Sunday, 31 March 2013

குறள் அமுது - (60)


குறள்:
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று”                -11

பொருள்:
மழை பெய்வதால் உலகம் இயங்குகின்றது. ஆதலால் மழையே உலகத்தை வாழ்விக்கும் அமிழ்தம் என்று உணர்க.

விளக்கம்:
அமிழ்தம் அமிழ்தம் என்று சொல்கிறார்களே, அது என்ன? அந்த அமிழ்தத்தை உண்டு தேவர்கள் என்றும் இளமையாக முதுமை அடையாது இருக்கிறார்கள், என இதிகாசங்கள் கூறுகின்றன. அமிழ்தத்தைத் தேடி மனிதர்களாகிய நாம் தேவலோகம் போகமுடியுமா? ஆனால் அந்த அமிழ்தம் எது என்பதை மிகத்தெளிவாக இக்குறள் சொல்கிறது. 

இந்த பூமியில் வாழும் உயிர்கள் யாவும் உணவுக்காக தாவரங்களிலேயே தங்கி இருக்கின்றன. ஏனெனில் தமது உணவை தாமே தயாரிக்கும் தன்மை தாவரங்களுக்கே உண்டு. அதற்கு நன்னீர் வேண்டும். உலகின் பெரும்பகுதி கடல் நீரால் சூழப்பட்டு இருப்பினும் நன்னீர் மூன்று வீதமே இருக்கிறது. அதில் இரண்டு வீதம் வட தென் துருவங்களில் குவிந்து கிடக்கும் பனிப்பாறையால் ஆனது. மீதி ஒரு வீதமே எமக்கு அருவிகளிலும், ஆறுகளிலும், குளங்களிலும் கிணறுகளிலும் இருந்து கிடைக்கிறது. இந்த ஒரு சதவீத நன்னீரைக் கொண்டே  உலகத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் உயிர்வாழ்கின்றன. 

வான் என்பது இங்கு மழையைக் குறிக்கின்றது. வானம் மழையைப் பொழியாவிட்டால் அந்த ஒரு சதவீத நன்னீரும் அற்று, இந்த உலகம் கட்டாந்தரையாகக் காட்சி அளிக்கும்.  மழை பொழிவதாலேயே இவ்வுலகம் பல கோடிக்கணக்கான உயிர்ப்பேதங்களுடனும் பசுமையுடனும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது. ஆதலால் இவ்வுலக உயிர் அனைத்தையும் வாழவைத்து இவ்வுலகை இயக்கும் மழைநீரே அமிழ்தம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்று திருவள்ளுவர் எமக்கு எடுத்துக் கூறியுள்ளார். 

உலக இயக்கம் மழை நீரால் நடைபெறுவதால் தண்ணீரே அமிழ்தமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே அமிழ்தம் தேடி தேவலோகம் போகவேண்டிய தேவை எமக்கு இல்லை. 

Saturday, 30 March 2013

[5] ஈழத்து.....


சென்றது…
நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதிக்காக மாசுணத்திடமிருந்து மனோமயமாணியை எடுக்கச் சென்ற மயனும் நண்பர்களும் மாசுணங்களிடையே அகப்பட்டுக்கொண்டனர். அவர்கள் தமது இசைத் திறமையால் மாசுணங்களை தம்வசப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். 
இனி.....

மாசுணம் உமிழ்ந்த மாமணி
“பாம்புமணி உமிழ பல்வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற”
                                                            -கபிலர் 

