Tuesday, 30 April 2013

[7] ஈழத்து......சென்றது.....
நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலக நாடுகளை சுற்றிவரும் வழியில் அவளுக்காக அரசமாசுணத்திடம் இருந்து மனோமயமாமணியை எடுத்தான். மாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனின் உயிரைக் காப்பாற்ற பணிலத்தில் நாககடத்திற்கு எடுத்துச் சென்றான். செல்லும் வழியில் பறக்கும் யானைகளும் மீன்களும் பணிலத்தைத் துரத்தின.
இனி.......

வாலகன் வாழ்த்து

“மாண்டனை1 பலவே! போர்மிகு குரிசில்2 நீ!
மாதிரம்3 விளக்கும் சால்பும்4 செம்மையும்5
முத்துடை மருப்பின்6 மழகளிறு7 பிளிற8
                                             - காப்பி ஆற்று காப்பியனார்

“நத்தத்தா! உனக்கு இவ்வளவு பயமா?” எனக்கேட்ட மயனைப் பார்த்து,

“நான் பயப்பிடவில்லை. கொல்களிறு9 எம்மை நோக்கி வருகின்றது. கைகட்டி நிற்கச்சொல்கிறாயா? நீயோ பாயும் மானைப் பார்ப்பது போல பறக்கும் யானையை வேடிக்கை பார்க்கிறாய்” என்றான் நத்தத்தன்.

“அந்த யானைகளைப் பார்! காற்றை ஊடுருவிச் செல்வதற்காக துதிக்கையை நீட்டிப் பிடித்துப் பறப்பதோடு, பெரிய உடலை தூக்கிக் கொண்டு பறக்க அவை படும் துன்பத்தையும் பார். அவற்றால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக அவை பறக்கின்றனவோ அவ்வளவு வேகமாக அவை களைத்துப் போகும். அத்துடன் அவற்றால் ஒரு குறித்த உயரத்திற்கு மேல் பறக்கவும் முடியாது. சிலவேளை அந்தப் பறக்கும் மீன்கள் எம்மைத் தாக்கலாம்.”

“அது எப்படி மாயா! யானைகளால் பறந்து வரமுடியாத உயரத்தை, அதுவும் நீரில் வாழும் மீன்களால் பறந்து வரமுடியும்?”

“பறக்கும் மீன்களில் இருவகை உண்டு. ஒன்று நீரில் வாழும். ஒரு குறித்த தூரம் பறக்கும். அடுத்த வகைப் பறக்கும் மீன்கள் நீரிலும் நிலத்திலும் வாழும். நன்றாகப் பறக்காக் கூடியது. எம்மைத் துரத்துபவை எந்தவகை என்பது தெரியவில்லை” என்ற மயன், “ நாம் நாககடத்துள் சென்றுவிட்டால் எந்த மிருகமும் எம்மைத் தாக்காது” என்றான்.

“நாககடம் என்ன தெய்வத்தன்மை பொருந்திய இடமா?”

“தன் இசையால் உலக உயிரினங்களை மட்டுமல்ல கல்லையும் கனியவைத்த ஓர் உத்தமர் இந்த உலகில் வாழ்கிறார். அவரிடமே நாம் செல்கிறோம். அங்கே புலியிடம் மான்குட்டி பால்குடிக்குமாம், என்று இளமதி எனக்குச் சொல்லி இருக்கிறாள். அந்த அற்புதத்தை நாககடத்தில் பார்ப்போம்.”

“நீ, நாகநாட்டு இளவரசன் ஆதலால் நாகமலை, நாகநளினி, நாககடம் என யாவற்றையும் நாக, நாக என்றே சொல்கிறாய், வேறு பெயர்களே கிடையாதா?”

“நத்தத்தா! ஓர் எழுத்தாளனும் கவிஞனுமான நீயா இப்படிக் கேட்பது? நாகர்கள் தம் இனத்தின் மேலும் மொழியின் மேலும் பற்றுள்ளவர்கள் என்பது உனக்குத் தெரியாதா? நாககடத்தில் யானைகள் இருப்பதால் அப்பெயர் வந்தது என்று நினைக்காதே. ‘நாககடம்பு’ மரங்கள் நாககடத்தில்10 நிறையவே இருக்கின்றன. ஆதலால் அதற்கு நாககடம் என்று பெயர். அதோபார்! நாககடம்பு மரங்களையும், அவற்றிலிருந்து மாலைபோல் அசைந்து தொங்கும் பூங்கொத்துக்களையும்” என்ரான்.

