Thursday, 30 January 2014

அடிசில் 77

பாதாம் பால்
- நீரா -

தேவையான பொருட்கள்:
பால்  - 3 கப்
பாதாம் பருப்பு - ½ கப்
பிஸ்தா பருப்பு - ¼ கப்
சீனி - ½ கப்
ஏலக்காய்  - 2
குங்குமப் பூ - 1 சிட்டிகை

செய்முறை: 
1. இரண்டு மூன்று பாதாம் பருப்பையும் பிஸ்தாப் பருப்பையும் வேறையாக எடுத்து வைக்கவும்.
2. மிகிதியாக உள்ள பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து எடுக்கவும்.
3. தோலுரித்து எடுத்த பருப்போடு பாலைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
4. ஒரு பத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் அரைத்த பால் கலவையை விட்டு, சீனி சேர்த்து, அடிப்பிடியாதிருக்க இடைஇடையே கலக்கி இளஞ்சூட்டில் ஐந்து நிமிடம் சூடாக்கவும்.
5. பால் கொதிக்கும் போது ஏலக்காய்த்தூளையும் குங்குமப்பூவையும் போட்டுக் காச்சி எடுக்கவும்.

6. சூடாகவோ அல்லது ஆறிய பின்னர் குளிரவைத்தோ குடிக்கலாம்.

Tuesday, 28 January 2014

பிறவாமை காக்கும் பிரான்

பக்திச்சிமிழ் 76
- சாலினி -
[காரைக்கால் அம்மையார், Banteay Srei Sivan Temple - Cambodia] 

ஒளியும் இருளும், பகலும் இரவும் போன்றதே பிறப்பும் இறப்பும். இரவும் பகலும் எப்படி மீண்டும் மீண்டும் வருகின்றதோ அப்படி இறப்பும் பிறப்பும் சுழலும் சக்கரம் போல் மீண்டும் மீண்டும் வரும் என்பது நம் முன்னோரில் சிலர் கண்ட முடிவாகும். பிறக்கும் போது நாம் எதனையும் கொண்டு வந்ததும் இல்லை, இறக்கும் போது எதனையும் எடுத்துச் செல்வதும் இல்லை. இருப்பினும் 
“பிறக்கும் பொழுது கொடு வந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவதில்லை இடைநடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாருக்கு என் சொல்லுவேன் கச்சிஏகம்பனே”         - (பட்டினத்தார் பாடல்)
எனப் பட்டினத்தார் சொன்னது போல் எம்மிடம் இருப்பதை யாருக்கும் கொடுக்காது பொருளுக்கும் பகட்டுக்கும் மயங்கிப் பேயாய் அலைகின்றோம். 

அப்படி மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் களைத்த ஆன்மா [உயிர்], மீண்டும் பிறவா நிலையைத் தேடும். மீண்டும் பிறவாத நிலையை பிறவாமை என்பர். பக்தி எனும் பரவச நிலையை உலகிற்குத் தெள்ளு தமிழில் முதன்முதல் எடுத்துச் சொன்னவர் காரைக்கால் அம்மையாரே ஆவார். அவரின் புகழைக் கூறவந்த சேக்கிழாரும் 
“இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்”             - (பெரியபுராணம்: 24: 60)
என்று பெரிய புராணத்தில் பாடியுள்ளார். இறப்பு என்பது இன்பம். அது துன்பத்தை தருவதில்லை. அதனாலேயே பிறவாமை வேண்டும் என்று கேட்கிறார். இறவாமையைக் [இறக்காது வாழ்தல்] கேட்கவில்லை. ஏனெனில் பிறவாமையே பேரின்பம் ஆகிய பெரும் பேற்றை நல்கும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பிறப்பே பெரும் துன்பம். மனிதப் பிறப்பெடுத்து வாழும் வாழ்க்கையில் அன்பு, பாசம், ஆசை, பேராசை இவற்றுள் மூழ்கி அல்லற்படுவதற்கு [துன்பம்] எது காரணம்? எம் மனமே காரணம். அதாவது எமது எண்ணமே காரணமாகும். 

மனித மனம் ஒரு தோணி போன்றது. அந்தத்தோணியிலே நாம் எமது பொறாமை, வஞ்சனை, கோபம், ஆணவம் போன்ற பல மூட்டைகளைக் கட்டி அடிக்கி வைத்திருக்கிறோம். வாழ்க்கையாகிய கடலில் மனம் என்ற தோணியை நம் அறிவாகிய துடுப்பால் செலுத்திச் செல்லும் போது மதன் என்று சொல்லப்படும்  செருக்கு, அறியாமை, அழகு, காமம் ஆகிய பாறைகள் தாக்கி, இறக்கும் போது என்ன நடக்கும் என்பதை அறிய முடியாது தடுமாறுகிறோம். எனவே இறக்கும் சமயத்திலாவது யாராலும் அறியமுடியாத இறைவனாகிய உனை நினைக்கின்ற உணர்வை ஆயினும் எனக்குத் தந்தருள்வாய். 

மனம் எனும் தோணிபற்றி
          மதிஎனும் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச்
          செறிகடல் ஓடும் போது
மதனெனும் பாறை தாக்கி
           மறியும்போது அறிய வொண்ணா
உனைஎனும் உணர்வை நல்காய்
           ஒற்றியூர் உடைய கோவே”            - (ப.திருமுறை: 4: 46: 2)
வாழும் போது வாழ்க்கை இன்பத்துள் மூழ்கி இறை உணர்வை மறந்தாலும் இறக்கும் போதாவது உன் நினைவைத் தா அது பேரின்பத்திற்கான வழியை காட்டும்.

‘பிறவாமை வேண்டும்’ என்று காரைக்கால் அம்மையார் கேட்டதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார் அல்லவா? அதனை காரைக்கால் அம்மையார் பாடிய திருஇரட்டைமணிமாலை
“ஈசன் அவன் அல்லா இல்லை யென நினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும்
பிறவாமை காக்கும் பிரான்”                             - (திருஇரட்டைமணிமாலை: 25)
எனச் சொல்கிறது.

காரைக்கால் அம்மையார் இப்பாடலில் ‘ஈசனை அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்று நினைத்து, நம் சிறுமைகளை எண்ணி மனம் கூசிக் குறுகி நின்று, மனமாகிய வீட்டில் ஈசனை வைத்து இறைவனின் பெருமைகளைப் பேசி மறவாது வாழ்வோரை மீண்டும் பிறவாமல் காக்கும் பெருமான்’ என்கிறார். அம்மையாரின் புகழ் கம்போடியாவுக்கும் பரவி 
‘நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்’ 
என சேக்கிழார் பாடியதற்கு அமைய, அங்கு அந்நாளில் பண்டைச்சேரி [Banteay Srei] என அழைக்கப்பட்ட இடத்தில் உள்ள கோயிற் கோபுரத்தில் இறைவன் ஆடுவதையும், அம்மையார் பாடுவதையும் புடைப்புச்சிலையாய் வடித்து வைத்துள்ளனர். அதனை மேலே உள்ள படத்தில் காண்க. 19.11.2012 அன்று அங்கு [Banteay Srei] சென்ற பொழுது எடுத்த படம்.