‘இசையின் ஆற்றலுக்கு கல்லும் கனிந்து உருகுமாயின் உயிருள்ள இந்த மாசுணங்கள் மயங்கி இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என மயன் நினைத்தான். அத்துடன் அவனது குரு பண்ணாகனாரிடம் குழல் வாசிக்க கற்றதையும் அங்கே வந்த இளமதியை அவன் முதன்முதல் கண்டதையும் நினைத்தான். பெண்களின் அழகுக்கு உவமையாகக் கூறப்படும் இரதியின் தங்கை மகளான இளமதி, அழகுக்கு வரைவிலக்கணம் அவளே என கண்கள் பளிச்சிட அங்கு வந்து பண்ணாகனார் முன் நின்றாள். அங்கு இருப்பவவர் எவரைப்பற்றியும் கவலைப்படாது, சுக்கிராச்சாரியாரிடம்1 படிப்பதாகவும் பண்கள்பற்றிய ஆய்வு செய்வதாகவும் அதற்கான சில ஏட்டுச்சுவடிகளை அவரிடம் வாங்கிப் போகவந்ததாகக் கூறினாள். அவளின் அழகுமட்டுமல்ல மிகவும் இளவயதுடைய அவளின் துணிவு, நளினம் யாவும் அவனைக் கவர்ந்தது. 

சுக்கிராச்சாரியாரிடம் படிக்கிறாள் என்பதை அறிந்ததும் பண்ணாகனார் மிகுந்த ஆர்வத்தோடு அவளிடம் பண்களைப்பற்றி நிறையக் கேள்விகளைக் கேட்டார். அவரின் மிக நுணுக்கமான கேள்விகளுக்குக் கூட அப்பண்களைப் பாடிக் காட்டி அவள் விளக்கம் அளித்தாள். அவரின் ஒரு கேள்விக்கு பதில் அளிப்பதற்காக, ‘எனக்கு ஒரு வீணை தரமுடியுமா? வீணைகளின் தந்திகளை மீட்டி பண்களின் வேறுபாடுகளைக் காட்டுகிறேன்’ எனக்கேட்டாள். அவளிடம் கொடுக்கப்பட்ட வீணையை கையில் எடுத்துப்பார்த்ததும் ‘இதன் நரம்பு2 மரல்நாரால்3 ஆனது அல்ல, மரல்நரம்பு இருக்கா?’ எனக்கேட்டாள். குரு பண்ணாகனாரும் சிரித்தபடி மரல்நரம்பு கட்டிய இன்னொரு வீணையைக் கொடுக்கச் சொன்னார். 

அந்த வீணையைத் தொடாமலேயே அக்கூடத்தில் வீணை வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று, ஒவ்வொன்றாகப் பார்த்து வீணை ஒன்றை எடுத்து வந்தாள். ‘குருவே! என்னை மன்னிக்க வேண்டும். இரண்டாவதாக தரப்பட்ட வீணை முற்றாத மரத்தில் செய்யப்பட்டது. அதன் நாதம் கேட்க இனிமையாக இராது. எனவே அதைத்தவிர்த்து, இதை எடுத்துவந்தேன்’ எனக் கூறி, அவரின் பதிலுக்கு காத்திராமலே வீணையின் நரம்புக்கு சுருதிசேர்க்கத் தொடங்கினாள். வீணைக்கு சுருதி சேர்ப்பதற்கு தேவையான ஆதாரசுருதியை கொடுப்பதற்காக “மாயா! உன் குழலில் அளவிசை4 கொடு’ என்று பண்ணாகனார் மயனிடம் சொன்னார்.

