Thursday, 27 February 2014

ஆசைக்கவிதைகள் - 88


பாடித் திரிய நானிருக்கேன்

அக்கம் பக்கம் காடிருக்கு 
அங்கே எந்தன் வீடிருக்கு
பக்கம் சூழ வயலிருக்கு
படுத்துறங்க பாயிருக்கு
களத்து மேட்டு நிலமிருக்கு
கதிர் அறுத்த நெல்லிருக்கு
அளந்து உண்ண உணவிருக்கு
ஆடிக் கறக்க பசுவிருக்கு
எத்தி தின்னும் கோழியிருக்கு
ஒத்துப் பேச கிளியிருக்கு
பொத்தி வளக்க தாயிருக்கு
பாடித் திரிய நானிருக்கேன் 
                                                                     - நாட்டுப்பாடல் (விளாங்குளம் - அநுராதபுரம்)
                                                          - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Tuesday, 25 February 2014

குறள் அமுது - (89)

குறள்:
“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு”                                  - 841

பொருள்:
அறிவு இல்லாமையே இல்லாமைகளில் பெரிய இல்லாமையாகும். மற்றைய பொருட்கள் இல்லை எனினும் உலகம் அதனை இல்லாமையாகக் கருதி பழித்துக் கூறாது.

விளக்கம்:
இல்லாமை என்பது வறுமையாகும். பலவகைப் பட்ட துன்பங்கள் சேர்ந்து கூடிக் குலாவி கொட்டமடிக்கும் இடமே வறுமை. ஆதலால் இல்லாமை என்பதும் பல துன்பங்களின் ஒட்டுமொத்த வடிவமேயேகும். ஒருவரிடம் பொருளில்லாமை, வீடில்லாமை, உணவில்லாமை, குடிக்க நீரில்லாமை, படுக்க பாய்யில்லாமை, உடுக்க உடை இல்லாமை போன்ற இல்லாமைகள் மட்டுமல்ல தாயில்லை, தந்தையில்லை, மகனில்லை, உறவில்லை, படிப்பில்லை, கையில்லை, காலில்லை போன்ற எல்லா இல்லாமைகளும் இருந்தாலும் உலகம் இகழ்ந்து கூறாது. ஆனால் எவரிடமாவது அறிவு இல்லை என்பதைக் கண்டால் உலகம் அவரை இழிவாகப் பேசும்.

ஏனெனில் அறிவு உள்ளவன் இறந்த உறவுகளைத் தவிர ஏனையவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளமுடியும். அறிவில்லாதவனாய், சிற்றறிவு உள்ளவனாய் வாழ்பவர்களால் தமக்கு ஏற்பட்ட இல்லாமையைப் போக்கிக் கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல அறிவு இல்லாதவரிடம் செல்வம் இருந்தாலும் கூட அதை பயன்படுத்தும் வழி அறியாது அழிப்பர். நல்லறிவு இல்லாதோர் படித்திருந்தாலும் வாழும் வகை அறியாது தமது வாழ்க்கையை மட்டுமல்ல அவரோடு சேர்ந்து வாழ்வோரின் வாழ்க்கையையும் முழுமையாகச் சிதறடிப்பர்.

ஒருவரிடம் அறிவு இல்லை என்றால் உலகோர் அவரைப் இகழ்ந்து பேசுவர். மற்றைய இல்லாமைகளைப் பற்றி இவ்வுலகம் பெரிதாகப் பேசாது. ஆதலால் இல்லாமைகளிலே அறிவு இல்லாமையே கொடிய இல்லாமையாகும். எனவே இவ்வுலகில் நாம் வாழ்வாங்கு வாழ்வதற்கு நல்ல அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Sunday, 23 February 2014