பிறவாமை வேண்டுமாயின் ஈசனை என்றும் மறவாதிருக்க வேண்டும்.

Monday, 27 January 2014

உவந்திட அருள்வாய்!


முன்னையே முயன்று தவம் செய்யா
          மூர்க்கத்தால் பிறந்துழன்று
அன்னையே என்றரற்றி அனுதினம்
          அன்பிலூறி நைந்துருகி
நின்னையே நாளும் நினைந்தறியா
          நோயினேனை நோய்நீக்கி
உன்னையே எண்ணி என்றென்றும்
          உவந்திட அருள்வாய்!

Saturday, 25 January 2014

முதுமை என்பது எதுவரை?
முதுமை என்பதோர் புதுமை - அதை
          முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு?
முதுமை தருவது அறிவாகும் - அதில்
          முழுமை பெறுவோர் சிலராவர் 
முதுமை என்பது எதுவரை - அதன்
          முடிவைச் சொல்பவர் யாருளர்?
முதுமை தருவது நோயென்று - தினம் 
          முடங்கிக் கிடத்தல் தகுமோ?
                                                        - சிட்டு எழுதும் சீட்டு 83 

Friday, 24 January 2014

ஆசைக்கவிதைகள் - 85

தத்தரே பித்தரே!

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் திரிகோணமலையின் கந்தளாய்க் குளத்தில் மீன்பிடிக்கச் சில மீனவர்கள் சிறுதோணியில் சென்றனர். மீன் பிடிக்கச் செல்வோர் தமது உடல் அலுப்புத் தெரியாது இருக்க மெட்டுக் கட்டிப் பாடிச் செல்வது வழக்கம்.  சிறுதோணியில் சென்ற மீனவர்களூம்
‘ஏலேலோ ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோஒ’ என மெட்டுக் கட்டிப் பாடிப்பாடி குளத்தில் வலைவீசி மீன்பிடித்தனர். வலையில் ஆமை, மீன், நண்டு, தவளை எல்லாம் அகப்பட்டுக் கொண்டது. 

அந்த வலையில் அகப்பட்ட ஒரு தவளை, வலையில் அகப்பட்டதை நினைத்துப் பெரிதாகச் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தது. வலைக்குள் இருந்த உயிரினங்களைப் பார்த்து இந்த வலையிலிருந்து நாம் தப்பிச்செல்ல வழி தேடவேண்டும் என்று சொன்னது. அதற்கு ஆமை “உனக்கு என்ன பித்தா பிடித்திருக்கு, எனக்கு ஆயிரம் புத்தி இருக்கிறது அதைக் கொண்டு தப்பிக்கொள்வேன்” என்றது. மீனும் “எனக்கு நூறு புத்தி இருக்கிறது நானும் தப்பிக் கொள்வேன்” என்றது. நண்டும் தனக்கு பத்துப்புத்தி இருக்கிறது அதைப்பயன்படுத்தித் தப்பிக்கொள்வேன் என்றது. 

அவற்றைக் கேட்ட தவளை, ‘அடக்கடவுளே! ஆயிரம் புத்தியுள்ள ஆமை, நூறு புத்தியுடைய மீன், பத்துப்புத்தி கொண்ட நண்டு எல்லாவற்றையும் படைத்த நீ என்னை மட்டும் ஏன் ஒரு புத்தியுடன் படைத்தாய்’ என்று அழுதது. அழுகொண்டே தப்புவதற்கு ஏதும் வழி கிடைக்காதா என்று வலையின் இடுக்கில் தலையையும் கால்களையும் நுழைத்துப் பார்த்தது. அதன் முன்னங்கால் ஒன்றும் பின்னங்கால்களும் வலையில்  சிக்கிக் கொண்டதே அல்லாமல் தப்பிச் செல்ல வழி கிடைக்கவில்லை.

வலையை வீசியவர்கள் வலையை இழுத்து தோணிக்குள் போட்டார்கள். வலைக்குள்  பிடிபட்டிருந்த ஆமையைத் தூக்கி மல்லாத்தி வைத்து, அது ஓடாதிருக்க ஒரு கல்லை அதன் நெஞ்சில் பாரமாக வைத்தனர். மீனைப் பிடித்து ஈர்க்கினால் அதன் கண்ணுக்குள் குத்திக் கோர்த்தனர். நண்டை எடுத்து தோணிக்குள் விட்டனர். அது தோணிக்குள் நடக்கும் போது 'கடக்கட முடக்கர' என்ற சத்தம் கேட்டது. வலையில் சிக்கி இருந்த தவளையை விடுவித்து, ‘தத்திப் போ பித்தரே [அறியாமையுடையது]!’ எனவிட்டனர். அப்போது ஆமையையும், மீனையும், நண்டையும் பார்த்து அந்தத் தவளை

“ஆயிரம் புத்தரே மல்லாத்தரே கல்லேத்தரே
           நூறு புத்தரே கண்ணுக்கக் கோர்த்தரே
பத்துப் புத்தரே கடக்கட முடக்கரே
          ஒரு புத்தரே தத்தரே பித்தரே!
                                                           நாட்டுப்பாடல் (கந்தளாய் - திரிகோணமலை)
                                                          (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
எனப் பாடியபடி குளத்தினுள் தத்திச்சென்றதாக, அந்நாளில் கந்தளாயில் வாழ்ந்த மீனவர்கள் பாடிய நாட்டுப் பாடல் இது.

திரிகோணமலையில் பிறந்த தருமு சிவராம் என்பவர் [பிரமிள்] இந்த நாட்டுப் பாடலின் மூன்றாவது வரியைத் தவிர்த்து, மற்ற மூன்று வரிகளையும் தனது கவிதையில் சேர்த்திருக்கிறார். அவர் திரிகோணமலையைப் பிறப்பிடமாகாக் கொண்டவர் ஆதலால் அவருக்கு இந்த ஈழத்து நாட்டுப்பாடல் தெரிந்திருந்ததால் அதனைச் சேர்த்துக் கவிதை புனைந்திருக்கிறார். பிரமிள் சிறந்த எழுத்தாளராக தமிழ்நாட்டினரால் பாராட்டுப் பெற்றவர். உங்களுக்காக அவரது அந்தத் தவளைக் கவிதை இதோ:
‘தனக்குப் புத்தி நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன் கல்லை
‘எனக்கு புத்தி ஒன்றே’ என்றது தவளை
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித் தத்தித் தப்பிப்
போகுது தவளைக் கவிதை -
நூறு புத்தரே! கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே! மல்லாத்தரே! கல்லேத்தரே!
ஒரு புத்தரே! தத்தரே! பித்தரே!