“நாம் நாககடம் வந்துவிட்டோமா?” என்ற நத்தத்தன், அவர்களைத் துரத்திய மீன்கள் நாகநளினியுள் வீழ்வதையும் யானைகள் திரும்பிச் செல்வதையும் மயனுக்குக் காட்டினான்.

“நாம் நாககடத்தின் எல்லைக்குள் நுழைகின்றோம். அங்கு நாம் மிகவிளிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நான் நாகநாட்டு இளவரசன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது. மலைச்சாதி நாடோடிகள் போல் நாககடத்துக்குள் செல்வோம்,” எனக்கூறிய மயன் நாககடத்தின் முன் விரிந்து கிடந்த நாகநளினிக் கரையோரம் இருந்த ஒரு குன்றின் மறைவில் பணிலத்தை மெதுவாக இறக்கினான். 

முகிலனின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த நத்தத்தன் தன்னிடமிருந்த மூலிகை மருந்தை நாக்கில் தடவி, மூக்கினுள் மருந்துப் புகையையும் புகவிட்டான். முகிலனின் மூச்சு சீராக வருவதைக் கண்டு மகிழ்ந்து, “முகிலன் இனி நம்மைவிட்டுப் போகமாட்டான்” என்றான்.

மயனும் முகிலனின் நாடியைப் பிடித்துப் பார்த்து, நத்தத்தன் முதுகில் தட்டிக்கொடுத்தான். இருவரும் மலைச்சாதியினர் போல உடைமாற்றியதோடு முகிலனின் உடையையும் மாற்றினர்.

மயனைப் பார்த்து,”நாககடமே அமைதியாக உறங்கும் இந்த அதிகாலையில் நீ சொன்ன பெரியவர் வீட்டுக்கு எப்படி போவது? உனக்கு அவர் இல்லம் தெரியுமா? என்றான் நத்தத்தன்.

“தெரியாது’, என தலையை அசைத்த மயன், “எல்லாம் மாஎந்தை இறைவன் அருளால் நலமாகவே நடக்கும் வா! போவோம்” என்று தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு நடந்தான். 

நத்தத்தன் முகிலனைத் தூக்கிக் கொள்ள, இருவரும் அக்குன்றின் மேல் ஏறினர். குன்றின் மேல் நின்ற வெள்ளை யானை ஒன்று மரத்தின் தளிரைப் பறித்துக்கொண்டிருந்தது. 

முதலில் ஏறிய நத்தத்தன் அந்த வெள்ளை யானையைக் கண்டதும், “மாயா! நீ நாககடம் வந்தாயா? அல்லது தேவலோகம் வந்தாயா? தேவேந்திரனின் பட்டத்து யானை ‘ஐராவதம்’ அல்லவா இங்கு நிற்கிறது” என்றான். 

நத்தத்தன் சொல்வதைக் கேட்டு, தன் கவலையெல்லாம் மறந்து நகைத்த மயன், “இது தேவலோகமா? தேவர்களோ இந்த இடம் தமக்குக் கிடைக்காதா? எனச் சப்புக்கொட்டுகிறார்கள். இது தேவேந்திரனின் ஐராவதம் அல்ல. வெள்ளை யானையாக இருப்பதால் இதனை ஐராவதம் என நினைத்தாயா? அதற்கு மூன்று தலைகள். நான் நினைப்பது சரியாக இருந்தால் இந்த யானை வாலகனாக இருக்கலாம்” என்றான். 

“இதன் பெயர் வாலகனா? யாருடைய யானை? 

“அசுரர் குருவான சுக்கிராச்சாரியாரின் யானை வாலகன். மிகுந்த ஞாபக சக்தியும், அறிவுக்கூர்மையும் உடையது.”

