொருட்கள்:
மைசூர்பருப்பு - 1கப்
இறால்  - 200 கிராம்
வெட்டிய வெங்காயம் - 2 மேசைக் கரண்டி
வெட்டிய பச்சைமிளகாய் - 1 மேசைக்கரண்டி
நறுவல்துருவலான மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மிளகுப்பொடி - ½ தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
அரைத்த இஞ்சி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்தில் மைசூர்பருப்பை இட்டு தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.
2. இறாலைக் கழுவி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு பிரட்டி வைக்கவும்.
3. ஊறிய மைசூர்பருப்பைக் கழுவி, வடித்து இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொள்க.
4. ஒருபகுதியைக் கொஞ்சம் நீர்விட்டு கரகரப்பான பசைபோல் அரைத்தெடுக்கவும்.
5. அரையாதிருக்கும் மைசூர்பருப்புடன் அரைத்ததை இட்டு, அவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மிளகாய்ப்பொடி, மிளகுப்பொடி, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பும் சேர்த்துப் பிசைந்து கொள்க.
6. பிசைந்த கலவையில் கொஞ்சம் எடுத்து சிறிய உருண்டையாகப் பிடித்து, தட்டையாக்கி அதன்மேல் ஒரு இறாலை நன்றாக அழுத்தி வைக்கவும்.
7. கலவை முழுவதையும் இப்படி இறால்வடைகளாச் செய்து, ஒரு தட்டில் வைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் வடைகளைப் பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும். 

Sunday 15 June 2014

நாண்மங்கலமும் சிலந்தியும்


பண்டைத் தமிழர் பிறந்தநாள் விழா கொண்டாடியதில்லை, மேற்கத்தைய நாட்டினரே பிறந்தநாள் விழா கொண்டாடினர் என்று சொல்கின்றனர். அதிலும் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னரே தமிழர் பிறந்தநாள் கொண்டாடத் தொடங்கினர் என்பது நகைப்பிற்கு உரியது.

அப்படிச் சொல்வது சரியா என்பதை அறிய நமது பண்டைத் தமிழ் நூல்களில் தேடிப்பார்த்தேன். என் தேடலுக்கு கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பண்டைத்தமிழ் நூல்களிலே காலத்தால் முந்திய தொல்காப்பியம். அது என்ன சொல்கின்றது என்று பார்ப்போமா? அதில் தொல்காப்பியர்

பிறந்த நாள்வயின் பெருமங் கலமும்”             
                                                        - (தொல்: பொருள்: 30: 8)

என புறத்திணை இயலில் கூறுகிறார். இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியரே பிறந்தநாள் என்ற சொல்லைத் தொல்காப்பியத்தில் பதிவு செய்து வைத்துள்ள போது எமக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? பிறந்த நாளின் போது, விழா எடுத்து வாழ்த்தியதை ‘பெருமங்கலம்’ என்னும் சொல்லால் குறித்தும் வைத்திருக்கிறார். 

கி பி 11ம் நூற்றாண்டுக்கு பின்னர் இலத்தின், நோர்மன், பிரஞ்சு மொழிகளாகிய மூன்று மொழிக்கலப்பால் உண்டான முக்கூட்டு மொழியே ஆங்கிலம். அதிலும் உலகமொழிகள் எல்லாம் கலந்த தற்கால ஆங்கிலம் கி பி 15ம் நூற்றாண்டுக்கு பின்னரே உருவானதாகும். தற்கால ஆங்கிலம் உருவாகுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைத்தமிழர் பிறந்தநாள் கொண்டாடினர் என்பதை தெட்டத்தெளிவாகத் தொல்காப்பியம் எடுத்துச் சொல்கிறது. இதைவிடவா தமிழர் பிறந்தநாள் கொண்டாடினர் என்பதற்குச் சான்று வேண்டும்? அதிலும் நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி கி பி 1815ல் இருந்தே நிலைகொண்டது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

பண்டைத் தமிழர் பயன்படுத்திய பல ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்களை நாம் புறக்கணித்து வருகிறோம். அதுவும் நம் அறியாமைகளுக்குக் காரணமாகும். தொல்காப்பியம் மட்டுமல்ல சங்கத்தமிழ் இலக்கியங்களும் பிறந்தநாள் விழாவை ஆட்டைவிழா, வெள்ளணிவிழா, நாண்மங்கலம் என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றன. 

