Sunday, 29 September 2013

அடிசில் 66


காரச் சேர்வு [சேவு]
                              - நீரா -

தேவையான பொருட்கள்:
கடலைமா - 1 கப்
வெள்ளைப் பச்சை அரிசி - 1½ கப்
காய்ந்த மிளகாய் - 7
உள்ளி - 5 பல்
மிளகு தூள் - 1 தே.கரண்டி
எண்ணெய் - 3 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

 செய்முறை:
1. அரிசியையும் மிளகாயையும் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறியதும் உள்ளிப்பல் சேர்த்து, நன்றாகப் பட்டுப்போல் இறுக்கமாக அரைத்து எடுக்கவும்.
3. அரைத்த மாவினுள் கடலைமா, மிளகுதூள், ஓமம், உப்பும் போட்டு, மூன்று தேக்கரண்டி எண்ணெய்யைச் சூடாக்கிவிட்டு, நீர் தெளித்து முறுக்கு மாப்பதத்தில் குழைத்துக் கொள்க. 
4. பாத்திரத்தில் எண்ணெய்யைக் கொதிக்கவைத்து காரச்சேவுக் கரண்டியை எண்ணெய்க்கு மேல் பிடித்து, குழைத்த மாவைக் கரண்டியில் வைத்து அழுத்தி, கீழேவரும் சேர்வின் நீளம் ஒன்று அல்லது ஒன்றரை அங்குலமாக இருக்கும் போது அழுத்தும் மாவை முன்பின்னாகத்தள்ள  சிறு சிறு முறுக்குகளாக அது எண்ணெய்யில் விழும்.
5. எண்ணெயில் விழுந்த காரச் சேர்வு பொன்னிறமாக வெந்ததும் இன்னொரு கரண்டியால் வடித்து எடுக்கவும்.

குறிப்பு:
காரச் சேர்வு கரண்டி இல்லாவிட்டால் பெரிய ஓட்டைகள் உடைய எண்ணெய்க் கரண்டியைப் பாவிக்கலாம்.

Saturday, 28 September 2013

பக்கிச்சிமிழ் - 66

அழுதால் உன்னைப் பெறலாமே!
- சாலினி -

மானுட வாழ்க்கையின் நோக்கம் இன்பம் காணுதல் என்றே நாம் கருதுகின்றோம். எது உண்மையான இன்பம் என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. ஒருவர் படிப்பில் இன்பம் காண்பார். மற்றவர் தூங்குவதில் இன்பம் காண்பார். இன்னொருவருக்கு உண்பதே இன்பமாக இருக்கும். பிறரை அடிப்பதில், திட்டுவதில், இல்லாதது பொல்லாது சொல்லித் தூற்றுவதில் கூட இன்பம் காண்போர் பலராவர். இவைமட்டுமல்ல களவெடுப்பதும் கொலைசெய்வதும் கூட சிலருக்கு இன்பத்தைக் கொடுக்கும். 

இன்பமென ஆசையுடன் எமக்கு வேண்டியதைத் தேடியலைந்தலைந்து கடைசியில் அவற்றால் துன்பப்படுகிறோம். உலக இன்பங்களின் மேல் எமக்கிருக்கும் ஆசையே துன்பங்களுக்கு காரணம் என்னும் உண்மையை நாம் உணர்வதில்லை. எம் அறிவு அதனை உணர்த்தினாலும் இன்பப்பற்றால் இழுப்புண்டு மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறோம். 

எம் துன்பங்களைப் போக்கி உண்மையான இன்பம் எது என்பதை எமக்கு உணர்த்துவது எமது ஆன்ம சக்தியாகும். அது எமக்குள்ளே இருக்கிறது. அதனை நாமே அறிய வேண்டும். அச்சக்தியை அறியும் போது அது சித்தத்துள் தித்திக்கும் தேனாய், தெவிட்டாத இன்னமுதாய் எமக்குத் தெரியும். அந்த சக்தியை கடவுள் என்கிறோம். அந்த ஆத்ம சக்தியை எமக்குள் எப்படி உருவாக்குவது? அதற்கான வழியை மாணிக்கவாசகர்
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
          இறப்பு அதனுக்கு என் கடவேன்
வான் ஏயும் பெறில் வேண்டேன்
          மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”                (திருவாசகம்: 5: 12)
எனத் திருவாசகமாகச் சொல்லியிருக்கிறார்.