என்வீடு

  - எழுதியது வாகீசன் -
பூந்தோட்டத்தின் நடுவே அழகான சின்ன நீரோடை. அதிலே வண்ணப் பறவைகள். அன்னம் நீந்தும் அழகும், தாமரைப்பூவில் கதிரவன் ஒளிக்கதிர் பட்டுத் தெறித்து வரும் அழகும் பார்க்கப் பார்க்கப் பரவசமாகும். இந்தக் கொள்ளை அழகை என் வீட்டின் வரவேற்பறையில் இருந்து பார்த்து இரசிக்க எனக்குப் பிடிக்கும்.
என்வீடு அது ஒரு சுவர்க்கம். எல்லா இடத்திலும் கலையின் அழகைப் பார்க்கலாம். வரவேற்பறை அங்கே அழகே உருவான கண்ணன் ராதை சிலை. அதனடியில் குடம் கவிழ்ந்து நீரோடுவது போல் செய்திருக்கிறார்கள். இரவின் ஒளி வெள்ளத்தில் உண்மையாகவே நீர் ஓடுவது போல் இருக்கும். அத்துடன் சுவரில் பதித்துள்ள மீன் தொட்டி அதிலே உள்ள மீன்கள், பூக்கள் எல்லாமே என்னைக் கவிஞனாக்கிவிட்டன.

வரவேற்பறையைத் தொடர்ந்து சாப்பாட்டறை. அங்கே சிற்பவேலைப்பாடு அமைந்த மேசை. அருகே பெரிய செடி. மரத்தாலான இரண்டடி உயரமான ஓர் யானை. பக்கத்திலுள்ள மேசைவிளக்கில் இருந்து மணிமணியாக எண்ணெய் ஓடிவருவதும், அதன் நடுவேயுள்ள சிலையும் உணவருந்தும் போதும் கண்ணுக்கு விருந்து அளிக்கும்.

என் படிப்பறையில் நான்கு அடி உயரமான நடராஜர்சிலை, அதன் முன்னே பட்டு விரிப்பின் மேல் என் வீணை. இவற்றின் எதிரே நான் இருந்து படிக்கும் மேசை, கதிரைகள். சில நேரம் என் தங்கை சிலை முன் நடனமாட நான் வீணை வாசிப்பேன்.

என் வீட்டில் மூன்று படுக்கை அறைகள். எனக்கும் தங்கைக்கும் தனித்தனியாகப் படுக்கையறை. அவையும் அழகாகா இருக்கும். என் வீட்டில் உள்ள சமையைல் அறை, குளியல் அறை எங்கும் கலையழகு மிளிரும்.
என்வீடு என் தாயின் கலைக்கூடம். நான் என் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் தாயின் மடியில் இருப்பதாகவே உணர்கிறேன். 

[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனை பயன் படுத்தலாம்]

Friday, 21 February 2014

அடிசில் 79

நிலக்கடலை பச்சைமொச்சைக் கலவை
- நீரா -


தேவையான பொருட்கள்:
நிலக்கடலை - 1 கப்
பச்சை மொச்சை - 2 கப்
மாங்காய்த் தூள் - 1 தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
2. எண்ணெய் சூடானதும் நிலக்கடலையைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
3. பின் பச்சைமொச்சையைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
4. கறிவேப்பிலையையும் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
5. பொரித்தவற்றை இன்னொரு பாத்திரத்தில் போட்டு மாங்காய்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசிரி எடுக்கவும்.

Wednesday, 19 February 2014

வாழ்வுதரு கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

மண்ணோடு மண்ணாக மாய்ந்தே வருந்திடும்
          மக்களின் துயர் துடைப்பாய்
மனிதரை மாடாக மறந்தும் மதிப்பவர்
          மானந் தகர்தெறிகுவாய்
நண்ணியே நின்பாத நற்பூசை செய்திடும்
          நல்லவர்க் கருளீகுவாய்
நாடெலாஞ் செந்நெல் விளைந்தே சிறந்திட
          நல்லமழை பொழிய வைப்பாய்
கண்ணோடு கண்ணான குஞ்சரி மணாளனே
          கல்விசெல் வந்தருகுவாய்
காதார வேழைக ளழுங்குரல் கேட்டுமே
          கசியாத தென்னமுருகா
வண்ணமயில் வாகனா ஆயுள்தந் தேயெமை
          வாழ்விக்க வேண்டுமையா
வணங்கார் வணங்கிடும் கிளிநொச்சி நன்னகர்
          வாழ்வுதரு கந்தவேளே!