“எற்றப் பகலினும் வெள்ளணிநாள்
இருநிழலுற்ற
கொற்றக்குடையினைப் பாடீரே”           - (கலிங்கத்துப் பரணி)

எனப் பிறந்தநாளை, ‘வெள்ளணிநாள்’ என்று கலிங்கத்துப்பரணி மட்டுமல்லாமல் புறப்பொருள்வெண்பா மாலையும் சொல்வதைக் கீழேயுள்ள வெண்பா எடுத்துக் காட்டுகிறது.  

“கரும்பகடுஞ் செம்பொன்னும் வெள்ளணிநாட் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ - சுரும்பியிமிர்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதி றாந்திறப்பர் தாள்”                                                 - (பு. வெ. பா: படாண்திணை: 23)

பிறந்த நாளைக்குறிக்கும் ‘நாண்மங்கலம்’ என்ற சொல்லும் வெள்ளணிநாள் போல் நம்மால் புறக்கணிக்கப்பட்ட சொற்களில் ஒன்றே.

“மண மங்கலமே பொலிவு மங்கலமே
நாள் மங்கலமே பரிசில் நிலையே”                                      - (பு. வெ. மா: சூத்திரம்: 9: 12 - 13)
என்றும் புறப்பொருள் வெண்பாமாலை சொல்கிறது.

நம் தமிழ் முன்னோர்கள் நாண்மங்கலம் என்ற பெயரில் பிறந்த நாளைக் கொண்டாடியது மட்டுமல்லாமல் ‘வீரபாண்டியன் நாண்மங்கலம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி வைத்திருந்ததையும் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாயில் கல்வெட்டு எமக்கு அறியத்தருகிறது. 

நாள் + மங்கலம் = நாண்மங்கலம் எனப்புணரும்.
நாள் என்பது காலம், நேரம் என்பவற்றைக் குறிப்பது போல் பிறப்பு என்பதையும் குறிக்கும். புதிது புதிதாகப் ஒவ்வொரு நாளும் பிறப்பதால் நாள் என்ற சொல்லால் பிறப்பைக் குறித்தனர். மங்கலம் என்றால் வாழ்த்து, சிறப்பு போன்ற கருத்துக்களையும் தரும். ஆதலால் நாண்மங்கலம் என்பது பிறந்த நாளை மட்டுமல்லாது பிறந்தநாள் வாழ்த்தையும் குறித்து நிற்கிறது. 

சோழன் இலங்கிலை வேல்கிள்ளியின் பிறந்தநாள் விழாவை முத்தொள்ளாயிரத்தின் ஒரு பாடல் சொல்கிறது.

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்திரம்போல் மாண்ட களிறு ஊர்ந்தார் - எந்தை
இலங்கிலை வேல்கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு                                            
                                                        -(முத்தொள்ளாயிரம்: 46)

இப்பாடலின் கருத்தைக் சொல்வற்கு முன் ஒரு சிலந்தியின் கதையைக் கூறலாம் என நினைக்கிறேன். நான் சிறுமியாய் இருந்த காலத்தில் என் தந்தை சொன்ன கதையே இது. 

ஒரு பெரிய தீவு. அங்கே வாழ்ந்து வந்த சிலந்தி ஒன்று காய்ச்சலுடன் நட்புக்கொண்டது. சிலந்தியும் காய்ச்சலுமாகச் சேர்ந்து தாம் எந்த வீட்டில் வாழலாம் என்பதை முடிவு செய்வதற்காக அந்தத் தீவில் இருந்த எல்லா வீடுகளையும் சுற்றிப் பார்த்தன. கடைசியாகச் சிலந்தி, சிறிய குடிசைகளில் வாழ்வதை விட அரண்மனையில் வாழ்ந்தால் பெரிய பெரிய சிலந்திவலைகளைக் கட்டலாம் என நினைத்தது. தன் எண்ணத்தைக் காய்ச்சலிடம் சொல்லி காய்ச்சலையும் தன்னோடு அரண்மைக்கு வருமாறு அழைத்தது. 

