Saturday, 31 August 2013

முத்தியை அடையும் நாள் எந்நாளோ!


உலகமே தேன்றுவதும் அழிவதுமாக இருக்கிறது. அத்தகைய உலகில் வாழும் உயிரினங்கள் நிலையாக நிலைத்து வாழ்ந்திட முடியுமா? அதனாற்தான் உயிரினங்களும் தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றன. இந்த தோன்றலுக்கும் மறைதலுக்கும் இடையே உயிர் சுமந்து வாழ்வது ஒரு பெரும் போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்று இங்கு யாரும் மார்தட்ட முடியாது. ஆனால் அப்படி வெற்றி பெற்றவர்களாக எம்மால் கருதப்படுவோரை முத்தியடைந்தோர் என்று அழைக்கிறோம். அந்த முத்தியும் எத்தகையது என்பதை உணர்ந்தோர் யார்? தேனூறும் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகரே இராவணனின் மனைவி வண்டோதரிக்கு இறைவன் திருவருள் செய்ததை
“உந்து திரைக் கடல் கடந்து அன்று
          ஓங்குமதில் இலங்கை அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும்
           பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே                      
                                           - (திருவாசகம்:43:5)
என்கிறார்.‘பரிசறிவார் எம்பிரானாவாரே’ என வண்டோதரிக்கு இறைவன் கொடுத்த முத்தி எனும் பரிசு எப்படிப்பட்டது என்பதை இறைவனே அறிவார் என்கிறார். 

ஆதலால் முத்தி அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என உய்த்து உணரமுடியுமே அல்லாமல் இத்தகையது என்று கூறமுடியாது. முத்தியின் தன்மையை பலரும் பலவிதமாகச் சொல்ல முனைந்திருக்கின்றனர். அவர்களுள் தாயுமானசுவாமிகள்  முத்தியின் தன்மையை நாம் விளங்கிக் கொள்ளக்கூடியதாய் மிகவும் இலகுவாக 
துச்சப் புலனால் சுழலாமல் தண்ணருளால் 
உச்சிக் கதிர்ப்படிகம் ஒவ்வுநாள் எந்நாளோ”              
                                              - (தாயு.பா: 45: 14: 12)
எனக்கூறியுள்ளார்.

“இழிவைத்தரும் பொய்யான [துச்சு] ஐம்புல ஆசைகளுள் கிடந்து சுழலாமல் இறைவனின் தண்ணருளால் முத்தியென்னும் குற்றமற்ற தன்மையை [உச்சிக் கதிர்ப்படிகம்] அடையும் நாள் [ஒவ்வு நாள்] எந்தநாளோ?” என்கிறார்.

இப்பாடலில் தாயுமானவர் முத்தியை ‘உச்சிக் கதிர்ப்படிகம்’ என்று சுட்டுகிறார். மெஞ்ஞானம் ஆகிய முத்தியை விஞ்ஞானா முறையால் விளக்குகின்றது ‘உச்சிக் கதிர்ப்படிகம்’ என்ற சொல்லாட்சி. ‘உச்சிக் கதிர்ப்படிகம்’ என்றால் என்ன? எனப் பார்ப்போம். 

உச்சிக் கதிர்ப்படிகம் = உச்சி + கதிர் + படிகம் எனப்பிரியும். உச்சி என்றால் என்ன? சூரியன் எமக்கு நேர் மேலே இருக்கும் போது அதனை உச்சி வெயில் என்கிறோம். அதாவது நேர் மேலே இருப்பது என்ற கருத்தை அது தருகின்றது. ஒளிக்கதிரையே கதிர் என்கிறார். படிகம் என்பது பளிங்காகும் [crystal]. 