Tuesday, 18 February 2014

மானிடரே! சொல்லிடுவீர்!
தேன்குருவி நான் என்பார் தேசத்தே உள்ளோர்கள்
தேன் அருந்த முடியாதே தேடுகிறேன் பூமரங்கள் 
தேன் அருந்த பூத்தேடி தேசத்தே அலைந்தே 
தேன் சிந்தும் பூமரத்தைத்  தேடியே இளைத்தேன்
தேன் சிந்தும் பூமரங்கள் தெருவோரம் கண்டீரோ!
தேனினிக்கும் தமிழாலே தெண்டனிட்டு கேட்கிறேன்
தேன் சிந்தும் பூமரங்கள் தேசத்தே கண்டீரேல்
தேன்குருவி எந்தனுக்கு தேடிவந்து சொல்லிடுவீர்!

பார் எங்கும் பறந்து பாழடைந்த நிலமெங்கும்
பார்த்துப் பார்த்து  அலுத்துப் பதறிப் பரிதவித்து
வேர்த்து விறுவிறுத்து வெந்து உடல் நூலாய்
வேரற்ற மரம் போல வீழும்நிலை வந்ததனால்
நீர் அருந்த நினைத்து நீர்நிலைகள் தேடி
நீர் அற்று வாடி நிம்மதியைத் தொலைத்தேன்
நீர் அற்றுத் தேனற்று நிலம்பாழாக காரணம் 
யார் என்று அறிவீரோ! மானிடரே! சொல்லிடுவீர்!

                                                                                                              சிட்டு எழுதும் சீட்டு 85

Sunday, 16 February 2014

காவியமாய் கூவிடுக!

ஆசைக்கவிதைகள் - 87

இதிகாசங்கள் இலக்கியங்கள் யாவற்றிலும் காதலர்கள் தாம் வளர்க்கும் அன்னத்தை, கிளியை, குயிலை ஒருவருக்கு ஒருவர் தூது அனுப்புவதைக் காணலாம். அந்த மரபு நாட்டுப்புற மக்களின் காதல் வாழ்வில் இருந்து வந்ததேயாகும்.  

புங்குடுதீவில் வாழ்ந்த கன்னியொருத்தி ஆலத்தூர் நந்தனைக் காதலித்தாள். ஆலத்தூர் நந்தனின்  காதலி தான் வளர்த்த சேவல் குனிந்து நிமிர்ந்து சிறகடித்துக் கூவுவதைக் கண்டாள். காதலனைக் காணாது தன் உயிர் துடிப்பதை அவள் உணர முடிந்ததால் அந்தச் சேவலைப் பார்த்து, ‘தன் உயிர் போகுதென்று, அவனது காதில் கேட்கும்படி கூவச்சொல்கிறாள். அவளது உயிர் போவதையும் 'காவியம் போலக் கூவுவச் சொல்லும்’ பாங்கு அக்காலப் புங்குடுதீவுப் பெண்களின் இலக்கிய ஈடுபாட்டைக் காட்டுவதோடு, அவளது காதலும் காவியம் போன்றது என்பதையும் உணர்த்துகிறது. 

காதலியின் உயிர் போகுதென்றால் காதலன் ஓடிவருவான் அல்லவா? அதனாலேயே காதலனைக் கூவி அழைப்பதற்கு சேவலைத் தூது சொல்லச் சொல்கிறாள். புங்குடுதீவில் இருந்து ஆலத்தூர் நந்தனின் காதுவரை கேட்கக் கூவுவதற்கு புங்குடுதீவுச் சேவலும் வலிமையுடையதாக இருந்ததோ! ஆலத்தூர் நந்தனின் காதலி சொல்லச் சொன்ன சேவல் தூது. உங்களுக்காக..