அரண்மனைக்குச் செல்ல காய்ச்சல் விரும்பவில்லை. அரண்மனை வைத்தியர் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து விரட்டி அடிப்பார் எனப்பயந்தது காய்ச்சல். அத்தீவின் கடற்கரை ஓரத்தில் பரதவர் சேரி இருந்தது. அவர்கள் அன்றாடம் கடலில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்கள் வாழும் குடிசைகளில் கட்டிலும் மெத்தையும் மட்டுமல்ல படுக்க நல்ல பாய் கூட இருக்கவில்லை. அப்படிப்பட்ட வறுமை உள்ள இடத்தில் காய்ச்சல் வந்தால் வைத்தியருக்குப் பணம் கொடுக்க யாரால் முடியும்? எனவே பரதவ சேரிக்குப் போவதே நல்லது எனக் காய்ச்சல் சொல்லியது.

நண்பர்கள் இருவரும் மாதம் ஒருமுறை சந்தித்துக் கொள்வதாகக் கூறிப் பிரிந்தனர். சிலந்தி அரண்மனை நோக்கிப் போக, காய்ச்சலும் பரதவ சேரிக்குச் சென்றது. பரதவசேரி முழுவதும் தேடிப் பார்த்து மிகவும் வறுமை உள்ள குடிசைக்குள் காய்ச்சல் சென்றது. அங்கே தாய் மடியில் தலைவைத்து ஓர் இளைஞன் தூங்குவதைக் கண்டது. அந்த இளைஞனைப் பார்த்ததும் அவனே தான் வாழ ஏற்றவன் என நினைத்த காய்ச்சல் அவனைப் பிடித்துக் கொண்டது. அவன் காய்ச்சலில் முனங்கினான். தன் மகனுக்கு காய்ச்சல் வந்துவிட்டதே என தாயும் பதறினாள்.

அந்த இளைஞனின் வயதான தந்தை, இரவு மீன்பிடிக்கச் சென்ற களைப்புத்தீரத் தூங்கி எழுந்து வந்தார். தாய் மகனுக்குக் காய்ச்சல் என்று சொன்னதையும் பொருட்படுத்தாது மீன் வலையைச் சரிபார்த்து, வள்ளத்துள் எடுத்துப்போட்டார். வளமைபோல் மீன்பிடிக்கச் செல்வதற்கு அவர் ஆயத்தமானார். மகனையும் கூப்பிட்டார். 

‘அவனுக்குக் காய்ச்சலாக இருக்கிறதே’ என்றாள் தாய். 

‘இந்த வயதில் காய்ச்சல் என்று முடங்கிக் கிடந்தால் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றுவது யார்? கடல் நீரில் முழுகினால் காய்ச்சல் இருந்த இடம் தெரியாது ஓடிப்போகும்’ என்றார் தந்தை.

அவனும் காய்ச்சலோடு மீன்பிடிக்கத் தந்தையுடன் சென்றான். தந்தையும் மகனுமாக வலைவீசி மீன்பிடித்தனர். வலையில் சிக்கிய மீன்களை வள்ளத்துள் ஏற்றுவதற்காக அந்த இளைஞன் கடலினுள் குதித்தான். கடலின் உப்பு நீருள் அவன் மூழ்கியதுமே காய்ச்சல் அவனை விட்டு ஓட்டம் பிடித்தது. அவனும் தனக்குக் காய்ச்சல் போய்விட்டதை உணர்ந்தான். தந்தை சொன்னது சரியே என்று தந்தைக்கும் சொன்னான். ஆனால் அவன் வீடு திரும்பியதும் காய்ச்சல் அவனை மீண்டும் பிடித்துக் கொண்டது. இப்படி காய்ச்சல் அவனைப் பிடிப்பதும் அவன் கடலில் மூழ்க காய்ச்சல் ஓடுவதுமாக காலம் ஓடியது.

அரண்மனைக்குச் சென்ற சிலந்தி அரண்மனை விட்டத்தில் இரவு முழுவதும் பாடுபட்டு மிகப்பெரிய சிலந்திவலையைக் கட்டியது. ஆனால் அதிகாலையிலேயே அரண்மனையைத் தூசுதட்டி சுத்தம் செய்வோர் வந்து சிலந்தி வலையை அறுத்து எறிந்தனர். உயிர் தப்பினால் போதும் என்று சிலந்தி அடுத்த அறைக்கு பாய்ந்து ஓடியது. இப்படி சிலந்தி வலையைக் கட்டுவதும் சுத்தம் செய்வோர் ஒரு நொடியில் அதைத் துடைத்து எறிவதுமாகக் காலம் ஓடியது. 