துன்பங்கள் நீங்கி நிலையான பேரின்பம் வேண்டுமா?
“எம்மானே உன் அருள் பெறுநாள்
          என்றென்றே வருந்துவனே”
எனக் கதறிக் கூப்பிடுங்கள். இறையருள் கிடைக்கும். சுவாமிமார் கால்களிலும், ஐயர்மார் கால்களிலும் இறையருள் இல்லை. அவன் அருளாலே அவன் தாள் வணங்க வேண்டும். அது எம்மிடமே இருக்கிறது. அதனைப் பெற அழவேண்டும் என்று தனது அநுபவ உண்மையை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் சொல்லிச் சென்றுள்ளார்.

“யானேபொய் என் நெஞ்சும்
          பொய் என் அன்பும்பொய் 
ஆனால் வினையேன் அழுதால் 
          உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் 
          தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
          உனைவந்து உறும்ஆறே”
தேன் போன்றவனே! அமுதமானவனே! கரும்புச் சாற்றின் தெளிவே! இனிமையானவனே!
நான் பொய்யானவன். எனது நெஞ்சும் பொய்யானது. நான் செலுத்தும் அன்பும் பொய்யானது. ஆனால் தீவினையுடயவனாகிய நான் அழுதால் உன்னை பெறலாம். உன்னை வந்து அடையும் அந்த வழியை அருளமாட்டாயா? என மாணிக்கவாசகரே கதறி இருக்கிறார். எமது சித்தத்துள் இருக்கும் தேனைச் சுவைத்து பேரின்பம் காண மாணிக்கவாசகர் போல அழலாம்.

சொல்விளக்கம்:
கரும்பின் தெளிவே - கருப்பஞ்சாற்றின் தெளிவு 
தித்திக்கும் மானே - இனிமையானவனே
உனைவந்து - உன்னை வந்து
உறும் - அடையும்
ஆறு - வழி 

Friday, 27 September 2013

தமிழினம் ஆராய்ந்து கண்ட நிலப்பிரிவு

மனித இனங்களுள் தமிழினம் மிகவும் பழமையானது என்பதற்குச் சான்றாகப் பண்டைய தமிழர் நிலத்தை ஆறுவகையாகப் பிரித்து வைத்திருப்பதைச் சொல்லலாம். வேடுவராக காட்டிலும் மேட்டிலும் அலைந்த பண்டைத்தமிழர் பூமி முழுவதும் நீரும் நிலமுமாக இருப்பதைக் கண்டு பூமியை இருநிலம் என அழைத்தனர். 

பண்டைத்தமிழினம் காடுவாழ் சமூகமாக இருந்த பொழுது இயற்கையை நன்றாக ஆராய்ந்து அறிந்தனர். நிலத்தின் தன்மையைப் பொறுத்து அதில் வாழும் அசையும் உயிரினமாகிய விலங்குகளும், அசையா உயிரினமாகிய தாவரங்களும் வேறுபடுவதைக் கண்டனர். எனினும் தாவரங்கள் தாம் வாழும் நிலத்தைவிட்டு மற்ற நிலத்திற்கு தாமாகப் பெயர்ந்து செல்வதில்லை என்பதையும் உணர்ந்தனர். நிலமெங்கும் மலைகளும், காடுகளும், வயல்களும், கடல்களுமாய் இருப்பதைக் கண்டனர். பூமியின் நிலப்பரப்பு மலை, காடு, வயல், கடல் என நான்குவகையாக இருப்பதைக் கொண்டு அதனை நான்காகப் பிரித்தனர். அதனால் பூமியை நானிலம் என அழைத்தனர். நானிலமாகப் பிரித்த போது மலைகளில் குறிஞ்சியும், காடுகளில் முல்லையும், வயல்களுக்கு நீரைத்தரும் ஆற்றோரங்களில் மருதமும், ஆறும் கடலும் கலக்கும் கழிமுகங்களில் நெய்தலும் வளர்ந்ததோடு, அவை அந்தந்த நிலங்களிலே நிலைத்து நிற்பதையும் கண்டு, அந்நிலங்களை அத்தாவரங்களின் பெயர்களால் அழைத்தனர். 

தமிழுக்கு இலக்கணம் செய்த தொல்காப்பியரும்
“முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
                                                - (தொல்: பொ: 5: 5 - 6)
என பண்டைத்தமிழரின் நானிலப்பிரிவை தமக்கு முன் வாழ்ந்தோர் வழிவழியாகச் சொல்லி வருவதாகாக் கூறுகிறார்.