Thursday, 23 January 2014

குறள் அமுது - (86)

குறள்:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகுதலின் குன்றல் இனிது                      - 811
                                     
பொருள்:
எம்மை அள்ளிக் குடிப்பவர் போலப் பழகினாலும் பண்பில்லாதவர்களது நட்பை வளரச் செய்வதைவிடக் குறைத்துக் கொள்வது இனிமயானதாகும்.

விளக்கம்:
நெடுநேரம் காட்டிலும் மேட்டிலும் தண்ணீரும் குடிக்காது அலைந்து திரிந்து களைத்து தண்ணீரைக் கண்டவுடன் விடாய்தீர ஆசையுடன் அள்ளிக் குடிப்போம் அல்லவா? அப்படி வேட்கையுடன் குடித்தலே பருகுதலாகும். கேண்மை என்பது நட்பு. 

அன்பே உண்மையான நட்புக்கு ஆதாரமாகும். நம்மோடு பழகுவோரது நட்பெல்லாம் உண்மையான நட்பு என நினைந்து, எம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் ‘தீநட்பு’ என்று ஓர் அதிகாரத்தை திருவள்ளுவர் தந்திருக்கிறார். தீ [நெருப்பு] எப்படிக் கனன்று மெல்லப் பற்றிப் பிடித்து, அருகேயுள்ள பொருட்களை அழிக்குமோ, அப்படித் தீநட்பும் நம்மை எரித்துச் சாம்பலாக்கிவிடும்.

மனித குலத்துக்கு என்றே சில அரிய பண்புகள் இருக்கின்றன. நாம் மனித குலத்தில் பிறந்தோம் என்ற மாண்பை அன்பு, பாசம், இரக்கம், நேர்மை, ஈகை, தன்னைப் போல் மற்ற உயிர்களையும் மதித்தல், பகிர்ந்து உண்ணுதல், எல்லோருடனும் முகம் மலர்ந்து பேசுதல் போன்ற பண்புகள் எடுத்துக் காட்டும். இந்த அடிப்படைப் பண்புகள் அற்றோர் பண்பிலார் ஆவர். 

உள்ளன்பு இல்லாமல் பகட்டுக்காகவும் பணத்துக்காகவும் தமது தேவைக்காக ஒட்டி உறவாடுபவரது நட்பை வளரவிடாது காத்துக் கொள்ளவேண்டும். தமது தேவைக்காக ஒட்டி உறவாடுவதும் பண்பிலாத் தன்மையே. பண்பிலாதோரில் சிலர் அன்பில் உருகி அப்படியே அள்ளிப் பருகுவது போல் அன்பைப் பொழிவர். அத்தகையோரின் நட்பு பெருகி வளர்வதைவிட குறுகி இல்லாது போதல் இன்பத்தைத் தரும். அதைவிட இனிமை வேறு ஏது வேண்டும்?

Monday, 20 January 2014

பிறப்பறுத்து ஆளவல்லான்

பக்திச்சிமிழ் 75
- சாலினி -
அன்புக்கு ஏங்குதலே மனித இனத்தின் பொதுவான பண்புபாகும். அந்த அன்பின் முதிர்ச்சியே பக்தியாகும். பக்தியாய் பாடினார் எல்லோரும் பரசிவத்தை அடைவதில்லை. எமக்கு முன் பிறந்த எம் முன்னோரில் யார் பரசிவமானார் என்ற பட்டியலில் முதன்மையானவனாக எமது சைவசமயச்சான்றோர்களால் போற்றப்படுபவன் இராவணனே.

சைவசமயச் சான்றோரான திருநாவுக்கரசு நாயனார் சூலை நோயால் துன்பப்பட்டு, அதனை போக்குதற்காகக் 
“கூற்றாயின வாறு விலக்ககலீர்
           கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
           பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே
          குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்”                                          (ப.திருமுறை: 4: 1: 1)
எனக் கதறிய பதிகத்தின் முதல் தேவாரம் இது. இதுவே திருநாவுக்கரசு நாயனார் பாடிய முதல் தேவாரமும் ஆகும். இத்தேவாரத்தை நாம் அறிவோம். 

ஆனால் இப்பதிகத்தின் கடைசித் தேவாரம் நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அத்தேவாரத்தில் சிவனிடம் ‘அரக்கனான இராவணனை கயிலை மலையின் கீழ் நெரித்து, பின்னர் அருள் செய்ததை கருத்தில் கொண்டாயானால், சூலை நோயால் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் துன்பப்படும் என் வேதனையை நீக்கி அருள் செய்வாய்! எனச் சொல்கிறார்.
“ஆர்த்தான் அரக்கன்றனை மால்வைக்கீழ்
           அடர்த்திட்டு அருள் செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும்
           என் வேதனை யான விலக்கிடாய்”              (ப.திருமுறை: 4: 1: 10)

இவ்வாறு உருண்டு, புரண்டு, கத்திக் குழறி சிவனைப் பார்க்கும் திருநாவுக்கரசரின் கண்முன்னே
“ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
           உடல்துணித்த இடர்பாவம் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்”                  (ப.திருமுறை: 6: 18: 6)
இலங்கையின் வேந்தனான இராவணன் ஒரு சில்லுடைய [ஓராழி]  புட்பகவிமானத்தை வைத்திருந்ததும், சிவன் அவனது உடலைக் கூறு செய்த ஆணவமலத்தைப் [இடர்பாவம்] போக்கி [கெடுப்பித்து], அவனுக்கு போர் செய்யும் ஆயுங்கொடுத்த சிறப்பும் தெரிகிறது.

அந்த சிறப்பைப் பார்த்தவருக்கு பெருமகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சிப் பெருக்கில்
“தருக்கினவாள் அரக்கன் முடி
           பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின் வாறு அடியேனைப்
          பிறப்பறுத்து ஆளவல்லான்”                      (ப.திருமுறை: 4: 86: 11)

‘எழுச்சிமிக்க வாளை வைத்திருந்த இலங்கை வேந்தனின் முடிபத்தும் வீழ பாதத்தால் ஊன்றி, ஆணவமலத்தைப் போக்கி அருள் செய்தது போல அடியவனான எனது பிறப்பை நீக்கி ஆட்கொள்ள வல்லவன் சிவன்’ எனக் கூச்சல் இடுகிறார்.

அந்தக் கூச்சலுடன் திருநாவுக்கரசு நாயனார் நிற்கவில்லை. ஒரு தலை உடைய எமக்கு இரு தோள் உண்டு. பத்து தலை உடையவனுக்கு இருபது தோள் இருக்கத்தானே வேண்டும். 

‘இராவணன் கயிலை மலையை இருபது தோள் கொண்டு உந்தியே தூக்கினான். அப்போது இரத்த வெள்ளம் பாய விரலால் [அங்குலி] ஊன்றியவனின் திருவடியே என்னை ஆட்கொண்டது’ என்று சிவன் தன்னை ஆட்கொண்ட திறத்தைச் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகிறார்
           “………………….. இருபது தோள்
அங்குலம் வைத்தவன் செங்குருதிப்
           புனலோட அஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை
          என்னை ஆண்டனவே”                      (ப.திருமுறை: 4: 102: 7)

பாருங்கள் தமது முன்னோனான இராவணனைச் சிவன் எப்படி ஆட்கொண்டானோ அப்படித் தன்னையும் ஆள்வான் என முழுமனதுடன் நம்பி ‘அதில் வெற்றியும் பெற்றேன்’ என்று திருநாவுக்கரசர் கூறியும் நாம் இராவணனைக் கண்டு கொள்ளாது இருப்பது ஏனோ!

