Friday, 31 May 2013

குறள் அமுது - (66)


குறள்:
“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை”                            - 669

பொருள்:
மிகவும் துன்பம் வந்தாலும் துணிவோடு அதனைப் பொறுத்துக் கொண்டு இன்பம் தரும் செயலச் செய்து முடியுங்கள்.

விளக்கம்:
ஒருவர் தாம் செய்யும் தொழிலில் வைக்கும் மனஉறுதியே, செய்யும் தொழிலுக்கு வேண்டிய உறுதியைக் கொடுக்கும். மன உறுதி அற்றோர் செய்யும் தொழில் சிறக்காது. எனவே எடுத்த செயலை மன உறுதியோடு செய்து முடிக்க மிக்க துணிவு வேண்டும். ஒரு செயலைச் செய்ய ஏன் துணிவு வேண்டும்? என்ற கேள்வி எழலாம். ஒரு செயலச் செய்யும் போது பல இடையூறுகள், துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது மனம் சோர்ந்து போகாது இருக்க துணிவு வேண்டுமே. நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு மிக்க இன்பத்தை அள்ளித்தருமாக இருந்தால்,  துன்பம் வந்தாலும் மனம் சோர்ந்து துவண்டு போகாத நெஞ்சத் துணிவோடு, செய்க!’ எனத் திருவள்ளூவர் கட்டளை இட்டுள்ளார்.

இக்குறளிலே ‘துணிவாற்றி’ என்றோர் அழகிய சொல்லை அவர் எமக்குத்  தந்திருக்கிறார். எமக்கு வேண்டிய துணிவை நாமே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை துணிவாற்றி - துணிவை உண்டாக்கி என்ற பொருளில் தந்துள்ளார். நாம் செய்யும் செயலை முழுமையாகச் செய்து முடிக்கவேண்டுமா? அதற்கான மனவலிமையை நம்மையல்லால் வேறு யாரால் ஏற்படுத்தித் தரமுடியும்?

முடிவில் நிலைத்த இன்பத்தை அள்ளி வழங்கும் செயலைச் செய்யும்போது அதிக துன்பம் வரலாம். அதைப் பொருட்படுத்தாது துணிவோடு பொறுத்தும், பொறுக்கமுடியாத இடத்து எதிர்த்தும் நின்று அதனைச் செய்து முடிக்க வேண்டும்.

இன்றைய உலக அரசியற் சூழ்ச்சிகளால் நிலைகுலைந்து நிற்கும் தமிழராகிய எமக்கு இன்பத்தை அள்ளித்தர இருப்பது எதுவோ! அதற்காக இனியும் எத்தகைய பெரும் துன்பம் வந்தாலும் எல்லோரும் சேர்ந்து துணிவோடு அச்செயலை செய்து முடித்து வாகை சூட வேண்டும் என்பதற்காக திருவள்ளுவர் சொன்ன மிகவும் அற்புதமான திருக்குறள் என இக்குறளைச் சொல்லலாம். 

Thursday, 30 May 2013

[9] ஈழத்து......

சென்றது ............
நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற நாககடம் சென்றான். நாககடத்தில் முகிலனின் காதலியின் தங்கையைக் காண்கிறான்.
இனி.....

நாககடத்து நாயகி

“துளிமழை1 பொழியும் வளிதுஞ்சு2 நெடுங்கோட்டு3 
நளிமலை4 நாடன் நள்ளியு நளிசினை5
நறும்போது6 கஞலிய7 நாகுமுதிர்8 நாகத்துக்9
குறும்பொறை10 நல்நாடு”
                                                   - இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

‘நானா!’ எனத் திகைத்த இளநகை, “ஐயே.....’ எனக்கூறியபடி “இவர் அக்கா பதுமாவின் காதலன் எனச் சிரித்து, நாகநாட்டு இளவரசனான மயனுடன் இவர் சென்றார். நாகநாட்டு இளவரசனின் உயிர் காப்பாளனும் இவரே. இவரோ இங்கு மயங்கிக் கிடக்கிறார். மயன் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இவர் எழுந்தால் அல்லவா நாகநாட்டு இளவரசர் மயன் எங்கே என்பதை நாம் அறியலாம்? உங்கள் செல்லப்பெண் ‘நாககடத்து நாயகி’ என்ன செய்வாள்? அவளை அழைத்து வரத்தானே சுக்கிராச்சாரியார் சென்றிருக்கிறார். அவள் வரும் நேரம் இங்கு இக்கட்டான11 சூழ்நிலை ஏற்படாது தடுக்கவே பார்க்கிறேன். நாகரின் கலைகள் யாவும் கொழிக்கும் நாககடத்தை பார்க்கும் பொறுப்பை சுக்கிராச்சாரியார் என்னிடமல்லவா கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் நான் பரபரக்காமல் என்ன செய்யலாம்?” எனக் கேட்டாள்.

நாககடத்து நாயகி! என்ற பெயரைக் கேட்டதும் உரகவதி கண்கலங்கினாள். மூன்று வருடமாக நாககடத்து நாயகியைப் பார்க்காத ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது.

“இந்த சின்ன வயதில் இவ்வளவு தெளிவாக சிந்திக்கிறாயே நீ மகாமந்திரி பதுமகோன் மகள் என்பதை நிரூபிக்கின்றாய்!” என்ற உரகவதி, வீரனுடன் இளநகை சிற்றாற்றங்கரைக்குப் போக அனுமதித்தாள்.