காதலி: கூரையிலே ஏறிநின்று
                       குனிந்து நிமிர்ந்து
             சிறகடித்து கூவுகின்ற
                       சேவலாரே! எந்தன்
             ஆவிஉயிர் போகுதென்று
                      ஆலத்தூர் நந்தன்
             காதினிலே கேட்பதற்கு
                       காவியமாய் கூவிடுக! 
                                                   - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு) 
                                                   - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

புங்குடுதீவுக் கன்னி காதலித்த ஆலத்தூர் நந்தன் ஈழத்து ஆலத்தூரைச் சேர்ந்தவனா? தமிழ்நாட்டு ஆலத்தூரைச் சேர்ந்தவனா என்பது தெரியவில்லை. இலங்கையில் ஆலத்தூர் எங்கே இருக்கின்றது என்பதும் தெரியவில்லை. காதலுக்கு ஊரென்ன! நாடென்ன! தடை என்ன இருக்கிறது?

இப்படி தூதுவிடும் மரபை பக்தி இலக்கியங்களிலும் காணலாம். திருமங்கைஆழ்வார், திருமாலாகிய மணிவண்ணனைக் கூவி அழைப்பதற்கு குயிலைத் தூது சொல்லச் சொல்கிறார்.

கூவாய் பூங்குயிலே!
குளிர்மாரி தடுத்து உகந்த
மாவூய் கீண்ட மணிவண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே!                                  - (நாலாயிரதிவ்: 1944)
இனிதே,
தமிழரசி.

Saturday, 15 February 2014

குறள் அமுது - (88)

குறள்:
“அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்”                                  - (980)    
                          
பொருள்:
பெருமை உடையோர் பிறரின் குற்றத்தை மறைப்பர். சிறுமை உடையோர் மற்றவர்களின் குற்றத்தையே கூறுவர்.

விளக்கம்:
எம்முடன் கூடிப் பழகுபவர்களில், பெருமைக் குணம் உடையவர் எவர்? சிறுமைக் குணம் உடையவர் எவர்? என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதை திருவள்ளுவர் இத்திருக்குறளில் கோடிட்டுக் காட்டுகிறார். 

எவரொருவர் மற்றவர்களின் குறை குற்றங்களை மறைத்து அவற்றைப் பேசாது அவர்களின் நன்மைகளை நன்றாகப் புகழ்ந்து பேசுவார்கள் ஆயின் அவர்களிடம் பெருமைக்குணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதுபோல எவரொருவர் ஏனையோரின் சிறப்புக்களை, நல்ல பண்புகளை மறைத்து அவற்றைப் பேசாது அவர்களின் குற்றங்குறைகளையே மிகவும் பெரிதாகப் பேசுவார்களாயின் அவர்களிடம் சிறுமைக் குணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். 

பெருமை உடையோர் குணம் எப்படிப்பட்டது என்பதை நாலடியாரும் கூறுகின்றது. ‘தன்னை ஒருவன் அளவுக்கு மிஞ்சி  கொடுமையாக இல்லாத பொல்லாத வசைகளைக் கூறி நிந்திப்பதைக் கேட்டு, அதை நம்பி பிறர் மயங்கிவிட்டாலும், மனவேறுபாடு ஒன்றும் இல்லாமல் கலக்கமடையாது தூய்மையான மனத்தோடு விளக்கின் சுடர் போல ஒளிவீசியபடி பெருமையுடையவர் இருப்பார்களாம்’ என்கின்றது நாலடியார்.