மாதம் ஒன்றானது. சிலந்தியும் காய்ச்சலும் பேசிக்கொண்டது போல் மீண்டும் சந்திப்பதற்காக குறித்த இடத்திற்கு வந்தனர். இருவர் முகத்திலும் களைப்பும் கவலையும் காணப்பட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைப்படைந்தனர். தத்தமது சோகாக் கதையைச் சொல்லிக் கொண்டனர். அரண்மனையில் வாழச்சென்ற சிலந்தியாவது சந்தோசமாக இருக்கும் என்று நினைத்து வந்த காய்ச்சலுக்கு சிலந்தியின் கதையைக் கேட்டு அழுகையே வந்துவிட்டது.

அழுது கொண்டே சிலந்தியைப் பார்த்து, காய்ச்சல் சொன்னது, ‘சிலந்தியே! நீ பரதவ சேரியில் நான் இருந்த குடிசைக்குப் போ. அங்கே வாழுபவர்களுக்குத் தூசு தட்டிச் சுத்தம் செய்ய நேரம் இல்லை. அங்கே நீ விரும்பியபடி எல்லா இடத்திலும் உனது சிலந்திவலைகளைக்கட்டி மகிழ்ச்சியாக வாழலாம்’ என்றது.

சிலந்தியும் காய்ச்சலைப் பார்த்துச் சொன்னது, ‘நானும் அதையே நினைத்தேன். நீ அரண்மனைக்குச் செல். அங்கே இருக்கும் இளவரசி எந்நேரமும் மஞ்சத்தில் படுத்தே கிடக்கிறாள். நோய் ஒன்றும் இல்லாமல் தனக்கு நோய் என்று சொல்கிறாள். அவளின் நோய்க்கு மருந்து கொடுத்து மருத்துவர் களைத்துப் போய்விட்டார். எனவே நீ அங்கு போய் இளவரசியைப் பிடித்துக் கொண்டால் மருத்துவர் அவளுக்கு மருந்தாகத் தண்ணீர் கொடுப்பார். நீ உன் விருப்பம் போல் அவளைப்பிடித்து ஆட்டலாம்' என்றது. காய்ச்சல் அரண்மனைக்கும் சிலந்தி சேரிக்கும் சென்று மகிழ்வுடன் வாழ்ந்தன. ஒரு தொழில் செய்வதற்கு ஏற்ற இடம்வேண்டும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.

இப்போ முத்தொள்ளாயிரம் கூறும் சோழனின் பிறந்தநாள் விழாப் பாடலைப் பார்ப்போம். 
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்திரம்போல் மாண்ட களிறு ஊர்ந்தார் - எந்தை
இலங்கிலை வேல்கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு                                            
                                                           -(முத்தொள்ளாயிரம்: 46)

இலங்கிலை வேல்கிள்ளி என்ற சோழ அரசன் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தான். அவனது பிறந்தநாளான ரேவதி நட்சத்திரத்தன்று நாடே விழாக்கோலம் பூண்டது. ஒவ்வொரு வீடும் தங்கள் வீட்டு பிறந்த நாள் போல வீடுகளை, வீதிகளை அலங்கரித்தனர். சோழன் இலங்கிலை வேல்கிள்ளி தன்னை வாழ்த்த வந்தோருக்கு அள்ளிக் கொடுத்தான். அப்போது அந்தணர் பசுவும் பொன்னும் பெற்றனர். நாவில் வல்ல அறிஞர்களும் புலவர்களும் மந்திரமலை போன்ற யானைகளைப் பரிசாகப் பெற்று அதில் ஏறிச்சென்றார்கள். இப்படி எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்க இலங்கிலை வேல்கிள்ளியின் நாட்டில் வாழ்ந்த சிலந்தி இனமே தத்தம் கூடிழந்து எப்படியோ? என்று கேட்கிறது முத்தொள்ளாயிரம்.