இதற்கிடையே சித்தன் மருத்துவரிடம் கதைத்து தனக்கு நுதிமயிர்துகில் குப்பாயம் தைப்பவர்களைத் தெரியும் எனக்கூறி வைத்தான்.

அங்கு உரகவதியும் இளநகையும் வந்ததும் மருத்துவர், “இளநகை! சித்தனுக்கு நுதிமயிர்துகில் குப்பாயம் தைப்பவர்களைத் தெரியுமாம். உன்னுடன் அழைத்துச் செல். மலைவாசியாதலால் காடுகள் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்கும்” என்றார்.

சித்தன் பொய் சொல்வதாக நினைப்பதால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்போடு சித்தனையும் அழைத்துக்கொண்டு உரகவதியிடம் விடைபெற்றாள்.

அவளின் சித்திரத்தேர் சிற்றாற்றங்கரையை நோக்கிச் சீறிப்பாய்ந்து சென்றது. சித்தன் தேரின் பின்தட்டில் இருந்தபடி நாககடத்து இயற்கையின் எழிலை ரசித்தான்.  இளநகையின் மெய்க்காவலர் முன்தட்டில் நிற்க, அவளோ நடுத்தட்டின் மஞ்சத்தில் சாய்ந்திருந்தாள். வீரன் தேரைச் செலுத்தியவாறு பாடிக்கொண்டிருந்தான். யானைப்பாகனின் கட்டுக்கு அடங்காது, வாலகனும் தேரின் பின்னே பெரிய இடைவெளிவிட்டு தொடர்ந்து சென்றது.

சிறிது நேரத்தில் களைப்பின் மிகுதியால் கண்ணயர்ந்த சித்தன் திடீரென வீரனின் பாடல் தடைப்பட்டு, மிக இனிய குரலைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இளநகை பாடிக்கொண்டிருந்தாள். அவனின் இடையில் செருகி வைத்திருந்த கொன்றையந் தீங்குழலை12 எடுத்து அவள் பாடியபாடலின் பண்ணை  குழலில் குழைந்தான்13இளநகையின் பாடல் நின்றபோதும் சித்தனின் குழலிசை நிற்கவில்லை.

அவள் அவனைப் பார்த்தவாறு தன் தோளில் தொங்கிய சீலையின் நுனியில் “ஒன்று - வாலகன் வாழ்த்து, இரண்டு - நடிப்பின் மன்னன், மூன்று - மாசுணம் கொல்வான், நான்கு - பணிலம் ஓட்டுவான், ஐந்து - நுதிமயிர்துகில் குப்பாயம் தைக்குமிடம் தெரிந்தவன், ஆறு - குழல் இசைக்கத் தெரிந்தவன், ஏழு - பண்கள் அறிந்தவன் எனச் சொல்லிச் சொல்லி ஒவ்வொரு முடிச்சாகப் போட்டாள். 

சித்திரத்தேரும் சிற்றாற்று அரங்கப்பகுதிக்கு வந்துசேர்ந்தது. சிற்றாற்றங்கரைவாசிகள் தேரைக் கண்டு ஓடிவந்தார்கள். அவர்கள் ஓடிவருவதைப் பார்த்த இளநகை சித்தரத்தேரில் இருந்து இறங்கினாள். சித்திரத்தேரையும்  அவளையும் பார்த்த சிற்றாற்றங்கரைவாசிகள் அரசகுலமங்கை என்பதை அறிந்து, வீழ்ந்து வணங்கி வரவேற்றார்கள். அவர்களின் தலைவன் ஏதோ சொன்னான். இளநகைக்கு அவனின் மொழி விளங்கவில்லை. இவள் சொல்வதும் அவர்களுக்கு விளங்கவில்லை. தனக்கு நுதிமயிர்த் துகில் வேண்டும் என்பதை அபிநயம் செய்து காட்டினாள்.

அவள் எலிபோல் அபிநயம் பிடிப்பதைப் பார்த்து சிரித்த சித்தன், தேர்த்தட்டில் இருந்து எழுந்து அவர்களிடம் சென்றான். சிற்றாற்றங்கரைவாசிகள் பேசும் எல் மொழியில் நகைச்சுவையுடன் பேசி, நுதிமயிர்த் துகில் வாங்கிக் கொடுத்தான்.  

சித்தன் அவர்களது மொழியில் நன்றாகப் பேசுவதைப் பார்த்து ‘வேற்றுமொழி தெரிந்தவன்” என எட்டாவது முடிச்சும் போட்ட இளநகை, “நுதிமயிர்த்துகில் குப்பாயம் தைப்பதற்கு எங்கே போகவேண்டும்” எனச் சித்தனைக் கேட்டாள்.

“தேனாற்று14 அப்பக்கம்15 கறமன்16 கற்காட்டுக்கு போகணும், ஆங்கயெல்லா யிந்த சிங்காரத்தேரு செல்லாதுங்க” என்றான்  சித்தன்.

என்ன சித்தா! கறமன் கற்காடா? அது என்ன? உங்க மொழியில் சொல்கிறாயா? என்றாள் இளநகை.