Sunday, 19 January 2014

அடிசில் 76

கொள்ளுத்  துவையல் 
- நீரா -

தேவையான பொருட்கள்:
கொள்ளு - ½ கப்
செத்தல் மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்ப் பூ - 1½ கப்
தோல்சீவிய மாங்காய் - சிறிய துண்டு
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்தில் கொள்ளு, செத்தல் மிளகாய் இரண்டையும் இட்டு, பொன்னிறமாக வறுத்துக் கொள்க.

2. இவற்றுடன் வெங்காயம், தேங்காய்ப்பூ, மாங்காய், கறிவேப்பிலை, உப்புச் சேர்த்து நன்றக அரைத்து எடுக்கவும்.

Thursday, 16 January 2014

தங்கியருள் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -


நிலநீண் டிடாயாழ் நகர்நீங்கி வந்தினிய
          நீர்நீழு கிளிநொச்சியில்
நிலையாய் வதிந்தழகு நெல்லோடு பலசெல்வ
          நிறைவோடு குடிவாழ்ந்துமே
குலநீண் டுயர்ந்தருட் குணநீண் டகன்றநற்
          கூடல்வளர் தமிழ்வளர்ப்போம்
கூடாத கூட்டங்கள் குடிவகை கடிந்துளோம்
          குலவுபல கலைவளர்ப்போம் 
பொலநீண்ட வாலிபர்கள் நங்கையர் படிக்க
          திட்டங்கள் செய்து
பாலோடு நெய்யுடன் தேனோடு செஞ்சோறு
          பழமோடு வந்தளிப்போம்
தலநீண்டுயர்ந் தழகுபொலி சோலை கனியுதிர்
          தரநீண்ட கோபுரமுயர்
தவமான நன்னகர்க் கிளிநொச்சி மகிழ்தரத்
          தங்கியருள் கந்தவேளே!

Wednesday, 15 January 2014

பாடசாலை போகவில்லை!பாடசாலை போகவில்லை
            பாடமும் படிக்கவில்லை
கூடமாட எவருமில்லை
            கூத்தடிப்பு பார்ப்பாரில்லை
தேடவர யாருமில்லை
            தேவையும் தோனவில்லை
நாடமாட கூடமில்லை
            நாடினோம் நதியினெல்லை!

பாடிப்பாடி மரத்திலேறி
           பாய்ந்து விளையாடுறோம்
ஆடியாடித் தொங்குமந்த
           ஆசைக்கு ஈடுயில்லை
ஓடியாடிப் பதுங்கிநின்று
            உல்லாசம் காணுகிறோம்
கூடிக்கூடி பலதும்கற்று
            கூவுவோம் உலகினெல்லை!
                                                                                 - சிட்டு எழுதும் சீட்டு 82

இனிதே,
தமிழரசி.

Tuesday, 14 January 2014

ஆசைக்கவிதைகள் - 84


உல்லாசப் படகோட்டு மச்சியே!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் பிரச்சனையை உருவாக்கும் தீவாக இப்போது  கச்சதீவு இருக்கிறது. பண்டைக் காலத்தில் இத்தீவில் கடல் ஆமைகள்  தமது முட்டைகளை இட்டு மூடிச்செல்ல, அம்முட்டையில் இருந்து வெளிவரும் ஆமைக் குருகுகள் ஆயிரக்கணக்காக அங்கே உலாவந்தன. அதனைக் கண்ட நமது முன்னோர் அதனைக் கச்சதீவு என்று அழைத்தனர். இதேபோல் பண்டை நாளில் மதகநாட்டு மேலைக் கடற்கரைப் பட்டினத்தின் துறைமுக நகரம் பிருகுகச்சம் என்ற  பெயரால் அழைக்கப்பட்டது. அதனை இப்போது பரூக் என்கிறார்கள். கச்சம் என்றால் ஆமை. பாண்டிய அரசர்கள் கச்சம் [ஆமை] பொறித்த காசுகளையும் கச்சவடிவிலானா காசுகளையும் வெளியிட்டார்கள். அந்தக் காசுகள் கச்சக்காசு என்றும் அழைக்கப்பட்டன. சில கிராமியக் கதைகள் கச்சதீவை ஆமைத்தீவு என்றும் கூறும்.

தெளிவில்லாத பிராமி எழுத்துக்கள் கொண்ட கச்சக்காசு 

திருமால் ஆமைவடிவம் எடுத்து மந்திரமலையைத் தாங்கியதை
“கால் ஆழ்ந்து அழுந்திக் கடல் புக்குழி கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்புமான”                  - (சுந்தரகாண்டம் 40: 1)
எனச் சொல்லும் இராமாயணம் கச்சம் என்று ஆமையைக் குறிக்கிறது. ஆனால் கச்சதீவு பற்றி குறிப்பிடும் நம்மவர்கள் சிங்களத்தில் கச்ச என்றால் கசப்பு அங்கு உள்ள தண்ணீர் கச்சலாக இருந்ததால் கச்சதீவு என்றார்கள் என்று எழுதுகிறார்கள். சிறிய தீவுகள் யாவும் கச்சல் தண்ணீர் உள்ளதாகவே இருக்கின்றன. அதற்காக எல்லாத் தீவுகளையும் கச்சதீவு என்றா அழைக்கிறோம்?

இந்தியாவில் இருந்து வரும் வியாபாரிகளிடம்  பச்சை மணி, பவள மணிகளை வாங்கத் தீவுப்பகுதிப் பெண்கள் கச்சதீவுக்குப் படகில் சென்றிருக்கலாம். நெடுந்தீவுக்கு அருகே கச்சதீவு இருப்பதால் இந்நாட்டுப் பாடல் சுட்டும் பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவராய்  இருக்கலாம். அவளை கச்சதீவில் கண்ட அவளது மச்சான் இப்பாடலைப் பாடியிருக்கலாம். காத்தாடல், மச்சி, பாத்துவாங்கு, உச்சி வெய்யில், உல்லாசம், உருக்குலைதல்,  நச்சுதல் போன்ற சொற்கள் யாழ் தீவுப்பகுதி மக்களின் பேச்சுவழக்கில் உள்ள சொற்களாகும்.

மச்சான்:
உச்சி வெய்யில் காயயில
         உல்லாசப் படகோட்டு[ம்]
மச்சியே! உருக்குலைந்து
          போனேன் உனைநச்சியே!