முத்தொள்ளாயிரம் கேட்கும் கேள்வியின் விடையை மேலேயுள்ள சிலந்திக் கதை உங்களுக்கு நன்கு எடுத்துச் சொல்லியிருக்கும் என நினைக்கிறேன். இலங்கிலை வேல்கிள்ளியின் நாண்மங்கலத்திற்காக வீடுகள், வீதிகள், வேலிகள் யாவும் தூசு தட்டித் துப்பரவு செய்யப்பட்டதாலேயே சிலந்திகள் தம் கூடுகளை இழந்து குற்றுயிராய், முடமாய் நாட்டைவிட்டே ஓடின. 
இனிதே, 
தமிழரசி

Saturday 14 June 2014

இன்றைய கல்வி

- எழுதியது வாகீசன் -

கல்வியானது உலக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வேண்டிய திறமையை எமக்கு அளிக்க வேண்டும். ஆனால் இன்றோ கல்வியும் கல்வி கற்றவர்களுமே பிரச்சனை ஆகிப் போனார்கள். தமது எதிர்காலத்தை தாமே வகுத்துக்கொள்ளும் சக்தி இன்றி பிறரைச் சார்ந்து வாழ்வதே அவர்கள் விதியாயிற்று. ஓர் உயர்ந்த மனிதநேயத் துடிப்புள்ள சமுதாயம் உருவாக கல்வி பயன்பட வேண்டும்.

மனித வாழ்வுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை ஒதுக்கிவிட்டு வெறும் புத்தகப் புழுக்களாக மாற்றும் இன்றைய கல்விமுறையை விட்டு நாம் விலகிவர வேண்டும். ஓடி விளையாடும் குழந்தைகளின் முதுகில் புத்தகச் சுமையை ஏற்றிப் பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். இந்தக் கல்விமுறையில் யாரும் கல்வி பெறுவதில்லை. ஏதோ பரீட்சையில் தேறி, பட்டம் பெற்று வேலை தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இக்கல்வி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான செயல்முறைக் கல்வியைக் கொண்டிருக்கிறதா? இல்லையே!

நாமும் பரீட்சையில் வெற்றிபெற்று பட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் கேவலமான நிலையில் இருக்கிறோம். இது நோயில் கிடப்பவன் தன் உடல்நிலை மிகநன்றாக உள்ளது என்று டாக்டரிடம் சான்றிதழ் வாங்கிவைத்திருப்பது போல் இருக்கிறது.

இந்த அவலநிலை மாறவேண்டுமானால் நாம் கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டும். புதிய கல்விமுறைக்கு நான் பாடத்திட்டங்களைத் தரப்போவதில்லை. மாற்றங்கள் எங்கே வரவேண்டும் என்பதைமட்டும் சொல்கிறேன். உலகசுற்றுச் சூழல், உழவு, நெசவு, பண்ணை போன்றவற்றுக்கு வேண்டிய விஞ்ஞான பொறியியல் நுட்பங்களையும் கற்றுத்தருவதோடு, குழந்தைகளை, நோயுற்றோரை, முதியோர்களை, வறியவர்களை, வீடற்றோரை எப்படி வாழ வைப்பது? மனிதநேயத்தை வளர்க்க நாம் செய்யவேண்டியது என்ன? என்பன போன்ற கல்விமுறை தேவை. நான் சொல்வது என்ன எனில் மனிதனை சிறந்த மனிதனாக்கும் கல்வியே இந்த உலகுக்குத் தேவை.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
[இது இலண்டனில் பிறந்த 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, 'A' தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனை பயன் படுத்தலாம்]

Friday 13 June 2014

பார்த்தீர்களா பெண்களே!

கடம்பவனம் - மதுரை 1858

பன்னெடுங்காலமாக தமிழ் நாட்டில் உள்ள மதுரை கடம்பவனம் என அழைக்கப்பட்டு வந்தது. கடம்பு மரங்கள் நிறைந்த காடாக மதுரை இருந்ததால் கடம்பவனம் என்று அழைத்தனர். மதுரை மீனாட்சி அம்மனின் கணவரான சுந்தரேசருக்கு கடம்பவனத்து ஈசர் என்ற பெயரும் உண்டு.