“அதூ நம்ம பேச்சில்லீங்க, கறமன் எண்டா வறண்டு போன நிலமுங்க. ஆங்க பல கோடி யாண்டுக்கு முன்னால உசிரோடு நின்ன மரக்காடு கல்லாப்போயி நிக்குதுங்க. மரம் கல்லாபோயினதால அது கற்காடு ஆயிட்டுதுங்க. எல்லாங் கல்லு மரமுங்க. ஆசைக்கு கூட பச்சைய பாக்க முடியாதுங்க. கற்காட்டுக்க எப்படியீங்க யிந்த சிங்காரத்தேருல போறதுங்க. நம்மட்ட கொஞ்சம் நுதிமயிர்த்துகில் தாங்க, நானு போயி குப்பாயம் தைச்சி வாரேனுங்க” என்றவன், அவளின் பதிலுக்குக் காத்திராமல் சில நுதிமயிர்த்துகிலை எடுத்தான்.

அந்தக்கணமே அவனின் சீழ்க்கையைக் கேட்டு ஓடிவந்த வாலகன், அவனைத் தன் மஞ்சு17 மேல் வைத்துக் கொண்டு காட்டினுள் சென்று மறைந்தது.

அவனின் சீழ்க்கையையும் அதைக்கேட்டு ஓடிவந்த வாலகனின் வேகத்தையும் கண்டு அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவளுக்கு சில கணங்கள் எடுத்தன. தன் மெய்க்காவலன் ஒருவனைக் கூப்பிட்டு எங்கோ அனுப்பினாள். வீரா! நாம் நாககடம் செல்வோம் என்றவாறு தனக்குள்ளே சிரித்து, சித்தா! நீ பெரிய கைங்காரகன்18” என ஒன்பதாவது முடிச்சும் போட்டாள்.

சிற்றாற்றங்கரைவாசிகளுக்கு இவர்கள் பேசிய மொழி தெரியாததால் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாது விடுப்புப்பார்த்தனர். 

வீரன் நுதிமயிர்த்துகிலை தேரில் ஏற்றினான். அவளும் சிற்றாற்றங்கரைவாசிகளிடம் இருந்து விடை பெற்று தேரில் ஏறினாள். ஆனால் அவள் மனமோ சித்தனின் பின்னே சென்றிருந்தது. இவனா மலைவாசி? என எண்ணியபடி தான் போட்ட ஒன்பது முடிச்சுகளதும் விடையைத் தேடிக் கொண்டிருந்தாள். தேர் எங்கே போகிறது என்பதையும் அவள் பார்க்கவில்லை.

இவர்கள் இங்கே சிற்றாற்றங்கரைக்கு புறப்பட்டு சிறிது நேரத்தில், அங்கே உரகவதிக்கு சுக்கிராச்சாரியாரும் நாககடத்து நாயகியும் வருவதாக ஓலை வந்தது.  உரகவதி மகிழ்ச்சியில் மூழ்கினாள். அவர்கள்  வந்த உடனேயே, முகிலனைப் பார்க்காது இருப்பதற்காக கூடத்திலிருந்து அவனை வேறோர் அறைக்கு மாற்றினாள். அன்று நாககடத்து நாயகி வருகிறாள் என்ற செய்தி நாககடம் எங்கும் காற்றோடு கலந்த நல்மணமாகப் பரவியது. நாககடமே விழாக்கோலம் பூண்டது. 

யார் இந்த நாககடத்து நாயகி? பத்து நாட்களுக்கு முன்புதான் நாககடத்து நாயகி என்ற பெயரை இந்த உலகம் அறிந்தது. தனது கணவன் மன்மதனுக்காக சிவனிடம் நீதி கேட்ட இரதியின் பெறா மகளும், சுக்கிராச்சாரியாரின் மாணவியுமான இளமதியே நாககடத்து நாயகியாய் நிற்கிறாள். 

நாகநாட்டு அரசன் விசுவகர்மா, ஒற்றன் குறும்பன் சாம்பன் மூலம் இரண்டு வருடங்களாக உலக நாடுகளை சுற்றிப்பார்த்த மயன் மீண்டும் நாடுதிரும்புகிறான் என்ற நல்ல செய்தியை, அறிந்திருந்தான். உலக அநுபவம் பெற்று திரும்பிவரும் தன் மகன் மயனுக்கு, அவனின் காதலியான இளமதியை திருமணம் செய்து வைத்து, நாகநாட்டை ஆளும் பொறுப்பையும் அவனிடம் கொடுக்க நினைத்தான். அதற்காக மகாமந்திரி பதுமகோனுடன் ஆலோசித்து, ஒரு முடிவெடுத்தான். தனது எண்ணத்தை மன்மதன், இரதி முதலானோருக்கும் கூறி, சுக்கிராச்சாரியாருக்கும் அறிவித்தான். 

அதற்கமைய குறித்த நாளில் நாகநாட்டு தலைநகராம் மதங்கபுரியில்19 மாபெரும் விழா எடுத்தான். அவ்விழாவில் இளமதிக்கு ‘நாககடத்து நாயகி’ என்ற பெயர்சூட்டி, அவளை நாககடத்துக்கு இளவரசி ஆக்கினான். சுக்கிராச்சாரியாரும் நாகநாட்டரசன் விசுவகர்மாவின் அழைப்பின் பேரில் அவளின் பெயர் சூட்டும் விழாவுக்கு நாகர்களின் தலைநகருக்கு சென்றிருந்தார். பத்து நாட்கள் அங்கே தங்கியிருந்த சுக்கிராச்சாரியார் இப்போது நாககடத்து நாயகியை அழைத்துக்கொண்டு நாககடம் வருகிறார். அவர் மதங்கபுரி போகமுன் நாககடத்தில் நாகநாட்டின் வருங்கால பேரரசிக்கு வரவேற்பளிக்க வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்துவிட்டே சென்றார். 