மயன் தனது புல்லாங்குழலை எடுத்து இளமதியைப் பார்த்தபடி இசைத்தான். இசைவந்த திசையில் இளமதியின் பார்வை சென்றது. இருவர் கண்ணும் ஒன்றோடு ஒன்று கவ்விக்கலந்து பிரிந்தன. அக்கணம் முதல் இருவர் உயிரின் ஆதாரசுருதியும் ஒன்றாய் இணைந்து கலந்தன. உயிரோடு உயிர் கலந்ததை, பண்ணாகனாருக்கு குழலோடு வீணை கலந்து ததும்பியச் சிந்திய இசை காட்டிக்கொடுத்தது. அவரும் மெல்லத் தன் தாடியை வருடியபடி “மாயா! இளமதி கேட்கும் சுவடிகளை எடுத்துக் கொடு” என்று கூறி அவர்களின் காதலுக்கு நீர் ஊற்றினார். இளமதியின் நினைவு கொடுத்த உந்துதலால் மயனும் ஆம்பலந்தீங்குழலோடு ஒன்றினான்.
மயனின் ஆம்பற்குழலின் இசைக்கு ஏற்ப தனது இன்கிணையின் நடையை மாற்றியடித்த நத்தத்தன் ‘மனிதர்களாகிய நாம் போயும் போயும் இந்த மாசுணங்களுக்கா இசைத்திருவிழா செய்கின்றோம்’ என நினைத்தான். ‘அதுவும் நாக நாட்டு இளவரசனின் இசையைக் கேட்க இந்த மாசுணங்கள் எல்லாம் கொடுத்து வைத்திருக்கின்றன’ என எண்ணிச் சிரித்தான். கவிஞனான அவன் உள்ளம் மாசுணங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து இரசித்தது. நகரங்களில் கூட இசை கேட்க வரும் அவையோர் சிலர் வெட்டிப் பேச்சுப்பேசி, இசை கேட்பவர்களையும் கேட்க விடாமல் செய்வதைப் பார்த்திருக்கின்றான். பலரின் பார்வை அரங்கில் இருக்க, எண்ணமோ அந்த இசையரங்கிற்கு சம்பந்தம் இல்லாது எங்கெங்கோ சென்றிருக்கும். அப்படிப்பட்ட எத்தனையோ விசித்திர மனிதரை அவனின் கண்கள் எடை போட்டிருக்கின்றன.

ஆனால் இங்கே காட்டிலோ ‘மாசுணங்கள் எவ்வளவு ஒழுங்காக ஒன்றன் பின் ஒன்று அமர்ந்தும், அந்தரத்தே தொங்கியும் இசை கேட்கின்றன. சில தலையை மட்டும் அல்லாது தனது தாளகதிக்கு ஏற்ப வாலையும் ஆட்டுகின்றனவே’ ‘நாட்டு மனிதர்களை விட இந்தக் காட்டு மாசுணங்கள் எவ்வளவோ மேல்’ கைதேர்ந்த கலா விற்பனர்கள் போல் இருந்து அவை தலையை ஆட்டுவது அவன் மனதைக் கவர்ந்தது. அதிலும் தமது உடலையே வட்டமாக சுற்றி ஆசனமாக்கி, மேலே தலையை வைத்து சிம்மாசனத்தில் இருப்பது போல் அவற்றில் சில அமர்ந்திருந்தன. அப்படி மாசுணங்கள் இருந்து இசை கேட்கும் பாங்கு நத்தத்தனுக்கு பிடித்திருந்தது.

‘இசையை இரசித்துக் கேட்பது எப்படி என்பதை இந்த மாசுணங்களிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்’ என நினைத்தபடி முன்வரிசையில் வந்திருந்து இசை கேட்கும் குட்டி மாசுணத்தின் வாலாட்டலையும், தலையை இடைஇடையே நிலத்தில் அடிப்பதையும் பார்த்து இரசித்தான். இசை நிகழ்ச்சியின் நடுநடுவே ‘அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விபரத்தை குழலிசையிலேயே மயன் நண்பர்களுக்குச் சொன்னான். முகிலனும் சீழ்க்கையால் பதில் கூறினான்.