“சுக்கிராச்சாரியாரின் யானையா? நாம் சுக்கிராச்சாரியார் இடமா போகிறோம்? தேவர் குருவான வியாழனின் மகன் கயனே சுக்கிராச்சாரியாரிடம் குருகுலவாசம் செய்தல்லவா கல்வி கற்றான். அந்த மாமேதையிடமா போகின்றோம்? இது கனவில்லையே! அவரைப் பார்க்கும் பாக்கியம் இப்பிறவியில் எனக்குக் கிடத்திருக்கிறதா?” என்ற நத்தத்தனைப் பார்த்து, “வாழ்க்கையில் சிலவிடயங்கள் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமலேயே எமக்கு முன்னே வந்து அறிமுகமாகின்றன. அது ஏன் என்பதற்கான விடையை யாருமே அறிந்ததில்லை. நடப்பது நடக்கும்” என்றான் மயன்.

மரத்தின் தளிரைப் பறித்துக் கொண்டிருந்த வாலகன் அவர்களைப் பார்த்துப் ‘பிளிறியது’. அமைதியான அந்த அதிகாலை வேளையில் எழுந்த பிளிறல் நாககடம் எங்கும் ஒலித்து, நாகமலையில் எதிரொலித்து நின்றது. 

அவ்வொலியைக்கேட்ட நாககட மக்களில் பலர் விழித்துக் கொண்டனர். நாககட நகர்காவலர் வாலகன் நின்ற இடத்திற்கு விரைந்தனர்.

வாலகனோ துதிக்கையைத் தூக்கி வளைத்துப் பிடித்தபடி மயனை நோக்கி வந்தது. தலையை ஆட்டியபடி கம்பீரமாக அசைந்து வந்த தோரணையிலிருந்து அது தம்மைத் தாக்காது என்பதை மயன் உணர்ந்தான். மயனின் முன்னே வந்த வாலகன் மீண்டும் பிளிறி வாழ்த்தியது.

நாடோடியான் மலைவாசிக்கு வாலகன் வாழ்த்துவதைக் கண்டு நகர்காவலர் திகைத்தனர். நகர் காவற்றலைவனுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் இருவரும் எதோ மருந்து கொடுத்து வாலகனை மயக்கி விட்டதாக நினைத்தான். யானைப் பாகனைப் பார்த்து “நீ! எங்கே போயிருந்தாய்?” என்று அதட்டினான்.

“மரத்தடியில் இருந்தேன். அவர்கள் வருவதைக் கண்டு வாலகன் அவர்களிடம் போனது” என்று யானைப்பாகன் சொன்னான்.

மயனை வாழ்த்திய வாலகன், மயனைத் தூக்கி தன் மஞ்சு11 மேல் வைத்துக் கொண்டு நாககடத்தின் பெருவீதி நோக்கிச் சென்றது.

பாகனும் வாலகனைத் தொடர்ந்து சென்றான்.

மயனை வாலகன் தூக்குவதைக் கண்ட நத்தத்தன் ‘மாயா’ எனக்கத்த எடுத்த வார்த்தையை தாமிருக்கும் சூழ்நிலையைக் கருதி மெல்ல அடக்கிக் கொண்டான்.

வாலகன் பெருவீதி நோக்கி போவதைப் பார்த்த நகர் காவல் தலைவன் தன் யானையில் இருந்தபடி நத்தத்தனைக் காட்டி, “ அவனையும் அவன் தூக்கி வைத்திருப்பவனையும் கொண்டு வாருங்கள் எனக் கட்டளையிட்டு வாலகன் பின்னே தன் யானையைச் செலுத்தினான். 

பெருவீதியிலிருந்த சுக்கிராச்சாரியரின் மாளிகை முன் வந்து நின்ரு பிளிறிய வாலகன், மயன் இறங்குவதற்கு ஏதுவாக நிலத்தில் மண்டியிட்டது.

மலைவாசிக் கோலத்தில் இருந்த மயனும் மண்டியிட்ட யானயைத் தடவிக்கொடுத்தபடி இறங்கினான். 

மயன் வாலகனைத் தடவுவதைக் கண்ட நகர்காவல் தலைவனுக்கு மயன் மேல் சந்தேகம் வலுத்தது. மயனைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்து “நீ யார்?” என்றான்.