வானவூர்தி ஓடிய பாதை - ஓவியபுரி

நாககடத்து நாயகி வருகிறாள் என்ற ஓலை கிடைத்ததிலிருந்து  உரகவதிக்கு ஒரு நொடி போவது ஒரு யுகம் போவது போல் தெரிந்தது. எந்தச் சத்தம் கேட்டாலும் நாககடத்து நாயகியின் மயில்பொறி20 வருகிறதா? என அடிக்கடி வானத்தைப் பார்த்தபடி இருந்தாள். சுக்கிராச்சாரியாரின் வீட்டு நிலாமுற்றத்தில் நின்று பார்த்தால் ஓவியபுரியில்21 உள்ள வானவூர்தி22 ஓடும் பாதை23 நன்றாகத் தெரியும்.

உரகவதியும் நாககட மக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தக்கணம் அதோ வந்துவிட்டது. வான வெளியில் மெல்லிய கீற்றாகத் தெரிந்த அழகிய மயில்பொறி தன் இறகை அசைத்து அசைத்து பறந்து வந்தது. அது ஓவியபுரியை ஒரு வட்டமிட்டு, ஓவியபுரியின் ஓடுபாதையில் ஓடி நின்றது. மயிற்பொறியின் கீழிறகுகள் விரிந்து இறங்கும் படிகளாக மாற, மேலிறகு எழுந்து இறங்குவதற்கு கதவு திறந்தது. நாககடம் எங்கும் மங்கல ஆரவாரம் எழுந்தது. சுக்கிராச்சாரியார் முன்னே வர, இளமதி - நாககன்னியரின் பேரழகின் எழிலாய், நாககடத்து நாயகியாய் நாககடத்தில் கால் பதித்தாள்.

 நாககடமக்கள் மகிழ்ச்சியில் மூழ்கித்திளைத்தனர். அவர்களின் 
“நாககடத்து நாயகியே! நானிலம் காப்பாய் நீயினியே!” 
என்ற வாழ்த்தொலி சுற்ற இருந்த மலைகளில் பட்டு மீண்டும் நாககடத்தில் எதிரொலித்தது. 

ஆனால் நாககடத்து நாயகியை வரவேற்க அங்கு இளநகை வரவில்லை. அவள் மட்டுமா வரவில்லை?
மனிதன் நினைப்பவை யாவும் நடப்பதுண்டா? அந்தக்கணம் சுக்கிராச்சாரியாருக்கு அதனை மெல்ல  உணர்த்திக் கொண்டு இருந்தது.

சுக்கிராச்சாரியாரின் கண்கள் எதையோ தேடி அங்கும் இங்கும் சுழன்று இசைபாடின.

இசை கேட்கும்...

சொல்விளக்கம்:
 1. துளிமழை - மழைத்துளி
 2. வளிதுஞ்சு - காற்று தங்கும்
 3. நெடுங்கோட்டு - நெடிய சிகரம் (குவடு)
 4. நளிமலை - பெருமையுடைய மலை
 5. நளிசினை - நெருங்கிய கிளைகள் 
 6. நறும்போது - மணம்வீசும் மொட்டுகள்
 7. கஞலிய - இருக்கும்
 8. நாகுமுதிர் - இளமையான உயர்ந்த
 9. நாகத்து - நாகமரம் 
 10. குறும்பொறை - சிறியமலை
 11. இக்கட்டான - நெருக்கடியான
 12. கொன்றையந்தீங்குழல் - கொன்றைப்பழத்தில் செய்த குழல்
 13. குழைந்தான் - ஒன்றாக சேர்தல்
 14. தேனாறு - நாககடத்தில் ஓடிய ஓர் ஆறு
 15. அப்பக்கம் - அந்தப்பக்கம்
 16. கறமன் - வறண்டநிலம்/கறல் மண்
 17. மஞ்சு - யானையின் முதுகு
 18. கைங்காரகன் - ஆற்றலுள்ளவன்
 19. மதங்கபுரி* - கடல்கோளுக்கு முன் இருந்த ஒரு மலை (மதங்கமலை - மாந்தை மாண்மியம்)
 20. மயில்ப்பொறி - மயில் வடிவமான சிறு விமானம் (மாந்தை மாண்மியம்)
 21. ஓவியபுரி - இலங்கையில் இன்று ஒகியா [Ohiya] என்று அழைக்கப்படும் இடம்.
 22. வானவூர்தி - விமானம்
 23. ஓவியபுரியின் விமான ஓடுபாதை - இலங்கையில் உலகமுடிவு [World’s End] என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கிறது. 

குறிப்பு:
*மாந்தை மாண்மியம் ‘மதங்கபுரி’ என்று விசுவகர்மாவின் தலைநகரைக் கூறுவது போல கந்தபுராணம் (பாடல்: 1012) கஜமுகனின் நகரை ‘மதங்கபுரம்’ என்று கூறுகிறது. அத்துடன் அந்நகரின் பெயரை சுக்கிராச்சாரியாரே வைத்ததாகவும் கூறுகிறது.

Wednesday, 29 May 2013

ஔவையார் பெண்ணை பேடு என்றாரா? - பகுதி 2


நம் பண்டைத்தமிழ் முன்னோர் உலகினில் பிறப்போரில் சிலர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதையும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதையும் அறிந்திருந்தனர். அதனால் இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் இலக்கண நூலோர் தம் தன்மையில் மாறுபடுவோரை தமிழில் அழைக்கும் சொல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுத்தனர். அதனைத் தொல்காப்பியமும்
"ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”
என்று சொல்கிறது.