நாம் நல்லவர்களுடன் சேர்ந்தால் நல்லவர்களாகவும், கெட்டவர்களுடன் சேர்ந்தால் கெட்டவர்களாகவும் இருக்கிறோம் அல்லவா? அதனைச் சேர்ந்ததன் வண்ணம் என்பார்கள். படிகம் எந்த நிறமுள்ள பொருளுக்கு அருகே இருக்கிறதோ அந்த நிறத்தை அது காட்டும். எனவே படிகமும் சேர்ந்ததன் வண்ணம் பெறும். படிகத்தின் நிறத்தை எடுத்துக் காட்டுவது ஒளிக்கதிரின் தெறிப்பேயாகும். ஒளிக்கதிர் பளிங்கில் பட்டுத் தெறிக்க வேண்டுமானால் 90 பாகை தவிர்ந்த வேறு கோணங்களில் படவேண்டும். பளிங்கின் மேற்பரப்புக்கு 90 பாகையில்  செல்லும் ஒளிக்கதிர் தெறிக்காது உட்செல்லும். அந்தக் கதிரையே உச்சிக்கதிர் என்கிறார். பளிங்கு பச்சை நிறப்பொருளின் அருகேயிருக்கும் போது பச்சையாகத் தெரிகிறதென வைத்துக்கொள்வோம்.  அப்போது பளிங்குக்கு நேர் மேலே இருந்து பார்த்தால் பளிங்கின் நிறமற்ற தன்மை தெரியும். உச்சிக்கதிரின் ஊடுருவல் பளிங்கை நிறமற்றதாக எமக்குக் காட்டும். 

ஐம்புலன்களின் ஆசையால் உந்தப்பட்டு ஒன்றோடு ஒன்று மோதித் தெறிப்புற்றுத் திரியும் நாம் இறை என்னும் உச்சிக்கதிரின் ஊடுருவலோடு இணையும் போது ஆசை, பாசம், பந்தம் என்ற நிறங்கள் எல்லாம் நீங்கி பளிங்காகி முத்தியை அடையலாம்.
இனிதே, 
தமிழரசி.  

Thursday, 29 August 2013

வினைகள் நீக்கி அருவான்


பழகா மனதை பழக்கி
பைந்தமிழ் பாவினைப் பயின்றேன் 

அழகா குமரா என்றே
அனுதினம் தொழுது நின்றேன்

இளகா உணர்வை உலுக்கி
இறையின் உணர்வை வளர்த்தேன்

விலகா தென்னுள் இருந்தே
வினைகள் நீக்கி அருவான்


Wednesday, 28 August 2013

தேம்பிடும் குரலும் கேளாதா!கூடி விளையாடு பாப்பா ஒரு
         குழந்தையை வையாதே பாப்பா
பாடிய பாரதி பாடலைக் கேட்டு
          பரவசமான குழந்தைகள் நாம்
நாடி எம்மைப் பிடித்து வந்தார்
          நாரிமுறிய வேலை தந்தார்
ஓடி வேலை செய் என்றார்
          ஓங்கிப் பிரம்பு காட்டுகிறார்

தேடி வேலை செய்திலோம்
          தேவை என்ன அறிந்திலோம்
ஓடியோடி உழைக்கிறோம்
          ஓய்தலின்றி சுழல்கிறோம் 
கூடி விளையாடிலோம்
          குடி நீரும் அருந்திலோம்
வாடி மெல்ல இருந்திலோம்
          வயிறார உண்டிலோம்

பாடித் திரியும் பாலகரை
          பற்றிப் பிடித்து வதைத்து 
தேடிய செல்வம் தேயாதா!
          தேம்பிடும் குரலும் கேளாதா!
வாடிய பயிரின் மழையாக
          வாழச்செய்வோம் பாலகரை
பேடி உலக மாந்தரே
          பேறு என்ன பெற்றீரோ!
                                   - சிட்டு எழுதும் சீட்டு 72

Tuesday, 27 August 2013

ஆசைக்கவிதைகள் - 73

நாத்துநட போரவரே!

அந்நாளில் வள்ளியூரில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், முதல் நாளே பாத்திகட்டி நீர் இறைத்து நாற்று நடுவதற்காக வயலைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தான். அடுத்த நாள் காலையில் அவன் வண்டியில் போவதைக்கண்ட அவனது மாமன் மகள் ‘பாத்தியில் அவன் கட்டிவைத்த நீரெல்லாம் உடைத்துக் கொண்டு ஓடிவிட்டது என்றும், மீண்டும் அவன் நீர் இறைப்பதற்கு தான் உதவலாமா [கை கொடுக்கலாமா] எனக்கேட்கிறாள். 