“ஐயா! தெரியிதில்லிங்களா? நாங்க மலைவாசியீங்க. யிது போல யேத்தன யானைங்கள பாத்திருக்கீறேனுங்க. நமக்கு தீங்கு நெனைக்காத எந்தப் பூச்சிக்கும் நாம தீங்கு செய்யறதில்லீங்க. ஏனுங்க நிங்க எங்கள அப்படி பாக்கிறீங்க” என்றான்.

“உன் பெயரென்ன?”

அதற்குள் மற்ற நகர்காவலர்களில் சிலர் முகிலனையும் நத்தத்தனையும் அங்கு கொணர்ந்தனர். அதனையும் மயன் கவனித்தான். 

“என் பெய சித்தேனுங்க. அவன் பெய நத்தேனுங்க” என்று நத்தத்தனையும் காட்டி மயன் சொன்னான். 

“அப்ப அடிபட்டுக் கிடப்பவனின் பெயர் முத்தனா?” என்றான் காவற்றலைவன்.

பெரிய குரலில், “யில்லீங்க, என் பெய சித்தேன். அவன் பெய நத்தேன். காயப்பட்டவன் பெய முகிலேன்” என நத்தத்தனுக்கும் கேட்கும்படி மயன் சொன்னான்.

“ஏன் கத்துகிறாய், இங்கு எல்லோருக்கும் காது நன்றாகவே கேட்கும்.” என்றான் காவல் தலைவன்.

“எங்கள பாக்கத் தெரியலீங்ஙளா? நாங்க மலையாதி நாடோடியீங்க. மலைகளில் கத்தி பேசித்தானுங்க பழக்கமுங்க. யிங்ங பாருங்ங கொக்கிறகு, சங்குமணி, மான்கொம்பு, மரைக்கொம்பு, பன்றி முள்12 யெல்லாம் யிருக்குதுங்கோ” என்று முடிச்சுப் பையை அவிழ்த்து மயன் கொட்டினான். 

“யிவை மட்டுமில்லீங்கோ நல்ல நரிக் கொம்பு கூட யிருக்குதுங்கோ. அது யெங்கேயு கெடைக்காதுங்கோ” எனக் கூறியபடி இடையில் கட்டியிருந்த பட்டியிலிருந்து மெல்ல எதையோ எடுத்தான்.

அப்போ அங்கே சிரித்தபடி வந்த இளநகை “சுக்கிராச்சாரியார் மாளிகையில் நரிக்கொம்பு விற்க வந்த முதல் ஆள் நீதான். ‘வாலகன் வாழ்த்து‘ பெற்ற முதல் மலையாதி நாடோடியும் நீதான், என்று கூறியபடி ஒய்யாரமாக நின்று, “இங்கே திரும்பு” எனக்கையைத் தட்டினாள்.

ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு, அது வந்த திசையில் திரும்பிப் பார்த்த மயனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘இவள் எங்கே? இங்கே வந்தாள்?’

சொல்விளக்கம்
 1. மாண்டனை - பெருமை
 2. குரிசில் - அரசன்/தலைவன் 
 3. மாதிரம் - திசைகள்
 4. சால்பும் - நற்குணம்/ மேன்மை
 5. செம்மையும் - அழகும்
 6. மருப்பு - தந்தம்
 7. மழகளிறு - இளம்யானை
 8. பிளிற - சத்தம் செய்ய
 9. கொல்களிறு - கொலை செய்யும் யானை
 10. நாகம் - யானை
 11. மஞ்சு - யானையின் முதுகு
 12. பன்றி முள் - முள்ளம் பன்றி முள்

- வருவாள்........