ஆண்மை தன்மையில் இருந்து மாறியவரது பெயர்ச்சொல் ஆண்மையை அறியும் சொல்லுடன் சேர்ந்து வராது. ஆண்மை அறி சொல் என்றால் என்ன? இவன் ஆண் என்பதை அறியும் சொல் - ஆண்பால் என்பதை அறியும் சொல். மருத்துவன், அமைச்சன், வந்தான், படித்தான் என ‘ன்’ ஆகிய னகர மெய் எழுத்தில் முடியும் ஆண்பாலைக் குறிக்கும் சொல் ஆண்மை அறிசொல்லாகும். ஆண் தன்மையில் இருந்து மாறி (திரிந்து), பேடான பின்னர் பேடி வந்தான் என்றோ, பேடி படித்தான் என்றோ வராது. பேடி வந்தாள் எனவும், பேடி படித்தாள் எனவும் வரும்.

இதேபோல் பெண்தன்மையில் இருந்து மாறியவரது பெயர்ச்சொல் பெண்மையை அறியும் சொல்லுடன் சேர்ந்து வராது. பெண்தன்மையில் இருந்து மாறி (திரிந்து) பேடான பின்னர் பேடன் வந்தாள் என்றோ, பேடன் படித்தாள் என்றோ வராது. பேடன் வந்தான் எனவும், பேடன் படித்தான் எனவும் வரும். இதனையே தொல்காப்பியர்

“ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”
என்றும்

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே
உயர்தினை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்”
என்கிறார்.

அதாவது பேடு மாற்றமடைகின்ற தன்மையைப் பொறுத்து ஆண்பால் பெண்பாலாகவும், பெண்பால் ஆண்பாலாகவும் சொல்லப்படும். 
“இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே”
என்பதால் சொல்லின் இறுதியைக் கொண்டு ஆணா, பெண்ணா என்பதை அறியமுடியாது என்கிறார்.

மகாபரதமும் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறிய இரு பேடு பற்றியும் சொல்கிறது. அருச்சுனன், உருபசியின் சாபத்தின் மூலம் பிருகந்நளை என்ற பேடியாய் மாறினான் என்னும் இடத்தில் வீரம் மிக்க ஆண்மையாளனாகாக் சொல்லப்பட்ட அருச்சுனன், ஆண்தன்மை மாறி(ஆண்மை திரிந்து)  பிருகந்நளை என்ற பேடியாய் வீணனாய் நிற்கின்றான். பெண்ணாகப் பிறந்த அம்பை, பீஷ்மரால் பலவந்தமாகக் கடத்தப்பட்டு அவளது திருமணம் நின்றதால் சிகண்டி என்ற பேடனாய் மாறி பீஷ்மரைக் கொல்லுமிடத்தில் பேரழகுள்ள மங்கையாக சொல்லப்பட்ட அம்பை, பெண்தன்மை மாறி (பெண்மை திரிந்து) சிகண்டி என்ற பேடனாய் மாவீரனாய் நிற்கின்றாள். மகாபாரதம் மிக அழகாக ஆண் பேடியாக மாறுவதையும், பெண் பேடனாக மாறுவதையும் காட்டுகிறது. 

திருவள்ளுவர், ஆண்தன்மையில் இருந்து மாறி, பெண்தன்மை அடைந்த பேடியை, பயந்து நடுங்கும் தொடைநடுங்கியாக
“பகையகத்து பேடிகை ஒள்வாள்”
எனக்காட்டுகிறார்.

முதுமொழிக்காஞ்சியோ அஞ்சவேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் பேடியின் தன்மை என்கின்றது.
“கழி தறுகண்மை பேடியின் துவ்வாது”
அளவுக்கு அதிகமான வீரம் ‘கழி தறுகண்மை’ எனப்படும். பெண்தன்மையிலிருந்து மாறி ஆண்தன்மை அடைந்த பேடனை முதுமொழிக்காஞ்சி சொல்கிறது.

பேடியர் தமது கையை எருமையின் கொம்பு போல் வளைத்துப் பிடித்திருப்பர் என அகநானூற்றில் மருதனிளநாகனார் கூறியுள்ளார். இந்த உண்மையை நீங்கள் நேரிலும் சினிமாப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். மணிமேகலை போன்ற சங்ககால நூல்களிலும் பேடுபற்றிய செய்திகள் இருக்கின்றன. எவருமே பேடு என்பதை பெண் என்று சொல்லவில்லை.

எம்மால் போற்றப்படும் சைவப்பெரியோர் என்ன சொன்னார்கள் பார்ப்போமா? திருஞானசம்பந்தர் இறைவனை
“பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
          ஆடலை உகந்த எம் அடிகள்”
என்று மூன்றாம் திருமுறையில் கூற, 
“பெண்ணல்லை ஆணல்லை பேடுமல்லை
          பிறிதல்லை ஆனாயும் பெரியோய் நீயே”
என திருநாவுக்கரசர் ஆறாம் திருமுறையில் கூறியிருக்கிறார். இருவருமே பெண், ஆண், பேடு என மூன்றையும் கூறியிருப்பதைப் பாருங்கள். எனவே மனிதப்பிறப்பில் காலங்காலமாக பெண், ஆண், பேடு என்ற முப்பிறப்பும் இருப்பதைக் காணலாம். 