அத்துடன் பாலை நிலத்தையும் சேர்த்து நிலத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்திணை என்றனர். திண் - திண்மையானது என்ற கருத்தில் நிலத்தை, பூமியை திணை என்றனர். ஐந்து நிலம் என்ற கருத்தையே ஐந்திணை தருகிறது. பாலைத்திணையை தொல்காப்பியர் நடுவு நிலைத்திணை என்கிறார். அதனை
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”
                                              - (தொல்: பொ: 11)
என்று தொல்காப்பிய நூற்பா சொல்கிறது.
[Photos: source - Wikipedia]
Mesopotamie

மேலே சொல்லப்பட்ட நானிலமும் உச்சிவெய்யிலின் வெப்பத்தால் [நண்பகல் வேனிலொடு] வறண்டு கடைசியில் [முடிவுநிலை மருங்கின்] பாலைநிலமாக மாறும். நானிலமாக முன்னாளில் செழிப்புடன் இருந்த மெசப்படோமியா, மெக்சிக்கோ போன்ற பண்டைய நாகரிகத்தைப் பறைசாற்றும் இடங்கள் யாவும் நானிலம், பாலையாக மாறியதற்கு சான்றாக நிற்கின்றன. 
Red Sea
எனினும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்பியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்” 
                                - (சிலம்பு: காடுகாண்: 64 - 66)
என்று கூறியிருப்பதால் முல்லை நிலமான காடுகளும், குறிஞ்சி நிலமான மலைகளும் மட்டுமே பாலையாகும் என நினைப்பது தவறு. மருத நிலமாக ஆறுகளுக்கு நடுவே நிமிர்ந்து இருந்த மெசப்படோமியாவின் நிலை என்ன ஆனது? நெய்தல் நிலமாக இருந்த dead sea பகுதி என்ன ஆனது? பாலை நிலமாகத்தானே இன்று காட்சிதருகின்றன. அவற்றைக் கொஞ்சம் நாம் நினைத்துப் பார்த்தால் தொல்காப்பியர் சொன்ன உண்மை புரியும். நானிலங்களும் பாலைநிலமாக மாறுவதால் தொல்காப்பியர் பாலைத்திணையை நடுவு நிலைத்திணை என்றார். பாலை நிலத்தில் வளரும் பாலை மரங்கள் முல்லை நிலத்திலும், குறிஞ்சி நிலத்திலும் மட்டுமல்ல மருத நிலத்திலும், நெய்தல் நிலத்திலும் கூட வளர்கின்றன.  

பூமியை ஐவைகை நிலமாகப் பகுத்த தமிழினம் இவற்றைவிட கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி இருப்பதையும் கண்டது. பண்டைத் தமிழரால் கடல், அளக்கர் என அழைக்கப்பட்டதால் கடல்சூழ்ந்த நிலம் அளக்கர் திணையென அழைக்கப்பட்டது. பூமியின் நிலப்பரப்பை பண்டைய தமிழர்  
  1. முல்லைத் திணை 
  2. குறிஞ்சித் திணை
  3. மருதத் திணை
  4. நெய்தல் திணை
  5. பாலைத் திணை
  6. அளக்கர் திணை 
என அறுதிணையாகப் பகுத்தனர். 

தமிழினம் காடுவாழ் சமூகமாக இருந்து, நாடுவாழ் சமூகமாக மாறிய போதே பூமியை நானிலமாக, ஐந்திணையாக, அறுதிணையாக வகுத்து உலகச்சுற்றுச் சூழலுக்கு தன் கடமையைச் செய்திருக்கிறது.  

அந்த அறுதிணையையும் சற்றுப் பார்ப்போம்:
காடுகளில் முல்லைக் கொடியும் உண்டு. முல்லை மரமும் உண்டு. ஆதலால் முல்லை மரம் வளர்ந்த காடும் காடுசார்ந்த நிலமும் முல்லை எனப்பெயர் இடப்பட்டது. 
மலைகளிலே குறிஞ்சிச்செடி  வளர்ந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூத்தது. குறிஞ்சிப் பூத்தேனை குறுந்தொகை 
“கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” 
எனக் காதல் ஓவியமாய்க் காட்டுகிறது. எனவே குறிஞ்சி வளர்ந்த மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி எனப் போற்றப்பட்டது.
ஆற்றங்கரை ஓரங்களில் மருதமரம் வளரும். அதனை மருதை எனவும் அழைப்பர். வயலும் வயல்சார்ந்த நிலமும் மருதம் எனப்பெயர் பெற்றது.
நெய்தல் நிலத்தில் ஆறும் கடலும் கலக்கும் ஆற்றுக்கழிமுக நீரில் வளரும் ஒருவகை அல்லி இனமே நெய்தலாகும். கடலும் கடல்சார்ந்த நிலமும் நெய்தல் என அழைக்கப்பட்டது.