Monday, 29 April 2013

அடிசில் 53

பால் அப்பம்

                              - நீரா -
தேவையான பொருட்கள்:
குருணலான அரிசிமா [ground rice flour] - 1¾ கப்
பிரட் மிக்ஸ் [bread mix] - 1 கப்
சிவத்த அரிசிமா - ¼ கப் 
தடித்த தேங்காய்ப் பால்  -  3 கப் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. அரிசிமாக்களுடன் பிரட் மிக்சைக் கலந்து உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு இறுக்கமில்லாது பிசைந்து வைக்கவும்.
2. பிசைந்த மாவை 5 - 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
3. புளித்த மாவிற்குள் அரைக் கப் தேங்காய்ப்பாலும் தண்ணீரும் விட்டு கரைத்துக் கொள்க.
4. மெல்லிய நெருப்பில் நொன் ஸ்டிக் அப்பச்சட்டியை சூடாக்கி குழிக்கரண்டியால் ஒரு கரண்டி கரைத்த மாவைவிட்டு, அப்பச்சட்டியைத் தூக்கி சரித்து வட்டமாக அப்பம் போல்வர சுற்றி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.
5. அந்த மாவின் மேல் முக்கால் மேசைக்கரண்டி தேங்காய்ப் பால் விட்டு மூடியால் மூடி வேகவிடவும்
6. இரண்டு நிமிடங்களின் பின்பு அப்பம் வெந்திருப்பதைப் பார்த்து இறக்கவும்.

குறிப்பு:
தேங்காய் பால் பொடியை [coconut milk powder] தண்ணீர் விட்டு கரைத்து, தேங்காய்ப் பால் எடுத்தும் அப்பம் சுடலாம்.

Sunday, 28 April 2013

மரமுடன் மரமெடுத்தார்

ஆலத்தி எடுத்தார்


கவி உள்ளம் கொண்டோருக்கு விடுகதை சொல்லும் விடுகவிதையாக இருக்கும் தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

“மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கு ஏகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்”              
                                                        - தனிப்பாடல்

சுந்தரகவிராயர் மரம் என்ற சொல்லை பதினொரு இடங்களில் வைத்து இத்தனிப்பாடலை இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்பாடலில் அரசமரம், மாமரம், வேலமரம், வேங்கைமரம், ஆலமரம், அத்திமரம்  ஆகிய ஆறு மரங்களை வைத்து ஒரு சிறுகதையை சுந்தரகவிராயர் கூறியுள்ளார்.

பெருங்காடு. அங்கே வாழ்ந்த வேங்கை ஒன்று அருகே இருந்த சிற்றூர்களில் சென்று குடிசையில் வாழ்ந்த மனிதர்களை கொன்று குவித்தது. அதனைக் கேள்விப்பட்ட அரசன் அவ்வேங்கையைக் கொல்லப் புறப்பட்டு சென்றான்.சுந்தரகவிராயர், அரசன் வேங்கையைக் கொல்லப்புறப்பட்டுச் சென்றதையும், அவன் வேங்கையை வேலால் குத்திக் கொன்று, வெற்றிவாகையுடன் மீண்டதற்கு அரசமகளிர் ஆலத்தி எடுத்ததையும் கண்டார். தாம் கண்டதை இப்பாடலில் பாடியுள்ளார். மீண்டும் ஒருக்கால் பாடலை படித்துப் பாருங்கள் புரிகிறதா?

மரமது(அரசன்) மரத்திலேறி(குதிரையில் ஏறி) மரத்தை(வேலை) தோளில் வைத்து
மரமது(அரசன்) மரத்தைக்(வேங்கையை) கண்டு மரத்தினால்(வேலால்) மரத்தைக்(வேங்கையை)குத்தி
மரமது(அரசன்) வழியே(வந்தவழியே) சென்று வளமனைக்கு(அரண்மனைக்கு) ஏகும் போது
மரமது(அரசன்) கண்ட மாதர் மரமுடன்(ஆல) மரம்(அத்தி) எடுத்தார்”  

‘அரசன் குதிரையில் ஏறி வேலைத் தோளில் வைத்துக் கொண்டு சென்றான். அரசன் வேங்கையைக் கண்டு வேலால் வேங்கையைக் குத்திக் கொன்று, வந்தவழியே தன் அரண்மனைக்குச் சென்ற போது அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தனர்’ என்பதே இத்தனிப்பாடலின் கருத்தாகும். 