கல்வெட்டு : வரலாறு.கொம்

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டில் கூட ‘பேடு’ எனும் சொல் எடுத்தாளப்பட்டு இருக்கிறது. அக்கல்வெட்டு, தேனிமாவட்டம் அருகே 2006ம் ஆண்டு பங்குனி மாதம் தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா இராஜனின் வழிகாட்டலில், அவரது மாணவர்கள் செய்த நடுக்கல் ஆய்வின் போது கிடைத்தது. அதில்
“கல் பேடு தீயன் அந்துவன் கூடல் ஊர் ஆகோள்”
என எழுதப்பட்டுள்ளது.

சங்ககால இலக்கியங்கள் நடுகற்கள் பற்றியும் ஆகோள் பற்றியும் நிறையவே சொல்கின்றன. ஆகோள் என்றால் பசுக்களை கவர்ந்து வருதலாகும். ஓர் அரசனின் போர் வீரர்கள், வேறோர் அரசனின் எல்லைக்குள் இருக்கும் பசுக்களைப் பிடித்து வருவார்கள். அதனால் இரு அரசர்களுக்கும் இடையே போர் நடக்கும். அக்கல்வெட்டு கூறும் பேடு தீயன் அந்துவன் அப்படி நடந்த போரில் இறந்துள்ளான். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய பேடன் என்பதை அவனின் பெயரைக் கொண்டு அறியலாம். அப்பெயர் தீயன் அந்துவன் என னகர மெய் எழுத்தில் முடிவதைப் பாருங்கள். அந்த நடுக்கல்லுக்கு உரிய பேடு தீயன் அந்துவன் - சிகண்டி போல் ஒருவரே.

இனி ஔவையாரின் பாடலுக்கு வருவோம்.   
“.............  கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது”
என்று சொன்ன ஔவையார் சங்ககால ஔவையார் போல இறுமாப்பு மிக்கவர். கம்பரையே
“எட்டேகால் இலச்சணமே! ஏமனேறும் பரியே!” என்றெல்லாம் திட்டி கடைசியில்
“ஆரையடா சொன்னாயடா” என்று கேட்டவர்.
அவரா பெண்களைப் பேடு என்று சொல்லியிருப்பார்?

“அரிது அரிது மானிடராதல் அரிது”
பெண்ணில்லாமல் எப்படி மானிடராக முடியும்?  பெண், ஆண், பேடு மூன்றையும் பெற்றெடுப்பவள் பெண் தானே! அது மட்டுமல்ல உலக இயற்கையின் உயிர்ப்பிலே உயிர்கள் யாவும் தொடர்நடை போடுவதும் பெண்ணாலே. பண்டைய தமிழ் இலக்கியங்கள் மானுடப்பெண்ணை, பேடு என்று சொல்லவில்லை. ஔவையார் பெண்ணைப் பேடு என்றாரா? நான் சொன்ன தரவுகளைக் கொண்டு நீங்களும் சிந்தித்துப் பாருங்கள் உண்மை புரியும்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 28 May 2013

அடிசில் 56


சர்க்கரைப் பாணி [sharbat]
                                                                          - நீரா -
தேவையான பொருட்கள்:
தண்ணீர்  -  500 மி.லீற்றர்
சர்க்கரை (சீனி)  -  250 கிராம்
குங்குமப்பூ  -  1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1. தண்ணீரில் சீனியைப் இட்டு கொதிக்கவைக்கவும்.
2. சீனி கரைந்து கொதிக்கும் போது குங்குமப்பூவும், ரோஸ் எசன்ஸும் சேர்க்கவும்.
3. பாணி கையில் ஒட்டாது, நீரில் விட்டவுடன் கரையும் போது இறக்கவும். (பாணியை நீரில் விட்டால் அடியில் உறைந்து கரையக்கூடாது).
4. இந்த சர்க்கரைப் பாணியை நீர்த்தன்மை இல்லாத போத்தலில் ஊற்றிவைத்து பாவிக்கவும்.
5. சர்க்கரைப் பாணிக்குள் பாலோ, நீரோ, இளநீரோ விட்டுக் குடிக்கலாம்.

பின்குறிப்பு:
1. ரோஸ் எசன்ஸுக்குப் பதிலாக நன்னாரி வேர், நெல்லிக்காய், பழங்களின் சாறு முதலியவற்றை இட்டும் சக்கரைப் பாணி செய்தும் பாவிக்கலாம். பனம்பாணி, பாலப்பாணி, நெல்லிப்பாணி, மாதுளம்பாணி என நம் முன்னோர் குடித்தனர். 
2. தமிழரின் சர்க்கரைப் பாணியே சர்பத் ஆனது என  முன்பு ஒருவர் எழுதி இருந்தார். அது ஆராயப்பட வேண்டிய விடயம்.

Monday, 27 May 2013

புயலடித்துச் சென்ற வள்ளம்

எழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிறுவாரமலர், கொழும்பு; 11/02/1951]
                    
புயல் அடித்தது! பெரும் புயல். 
அது ஆயிரத்துத் தொளாயிரத்து இரண்டாம் ஆண்டு இருபதாந்தேதி அடித்தது.
நயினாதீவிலும் நல்ல புயல்.

எத்தனயோ தென்னை, பனை, வாழை இவையெல்லாம் முறிந்து பெயர்ந்து தரைமட்டமாயின. கடல் வீறிட்டுப் பெருகி அலைமோதியது. சனங்கள் வீட்டுக்கு வெளியே போகமுடியவில்லை. அப்படியே இருந்து விட்டார்கள். என்ன செய்வார்கள்? புயலுடன் பெரிய மழையும் ‘சோ’ எனப் பொழிந்தது.