காளமேகப்புலவர் ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கே அடியார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பூப்பல்லக்கில் வைத்து நாதசுரம் இசைக்க, வீதிவலமாகக் கொண்டு வந்தனர். பெண்கள் ஒவ்வொரு நாற்சந்தியிலும் நின்று மல்லாரி பாடியாடினர். இவற்றைக் கண்ட காளமேகப் புலவர் அப்பெண்களைப் பார்த்து,
கண்டீரோ பெண்காள் கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை ஏறினா ராம்                             
                                         - (காளமேகப்புலவர் தனிப்பாடல்)
எனப்பாடினார். 

அதைக்கேட்ட அடியவர்களும் பெண்டிரும் “ஓய்! காளமேகம் என்ன காணும் சொல்லுறீர்! கடம்பவனத்து ஈசர் பெண்களைச் சுமந்து திரியும் பித்தனா? எட்டுதிசையிலும் சிறப்புடைய தங்கைக்கு மேல் தீ வைத்தாரா? அக்காவை மோதி [ஏறுதல்] வீழ்த்தினாரா? உமது தொழிலே வசைபாடுவதாக இருந்தாலும் கடம்பவனத்து ஈசனாருக்குமா வசைபாடுவீர்?” என்று சீறி விழுந்தனர். வீதிவலம் வந்த நேரம் ஆதலால் யாரும் காளமேகப்புலவரை அடிக்கப் போகவில்லை. ஆனால் அவர்களின் கோபத்தை முணுமுணுப்பும் சலசலப்பும் கண்களும் காட்டின.

நீங்கள் நினைப்பது போல் நான் பாடவில்லையே என்று அவர்களைப்பார்த்துச் சிரித்தபடி காளமேகம் சொன்னார். “பெண்களே பார்த்தீர்களா! கடம்ப வனத்து ஈசனார் பெண்களாகிய பார்வதிக்கும் கங்கைக்கும்  மதிப்பளித்து இடப்பாகத்திலும், தலையிலும் தாங்கிய  சிவனார் அல்லவா? எட்டுத் திசைகளிலும் சிறந்த தனது கைக்கு மேலே நெருப்பைத் தாங்கி இருப்பவர், அந்தக் காளை மாட்டில் ஏறி வருபவர் தானே! இதில் என்ன வசை இருக்கிறது என்று கேட்டார்.

மீண்டும் எல்லோரும் கேட்கத் தன் பாடலைப் பாடினார்.
கண்டீரோ பெண்காள்! கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர்தமைச் சுமந்த[தாங்கிய] பித்தனார்[சிவனார்] - எண்டிசைக்கும்
மிக்கான[சிறந்த] தம்[தமது] கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்[அந்தக்] காளை ஏறினா ராம்”   

காளமேகப்புலவரின் பாடலின் உண்மையான கருத்தை அறிந்த அடியார்களும் பெண்களும் தமது தவறுக்கு வருந்தினராம்.

நம்முன்னோரால் வனங்கள் என அழைக்கப்பட்ட சில இடங்களும் கோயில் மரங்களும்:

வனங்கள் இடங்கள் கோயில் மரங்கள்
கடம்பவனம் மதுரை கடம்பமரம்
தில்லைவனம் சிதம்பரம் தில்லைமரம் - கண்டல் மரம்.
முல்லைவனம் திருமுல்லைவாயில் முல்லைக்கொடி
செண்பகவனம் தென்காசி செண்பகமரம்
வேணுவனம் திருநெல்வேலி வேணுமரம் - மூங்கில்காடு
மருதவனம் மருதமலை மருதமரம் 

இனிதே,
தமிழரசி.

Thursday 12 June 2014

ஆனந்த மாயையில் வீழ்ந்தேண்டி!


துங்க முகத்தனைக் கண்டேண்டி - அவன்
தம்பியைப் பார்த்து நகைத்தாண்டி

சங்கரி பாலனைக் கண்டேண்டி - அவன்
சங்கதி சொல்லவே நின்றாண்டி

சிந்திய சிரிப்பைக் கண்டேண்டி - அவன்
சிங்கார வேலன் என்றாண்டி

அங்கங் குழையக் கண்டேண்டி - அவன்
ஆனந்த மாயையில் வீழ்ந்தேண்டி!
இனிதே,
தமிழரசி.