சூரியனின் வெப்பத்தால் நானிலமும் அவற்றின் தன்மையில்  இலிருந்து திரிந்து பாலைவனமாய் மாறிய நிலம் பாலை எனப்பெயர் சூட்டப்பட்டது. காட்டிலும் மேட்டிலும் வளரும் பாலைமரம் சூரியவெப்பத்தையும் தாங்கி பாலை நிலத்திலும் வளரும்.

அளக்கர் நிலத்தை நாம் இப்போது தீவு என அழைக்கின்றோம். எல்லாவகை நிலமும் தீவில் இருப்பதால் அதற்கென தனியாக மரம் கூறப்படவில்லை. இருப்பினும் எருக்கம் செடி தீவுக்குரியதாக சுட்டப்படுவதைக் காணலாம். அளகம் வெள்ளெருக்கம் செடியின் பெயராகும். அளக்கர் திணை என அழைக்கப்பட அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கடல் சூழ்ந்த நிலம் அளக்கர் நிலம் என வழங்கப்பட்டது.

தமிழினம் பூமியை இருநிலமாய், நானிலமாய், ஐந்திணையாய், அறுதிணையாய் ஒரு கூர்ப்புப் போல இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து பகுத்து வைத்திருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.

தமிழினம் காடுகளில் வாழ்ந்த காலத்திலேயே பூமியை இவ்வளவு நேர்த்தியாக ஆறுவகையாகப் பிரித்து, அந்தந்த நிலங்களில் வாழும் தாவரப் பூக்களின் பெயரால் அந்நிலங்களை அழைத்து, அதனை சங்க இலக்கியங்களில் பதிவு செய்தும் வைத்திருக்கிறது. இத்தனை காலம் ஆகியும் பண்டைத்தமிழர் பாகுபடுத்திய நிலப்பிரிவுகளிலேயே அந்தந்தப் பூக்கள் இன்றும் மலர்வது உங்களை வியப்பில் ஆழ்த்தவில்லையா?
இனிதே, 
தமிழரசி.

Wednesday, 25 September 2013

அன்பு வாசகர்களுக்கு!


நான் கனடா சென்றிருந்ததாலும், எனது சுகவீனத்தாலும் எழுதமுடியவில்லை. 27ம் திகதியில் இருந்து எழுதுவேன்.

இனிதே,
தமிழரசி.

Friday, 6 September 2013

குறைகளைய மறப்பதேனோ!

பாவியெனப் பிறந்துவிட்டால்
          பார்த்தணைக்க யாருமின்றி
ஆவிபோகும் நேரம்வரை
          அந்தரத்தே ஆடும்வாழ்வை
தேவியுனைச் சரணடைந்து
          தேறுதற்கு எண்ணிநிதம்
கூவிக்கூவி அழைத்திடினும்
           குறைகளைய மறப்பதேனோ!

Thursday, 5 September 2013

பாடும் இன்பம் பார்த்திடப் போமோ!
















மாடுகள் ஆடுகள் மந்தைகள் யாவும்
தேடுவார் இன்றி தெருவினில் அலைய
காடுகள் அழித்து களனிகள் மேவி
நாடுகள் நகரங்கள் நானிலம் எங்கும்
வீடுகள் என்றே வேண்டிய மட்டும் 
கூடுகள் போலக் கட்டிடும் மனிதன்
வாடும் பயிரின் வனப்பும் அறியான்
சூடும் பூவின் சுகமும் அறியான்
ஏடும் எழுத்தும் எதற்கு என்றான்
தேடும் பொருளே தெய்வம் என்றான்
கூடும் வாழ்வை குலைத்து நகைத்தான்
ஆடும் உயிர்கள் அனைத்தையும் வதைத்தான்
ஓடும் உயிர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து
நாடும் நட்பில் நன்றாய் இணைந்து 
தேடும் உணவை தம்முள் பகிர்ந்து
பாடும் இன்பம் பார்த்திடப் போமோ!
                                                                          - சிட்டு எழுதும் சீட்டு 72

Wednesday, 4 September 2013

ஆசைக்கவிதைகள் - 74



























பெண்: இளனிப் பருவத்திலே
                      இருந்தேன் குடிக்கவென்று
            களனியில் கைகழுவ
                      கந்தனவன் கற்பனையோ!