அன்று இரவு புயலும் மழையும் இன்னும் மோசமான நிலையை அடைந்துவிட்டன. கடல் பெருகிக் குதித்து ஓடியது. ஆதலால் கடற்கரையில் வழக்கமாகக் கட்டிவைக்கும் வத்தைகள், வள்ளங்களைத் திரும்பவும் பெலமாகக் கட்டி வைக்கமுடியவில்லை.

இலங்கையில் முதற்தரமான குளிகாரர் நயினாதீவில் இன்றும் இருக்கிறார்கள். கீழைக்கரை ஓரக்காரர் இவர்களிடம்தான் குளியோடப்பழகியவர்கள் என்றுகூடச் சொல்வார்கள். அத்தகைய வீராதிவீரர் நயினாதீவில் உள்ள குளிகாரர். அவர்களால் கூட அந்த வள்ளங்களைப் பெலனாகக் கட்டி வைக்கக் கொந்தளித்த கடல் அன்று இடங்கொடுக்கவில்லை. இயற்கை சீறினால் அதனோடு மனிதவலிமை போராட முடியுமா? ஆகவே நடப்பதைக் கண்டு கொள்வோமெனப் பேசிக்கொண்டு அனைவரும் வீடுகளிலே இருந்தார்கள்.

“வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
          வீரத்திரை கொண்டு விண்ணைப் பிளக்குது
கொட்டியிடிக்குது மேகம் - கூ
          கூவென்று விண்ணைக் குடையிது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
          தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
          எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!”
 என்ற மகாகவி பாரதியார் பாடலை நயந்து உறுமிக்கொண்டிருந்தது அந்த இரவு. 


அதிகாலையில் சேவல்கள் கூவவில்லை. மயில்கள் அகவவும் இல்லை. ஏன்! பட்சிகள் எல்லாம் குளிரில் நடுங்கும் ஓசையொழிய வேறு வழக்கமான ஆனந்தப் பாடல்கள் எவையும் நடைபெறவில்லை. ஆதலால் அன்று காலை சோகக்காட்சியையே இயற்கை சித்திரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பரிதாபமான நிலையைப் பார்த்துப் புயலும் மழையும் சிறிது ஓய்ந்தன. இரவு முழுதும் எப்பொழுது விடியுமென அவாவுடன் இருந்த வள்ளக்காரர் (பழய கறுப்பன் தன்னுடைய பணத்தைப் பார்க்கப் பாராங்கல்லைப் புரட்டப் போன) ஆசையோடு ஓடிப்போனார்கள். அவர்களுக்கு முன் மனங்கள் துடித்துக் கொண்டு போயின. அதிட்ட சாலிகளின் வள்ளங்கள் கட்டுப்பட்டபடியே கிடந்தன.

ஆனால் தெற்கு நயினாதீவில் ‘நீலாத்தை’யுடைய வள்ளத்தைக் காணவில்லை. கட்டி இருந்த கயிறு அறுந்து கிடந்தது. நயினாதீவுக் கரையெல்லாம் ஓடியோடித் தேடினார்கள் காணவில்லை. கண்ணுக்கு எட்டு மட்டும் பார்த்தார்கள் காணப்படவேயில்லை. இவர்களுடைய வள்ளம் ‘முத்துக்கொம்பன்’ - “அது அறுத்துக் கொண்டு போய்விட்டது.” என்ற வதந்தி அவசர தந்தி போல் நீலாத்தை வீட்டிலுள்ளாருக்கும் எட்டியது. அவர்களும் கடற்கரைக்கு ஓடிப்போனார்கள். செகிடாத்தை கதிர்காமர் அவர்களுள் முக்கியமானவர். முத்துக்கொம்பன் வந்த பின்புதான் அவர்கள் குடும்பத்துக்கு ஊரவர்கள் பெரிதும் கடமைப்பட்டார்கள். கட்டப்பட்ட முத்துக்கொம்பன் கயிற்றை அறுத்துக் கொண்டு போய்விட்டது. அது இல்லாமல் அவர்கள் குடும்பம் இனி எப்படி வாழ்வது? என்ற கவலை நீலாத்தையை ஒரு உலுப்பு உலுப்பியது. கடற்கரையில் விழுந்து கதறினார். குடும்பத் தலைவன் நிலைதளர்ந்து போனால் மனைவி மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் விழுந்து கட்டி அழுதார்கள். அவர்களைச் சுற்றி ஒரு சனக்கூட்டம் அனுதாபத்துடன் கூடிவிட்டது.

அந்த நாளில் ஒரு செட்டியாரின் தாபனத்தில் நயினை நாகமணிப்புலவர் கணக்குப்பிள்ளையாக இருந்தார். அவரும் கடற்கரைக்குப் போனார். அவருடைய நண்பர் செல்லப்பரும் அங்கே போயிருந்தார். ஓர் இடத்தில் சனக்கூட்டம். அதிலிருந்து கூக்குரல் கேட்டது. புலவரும் செல்லப்பரும் விரைந்து போனார்கள். முத்துக்கொம்பனைக் காணவில்லை. அதனால் அதன் சொந்தக்காரர் கதறுவதாக அறிந்தார்கள். அவர்களின் புலம்பலைப் பார்க்க இவர்களுக்கும் மனங்கசிந்தது. செல்லப்பர் தாராளமான பெரிய மனுசன். கொஞ்சம் நகைச்சுவையும் உடையவர். தனது நண்பரைப் பார்த்து “புலவரே! இந்தச் சோகக்காட்சியை ஒரு பாடலாக்கலாமே” என்றார்.  அப்போது பாடப்பட்டது பின்வரும் பாடல்.