கச்சதீவு கடக்கரையில் 
     காத்தாட வந்த மச்சியே!
பச்சமணி பவளமணி
        பாத்துவாங்கு மச்சியே!
                                                   -  நாட்டுப்பாடல் (தீவுப்பகுதி - கச்சதீவு)
                                                      (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Monday, 13 January 2014

பொங்கற் பானை பொங்கவே!
வங்கக் கரையின் ஓரத்தே
          வையை நதியின் தீரத்தே
பொங்கிப் படைத்த சங்கத்தே
          பாடும் புலவோர் கவிகேட்டே
தங்கும் இளமைப் பருவத்தே
         தகத்திருந்த தமிழணங்கே!
எங்கும் இன்பம் தங்கவே
         எழுந்து வா! இப்போதே!


எங்கள் இதயம் பொங்கவே
        ஏற்றம் எங்கும் ஓங்கவே
சங்கம் எங்கும் ஆர்க்கவே
       சால்பு எங்கும் நிறையவே
பொங்கற் பானை பொங்கவே
        பூந்தமிழ் பாடல் கேட்கவே
பொங்கும் புது வெள்ளமாய்
         அருள் தங்கும் உலகெங்குமே!

சொல்விளக்கம்:
தீரம் - கரை
பொங்குதல் - மிக்க உயர்வு
படைத்தல் - உண்டாக்கல் 
பொங்கிப் படைத்த சங்கம் - மிக்க உயர்வோடு உண்டாகிய சங்கம் [சங்ககாலத் தமிழ்ச்சங்கம்]
தகத்து - பெருமை
தகத்திருந்த - பெருமையோடு இருந்த
சங்கம் - சங்கு
ஆர்த்தல் - ஒலித்தல்
சால்பு - மன அமைதி/கல்வி/மேன்மை

இனிதே,
தமிழரசி.
குறிப்பு: நாளைய [14/01/14] தைப்பொங்கலுக்காக இன்று எழுதியது.

Sunday, 12 January 2014

குறள் அமுது - (85)

குறள்:
“காமக்கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு”                           - 1251

பொருள்:
நாணம் என்கிற தாழ்ப்பாள் போட்டு பூட்டி வைத்திருக்கும் மன உறுதி எனும் கதவை காமமாகிய கோடாரி உடைத்துவிடுகிறது.

விளக்கம்:
கோடாரியைக் கணிச்சி என்பர். நம் நாட்டு மரங்களிலே மிக வைரமான மரம் கருங்காலி. அந்தக் கருங்காலி மரத்தைக்கூட மிக இலகுவாகக் கோடாரியால் வெட்டிவிடலாம். ஆனால் சிறு கத்தியால் அரிந்து வெட்டக்கூடிய வாழையை கோடாரியால் வெட்டமுடியாது. அதனை ஔவையார்

“கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும்”
என மிக அழகாகப் பாடி வைத்திருக்கிறார். எவ்வளவுக்கு எவ்வளவு வைரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதனைக் கோடாரி கொண்டு வெட்ட முடியும். 

ஒழுக்கம் நிறைந்தவராய் வாழ்ந்தால் மனிதவாழ்வு சிறப்படைவதைக் கண்ட நம் முன்னோர் மனித ஒழுக்கத்தை நிறை என்றனர். ஒழுக்கமாகிய நிறை என்னும் கதவு மிகவும் வைரமானது. அந்த வைரமான கதவு நாணம் என்னும் தாழ்பாள் போட்டுப் பூட்டியிருக்கிறது. அப்படிப் பூட்டியிருக்கும் உறுதியான கதவை உடைத்தால் உள்ளே செல்லலாம். கதவை உடைக்க கோடாரி வேண்டும். 

ஒழுக்கக் கேடுகளுக்கு காரணமாக இருப்பது காமவெறி. காமம் ஆகிய கோடாரி, உரமேறிய ஒழுக்கம் நிறைந்த கதவை உடைத்து சுக்கு நூறாக்கிச் சிதைக்கும். காமம் வேறு காதல் வேறு. இத்திருக்குறளில் திருவள்ளுவர் காமத்தைக் கோடாரியுடன் ஒப்பிடுகிறார். ஏனெனில் வைரமான மரத்தைக் கோடாரி எப்படிச் சின்னா பின்னம் ஆக்குதோ அப்படி காமமும் மனித வாழ்வை சீரழிக்கும். இன்பத்தைக்  காமவெறியுடன் அநுபவிக்காமல் காதலுடன் அநுபவிங்கள் என்பதே வள்ளுவர் நோக்கமாகும். அவரே இன்னொரு திருக்குறளில் "மலரின் மெல்லிது காமம்" என்கிறார். காதலுடன் காமம் சேரும் போது அது மலரைவிட மென்மையாக இருக்கும் என்பது வள்ளுவன் கண்ட முடிவாகும். காரணம் காதல் கதலிவாழைத் தண்டு போன்றது. அது காமத்தை குழையச் செய்கிறது.

ஒழுக்கம் எனும் நிறையாகிய [மன உறுதி] கதவை நாணம் என்று சொல்லப்படும் தாழ்பாள் போட்டுப் பூட்டி வைத்தாலும் காமம் என்னும் கோடாரி அதனை உடைத்து சிதறடிக்கும். ஆதலால் காமத்தில் மூழ்காது காதலில் மூழ்குங்கள்.

Friday, 10 January 2014

புத்தியில்லாப் பாம்பு

 பக்திச்சிமிழ் 74

பக்தி இலக்கியப் பாடல்களில் நகைச்சுவை உடைய பாடல்களும் இருக்கின்றன. கீழே உள்ள பக்தி இலக்கியப் பாடலும் நகைச்சுவை உடையதே. அதனை வாசித்துப் பாருங்கள். அப்பாடலின் கருத்து புரிகிறதா? அல்லது அப்பாடல் எதனைச் சொல்கிறது என்பதாவது தெரிகிறதா?

“திருமார்பில் ஏனச்செழு மருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறாது
அதுமதி ஒன்றுஇல்லா அரா”                     - (ப.திருமுறை: 11)

இந்தப் பாடலை முதன்முதலாக வாசிப்போருக்கு அது எதனைச் சொல்லவருகின்றது என்பது புரியாது.

பண்டைத் தமிழ்ப் பெண்களிலே தமிழை நன்கு கற்று, பக்தி சொட்டச்சொட்ட பாடல் புனைந்து பக்திநெறிக்கு வித்திட்டவர் இயற்றிய பாடல் இது. அவர் இறைவனின் திருவுருவை அணுவணுவாகக் கண்டு களித்து அதனைத் தன் பாடல்களில் எழுதியவர். அவரின் பாடல்களில் அவரது உள்ளன்பின் பலபடிநிலைகளைக் காணலாம். அவற்றில் இறைவன் மேல் அவர் கொண்ட அன்பும் ஆசையும் பக்தியும் பெருமையும் மட்டுமல்லாமல் புத்திமதியும், கிண்டலும் கூட மிளிர்கின்றன. அவர் வேறு யாருமல்ல பக்தி இலக்கியங்களின் தாயாய், கலையரசியாய் விளங்கிய காரைக்கால் அம்மையாரே.