அவள் தன்னைச் சீண்டவே அப்படிக் கேட்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். வயலுக்கு நீரிறைக்க [ஏற்றம்] அவள் வந்தால் தப்பு நடக்கலாம், எனவே அவளது ஏக்கத்தைப் போக்க வேறுவழி பார்க்கச் சொல்கிறான். அவன் ‘ஏற்றக் கை நீ தந்தால் ஏடாகூடமாய்விடும்’ என மிக நளினமாக தன் நிலையை விளக்குவது அன்றைய தமிழ் இளைஞரின் மேன்மையைக் காட்டுகிறது.

பெண்: வெட்டவெளி மீதினிலே
                      கட்டவண்டி கட்டிக்கிட்டு
             நட்டநடு வெயிலில
                      நாத்துநட போரவரே

பெண்: பாத்திவெள்ளம் எல்லாமே
                      பொத்துகிட்டு போயிடிச்சு
            ஏத்தமிறை கணுமே
                      ஏத்த கை நாதரவோ

ஆண்: ஏத்த கை நீதந்தால்
                      ஏடாகூடம் ஆயிடுமே
           ஏக்கத்தை போகடிக்க
                      ஏத்தவழி பாருமச்சி 
                                          - நாட்டுப்பாடல் (வள்ளியூர்)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
அந்நாளில் வள்ளியூரில் வாழ்ந்த மக்கள் கிணற்று நீரை ஏற்றத்தால் இறைத்து பயிர்செய்தனர் என்பதை இந்த நாட்டுப்பாடல் காட்டுகிறது.

Monday, 26 August 2013

குறள் அமுது - (74)


குறள்:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்                                                 - 826

பொருள்:
 நண்பரைப் போல் நல்லவற்றைச் சொன்னாலும் பகைவரின் சொற்கள் விரைவாக அதனை உணர்த்தும் 

விளக்கம்:
ஒருவருடன் நட்புக்கொள்ளுதல் நட்டல் என்று கூறப்படும். அதாவது உண்மையான இனிய அன்பை உங்கள் மனதில் நட்டவர் எவரோ அவரே நட்டார் ஆவர். நட்டாரை இன்று நாம் நண்பர் என்கிறோம். ஒருவரோடு ஒருவர் சேர்தல் ஒட்டுதலாகும். அப்படிச் சேராதார் ஒட்டார் ஆவர். நம் பகைவரே ஒட்டார்.

எமக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நம் வாழ்வில் குறுக்கிட்டு நண்பர் போலப் பழகி நன்மைகளைச் செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் எம்முடன் உண்மையான நட்புடன் பழகுகிறாரா? அன்றேல் எமக்கு தீங்கு செய்யப்பழகுகிறாரா என்பதை எப்படி நாம் அறிந்து கொள்வது? அதற்கான விடையை இக்குறள் கூறுகிறது.

எப்படித்தான் ஒருவர் நன்றாகச் சிரித்து இனிக்க இனிக்கப் பழகினாலும், மனதால் ஒட்டி உறவாடாது, வஞ்சகராக இருப்பதை அவர்களது சொற்களே மிக விரைவாக எமக்குக் காட்டித்தரும். அதாவது எம்முடன் பழகும் ஒருவர் உண்மையான நண்பரா பகைவரா என்பதை அவரது சொற்களைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள் என இக்குறள் கூறுகிறது.


Sunday, 25 August 2013

நாதப்பறையினர்


சிவனின் உருவத்தை
“வேதமொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
நாதப்பறையினர் அன்னே என்னும்”                   (ப.திருமுறை: 8: 17: 1)
என மணிவாசகர் அன்னைப்பத்தில் வருணிக்கிறார். சிவன் பறையை (மேளம்) அடித்துக்கொண்டு எங்காவது இருக்கிறாரா? ஏன் மணிவாசகர் சிவனை நாதப்பறையினர் எனக்கூறினார்? சிவன் நாதப்பிரமம் ஆதலால் நாதப்பறையினர் என ஒரு சிலர் கூறுகின்றனர். நடராஜனின் கையில் உள்ள உடுக்கையே நாதப்பறை என வேறு சிலர் கூறுகின்றனர். என்னால் அக்கருத்துக்களை ஏற்க முடியவில்லை. எனவே நான் சென்ற கோயில்களில் எல்லாம் வேதமொழியர்  வடிவிலுள்ள சிவனின் கையில் பறையைத் தேடினேன்.