ஆண்: கற்பனையில் நான் மிதக்க
                     காரணம் நீ கற்பரசி
           அற்புதமாய் உனைக் கண்டால்
                     அடக்க மனம் நாடுதில்லை


பெண்: மண்ணுருசி நீ அறியாய்
                      மரத்துருசி நீ அறியாய்
            பெண்ணுருசி நீ அறியாய்
                      போடா பொடிப்பயலே!
                                            - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)


Tuesday, 3 September 2013

குறள் அமுது - (75)


குறள்:
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று                                   - 718

பொருள்:
ஒருவர் சொல்வது என்ன என்பதை தாமே உணர்ந்து கொள்பவர் முன் பேசுவது, தானாக வளரும் பயிருள்ள பாத்தியில் நீரை ஊற்றுவதைப் போன்றது. 

விளக்கம்:
ஒருவர் ஒன்றைப் பேசும் பொழுது அவர் என்ன பேசுகிறார் என்பதை அவையோர் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சொல்வதை உணரும் ஆற்றல் எல்லோருக்கும் சமமாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு சினிமாவில், வேறு சிலருக்கு விஞ்ஞானத்தில், சிலருக்கு மெஞ்ஞானத்தில், அரசியலில், கலைகளில் என விருப்பங்கள் இருக்கும். எமக்கு விருப்பமான பொருள்பற்றி ஒருவர் பேசினால் மிக ஆர்வத்தோடு அதனை நாம் கேட்போம். மற்றவற்றைப் புறக்கணிப்போம். இது தனிமனித இயல்பு. 

ஆனால் நல்ல ஆற்றல் உள்ளவர்கள் எதனையும் எப்போதும் மிக நுணுக்கமாகச் செவிமடுப்பர். அத்தகையோர் வீற்றிருக்கும் அவையில் பேசுவதால் வரும் பயனை திருவள்ளுவர் இக்குறளில் கூறுகிறார். ஒன்றின் பொருளை அதிகம் விரித்துக் கூறாமல் மிகச்சுருக்கமாகச் சொன்னாலும் அதன் கருத்தை உணர்ந்து கொள்ளும் அறிவாற்றல் மிக்கவர்களின் முன் பேசுவது, எவரும் விதைக்காது, தானாக வளர்ந்து பயிராக நிற்கும் பாத்தியுள் நீரை ஊற்றுவது போன்றது. 

ஒருவரும் நிலத்தை உழுது விதையை விதைக்காத போதும், தானாக முளைத்து வளர்ந்திருக்கும் பயிருக்கு நீரையூற்ற அது மேலும் செழித்து வளரும். அதுபோல், ஒன்றை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உள்ளோரின் அறிவும் தானாகப் பெருகி இருப்பதால், மற்றவர் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்வர். அத்தகையோர் இருக்கும் அவையில் பேசுபவர்க்கு, அவையை உணர்ந்து பேசும் ஆற்றலை அது கொடுக்கிறது. பிறர் சொல்வதை உணரும் ஆற்றல் உடையோருக்கு ஒன்றை எடுத்துச் சொல்வது மிகஎளிது என இக்குறள் கூறுகிறது. 

Monday, 2 September 2013

அடிசில் 65

இலை கோவா வறை
                                             - நீரா -



















தேவையான பொருட்கள்:
மெல்லிதாக வெட்டிய கோவா -  3 கப்
சின்ன வெங்காயம்  -  6
பச்சை மிளகாய்  -  2  
செத்தல் மிளகாய்  - 2
கடுகு - ½ தே.கரண்டி
எண்ணெய் - 2 தே. கரண்டி 
தேங்காய்ப்பூ - 1 மே.கரண்டி 
மிளகாய்த்தூள் - ¼ தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
மிளகு தூள் - ¼ தே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. கோவாவைக் கழுவி மெல்லிதாக வெட்டிக் கொள்க.
2. அத்துடன் தேங்காய்ப்பூ, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசிரி வைக்கவும்.
3. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் குறுணலாக வெட்டவும்.
4. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகைப்போட்டு வெடித்ததும் செத்தல் மிளகாய், வெட்டியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. தாளிதம் பொன்னிறமாக வரும் பொழுது, பிசிரி வைத்துள்ள கலவையை இட்டுக் கிளறி, சிறிது தண்ணிர் தெளித்து வேகவிட்டு, நீர்த்தன்மை அற்று வற்றியதும் இறக்கவும்.