Wednesday 11 June 2014

நான் அறியவில்லையே!















நான் போட்ட கோலமா
          நம்ப முடிய வில்லையா
நானே போட்ட தென்று
          நான் சொல்ல வில்லையே
ஏன் போட்ட தென்று
          ஏங்கி நானும் பார்த்துமே
தேன் சிந்தும் மலரை
  தேடி எடுத்து வைத்துமே
நான் இருந்து பார்த்து
நன்றாய் இரசிக்கும் போதே
நானே கோலம் ஆனதை
நான் அறிய வில்லையே!
                                          - சிட்டு எழுதும் சீட்டு 87

Tuesday 10 June 2014

பார்த்தெடுக்க வேணுமெடி!



சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களில் இருநூற்றிமுப்பத்தாறு பாடல்களைப் பாடி தனக்கென்று ஓர் இடத்தை நிலைநாட்டிக் கொண்டவர் கபிலர். தனது பாடல்களில் தமிழரின் நாகரீக உயர்வைச் சித்தரித்துக் காட்டும் கபிலரிடம் ஈழத்தின் விடத்தல்தீவு கன்னியும் படித்திருப்பாளே என நாம் எண்ணும் அளவுக்கு அவளின் நாட்டுப்பாடலின் கருத்து அமைந்திருக்கிறது.

கன்னிப்பெண் ஒருத்தி தனக்கு ஏற்ற கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதைக் கபிலர், பாரிமகளிர்க்குச் சொன்னதாக சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை
“மாயோன் அன்ன மால்வரைக் கவான்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம்மலைக்கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவு அறிந்து அளவல் வேண்டும், மறுத்தரற்கு
அரிய வாழி! தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே”
                                                   - (நற்றிணை: 32)
என நற்றிணை காட்டுகிறது.

ஒரு கன்னிப் பெண் 'தன்னுடன் வாழ ஒருவனைத் தெரிந்தெடுப்பதற்கு, முதலில் அவனின் குணநலங்களைப் பார்த்து [நீயும் கண்டு], பிடித்திருந்தால் உற்றோருடன் ஆராய்ந்து [நுமரொடும் எண்ணி] மேலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது, அறிவால் அறிந்து பழக வேண்டுமாம். [அறிவு அறிந்து அளவல் வேண்டும்]  சான்றோர்களைப் போல ஆராய்ந்து பார்த்து நட்புச்செய் [நாடி நட்பின்], அல்லது நட்புச் செய்த பின் ஆராயப் போகாதே [நட்டு நாடார்], இது மறுக்கமுடியாதது' என்று கபிலர் சொல்கிறார்.

ஒருவன் - திருமால் போல் அழகாய், பெரிய மலைநாட்டையும், நன்னீர் ஆற்றையும் உடைய செல்வனாய், உன்னை விரும்பி வருந்தினாலும் உண்மை என நம்பாதே! என்று ஓர் இனிய எச்சரிக்கை விடுக்கிறார். நீயும்காண் - நுமரோடும் எண்ணு - அறிவு அறிந்து அளவளாவு [பழகு] - நாடி நடு - நட்டு நாடாதே என எத்தனை கோணங்களில் “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பதை உணராது, காதல் எனத்துடிக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட கன்னியர்க்கு புத்தி புகட்டுகிறார்.

விடத்தல்தீவுக் கன்னியர் சேர்ந்து பேசிச் சிரித்து விளையாடினர். அவர்களின் பேச்சு எத்தகைய கணவனைத் தேர்ந்தெடுப்பது எனும் கேள்விக்கு திரும்பியது. ஒவ்வொருத்தியும் தத்தம் எண்ணத்தைச் சொல்ல, அவர்களில் ஒருத்தி
என்னில் அழகருமாய் இருசிவப்புக் காரருமாய்”
என்றாள். 

மற்றவர்கள் அவளைப் பார்த்துச் சிரித்து ‘அது என்னடி, இருசிவப்புக்காரர்? அப்படி ஒன்று இருக்கா என்றனர்? ‘எனக்கு கருப்பாய் இருப்பவனையோ, நல்ல சிவப்பாய் இருப்பவனையோ பிடிக்காது. அதனால் பொது நிறமானவனை இருசிவப்புகாரர் என்றேன். என்றவள் தொடர்ந்து
பல்லில் அழகருமாய் பார்த்தெடுக்க வேண்டுமெடி”
என்றாள்.