இத்திருவாசகத்தின் தொடக்கத்தில் ‘வேதமொழியர்’ என மாணிக்கவாசகர் சுட்டுவதால் அன்று ஆலின்கீழ் நால்வருக்கு அறமுரைத்த தென்திசைக்கடவுளாகிய தட்சிணாமூர்த்தியைச் வேதமொழியர் எனச்சொல்வதாகக் கொள்ளலாம். பக்தி இலக்கிய காலத்திற்கு முந்திய சங்க இலக்கியங்களும் சிவனை ஆலமர் செல்வன் எனச்சொல்கிறன.
 “பணைத்தெழுந்த ஆலின் கீழ் இருந்து ஆரணம் ஓதி”        - (ப.திருமுறை: 4: 108: 6)
எனத் திருநாவுக்கரசர் சொல்வதால் அன்றைய ஆலமர் செல்வரே இன்றைய தட்சிணாமூர்த்தியாகி நிற்கிறார் என்பதும் உணரப்படும்.

ஆகமங்கள் தென்திசைக்கடவுளின் வடிவங்களை நான்காக வகுக்கின்றன. நான்மறைகளையும் வெவ்வேறு வடிவங்களில் இருந்து உரைத்தார் என்பதைக் காட்டவே தென்திசைக் கடவுளின் வடிவங்களை நான்காக வகுத்துள்ளன.
  1. வியாக்கியான தட்சிணாமூர்த்தி
  2. யோக தட்சிணாமூர்த்தி
  3. வீணாதர தட்சிணாமூர்த்தி 
  4. ஞான தட்சிணாமூர்த்தி

இந்த நான்கு உருவோடு இருந்து முறையே அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்மறைகளை கூறினார் என்பதை
“அழிந்த சிந்தை அந்தணர்க்கு
           அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்தவாயான்”   - (ப.திருமுறை: 1: 53: 6)
எனத் திருஞான சம்பந்தர் போற்றுவதால் அறியலாம். 

1. வியாக்கியான தட்சிணாமூர்த்தி


அறத்தின் தன்மையை விரிவுரையாக உரைத்தவர் வியாக்கியானமூர்த்தி. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வருக்கும் விரிவுரைசெய்த தென்திசைக்கடவுளையே வியாக்கியான தட்சிணாமூர்த்தி என்பர். முன்வலக்கை சின்முத்திரை பிடித்திருக்க,  வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை வியாக்கியான தட்சிணாமூர்த்தி என்பர்.
“நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழ்இருந்து அறம் உரைத்தான்” 
என்னும் மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு அமைய வீராசனத்தில் அமர்ந்திருந்து அறமுரைக்கும் வியாக்கியான தட்சிணாமூர்த்தியை திருமுல்லை வாயில் கோயிலில் காணலாம்.

2. யோக தட்சிணாமூர்த்தி 

யோகப் பொருள்களின் தன்மையை யோகநிலையில் இருந்து உரைத்தவர் யோகமூர்த்தி. இந்த தட்சிணாமூர்த்தி வடிவம் மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • பத்மாசனத்தில் அமர்ந்து  இருக்கும் வடிவம்.
  • உத்குடி இருக்கையில் அமர்ந்திருக்க இடக்காலையும் உடலையும் சுற்றி யோகபட்டையோடு இருக்கும் வடிவம்.
  • இருகால்களும் குத்திட்டு இருக்கையில் இருக்க, இருகால்களையும் சுற்றி யோகபட்டையோடு இருக்கும்வடிவம். 
“கல்லால் நிழற்கீழாய் இடர்காவாயென வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறைபூட்டி”                     - (ப.திருமுறை: 1: 11: 6)
எனத் திருஞானசம்பந்தர் யோக தட்சிணாமூர்த்தியைக் காட்டுகிறார்.