“கடுக்கி [அளவுக்கு மிஞ்சி] ஒருவன் கடுங்குறளைப் [கடும் நிந்தனை] பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பு [மனவேறுபாடு] ஒன்றின்றித் [ஒன்றும் இல்லாமல்]
துளக்க [கலக்க] மிலாதவர் தூய மனத்தர்
விளக்கினுள் ஒண்சுடரே போன்று”                    - (நாலடியார்: 189)  

பிறரை இழிவுபடுத்துதலே சிறுமையுடையோர் செயலாகும். அதனை அவர்கள் சொல்லாலும் செயலாலும் செய்வர். எனவே பிறரது நன்மையை மட்டும் பாராட்டிப் புகழ்ந்து பேசுவோர் பெருமையுடையோர் ஆவர். சிறுமையுடையோரே பிறரைத் தூற்றுவோர் ஆவர். சிறுமையுடையோரது கண்ணுக்கு நல்லன தெரியவே தெரியாது.

Wednesday, 12 February 2014

அடிசில் 78

இறால் பூண்டுப் பிரட்டல் 
- நீரா -

தேவையான பொருட்கள்:
இறால் - 300 கிராம்
சிறிதாக வெட்டிய தக்காளி - 2
சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே. கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம் 
அரைத்த பூண்டு - 1 மே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி 
மிளகாய்த்தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள்தூள் - 1 தே.கரண்டி
எலுமிச்சம் புளி - 1 மே.கரண்டி 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மே. கரண்டி 

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்துள் எலுமிச்சம் புளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் நான்கையும் சேர்த்துக் கலந்து அதனுள் சுத்தம் செய்த இறாலைப் போட்டுப் பிரட்டி இருபது நிமிடம் ஊறவிடவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு போட்டுத் தாளித்து அது வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், அரைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமாகப் பொரிந்து வரும் போது தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வெந்து தண்ணீர் வற்றி திரண்டு வரும் போது ஊறவைத்துள்ள இறாலைப் போட்டுக் கிளறவும்.
5. அதனுள் கொஞ்சம் தண்ணீர் தெளித்து இளஞ்சூட்டில் பிரட்டலாக வரும்வரை வேகவிட்டு இறக்கவும்.

Sunday, 9 February 2014

இறந்தோர் பிறப்பரா?

பக்திச்சிமிழ் 77

உலக உயிர்கள் தமது பாவ புண்ணியத்திற்குத் தக மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கின்றன என்பர். அதனை மாணிக்கவாசகர் கூறிய
“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகிப் பறவையாப் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்”
என்பதாலும் அறியலாம்.

அதனாலேயே காரைக்கால் அம்மையார் சிவனிடம் 
“பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் 
மறவாமை வேண்டும்”
என்று கேட்டதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடியிருக்கிறார். நம் முன்னோர் 'இறந்தோர்  பிறப்பதும் பிறந்தோர் இறப்பதும் என்றும் அழியா உண்மை' என்று நம்பினர்.

ஆனால் சித்தரான சிவவாக்கியர் ‘பசுவிடம் இருந்து கறந்து எடுத்த பால் மீண்டும் பசுவின் முலைக்குள் செல்லாது. தயிரில் இருந்து கடைந்து எடுத்த வெண்ணெய் மோருக்குள் புகுந்து மீண்டும் தயிராக மாட்டாது. உடைந்து போன சங்கை ஊதி ஒலி ஏற்படுத்த முடியாது. அத்துடன் சங்கின் ஓட்டினுள் புகுந்து வாழும் ஓடற்ற மற்றைய உயிர்களும் உடைந்த சங்கினுள் புகுந்து இருந்து வாழமுடியாது. அரும்பாய், மொட்டாய் இருந்து விரிந்த பூ மீண்டும் மரத்தினுள் புக மாட்டாது. மரத்தில் இருந்து உதிர்ந்து வீழ்ந்த காயும் மீண்டும் போய் மரத்தில் ஒட்டிக்கொள்ளாது. இவை போல இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை.’ இறந்தவர் இறந்தவரே என்கிறார்.