இறைவன் அணிந்திருக்கும் அணிகலங்களைப் பார்த்து ஓர் ஓவியனாய்க் கவிஞனாய் நின்று இப்பாடலை வடித்திருக்கிறார். சிவன் கழுத்தில் அணிந்திருக்கும் பாம்பு எவ்வளவு மூடப்பாம்பு [முட்டாள் பாம்பு] என்பதை மிக அழகாகச் சொல்கிறார். மீண்டும் அப்பாடலைப் பார்ப்போமா?

“திருமார்பில் [அழகிய மார்பில்] ஏனச்செழு [கொழுத்த பன்றி]                                                      மருப்பைப் [கொம்பைப்] பார்க்கும்
பெருமான் [சிவபெருமான்] பிறைக்கொழுந்தை [இளம்பிறையை]                                                நோக்கும் [பார்க்கும்] - ஒருநாள் 
இதுமதி [இதுதான் சந்திரன்] என்று ஒன்றாகத் [உறுதியாகத்]                                                     தேறாது [அறியாது]
அதுமதி [அது புத்தி] ஒன்றுஇல்லா [ஒன்றும் இல்லாத] அரா [பாம்பு]”  

சிவன் கழுத்தில் பாம்பு அணிந்திருக்கிறார் அல்லவா? அந்தப் பாம்பு, சிவனின் கழுத்திலிருந்து கீழே பார்க்கும் போது இறைவனின் அழகிய மார்பில் அணிந்திருக்கும் பன்றியின் கொம்பைப் பார்க்கும். மேலே பார்க்கும் போது சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் இளம்பிறையைப் பார்க்கும். பன்றியின் கொம்பும் இளம்பிறையும் தோற்றத்தில் ஒரேமாதிரி இருப்பதால் இப்படி கீழேயும் மேலேயும் பார்த்து, ஒருநாளாவது இதுதான் இளம்பிறைச்சந்திரன் என்பதை அதனால் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. மேலே தலையில் அணிந்திருப்பது சந்திரனா! கீழே மார்பில் அனிந்திருப்பது சந்திரனா! என்று அது தடுமாறுகிறதாம். ஏனெனில் அது புத்தி ஒன்றும் இல்லாத பாம்பு, என்று கூறி காரைக்கால் அம்மையார் சிரித்துள்ளார்.

[Photo source: Wikipedia]
இனிதே,
தமிழரசி.

Thursday, 9 January 2014

அடிசில் 75

பயற்றம் பலகாரம்
- நீரா -


தேவையான பொருட்கள்:
வறுத்து இடித்த பயற்றம் பருப்பு மா - 3 கப்
தேங்காய்த் துருவல் - 1½ கப்
வெள்ளை எள் - 1 கப்
சீனி - 3½ கப்
தண்ணீர் - 1 கப் 
மிளகு - 1 தேக்கரண்டி
சின்னச்சீரகம் - 1 தேக்கரண்டி
ஏலப் பொடி - ½ தேக்கரண்டி 
பட்டர் - 2 தேக்கரண்டி
உப்பு - சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு

தோய்க்கும் மாவிற்குத் தேவையான பொருட்கள்:
வெள்ளைப் பச்சை அரிசி - 1¼ கப்
கோதுமை மா - ½ கப் 
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி 
தேங்காய்ப் பால் மா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. தோய்க்கும் மாவிற்குத் தேவையான வெள்ளைப் பச்சை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
2. தேங்காய்த் துருவல், எள், மிளகு, சீரகம் நான்கையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து இடித்துக்கொள்க. 
3. இவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு பயற்றம்மா, பட்டர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்க.
4. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரைவிட்டு சீனியும் சேர்த்துக் காய்ச்சவும்.
5. காய்ச்சும் பாகில் குமிழிகள் தோன்றும் போது, கையில் மெல்லிய கம்பியாக இழுபட்டு அறுந்து போகும் பருவத்தில் [மெல்லிய கம்பிப்பாகு] கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கரண்டியால் கிளறி குழைத்துக் கொள்க.
6. குழைத்தமாவை எண்ணெய் பூசிய பலகையில் இட்டு அரை அங்குலத் தடிப்பில் அழுத்தமாகப் பரவி சூடாக இருக்கும் போதே விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்க.
7. ஊறவிட்ட அரிசியின் நீரை வடித்து தோய்க்கும் மாவிற்குத் தேவையான மற்றப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு தோசைமாப்பதத்தில் அரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்க.
8. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
9. பயற்றம் பலகாரம் எண்ணெய்யில் மூழ்கிப் பொரியக்கூடிய அளவிற்கும் கூடுதலாக எண்ணெய் இருக்க வேண்டும்.
10. குழைத்து வெட்டி வைத்துள்ள துண்டுகளை தோய்க்கும் மாவில் தோய்த்து, தொதிக்கும் எண்ணெயில் இட்டுப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
1. எண்ணெய் ஒரே அளவான சூட்டில் கொதிக்க வேண்டும். சூடு குறைந்தால் பலகாரம் எண்ணெய்யாக இருக்கும்.
2. மெல்லிய கம்பிப் பதமாக பாகு இருக்க வேண்டும்.  கையில் தடித்த கம்பியாக உடையும் பதமானால் பலகாரம் கல்லுப்போல் கடினமாக இருக்கும். 

Tuesday, 7 January 2014

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு

இரட்டைத் தாழ்!

பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் மோதிக்கொண்டனர். புலவர்கள் இருவரும்  தத்தம் அரசுகளைப் புகழ்ந்து பாடியதை பாண்டிய மன்னன் இரசித்துக் கேட்டான். எனினும் அந்நாளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்குள் தன் மகளுக்கு ஏற்ற கணவனாக வரும் தகுதி குலோத்துங்க சோழனுக்கு இருந்ததை பாண்டிய மன்னன் அறிந்திருந்ததாலும், அரசியல் காரணங்களுகக்காகவும் அத்திருமணத்திற்கு உடன்பட்டான். திருமணம் முடித்து குலோத்துங்கனுடன் சென்ற பாண்டிய மன்னின் மகள் தனது குருவான புகழேந்தியாரையும் தன்னுடன் சோழ நாட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

மகாபாரதத்தில் வரும் கிளைக்கதையான நளன் சரிதத்தை நளவெண்பாவாகப் பாடியவர் இந்தப் புகழேந்திப் புலவரே! அதனாலேயே அவர் ‘வெண்பாவுக்கோர் புகழேந்தி’ என்ற பாராட்டைப் பெற்றவர். அவரின் வெண்பாத் தமிழையும் தமிழ் இசையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் அறிய  நளவெண்பாவில் ஒரு பாடலைப் பார்ப்போம். தமயந்தியின் சுயம்வர மண்டபம். அவளை மணம் செய்ய விரும்பிய மன்னர்கள் மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தமயந்தி தன் கணவனைத் தேர்ந்தெடுப்பதற்காக கையில் மலர்மாலையை ஏந்தியபடி தோழியுடன் மெல்ல நடந்து வருகிறாள். தோழி ஒவ்வொரு மன்னரையும் காட்டி அவர்களைப் பற்றிச் சொல்கிறாள். அவந்தி நாட்டு அரசனைக் காட்டி 