3. வீணாதர தட்சிணாமூர்த்தி

இன்பத்தின் தன்மையை உரைத்தவர் வீணாதரமூர்த்தி. இன்பத்தைத் தருவதில் இசைக்கும் பெரும் பங்கு உண்டு. இந்த தட்சிணாமூர்த்தி வடிவத்தின் முன் கைகளில் வீணை காணப்படும். இவ்வடிவத்தை
  • நின்ற நிலையில் - திருப்பழனம் கோயிலிலும்
  • இருந்த நிலையில் - நார்த்தாமலை விஜயாலய சோளீஸ்வரர் கோயிலிலும் காணலாம். வீணாதர தட்சிணாமூர்த்தியை 
“தங்கையில் வீணைவைத்தார் தம்மடி பரவவைத்தார்”       - (ப.திருமுறை: 4: 33 : 6)
எனத் திருநாவுக்கரசர் பார்த்துப் பாடிப்பரவசப்படுகிறார்.

4. ஞான தட்சிணாமூர்த்தி

ஞானநெறியின் தன்மையைச் உரைத்தவர் ஞானமூர்த்தி. இவ்வடிவத்தில் வலக்காலை முயலகன் மேல் ஊன்றி, வலது தொடைமேல் இடக்காலை மடித்து வைத்து வீராசனத்தில் இருப்பார். வலக்கையில் சின்முத்திரையும், மற்றக்கைகளில் நெருப்பு, சிவஞானபோத ஏடு, பாம்பு என்பன இருக்கும். ஞான தட்சிணாமூர்த்தி ஞானநெறியை [ஒளிநெறி] நால்வர்க்கும் காட்டியதை 

“ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுது
          ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை”              - (ப.திருமுறை: 1: 128)
எனத் திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் சொல்லி மகிழ்கிறார்.

நாதப்பறையினர்

ஆகமங்கள் கூறும் நான்கு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்களில் வராத நாதப்பறையினரை வெட்டுவான் கோயிலில் மிருதங்க தட்சிணாமூர்த்தியாகக் காணலாம். இந்த வெட்டுவான் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கழுகுமலையில் உள்ளது. இது ஒரு குடைவரை கோயில். எல்லோரா போல் மலையைக் குடைந்து கோயில் கட்டப்பட்டுள்ளதாலும் அங்குள்ள சிற்பங்கள் மிகமிக  நன்றாக இருப்பதாலும் இக்குடைவரை கோயிலை தென்னக எல்லோரா என்கின்றனர்.

இனிதே,
தமிழரசி.

Saturday, 24 August 2013

அடிசில் 64


நெல்லிக்காய் துவையல்
                                             - நீரா -
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்  -  6
வெங்காயம் -  1
பச்சைமிளகாய் -  5
இஞ்சி  -  ½” துண்டு
தேங்காய்த்துருவல் - 1 கப்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:
1 . நெல்லிக்காயைக் கழுவி வெட்டி விதையை நீக்கவும்.
2. வெங்காயம் , இஞ்சி இரண்டின் தோலையும் நீக்குக.
3. இவற்றுடன் பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, நறுவல்துருவலாக இடித்து எடுக்கவும்.

Thursday, 22 August 2013

பக்திச்சிமிழ் - 64

பிடி கன்றிடும் முதுகுன்றரே!
- சாலினி -
படம்: வரலாறு.கொம்

இன்றைய தமிழகத்தில் உள்ளோரிடம் முதுகுன்றம் போவதற்கு வழிகேட்டால் அது எங்கே இருக்கிறது என்று கேட்பார்கள். பண்டை நாளில் பெரும் புகழுடன் இருந்த முதுகுன்றம் என்ற ஊர் சங்ககாலப் பழமைவாய்ந்தது. 