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே!         
                                                           -   [சிவவாக்கியர் : 48]

அதாவது இறந்தவர் மீண்டும் நாம் பார்த்த அதே உடலோடு பிறந்து வருவதில்லை என்கிறார் எனக் கொள்ளலே நம் முன்னோர் கொள்கைக்கு ஏற்புடையதாகும்.
இனிதே,
தமிழரசி.

Friday, 7 February 2014

வந்தருள் தருவாய்!

முருகா என்று ஒருமுறை சொன்னேன்
          உருகிடும் உள்ளத் துணர்வுடன் ஒன்றி
பருகிடத் தந்தாய்! பைந்தமிழ் இன்பம்!
          பழமுதிர் சோலைக் காட்டகம் தன்னில்
திருநிறை முதுமையும் திகழ்ஒளிர் மேனியும்
          துலங்கிட வந்த பழமையை எண்ணி
வருவாய் என்றே வயலூர் வந்தேன்
         வந்தருள் தருவாய்! வயலூர் மன்னி!  

Thursday, 6 February 2014

துடிப்பது பாரீர்!


வாயது கட்டி 
          வறுமையைக் காத்து
வேயென தோள்கள்
          வளைந்திட்ட போதும் 
நோயது கண்டு
          நுடங்கிடா மேனி
பாயது தன்னில்
          படுத்திட அறியா
ஓய்வின்று உழைத்து
          உணவது சமைத்து
சேயவன் தனக்கு
          சோறது ஊட்ட
காய்கறி இன்றி
          கலங்கிய மனதுடன்
தாயவள் துடிக்கும்
          துடிப்பது பாரீர்!
                                - சிட்டு எழுதும் சீட்டு 84

Wednesday, 5 February 2014

அத்தைமக மீனாட்சி!

ஆசைக்கவிதைகள் - 86

புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் உள்ள ஆலமரம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவ்விடத்தில் நின்று போவோர் வருவோருக்கு நல்ல காற்றையும் நிழலையும் தருவதோடு,  பறவைகள், பூச்சி, புழுக்களுக்கு உணவையும், வாழும் இடத்தையும் வழங்கி வருகிறது. அந்த ஆலமரத்தடியில் அக்காலத்தில் சந்தை ஒன்று இருந்திதிருக்கலாம். அல்லது சந்தையடியில் ஆலமரம் இருந்திருக்கலாம். அச்சந்தையில் ஒருவர் அரிசிக்கடை வைத்திருந்தார். சிலவேளைகளில் அவரது மகன் அந்த அரிசிக்கடைக்கு வந்து அவருக்கு உதவி செய்வது வழக்கம். வழமைபோல் அன்றும் தந்தைக்கு உதவி செய்ய அரிசிக்கடைக்கு அவன் சென்று இருந்தான்.

அந்த அரிசிக் கடைக்காரரின் தங்கையும் அன்று பொருட்கள் வாங்கச் சந்தைக்கு வந்தாள். அவளுடன் அவளது மகள் மீனாட்சியையும் சேலை உடுத்திக் கூட்டி வந்தாள். சந்தைக்கு வந்தவள் அண்ணனைப் பார்க்காமல் போவாளா? அதுவும் அவளது மகள் மீனாட்சி முதன்முதல் சேலைகட்டி இருப்பதை அண்ணனுக்குக் காட்டாமல் போவாளா? அதனால் மீனாட்சியைக் கூட்டிக் கொண்டு வந்து தன் தமையனுக்குக் காட்டினாள். 

அப்போது அங்கே அரிசி அளந்துகொண்டிருந்த அண்ணனின் மகன், அத்தை மகள் மீனாட்சி சீலை உடுத்தி வந்திருப்பதைக் கண்டான். இவ்வளவு காலமும் சின்னஞ்சிறு பெண்ணாய் சிற்றாடையுடன் திரிந்தவளைச் சீலையில் பார்த்ததும் அதிர்ந்து போனான். இவ்வளவு அழகா அவள்! அவனது தந்தைக்கும் அத்தைக்கும் முன்னால் மீனாட்சியின் அழகைப் பார்த்து மகிழமுடியாது திண்டாடினான். அரிசி அளக்கும் சாட்டில் குனிந்த தலைநிமிராமலே அவளின் பாதத்தின் அழகைமட்டும் அவனால் பார்த்து இரசிக்க முடிந்தது. அவள் கடையைவிட்டு போகும் போது எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பாதக்கொலுசு சிணுங்கிய சிணுக்கத்துள் அவன் மனதும் சிக்கிக் கொண்டு போய்விட்டது.