“வண்ணக் குவளைமலர் வௌவி வண்டுஎடுத்த
பண்ணில் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணாது
அரும்கடா நிற்கும் அவந்திநாடு ஆளும்
இரும்கடா யானை இவன்”

‘எருமைக்கடா ஒன்று அழகிய குவளை மலரை உண்பதற்காகக் கவ்வ, அந்த மலரில் தேன் அருந்திக் கொண்டிருந்த வண்டுகள் எழுந்து பறந்து ரீங்காரம் செய்யும். அவற்றின் ரீங்காரம், பண்ணின் இசையாக எருமைக் கடாவின் செவியில் கேட்க, அந்த இசைமயக்கத்தில் குவளை மலரை உண்ணாது அது நிற்குமாம். அப்படிப்பட்ட அவந்தி நாட்டை ஆளும் இவன் வலிமைமிக்க ஆண்யானையைப் போன்றவன்’ என்று தோழி சொல்கிறாள். 

புகழேந்திப் புலவரின் இப்படியான தமிழோடு பழகித்திரிந்த பாண்டியனின் மகள் அவரைப் பிரிந்து செல்வாளா? எனவே புகழேந்தியாரைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள். அவளுடன் சென்று சிறிது காலம் இருந்த புகழேந்திப் புலவர், பாண்டிய மன்னனைப் காண்பதற்காக பாண்டிய நாட்டிற்கு வந்தார். பின்னர் பாண்டியனிடம் விடைபெற்று சோழ அரண்மனைக்கு செல்லும் வழியில் சில குண்டர்கள் அவரை அடித்துக் கண்ணையும் கைகால்களையும் கட்டி இழுத்துச் சென்றனர். அவர் கண்திறந்து பார்த்த போது தான் பாதாளச் சிறையில் இருப்பதைக் கண்டார். ஒருவாறு தன்னிலையை ஊகித்து அறிந்து கொண்டார்.

பாண்டிநாடு சென்ற தன் குரு மீண்டும் வராததைக் கண்ட குலோத்துங்க சோழனின் மனைவி    [பாண்டியனின் மகள்] தனது தந்தைக்கு புகழேந்தியாரை அனுப்பும்படி தூது அனுப்பினாள். புகழேந்தியார் பாண்டிய நாட்டில் இருந்து சோழ நாட்டிற்கு வந்துவிட்டார் என்ற செய்தியும் அவளுக்குக் கிடைத்தது. அவருக்கு என்ன நடந்தது என்று கவலைப்பட்ட அவளும் தன் கணவனான குலோத்துங்க சோழனைக் கேட்டாள். ‘அவர் சேர நாட்டிற்கோ, பல்லவ நாட்டிற்கோ சென்றிருக்கலாம், வாருவார்’ என்றான். தனக்கோ, தந்தைக்கோ சொல்லாமல் அவர் எங்கும் சென்றதில்லையே என்று அவள் தன் ஒற்றர்களை அனுப்பித் தேடத் தொடங்கினாள்.

ஒட்டக்கூத்தர் குலோத்துங்க் சோழனின் குருவாதலால் சோழ நாட்டினர் அவர் சொன்ன சொல்லைக் கேட்டனர். தமிழ்க் கவிதையைப் பிழையாகச் சொல்லும் புலவோரைப் பாதாளச்சிறையில் அடைத்து வைத்து, புலவர்களின் தலைமயிரை ஒன்றோடொன்று முடிந்து வெட்டுது அவரின் வழக்கம். ஒட்டக்கூத்தர் பாண்டியன் அரண்மைக்குப் பெண்கேட்டு சென்றபோது அவரின் பாடலைப் புகழேந்தியார் வெட்டிப் பாடினார்.  அதனால் ஒட்டக்கூத்தருக்குப் புகழேந்தியாரைப் பிடிக்கவில்லை. எனவே தனது குண்டர்களைக் கொண்டு புகழேந்தியாரைப் பிடித்து வந்து பாதாளச்சிறையில் இருக்கும் கவிதை இயற்றத் தெரியாத புலவர்களுடன் அடைத்து வைத்தார்.

கவிதை இயற்றத் தெரியாதவர்களின் தலையை மட்டுமே ஒட்டக்கூத்தர் வெட்டுவார். ஆதலால்  பாதாளச்சிறையில் அடைத்து வைத்திருந்தாலும் தனது தலையை அவரால் வெட்டமுடியாது என்பது புகழேந்தியாருக்குத் தெரியும். எனவே சிறையில் அடைபட்டிருந்த புலவர்களுக்கு கவிதை இயற்றச் சொல்லிக் கொடுத்தார். அங்கிருந்தோர் யாவருமே கவிஞர்களாயினர். 

பாதாளச்சிறையில் இருப்போர் கவிஞர் ஆகும் செய்தி ஒற்றர்கள் மூலம் குலோத்துங்க சோழனின் மனைவிக்கு எட்டியது. சிறைக்கைதிகளுக்கு யார் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கிறார் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். எந்தக் குற்றமும் செய்யாத தனது குருவை ஒட்டக்கூத்தர் அடைத்து வைத்திருப்பதும் தெரியாது, குலோத்துங்க சோழன் இருக்கின்றானா? அவன் சோழ நாட்டை அரசாட்சி செய்கின்றானா? ஒட்டக்கூத்தர் அரசாள்கிறாரா? யாரின் ஆட்சியின் கீழ் சோழ நாடு இருக்கிறது? அல்லது புகழேந்தியார் பாதாளச்சிறையில் இருப்பது தெரிந்தும் தெரியாது போல் குலோத்துங்கன் இருக்கிறானா? நினைக்க நினைக்க அவள் நெஞ்சம் வெந்தது.

மாலை நேரமும் வந்தது. புதுமணத் தம்பதியர்கள் அல்லவா அவர்கள். அரச கருமம் நிறைவடைந்ததும் மனைவியை நாடி அந்தப்புரம் வந்தான் குலோத்துங்கன். அந்தப்புர வாயிற்கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. கெஞ்சிக் கேட்டும் அவள் கதவைத் திறக்கவும் இல்லை. ஏதும் சொல்லவும் இல்லை. பாண்டி நாட்டின் மேலும் தமிழின் மேலும் ஆராத காதல் கொண்டவள் என்பதை அவன் அறிவான். எனவே அவளின் ஊடலைத் [கணவனிடம் ஏற்படும் கோபத்தைத்] தணிப்பதற்காக ஓட்டக்கூத்தரைத் தூதனுப்பினான். ஒட்டக்கூத்தர் அவளின் அந்தப்புர வாசலில் வந்து நின்று
“நானே இனிஉன்னை வேண்டுவதில்லை - நளினமலர்த்
தேனே கபாடந் திறந்திடு திறவாவிடிலோ
வானேறனைய வாள்வீரவிகுலாதிபன் வாசல் வந்தால்
தானே திறக்குநின் கையிதலாகிய தாமரையே”

‘தாமரைமலரின் தேனே! இனியும் நான் உன்னைக் கேட்கத் தேவையில்லை. கதவைத்திறந்து விடு. நீ கதவைத் திறக்காதுவிட்டால், வானளாவிய புகழ்மிக்க ஆண்சிங்கத்தைப் போன்ற வலிமையுள்ள சூரிய குலத்தலைவன் உன் வாசலுக்கு வந்தால் கை இதழாய் இருக்கும் தாமரை தானாகவே கதவைத் திறந்துவிடும்’ என்று பாடினார்.