சங்ககாலத்து காதலன் ஒருவன் பொருள் தேட காதலியைப் பிரிந்து சென்றான். அவன் வருவதாகச் சொன்ன காலத்தில் அவன் வராததால் காதலியின் கவலையை போக்க, காதலிக்கு தோழி கூறுவதாக 
“... வாழி! தோழி! முனை எழ
முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின்
மறமிகு தானைக் கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்”               - (அகம்: 197: 5 - 8)
என மாமூலனார் என்ற சங்ககாலப் புலவர் முதுகுன்றைச் சொல்வதால் அவ்வூர் சங்ககாலப் பழமைவாய்ந்தது என்பதை அறியலாம்.

'தோழியே! நீ வாழ்வாயாக! போரைவிரும்பி போர்முனைக்குச் செல்ல [எழ] நினைபவரையும் பயந்து ஓடச்செய்த, வலிமைபொருந்திய வீரச்செல்வம்மிக்க மறப்படையையுடைய கண்ணன் எழினி என்பவனின் தெய்வத்தன்மை [தே] பொருந்திய முதுகுன்றம் என்ற மலையைக் கடந்து சென்றார் ஆயினும் வந்துவிடுவார்' எனத்தோழி சொல்கிறாள். சங்ககாலத்திலேயே அங்கு கோயில் இருந்ததை தேமுதுகுன்றம் என்ற சொல்லின் ‘தே’ என்னும் சொல் எடுத்துக் கூறுகிறது. தே என்பது கடவுள், தெய்வம், அருள் என்பவற்றைக் குறிக்கும் ஓரெழுத்துச் சொல்லாகும். (பூ என்பது போல). 

சங்ககாலப் புலவரே அதனை முதுகுன்றம் என்கிறார். முதுமை அடைந்த குன்றம். அதாவது மிகப் பழமையான குன்றம் என்ற கருத்தில் முதுகுன்றம் என்றார். சங்ககாலத்திலேயே அக்குன்றம் முதுமையடைந்து விட்டது என்பதை அழகுதமிழில் மாமூலர் குறித்து வைத்தார். அவர் இப்பாடலில் காதலன் சென்ற வழியில் ஓர் அழகிய காட்சியைக் காட்டுகிறார்.
கடுஞ்சூழ் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனம்சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப்
பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி”                - (அகம்: 197: 13 - 15)

நிறைமாதமான[கடுஞ்சூழ்] அழகிய பெண்யானையைத் [பிடி] தழுவியபடி கிடந்த, வெள்ளைத் தந்தத்தையுடைய ஆண்யானை[வேழம்], தன் கன்று தனக்குமேலே ஏறியிறங்கி விளையாட[ஊர்பு இழிதர], படுத்திருக்கும் பனி நிறைந்த வழியை[சுரம்] கடந்து சென்றான். 

சங்ககாலக் காதலன் சென்ற வழியில் கருவுற்ற பெண்யானையைத் தழுவிக்கிடந்த ஆண்யானையை மாமூலர் காட்ட, அதுபோல் கருவுற்ற பெண்யானையைத் தழுவி நின்ற ஆண்யானையை சுந்தரமூர்த்தி நாயனார் முதுகுன்றத்தில் கண்டார். அந்த ஆண்யானையை யாளி[ஆளி] ஒன்று அடித்துக் கொன்று இழுத்துச் செல்ல, முதுகுன்றத்தில் வாழ்ந்த குறத்திகள் அப்பெண்யானையைத் தங்கள் முற்றத்திலே கட்டி வைத்து கன்றீன வைத்தார்கள் என்கிறார். அக்குறத்திகளின் மிருகநேயத்தைப் பாருங்கள்.

“சென்றிலிடைச் செடிநாய் குரைக்கச் சேடிச்சிகள்
மன்றிலிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றிலிடைக்களிறு ஆளிகொள்ளக் குறத்திகள்
முன்றிலிடைப்பிடி கன்றிடும்முது குன்றரே               - (ப.திருமுறை: 7: 43: 7)

மாமூலனார் வாழ்ந்த காலத்திற்கு எண்ணூறு வருடங்களின் பின்னரே சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்திருப்பார். முதுகுன்றம் என்ற பெயர் அந்த எண்ணூறு வருட காலத்தில் கூட மாறாது இருந்துள்ளது. 