தனது மனநிலையை ஆசைக்கவிதையாக அவன் பாடித்திரிந்தான்.

மச்சான்: ஆலடிச் சந்தையில
                        அரிசியளந்த நேரத்தில
             சேலகட்டி வந்தாளே
                       அத்தமக மீனாட்சி!
             பால்வடியும் முகத்தழக
                       பாத்திருக்க முடியலயே!
             பாதக் கொலுசுக்க
                      பாவிமனம் போனதையே!  
                                                           - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                                          (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
அந்நாளில் யாழ்ப்பாணம் தீவுப்பகுதிப் பெண்கள் கெண்டைக்கால் தெரிய சீலைகட்டுவது வழக்கம். அதனாலேயே அவனால் மீனாட்சியின் பாதத்தையும் பாதக்கொலுசையும் பார்க்க முடிந்தது. இக்காலத்தவர் போல் சீலை உடுத்திருந்தால் அவளின் பாதத்தையோ பாதக்கொலுசையோ அவன் பார்த்திருக்க முடியாது. எனவே இந்நாட்டுப்பாடல் அக்காலத்தில் புங்குடுதீவுப் பெண்கள் கெண்டைக்கால் தெரிய சீலைகட்டியதை  வரலாறாய்த் தருகிறது.

Monday, 3 February 2014

குறள் அமுது - (87)

குறள்:
“மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து”                                                  - 968

பொருள்:
மேன்மையின் பெருமை எல்லாம் அழிய நேர்ந்த இடத்து, தன் உடம்பைப் பாதுகாத்து வாழும் வாழ்க்கை மீண்டும் உயிர் வாழ்வதற்கான மருந்தோ?

விளக்கம்:
மனிதன் தன் வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து நன்மை தீமைகளையும் பெருமை சிறுமைகளையும் மான அவமானங்களையும் கண்டறிந்தான். அவற்றுள் மானம் என்பது எல்லா உயிர்களுக்கும்  உள்ள ஓர் உணர்ச்சியாகும். மான உணர்ச்சி தன் உயிரையே துச்சமாக மதிக்கச் சொல்லும். எமது மானத்தைக் காக்க, உடையை அணிகின்றோம் எனச்சொல்கின்றோம். அந்த மானத்திற்கும் இந்தக் குறள் கூறும் மானத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இக்குறள் கூறும் மானம் தன்னலம் கருதாது  பொதுநலம் பேணும்போது மிகவும் சிறப்படையும்.

உயிர் போவதாக இருந்தாலும் தமது மேன்மைக்கு, புகழுக்கு பிறரால் ஏற்படுத்தப்படும் களங்கத்தை எண்ணி அதைப் போக்கத் துடிப்பதும், மிகவுயர்ந்த கொள்கையை வாழவைக்க தன் உயிரைத் தியாகம் செய்வதும் மானம் உடையோர் செயலாகும்.  நன்கு உண்டு மகிழ்ந்து இன்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த போது தமது இனத்தின் நிகரில்லா பெருமைக்கு இழுக்கு வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது, தொடர்ந்தும் உடம்பை வளர்த்து வாழும் வாழ்க்கை; சாகாது என்றும் நிலைத்து வாழ்வதற்கான மருந்தாகுமா? சிந்தித்துப் பாருங்கள். 