ஒருவரிடம் நாம் தமிழைப்பற்றிப் பேசும் முன்பு, அவர் யாரிடம் தமிழைக் கற்றார் என்பதை அறிந்து பேசவேண்டும் என்ற பண்பும் ஒட்டக்கூத்தரிடம் அப்போது இருக்கவில்லை. குலோத்துங்க சோழன் போல் அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் பொம்மை என்று அவளையும் நினைத்துவிட்டார். ஒட்டக்கூத்தரின் குரலைக் கேட்டதுமே குழோதுங்கனின் மனைவிக்கு கோபம் கூடியது. அதனால் அவர் பாடிய பாடலின் கருத்துக்கள் யாவுமே அவளுக்குப் பிழையாகவே தோன்றின.
1. ‘நானே!’ என்பதில் அவரது அகங்காரம் தலைவிரித்தாடியது.
2. இனி உன்னை வேண்டுவதில்லை - முன்னர் வந்து கேட்டது போல, இனி உன்னை வேண்டுவதில்லை எனக் கூறியது.
3. நளினமலர்த் தேனே! - தாமரைமலரின் தேனை உண்ண அம்மலரில் எத்தனை எத்தனை தேன் வண்டுகள் மொய்க்கின்றன. அவளின் வாசலில் வந்து நின்று அவளை வண்டுகள் மொய்க்கும் தேன் எனலாமா? அவளை ஒட்டக்கூத்தர் என்ன என்று நினைக்கிறார்? பொதுமகள் என நினைக்கிறாரோ?
4. வானேறு அனைய - வெள்ளை எருது போன்ற [வால் + ஏறு = வானேறு; வால் - வெள்ளை] என்று கூறியது.
5. வாள்வீர ரவிகுலாதிபன் வாசல் வந்தால் தானே திறக்கும் - வாள் வீரராயும் சூரியகுலத் தலைவராயும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களில் எவர் வந்தாலும் தானே திறக்குமா கதவு? மீண்டும் இவர் என்ன சொல்கிறார்? பொதுமகள் என்கிறாரா?
6. நின் கையிதலாகிய தாமரையே -  கை இதழாய் இருக்கும் தாமரை எப்படி கதவைத்திறக்கும்? உவமை கூறும் போது தாமரை இதழ்க் கை என்பார்கள். அதாவது தாமரை இதழ் போன்ற மென்மையும் வடிவமும் உடையை கை என்ற கருத்தில் சொல்வர். ஆனால் ஒட்டக்கூத்தரோ அதனை மாற்றிக் கூறியது. அத்துடன் உயர்திணைப் பொருளை அஃறிணைக்கு இட்டுக் கூறுவதில்லை.

பாண்டியன் மகளாய்ப் பிறந்து, சோழ நாட்டின் அரசியாய் இருப்பவளை இவ்வளவு கேவலமாக ஒட்டக்கூத்தர் கவிதை புனைந்ததைக் கேட்டதுமே “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என அவரது காதில் விழும்படி கூறியபடி ஏற்கனவே ஒருமுறை பூட்டியிருந்த கதவின் திறப்பை, கோபத்துடன் மீண்டும் திருகிப் பூட்டினாள் [dubble lock].

ஒட்டக்கூத்தரை தூது அனுப்பிய குலாத்துங்க சோழனும் அவருக்குப் பின்னே வந்து அங்கு நின்றிருந்தான். தன் மனைவி கோபத்துடன் “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்று கூறி, இரண்டாம் முறையும் பூடைப்  பூட்டியதைக் கேட்டான். தான் வந்த போது ஒருமுறை பூட்டியிருந்த கதவு, ஒட்டக்கூத்தரின் தமிழ்ப் பாடலால் இரண்டாம் முறையும் பூட்டப்பட்டதால் அவளுக்கு தன்மேல் பெரிய கோபம் இல்லை என்பதும், ஒட்டக்கூத்தர் மேலேயே முழுக்கோபமும் இருப்பது புரிந்தது. 

அதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்த் போது புகழேந்திப் புலவர் பாதாளச்சிறையில் சிறைவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவரைச் சிறையில் இருந்து விடுதலை செய்து மன்னிப்புக்கேட்டான். தன்மேல் பாண்டியனின் மகள் ஊடல் கொண்டிருப்பதையும் ஒட்டக்கூத்தரின் பாடலுக்கு இரட்டைத்தாழ் போட்டதையும் கூறி அந்தப்புரத்துக்கு அழைத்து வந்தான்.

புகழேந்தியாரும் பசு கன்றைத் தேடி ஓடுவது போல ஓடி அவளின் அந்தப் புரவாசலுக்கு வந்தார். வந்தவர்
“இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன்றிரண்டு  விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரண நின் வாசல் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே”

‘நூல் இழை ஒன்றை இரண்டாகப் பிளந்து [வகிர்ந்து] எடுத்தது போன்ற நுண்மையான இடையையும், அணிந்திருக்கும் [ஏந்திய - பூண்ட] பொன்னால் ஆன குழை [காதணி] சேர்ந்து விளங்கும் [ஒன்றி - பொருந்தி] இரண்டு கண்களையும் உடைய பெண்ணே [அணங்கே]! நீ கொண்ட கோபத்தைத் தணித்துக்கொள். மழையைப் போன்று இரண்டு கையாலும் அள்ளி வழங்கும் பாணாபரணன் [குலோத்துங்க சோழனின் பெயர்] உன் வாசலுக்கு வந்தால் அவன் செய்த பிழைகளில் ஒன்று இரண்டைப் பொறுப்பது குடிப்பிறந்தோர் [பாண்டி குடியிற் பிறந்தோர்] செயலாகும்’ என்று சொன்னார்.

புகழேந்திப் புலவரின் குரலைக் கேட்டதுமே பசுவின் கமறல் கேட்ட கன்றைப் போல் மகிழ்ந்தாள். பாடல் முழுவதையும் கேட்கும் முன்பே மகிழ்ச்சியால் அவளின் மனக்கதவு திறந்தது. பூட்டிய பூட்டு திறக்காது இருக்குமா! என்ன? மழலைப் பருவம் முதல் அவரின் தமிழோடு விளையாடியவள் அல்லவா?
இனிதே,
தமிழரசி.