ஆனால் இன்றைய தமிழராகியா நாம் முதுகுன்றம் என்பதை விருத்தாசலம் என்று நீட்டிமுழங்கி வடமொழியில் சொல்கிறோம். அதுமட்டுமா செய்கிறோம். சங்ககாலத்திலே தெய்வக் குன்றாகக் காட்டப்பட்ட முதுகுன்றில் வீற்றிருந்த சிவனை, சுந்தரரும் முதுகுன்றரே எனவணங்குகின்றார். ஆனால் நாம் விருத்தாசலத்தில் இருக்கும் இறைவனை விருத்தகிரீஸ்வரர் என்று சொல்கின்றோம். அங்குள்ள இறைவனின் பண்டைய பெயராகிய பழமலைநாதர் எனச்சொல்வது எமக்கு வெட்கமாக இருக்கிறது. முதுமை - பழமை; குன்று - மலை. பழமலை என்றாலும் முதுகுன்றம் என்றாலும் ஒன்றே. இரண்டும் தனித்தமிழே. அப்படி இருக்க விருத்தகிரீஸ்வரர் என்று சொல்வதில் பெருமையடைவதேன்? ஏன் இப்படிச் செய்கிறோம் என்று எவராவது சிந்தித்ததுண்டா? நாம் தமிழரா?

மாமூலரும் சுந்தரரும் குறத்திகளும் மட்டும் மிருகநேயத்தைக் போற்றவில்லை. எங்கள் கோயில்களின் சிற்பிகள் கூட மிருகநேயத்தை மிக அற்புதச் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள். அப்படிபட்ட ஒரு மிருகநேயக் காட்சியையே மேலேயுள்ள படம் காட்டுகிறது. கன்றீனும்  பெண்யானைக்கு வலி தெரியாதிருக்க ஒரு யானை வருடிக்கொடுக்கிறது. அது போடும் பிளிறலை குறைக்க ஒரு யானை துதிக்கையைத் தடவுகிறது. பிறந்துவரும் கன்றுக்கு இடஞ்சல் இல்லாதிருக்க இன்னொரு யானை வாலைத் தூக்கிப் பிடிக்கிறது. மூன்று யானைகள் சூழ நின்று அன்பாக அரவணைத்து யானைக் கன்றுப்பேறு பார்ப்பதை எந்தத் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்க முடியாது. இந்த அற்புதச் சிற்பத்தைப் படம் எடுத்த இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தாருக்கு எனது வாழ்த்துக்கள் உரியனவாகுக.

Tuesday, 20 August 2013

பரமன்பாதம் நிதம்நாடு!


மறையின் பாடல் தனைக் கேட்டு
          மனமகிழ்ந்தே இசையூட்ட
இறைவன் என்றொரு பொருள் கண்டு
          இதயவீணை தனைமீட்ட
உறைவன் என்றன் உணர் வோடு
          உலகவரங்க மேடையிட்டு
பறையோ டாடல் பயின் றாடு
          பரமன்பாதம் நிதம்நாடு!

Monday, 19 August 2013

நரைநிற அணிலே!தின்னத் தின்னத் தெவிட்டாத
          தீங்கனியைத் தேடியோடி
உன்னி உன்னித் தாவியேறி
          உச்சிமரக் கொம்பரில்
கன்றிய கொய்யாப் பழத்தைக்
          கால்களால் பற்றியே
நன்னி நன்னித் தின்னும்
          நரைநிற அணிலே!
மன்னிச் சுவைக்கு மொருபழம்
          மென்னாமல் தருவாயா!
                                                             - சிட்டு எழுதும் சீட்டு 71

Sunday, 18 August 2013

ஆசைக்கவிதைகள் - 72

துடிக்குதடி என்மனசு! 

பொலநறுவையில் வாழ்ந்த காதலன் ஒருவன், திருமணத்தின் பின் காதலியுடன் மகிழ்ந்து வசதியாக வாழ்வதற்காக பொருள்தேட இன்னொரு நாட்டிற்குச் சென்றான். அவன் வருவதாகச் சொன்ன நாளும் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. அவனது வரவை நாளும் நாளும் எதிர்பார்த்திருந்த காதலி, தனது மனத்துடிப்பைத் தோழிக்குச் சொல்கிறாள்.