“சீர்கொண்ட கலியுகத் தொன்பான நூற்றாண்டில்
          செகிடி கதிர்காம புதல்வன்
சென்ற நீலாத்தை மன்னார்ப் பகுதியால் நயினை
          சேர்த்திட்ட சிதவல் அலவன்
ஊர்கொண்ட அவர்கள் குடிஉய்யவே தினமும்மீன்
          உயிர் கொண்ட கங்காளமும்
ஒரு மாதமளவில் எட்டுத்தரம் பழுது பார்த்து
          உற்ற வைரப் பொக்கிஷம்
கூர்கொண்ட ஆணியால் இடையெங்கும் இன்றியே
          குழி கொண்ட கங்காளமும்
குடி சனத்தைத் திமிலரடி தேடவிடும் முத்துக்
          கொம்பனெனும் நாமதேயன்
சூர்கொண்ட கதிர்காமரோடு மனைமக்களும்
          சூழ்ந்து கட்டிப் புலம்பச்
சுபகிருது வருஷம் ஐப்பசி மாசம் இருபதில்
          சொந்த ஊர் மருவினாரே”

நீலாத்தை ஆயிரத்துத் தொளாயிரமாம் ஆண்டு மன்னாருக்குப் போயிருந்தார். முத்துக்கொம்பனை மன்னாரிலே கண்டுவிட்டார். பேய்பிடித்தது போல முத்துக்கொம்பனை அவருக்குப் பிடித்துவிட்டது. நெடுங்காலம் மன்னாரில் தொழில் செய்து திரிந்தபடியால் முத்துக்கொம்பன் என்ற பெயர் அப்படியே இருக்க, வள்ளம் மெருக்காய் (சிதவல்) நண்டு போல கோதாகி இருந்தது. அப்படி இருந்தாலும் அதனை மன்னாரில் இருந்து நயினாதீவுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். 

ஒவ்வொரு நாளும் அது தொழிலுக்குப் போய் மீன் வேட்டையாடி அவர்களின் குடியை உய்வித்துக் கொண்டு வந்திருக்கிறது. ஆக ஒரு மாசத்தில் எட்டே எட்டு முறை தான் கரைக்கு இழுத்து ஓட்டை உடைசல் அடைத்து வைரப் பொக்கிஷமாக்கிக் கொள்ளுவார்களாம்.

ஆனால் கூரான உளி கொண்டு அடிக்கடி நெடுங்காலங் கலப்பத்துப் பார்த்து வந்திருந்தபடியால் புறப்பக்கம் மாத்திரம் (எள்ளுப்போட இடமின்றி) குழியாக கங்காளம்போல இருந்தது. இவ்வளவு சித்திரமான முத்துக்கொம்பன் திமிலரடியை ஊர்ச்சனங்கள் தேடுமளவுக்குப் பெருஞ் செல்வாக்குடன் நின்றது. அந்த முத்துக்கொம்பனை அவர்களுடைய உயிருக்குச் சமானமாக நேசித்தார்கள்.

நன்றி இல்லாத முத்துக்கொம்பன் புயலடித்த சாட்டை வைத்துக்கொண்டு வந்த ஊரில் இருந்து மறைந்துவிட்டது. கதிர்காமர் பெரிய வீராதிவீரர்தான், என்றாலும் அவர் அதனிடத்தில் வைத்திருந்த மதிப்பும், அதனோடு பட்ட சிரமமும், அதனால் கிடைத்த புகழும் அவரையும் அவரது குடும்பத்தையும் நிலை தளர்த்து கட்டிஅழ வழி செய்தது. மறைந்து போகிறவர்களுக்கு தொல்லை தீர்ந்ததே என்ற நிம்மதி. அப்புறம் தம்மால் இன்பம் அநுபவித்தவர்களை திரும்பிப்பார்க்கும் நிலைமை உலக வழக்கில் இல்லைத் தானே. 

போனவர் போய்விட்டாலும் அவரைத் தொட்டு அநுபவித்தவர்கள் இன்னும் கொஞ்ச நாள் அநுபவிக்க இருந்தாரில்லையே என்று துயரப்பட்டுக்கொண்டு இருப்ப, “சுபகிருது வருஷம், ஐப்பசி  மாசம் இருபதில் சொந்த ஊர் மறுவினாரே” என்றல்லவா! பாடுகிறார். ஆம், பிறந்த இடத்துக்கு - மன்னாருக்கு - வாங்கிய இடத்துக்கே போய்விட்டது. கட்டி வைத்த கட்டு அறுந்தால் வாங்கிய இடத்துக்குப் போகுந்தானே. அதனைப் புலமைக்கண் கண்டு நமக்குக் காட்டுகிறது. 

குறிப்பு:
எனது தந்தையாரால் எழுதப்பட்ட ‘புயலடித்துச் சென்ற வள்ளம்” என்ற இக்கட்டுரையில் எடுத்துச் சொல்லப்படும் நயினை நாகமணிப்புலவரின் பாடல் புயலடித்துச் சென்ற வள்ளத்தை மட்டும் சொல்லவில்லை. சுபகிருது வருடம், ஐப்பசி மாதம் இருபதாந் திகதி [20-10-1902]அன்று தீவுப்பகுதி எங்கும் வீசிய பெரும் புயல் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவையும் சொல்கிறது என்பதை என் தந்தையின் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
இனிதே, 
தமிழரசி.