மரமது என்பது அரசமரத்தை குறித்து அரசனை சுட்டி நிற்கிறது. மரத்திலேறி என்பது மாமரத்தைக் குறித்து மா எனும் குதிரையைச் சுட்டி நிற்கிறது. மரமதை என்பது வேலமரத்தைக் குறித்து வேலைச் சுட்டி நிற்கிறது. மரத்தை என்பது மேங்கைமரத்தைக்  குறித்து வேங்கையைச் சுட்டி நிற்கிறது. மரத்தினால் வேலால் வேங்கையைக் குத்தி, அரசன் வந்த வழியே திரும்பி  வளமனைக்கு சென்ற போது அரசனைக் கண்ட மாதர் (பெண்கள்) மரமுடன் ஆலமரமுடன் மரம் அத்திமரத்தை எடுத்தனர். அதாவது [ஆல் + அத்தி = ஆலத்தி] ஆலத்தி எடுத்தனர்.
இனிதே,
தமிழரசி.   

Saturday, 27 April 2013

கிளிநொச்சி மருவும் கோயில் மகிழ்ந்தருளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்

                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்பழமுதிர் சோலைக் கள்ளழகர் பண்பில்
          வளர்ந்த வள்ளிமலர்
பரவப் பரிந்து பரங்குன்றப் பதியைநீக்கி
          யுவந்து வந்து
கிளமுதி ரிளமை வேட்டுருவங் கிளரத்
          தாங்கி மரமாகிச்
கீதம்பாடும் நாரதரின் கேலிக் கிரங்கி
          அலந்து நொந்து
மழமுதிர் களிறா வரும்வண்ணம் வனத்தே
          தமையன் றனையழைத்து
மன்னன் நம்பிமகள் மணத்தை மருவி
          மகிழ்ந்த மணவாளா!
வளமுதிர் நன்னீ ரிரணைமடு வாய்க்கால்
          வழிந்தே நெல்விளையும்
வளஞ்சூழ் நகரக் கிளிநொச்சி மருவும்
          கோயில் மகிழ்ந்தருளே!

Thursday, 25 April 2013

மனதிற்கு ஓர் உபதேசம்

தெய்வம் உண்டென்று இரு!


மனிதமனம் ஒரு குரங்கு போன்றது. அது நிலையாக ஓர் இடத்தில் நிலைத்து நிற்காது. குரங்கு கிளைக்கு கிளை, மரத்திற்கு மரம் தாவித்திரிவது போல மனமும் எமது ஆசைகளுக்குத் தக்கபடி ஒன்றைவிட்டு மற்றதற்கு தாவித்திரியும். அப்படித் தாவித் தாவி அலைபாய்ந்து திரியும் மனதிற்கு எவராவது உபதேசம் செய்து அடக்கி வைக்க முனைந்திருக்கிறார்களா? 

தன் மனதிற்கு உபதேசம் செய்தவர்களில் சிவவாக்கியரும் ஒருவராவார். ‘மனமே! மனிதகுலம் ஒன்று. தெய்வமும் ஒன்றுதான். தெய்வம் உண்டு என்பதை நம்பு. பெரிய செல்வம் எல்லாம் என்றும் நிலைத்து இருப்பவை அல்ல. ஆதலால் செல்வத்தை போற்றாது இரு. பசித்தவர்கட்கு தேவையான உணவைக் கொடுத்துக் காப்பாற்று. நல்ல அறச்செயல்களும் நட்பும் நன்மை தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள். எப்பொழுதும் நடுநிலைமையில் இருந்து நீங்காதே. எமக்கு எது கிடைக்குதோ, அது போதும் என்று எண்ணிக் கொள். இதுவே நான் உனக்குச் செய்யும் உபதேசமாகும்.’ என்று அவர் கூறியுள்ளார்.

சிவவாக்கியர் அவரின் மனதிற்கு செய்த உபதேசத்தை நீங்களும் படித்துப்பாருங்கள்.

“ஒன்று என்று இரு தெய்வம் உண்டு என்று இரு 
             உயர் செல்வம் எல்லாம் 
அன்று என்று இரு பசித்தோர் முகம் 
             பார்நல் அறமும் நட்பும் 
நன்று என்று இரு நடு நீங்காமலே 
             நமக்கு இட்டபடி
என்று என்று இரு மனமே 
             உனக்கு உபதேசம் இதே!

சிவவாக்கியர் தமது மனதிற்குச் சொன்ன உபதேசத்தை நாமும் எமது மனதிற்குச் சொல்லலாமே!
இனிதே,
தமிழரசி.