தெத்துப்பல், காவிப்பல் என விதவிதமான பற்களுடன் வாலிபரை கண்டிருக்கிறாள். அவர்களின் சிரிப்பைப் பார்த்து எரிச்சல் வந்திருக்கிறது. கணவனின் சிரிப்பில் மகிழ்ந்திருக்க விரும்பியவளுக்கு அழகான வரிசையான பற்கள் தேவையாக இருந்திருக்கிறது. எனவே ‘பல்லில் அழகருமாய்’ தேடி எடுக்க வேண்டும் என்றாள். அவள் சொல்வதைக் கேட்ட
தோழியர்: என்னில் அழகருமாய்
                     இருசிவப்பு காரருமாய்
             பல்லில் அழகருமாய்
                     பார்த்தெடுக்க வேண்டுமெடி
எனப்பாடிப் பாடி கேலி செய்தனர்.

இன்னொருனாள் அவள் வருவதைக் கண்ட அவளின் தோழி ஒருத்தி ‘என்ன பல்லில் அழகரைப் பார்த்தாயா?” எனக்கேட்க, ‘ஆமாம் பார்த்தேன்’ என்று அவர்கள் கிண்டலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள். யாரடியவன்? எப்படி இருப்பான்? எங்கடி பார்த்தாய்? சொல்லடி என கேள்விகள் வந்து விழ
அவள்: உற்றாரை உசாதற்கு
உருவிலே மன்மதனும்
         உளத்திலே மயனாம்
உத்தமரை பார்த்தேனடி
                             - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு) 
                                               -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
எடுத்த உடனேயே ‘உற்றாரை உசாதற்கு’ என்கிறாள். அதாவது தன்னைப் பெற்று வளர்த்த பெரியோர்களிடம் கேட்டு அவர்கள் சம்மதத்தைப் பெறுவதற்கு ஏற்ற வாலிபனைக் கண்ட மகிழ்ச்சியில் அவன் அழகில் மன்மதன் போன்றவன் உளத்திலோ [ஊக்கத்தில்] மயன் போன்ற உத்தமன் என்று பரவசப்படுகிறாள்.

அவள் கூறும் மன்மதனை நாம் அறிவோம். அவள் உத்தமர் எனக்கூறும் மயன் யார்? நம்மில் எத்தனை பேர் அவனை அறிந்திருக்கிறோம்? அவன் மாந்தையத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஓர் அரசன் - இராவணன் மனைவி வாண்டோதரியின் தந்தை - கலைஞன் - சிற்பி - அவன் இயற்றிய நூல்களுள் ‘மயமதம்’ என்ற நூல் சிற்பிகளால் போற்றப்படுகிறது. ஈழத்தவரின் மூதாதையரான மயனை, விடத்தல்தீவு நாட்டுப்பாடல் மூலமாவது நாம் மீண்டும் அறிவோம்.

கபிலர் ‘நீயும் கண்டு’ எனச் சொன்னதை விடத்தல்தீவுக் கன்னி தன் ஆசைகளையும் சேர்த்து ‘பார்த்தெடுக்க வேணுமடி’ என்கிறாள். அடுத்து கபிலர் ‘நுமரொடும் எண்ணி’ என்றதை ‘உற்றாரை உசாவுதற்கு’ என்றும் ‘அறிவறிந்து அளவல் வேண்டும்’ எனக் குறித்ததை ‘உளத்திலே மயனாம் உத்தமர்’ என்று கூறி அவன் பண்பானவன் என்பதை உறுதி செய்கிறாள்.  தனது கணவனாக வரவேண்டியவனைத் தெரிந்தெடுக்க ‘நாடி நடு’ எனக் கபிலர் சொன்னதையே அந்தக் கன்னியும் செய்திருக்கிறாள்.

இப்போது சொல்லுங்கள் விடத்தல்தீவுக் கன்னி, கபிலரிடம் படித்திருப்பாளோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா? சங்கத் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை ஈழத்தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு இந்த நாட்டுப் பாடலும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
இனிதே,
தமிழரசி.