மயனும் முகிலனும் சேர்ந்தும், ஒருவர் மாறி ஒருவர் தனித்தும் வயிரகாந்தப் பண்ணை இசைத்தனர். நேரம் மெல்ல மெல்ல உருண்டோடிக் கொண்டிருந்தது. எங்கும் இருள் கவிந்தது.5

அரங்கச் சுற்றுச் சூழல் மாறியது. ஆனால் இசை கேட்கும் அவையோரோ இடத்தைவிட்டு நகரவே இல்லை. கலைஞர்களும் நகர முடியாது. அசைந்தாலோ அவர்கள் உடல் துண்டாடப்படும். இந்த நிலை எந்தக் கலைஞனுக்கும் வரக்கூடாது. அவர்கள் மூவரது நிலையும் பேய் வாலை பிடித்தவன் கதையாகப் போய் விட்டது. மயன், ‘ஆம்பல் பண்ணை’6 சீழ்க்கையில் அடிக்குமாறு வயிரகாந்தப் பண்ணில் முகிலனுக்கு கட்டளை இட்டான். ஆம்பல் பண்ணை நள்ளிரவுக்கு மேல்வரை, நாம் இசைக்க வேண்டி இருக்கும் என குழல் இசையிலேயே கூறினான்.

முகிலனுக்கு வயிரகாந்தப் பண்ணிலிருந்து ஆம்பல் பண்ணுக்கு மாற்றி சீழ்க்கை அடிப்பது மிகச் சுலபமாக இருந்தது. இரண்டு பண்ணும் ஒரு ‘தாய்ப் பாலையில்’7 இருந்து பிறந்தவையே. அப்படி இருந்தும் ஒரு பண்ணில் இருந்து மற்றப் பண்ணிற்கு சீழ்க்கையை மாற்றிய போது அப்பண்களின் தனி இயல்புகள் சிறிதும் குலையாது அவற்றை இசைத்தான்.