காதலி :  பவிசாகவாழ பணம்தேடி
                        போன மச்சான்
              திரும்பிவரக் காணாமல் 
                        துடிக்குதடி என்மனசு 
                                         -  நாட்டுப்பாடல் (பொலநறுவை)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இந்தப் பொலநறுவைக் காதலன் போல சங்ககாலத்தில் மலைநாட்டில் வாழ்ந்த ஒரு காதலன் திருமணத்தின் பின்னர் காதலியுடன் இன்பமாக வாழ்வதற்காக பொருள் தேடி வேறு நாட்டிற்குச் சென்றான். அவனும் சொன்ன நாளில் திரும்பி வரவில்லை. அவளுக்கு ஆறுதல் கூறவந்த தோழிக்குக் காதலி சொல்கிறாள்.

“குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் தோழி! உண்கண்
நீரொடு ஒராங்கு தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே”          - (குறுந்: 38: 3 - 6)

“தோழியே! நீ வாழ்வாயாக! மைதீட்டிய கண்கள் கண்ணீரைச் சொரிய ஒரேயடியாகக் காதலன் பிரிந்து சென்றாலும் அதைப்பற்றி நினைத்துக் கவலைப் படாமல் பொறுத்திருக்க வல்லவர்க்கு, மலை நாட்டானுடைய காதல் என்றும் மிகநல்லதே” என்கிறாள்.

Saturday, 17 August 2013

குறள் அமுது - (73)


குறள்:
“தகுதிஎன ஒன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்”                    - 111

பொருள்:
ஒருவன் நடுநிலையாளனாக இருக்க, எவரிடத்தும் பாகுபாடு இன்றி நடப்பதே சிறந்த தகுதியாகும். 

விளக்கம்:
ஒருவனை வேலைக்குச் சேர்ப்பதற்கு, அவன் என்ன படித்திருக்கிறான்? அந்த வேலையில் முன் அநுபவம் உள்ளவனா? களவெடுப்பானா? பொய் சொல்வானா? எனப்பலவகையான தகுதிகளை பட்டியல் இட்டுப்பார்ப்போம். ஆனால் திருவள்ளுவரோ நடுநிலையாளனாக இருப்பதற்கு ஒரேயொரு தகுதியைக் கூறியுள்ளார். இக்குறளில் ‘தகுதி என ஒன்று நன்றே’ என்று நடுநிலைமையை தகுதி எனும் சொல்லால் குறிப்பிடுகிறார்.  நடுவுநிலைமை என்றால் என்ன? தமர் பிறர் என்ற பாகுபாடு அற்று, பக்கச்சார்பு இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாகும்.

பிறர் செய்யும் நன்மை தீமையை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பு இல்லாது நடுநிலையாளனாக இருப்பதற்கு, விருப்பு வெறுப்புகளைக் கடந்தவனாக வாழ வேண்டும். எவன் ஒருவன் விருப்பு வெறுப்பு அற்றவனாய் தாமரை இலைத் தண்ணீர் போல் இவ்வுலகில் வாழ்கிறானோ அவனே நடுநிலையாளனாக இருக்க முடியும். அப்படி வாழ்பவனும் நன்மை தீமையை ஆராய்ந்து பகுத்து அறியும் பகுத்தறிவாளனாக இருக்க வேண்டும்.

திருவள்ளுவர் காலத்தில் தகுதியுள்ளவன் என்றால் அவன் நடுநிலைமை உள்ளவன் என்ற கருத்தே இருந்திருக்க வேண்டும். நடுவுநிலைமை உள்ளவனாக வாழ்தலே, மனிதவாழ்வின் தகுதி என வாழ்ந்ததாலேயே அக்காலம் பல சான்றோர்களைக் கண்டிருக்கிறது.

பகுத்தறியும் தன்மையில் எவரிடத்தும் விருப்பு வெறுப்பு அற்று நடக்க முடியுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் தகுதியொன்றே நல்லது என இக்குறள் கூறுகிறது.