Wednesday, 24 April 2013

அலைமோதும் வாழ்க்கை.
அலைமோதும் வாழ்க்கை மனிதனுக்கு கற்றுத்தந்த பாடங்கள் கோடானு கோடியாகும். இன்பமும் துன்பமும், சிரிப்பும் அழுகையும், பெருமையும் சிறுமையும், செல்வமும் வறுமையும் எனப் பல வகையான இரு கோடுகளுக்கிடையே மனித வாழ்க்கை அலை மோதுகின்றது. ஒன்று மேலே கொண்டு சென்றால் அக்கணமே இன்னொன்று கீழே இழுத்து வருகின்றது. இந்த அலை மோதுதல் இல்லாமல் எப்போதும் மனிதன் மேலே மேலே சென்றிருந்தால், அவன் அன்பை உணராது, அறிவைத் தேடாது என்றோ மமதையால் அழிந்து ஒழிந்திருப்பான். அலைமோதும் வாழ்க்கை மனிதர்களாகிய எம்மை வாட்டி வதைக்கின்றது என நினைப்பது தவறு. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அலை மோதல்கள் எம்மை செதுக்கி எடுக்கின்றன.

மனிதன் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனை எத்தனை கோடி இன்பதுன்ப அலைமோதல்களை சந்தித்திருப்பான். அந்த அலைமோதல்களை எல்லாம் பொருட்படுத்தாது துணிந்து எதிர் நீச்சல் போட்டு விலங்குகளை வென்றதோடு, இயற்கையையும் மெல்ல மெல்ல வெல்ல முயல்கின்றான். இயற்கையை வென்றதன் முதற்படி நிலைகளாக உணவை வேகவைத்து உண்ணத் தொடங்கியதையும், ஆடை அணியத் தொடங்கியதையும், தனக்கென வீடு கட்டும் பொறிமுறையை வகுத்துக் கொண்டதையும் கூறலாம்.

அலைமோதிய வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் இருந்தே பண்டைய மனித இனக்குழுக்கள் தத்தமக்கு என பண்பாடுகளை வகுத்துக் கொண்டன. தாம் வகுத்த அந்த பண்பாடு எனும் வட்டத்துள் அவை வாழ்ந்தும் வந்தன. கால ஓட்டம் மனிதன் வகுத்த பண்பாடு எனும் வட்டத்தை மெல்லமெல்லத் தகர்த்து எறிந்தது. அது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மனித இனங்களின் பண்பாடுகள் மாறுபடினும் மனிதத்தன்மை என்றும் மாறுபடுவதில்லை. அது எந்த மனிதனுக்கும் பொதுவானதே. பல இனக்குழுக்களாக உலகெங்கும் பிரிந்து தத்தமது பண்பாடுகளுடன் வாழ்ந்த மனித இனம், இன்று உலகமயமாக்கலால் பின்னிப் பினைந்து ஒன்றோடு ஒன்று கலக்கின்றது.

அதற்கான காரணம் என்ன? தத்தம் பண்பாடு எனும் தனித்தன்மையோடு வாழ்ந்த மனித இனக்குழுக்களை இயற்கையின் சீற்றம் சீறிப்பாய்ந்து அழித்தது. அந்த அழிவுகளுக்கு தப்ப அவன் தானிருந்த இடம்விட்டு, இடம் பெயர்ந்து செல்லவேண்டி வந்தது. அப்படி நடந்த இடப்பெயர்வுகள் பண்பாட்டு மோதல்களாய் வெடித்து மனிதனை மேலும் சிதறிடித்தன. அறிவும் ஆற்றலும் உள்ளோர் பிழைத்துக் கொண்டனர். அவர்களையும் கயவர்கள் கொன்றொழித்தனர். அதனால் மனிதன் அலைமோதும் வாழ்க்கையில் தடுமாறி தத்தளித்து வாழக்கற்றுக் கொண்டான்.