அவர்களின் இசைக்குத் தக்கபடி தனது நடையை மாற்றி மாற்றி இன்கிணையில் வாசித்து வந்த நத்தத்தன் ஆம்பல் பண்ணிற்கு சரபந்தன8 தாளத்தில் வாசிக்கத் தொடங்கினான்.
பயங்கரமான ஆட்கொள்ளி மாசுணங்களிடையே அகப்பட்டு இருந்த போதும் தன் நண்பனின் திறமையை மயன் பாராட்டினான். அது அவனின் ஆளுமையையும் ஓர்மத்தையும்9 எடுத்துக் காட்டியது.
ஆம்பல் பண்ணையும், சரபந்தன தாளத்தையும் கேட்ட மாசுணங்கள் அவர்களை நெருங்கி வந்தன. அதைக் கண்டு தடுமாறாமல் மூவரும் இசையோடு ஒன்றினர். அதே வேளையில் அந்த மாசுணங்களிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அங்கே நான்கு மாசுணங்கள் புடைசூழ விசித்திரமான ஒரு மாசுணம் நிமிர்ந்து அசைந்தசைந்து வந்தது.
அம்மாசுணம் மிக அழகாகவும், தலையில் பூவல் கொண்டையுடனும் மற்றவற்றில் இருந்து வேறுபட்டும் இருந்தது. அதன் வால் மிகக் குறுகியும் ஐந்தாகப் பிரிந்தும் இருந்தது. அந்த ஐந்து வால்களை நிலத்தில் மாறி மாறி ஊன்றி அசைந்தசைந்து வந்தது. ஆதலால் அது நடை பழகுவது போல் தெரிந்தது. அது எல்லா மாசுணங்களுக்கும் முன்னே வந்து நின்றது. அவர்களைப் பார்த்து தன் தலையை ஆட்டியது. அதன் பார்வையில் அன்பு இழையோடுவது போல் மயன் உணர்ந்தான். அதைக் கண்டதும் மயனின் உள்ளத்தில் பேருவகை ஏற்பட்டது. மனோமய மாமணிக்காக10 எந்த மாசுணத்தை தேடி கிழக்கு மலைச் சாரல் முழுவதும் அலைய வேண்டும் என நினைத்தானோ அந்த அரசமாசுணமே இப்போது அவனைத் தேடி அவன் முன்னே வந்து நிற்கின்றது.
மா எந்தை11 கோயில் இறைவனின் கருணையை எண்ணி ஒரு கணம் வணங்கினான். அந்த அரசமாசுணம் தட்டம்12 தெரிய மயனைப் பார்த்து இளித்தது. அதன் கொடிய இளிப்புக்கூட மயனுக்கு சிரிப்பது போலிருந்தது. அகில உலகமே தன் காலடியில் வந்து அடிபணிவதாக அவன் உணர்ந்தான். அரசமாசுணத்தை தன் காலடியில் கொணர்ந்து சேர்த்த அந்த மானசசக்தியை மீண்டும் தொழுதான். இளமதியை நினைத்து ‘அவள் மிக அதிஷ்டசாலி’ என மனதினில் பாராட்டிக் கொண்டான். “எங்கள் இசை நிகழ்ச்சியைப் பார்க்க முக்கிய விருந்தினர் வந்துவிட்டார்” என முகிலன் சீழ்க்கையில் சொன்னான். நண்பர்கள் அதனை ஆமோதித்துக் கொண்டனர். நேரம் போவது தெரியாது மூவரும் மிக உற்சாகமாக ஆம்பல் பண்ணை இசைத்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கியும் வாசிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல களைப்பு மிகுதியால் முகிலன் தான் இருந்த நிலையில் இருந்து சற்று மாறி இருந்தான்.
அப்படியே முகிலனை, அரசமாசுணம் கவ்வி எடுத்தது. மற்றைய மாசுணங்கள் ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தன. முகிலனை அரசமாசுணம் கவ்வியெடுத்த வேகத்திலேயே விழுங்காமல் காறி உமிழ்ந்தது. அது உமிழ்ந்த வேகத்தில் ஒரு கல்லில் மோதி முகிலன் விழுந்தான். அவன் தலையில் இருந்து இரத்தம் கொட்டியது. விழுந்து கிடக்கும் முகிலனை கடித்துக் குதறுவதற்காக அரசமாசுணத்துடன் வந்த மாசுணமொன்று விரைந்து சென்றது. மற்ற மூன்று மாசுணங்களும் முகிலனை நோக்கிப் பாய்ந்தன. 
மயன் அதற்கும் கலங்காது ஆம்பற் குழலை இசைத்தான். நள்ளிரவில் வாசிக்கும் ஆம்பல் பண்ணின் சுத்த இன்ப இசையால் விலங்குகளை தன்வசப்படுத்த முடியும் என்பதை மயன் தன் குருவின் மூலம் அறிந்துவைத்திருந்தான். எனவே “நத்தத்தனை ஆடாது அசையாது இருந்த இடத்திலே இருக்கும்படி” இசையில் கூறினான். அரசமாசுணம் மயன் அருகே வந்து மீண்டும் மீண்டும் அவனை முகர்ந்து முகர்ந்து பார்த்தது. அவன் மடியில் தலை வைத்திருந்தது. அதன் தலையே மயனுக்கு பெரும் சுமையாக இருந்தது. மயன் ஆம்பல் பண்ணை துரிதகதியில் இசைக்கத் தொடங்கினான்.
அரசமாசுணம் எழுந்து துள்ளிப் பின்னால் சென்று, மயனின் ஆம்பல் பண்ணின் குழலிசைக்குத் தக்கபடி துரிதகதியில் ஆடியது. அடுத்த கணம் மிகவும் அற்புதமான ஒலி எழுப்பியபடி மயனின் அருகே மனோமயமாமணியை உமிழ்ந்தது. அதன் ஒளி அவ்விடம் எங்கும் செம்மஞ்சள் நிறத்தைப் பரப்பியது. மயனின் காலடியில் மனோமயமாமணி விழுந்த நேரம் புலத்தியபுரத்தில் சிவாம்சத்துடன்13 கூடிய ஞானக் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் முகத்தில் மனோமயமாமணியை விஞ்சிய14 ஞானஒளி வீசியது.
ஒளிரும்......
சொல்விளக்கம்:
1.  சுக்கிராச்சாரியார் - அசுரகுரு
2.  நரம்பு - வீணையின் தந்தி 
3.  மரல்நார் - மரல் ஒருவகைமரம் அதன் நாரை வீணைக்கு தந்தியாக பயன்படுத்தினர்
4.  அளவிசை - ஆதாரசுருதி
5.  கவிந்தது - மூடியது 
6.  ஆம்பல் பண் - உதயசந்திரிக்கா ராகம் 
7.  தாய்ப்பாலை - மேளகர்த்தா ராகம் 
8.  சரபந்தன தாளம் - பூச்சரம் ஒன்றோடு ஒன்று இணைந்தது போன்ற தாளம் [79 அட்சர காலம்]
9.  ஓர்மம் - மனத்திடம் 
10. மனோமயமாமணி - அணிபவர் மனநிலைக்குத் தக்கபடி நிறம் மாறும் கல் 
11. மா எந்தை - மாந்தை திருக்கேதீஸ்வரம் 
12. தட்டம் - நச்சுப்பல்
13. சிவாம்சம் - சிவனைப்போன்ற 
14. விஞ்சிய - (அதைவிட) மிகக்கூடிய 