ஈழத்தமிழினத்தின் மானத்தைக் காக்கவென்று திலீபன், இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, 265 மணி நேரம் நீரும் அருந்தாது உண்ணாவிரதம் இருந்து, ‘ஈழத்தமிழரின் பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து மருந்தோ ஊன்ஓம்பும் வாழ்க்கை’ என நினைந்து உயிர் துறந்து திருவள்ளுவரின் வாய்மொழிக்கு காவியமானான்.

நம் முன்னோர்கள் காலங்காலமாக முயன்று சேர்த்து வைத்திருக்கும் அரிய பெருமைகளை சதைப்பிண்டமாகிய இவ்வுடலை வளர்க்க [ஊன் ஓம்ப] சிதறடித்து சின்னாபின்னம் ஆக்குவது சரியா? அப்படி வாழ்ந்தாலும் இறந்து போகாது வாழ்ந்திட முடியுமா? அதனாலேயே திருவள்ளுவர், அத்தகைய வாழ்க்கை இறவாமல் நிலைத்து வாழ்வதற்கான தேவாமிர்தமா! [மருந்தா!] என்று வியந்து  கேட்கிறார்.

Saturday, 1 February 2014

வைததை நினைப்போர்


இந்த உலகில் வாழும் உயிர்களிலே மனித இனம் தலைசிறந்தது என்பது மனிதராகிய எமது முடிவாகும். இருப்பினும் மனித இனம் என்று சொல்லப்படும் எமது எண்ணங்களும் செய்கைகளும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. எனவே மனித மனங்கள் இத்தனை வகையே இருக்கின்றன என்று பிரித்து அறிய முடியாது. பொதுவாக யார் யார் எதை எதை நினைத்துப் பார்ப்பார்கள் என்பதை நாலடியார்ப் பாடல் ஒன்று எடுத்துச் சொல்கிறது.

எந்த மனிதனும் தனக்குப் பிடித்ததை நாளும் நினைத்துப் பார்ப்பது வழக்கம். குறவர்கள்  தமது ஊரின் மலையின் செழிப்பை
“முழங்கு திரைப் புனலருவி கழ்ங்கென முத்தாடும்
          முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்ரிலைக் கொண்டோடும்
கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
          கின்புரியின் கொம்பொடித்து வேம்பு தினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
          தேன் அலர்சண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்”           - (குற்றாலக் குறவஞ்சி)
 என நினைத்துப் பார்ப்பார்கள்.

உழவனோ
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்
உயரும்  உன் மதிப்பு அயல் நாட்டில்”                              - (விவசாயி படப்பாடல்)
என்று நாட்டிற்கு உணவுப் பொருட்களை அள்ளி வழங்கும் விளைநிலத்தின் பெருமையை நினைப்பான். 

சான்றோரோ
“வாள்நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளந்கதிர் ஞாயிறு எள்ளூம் தேற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி”                               - (சிறுபாணாற்றுப்படை)
‘ஒளிமயமான வானத்தில் கோள்கள் சூழ இருக்கும் இளஞ்சூரியனைப் பழிக்கக்கூறக்கூடிய அளவு ஒளிவீசும் பொன்னால் ஆன பாத்திரத்தில் விரும்பும் உணவைப் பரிமாறி, அளவிலா விருப்பத்தோடு தானே முன்னுக்கு நின்று உண்ணச்செய்தான்’ என்று சொன்னது போல தமக்கு ஒருவர் செய்த நன்மையை எப்போதும் நினைத்துப் பார்ப்பர். 

ஆனால் கயவர்களோ தம்மை இழிவாகப் பிறர் பேசியதை நினைத்துப் பார்ப்பார்களாம் என்று நாலடியார் கூறுகிறது.

மலைநலம் உள்ளும் குறவன் பயந்த
விளைநலம் உள்ளும் உழவன்  - சிறந்தொருவர்
செய்தநன்று உள்ளுவர் சான்றோர் கய்ந்தன்னை
வைததை உள்ளி விடும்.                                      - (நாலடியார்: 356)

இனிதே

தமிழரசி.