இயற்கை மனிதனுக்கு கற்றுத் தந்த பாடங்களிலே மிக முக்கியமான பாடம் விழுவதும் எழுவதும். நம் குழந்தைப் பருவத்தில் எத்தனை முறை எழுந்தும் விழுந்தும், விழுந்தும் எழுந்தும் இருக்கிறோம். எழுந்தவன் விழுவதும், விழுந்தவன் எழுவதும் இயற்கை கற்றுத்தந்த பாடமல்லவா? அப்படி இருக்க அலைமோதும் மனித வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் துவண்டு போகலாமா?

இந்த அலைமோதும் வாழ்க்கைக்கிடையே பெரிய சுழிகளும், சூறாவளிகளும், எரிமலைகளும், பூகம்பங்களும் ஏன் ஆழிப்பேரலை கூட அடுத்தடுத்து கணத்துக்குக் கணம் வரலாம். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என திருவள்ளுவர் சொன்னது போல அவற்றை எல்லாம் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு வாழ்வதே மனித வாழ்வாகும். 
இனிதே, 
தமிழரசி.

Tuesday, 23 April 2013

உலகுயிர் நேயம் வேண்டுவீரேல்!மார்கழி மாத மழையதுவால்
மாநில மெங்கும் நீர்ஓட
ஊர்ந்து திரியும் எறும்புகளும்
உணவு இன்றி தாம்வாட
பார்த்து அறிந்த பாவையரும்
பதமாய் அரிசியை இடித்து
மாக்கோலம் இட்டார் மண்மீது
மாவைக் கண்ட எறும்புகளும்
மளமள என்று மாவெடுத்து
மகிழ்ந்து உண்டிருந்தன காண்!

மானுட உயிரியல் நேயம்
மாண்டதினால் சுண்ணக் கல்லை
மாவாக்கி கோலம் போடும் 
மங்கையர் தாமும் அறியாரோ?
சுண்ணக் கல்லின் மாவதனால் 
மண்ணின் தன்மை பாழாக
மற்றுள உயிரும் வீணாகும். 
உலகுயிர் நேயம் வேண்டுவீரேல்!
மங்கலக் கோலமிடு மங்கையரே!
மாக்கோலம் இடுவீர் மண்மீதே!
                                                - சிட்டு எழுதும் சீட்டு 58

Monday, 22 April 2013

ஆசைக்கவிதைகள் - 61

ஓட்டைச் சங்கானேன்!

குதிரைமலைக் கடற்கரையில் சங்குகளை அடுக்கி சிறுயது முதல்இளஞ்சிட்டுக்களாய் விளையாடித் திரிந்த மச்சானும் மச்சாளும், பருவவயதுவர ஒருவரைவிட்டு ஒருவர் மெல்ல விலகினர். மச்சானுக்கோ மச்சாளின் நினைவு மாறாது என்றும் பசுமையாய் இருந்தது. அறியாப்பருவத்தில் அவள் சொன்னவற்றை அவன் உறுதியாக நம்பினான். கடற்கரையில் சங்குகளைப் பார்க்கும் போதெல்லாம் அவளின் நினைவால் அவன் துவண்டு பாதிச்சங்கு போல மெலிந்து போனான். எதற்கும் உதவாத ஓட்டைச் சங்குபோன்ற நிலையில் அவன் வாழ்க்கை நகர்ந்தது. மச்சாள் மேல் காதல் கொண்டதால் தானிருக்கும் நிலையை எண்ணி சங்குகளோடு ஒப்பிட்டு வருந்துவதோடு, மச்சாளை தன்னை ஏமாற்றிய துரோகியாக எண்ணி பாடுகிறான். அவள் ஏமாற்றினாளோ இல்லையோ காதலனின் மனஓட்டத்தை இந்த நாட்டுப்பாடல்கள் நன்கு எடுத்துச்சொல்கின்றன.

மச்சான்: ஓட்டைச் சங்கானேன்
                          உடைந்த சங்கு நீருனேன்
               பாதிச்சங்கானேன் மச்சியுன்மேல்
                           பட்சம்வைத்த நாள் முதலாய்.

மச்சான்: உன் சொல்லில் உறுதி கொண்டேன்
                          உன் பேச்சில் மையல் கொண்டேன்
               உன்னைப் போல் நீலி
                          உலகத்தில் கண்டதில்லை.
                                                          -  நாட்டுப்பாடல் (குதிரைமலை)
                                                            பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)