Thursday, 28 March 2013

அடிசில் 50

நண்டுவறை

                                  - நீரா -
தேவையான பொருட்கள்:
சிறிதாக வெட்டிய நண்டு (crabsticks) - 4 கப் 
தேங்காய்ப்பூ - 1 மே.கரண்டி 
மிளகாய்த்தூள் - ½ தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ½ கப்   
சிறிதாக வெட்டிய மிளகாய் -  3
இஞ்சி, உள்ளி அரைத்த விழுது - 1 தே.கரண்டி 
கடுகு - ½ தே.கரண்டி
சின்னச்சீரகம் - ½ தே.கரண்டி
எண்ணெய் - 1 மே.கரண்டி 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1.  சிறிதாக வெட்டிய நண்டுச்சதைத் துண்டுகளை உதிர்த்திக்கொள்க.
2.  அதில் தேங்காய்ப்பூ, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து கொள்க.
3. வாயகன்ற பாத்திரத்தை எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, சீரகம் போட்டு கடுகு வெடித்ததும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, உள்ளி அரைத்த விழுது, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இட்டு பொன்னிறமாகத் தாளிக்கவும்.
4. அதற்குள் பிசைந்து வைத்துள்ள நண்டுக்கலவையை போட்டு கிளறி, நீர் இல்லாது வெந்ததும் இறக்கவும்.

Wednesday, 27 March 2013

பறந்த பாக்குவெட்டி

யாராவது இறகு முளைத்து பறந்த பாக்குவெட்டியைக் கண்டீர்களா!

தமிழர்கள் மங்கலப்பொருளாக கருதுவதில் பாக்கும் ஒன்று. பாக்கை வெற்றிலையோடு சேர்த்து உண்பார்கள். இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவையுணவு உண்ணும் எம்மில் பலருக்கு, துவர்ப்பு சுவை எப்படி இருக்கும் என்பது தெரியாது. கொஞ்சம் சீவல் பாக்கை எடுத்து மென்று பாருங்கள். என்ன சுவையை நீங்கள் உணர்கிறீர்களோ அதுவே துவர்ப்புச் சுவையாகும். அதாவது பாக்கின் சுவை எதுவோ அதுவே துவர்ப்புச் சுவை. பாக்கை கத்தியால் வெட்டமுடியாது. பாக்கை வெட்டுவதற்கு பாக்குவெட்டியைப் பயன்படுத்துவார்கள். 

தமிழர் வீடுகளில் எல்லாம் பாக்குவெட்டி இருக்கும். பாக்குவெட்டியை இரும்பு, வெள்ளி, தங்கம் என அவரவர் வசதிப்படி வாங்கி வைத்திருப்பர். இராமச்சந்திர கவிராயர் என்ற தமிழ்க்கவிஞர் வீட்டிலும் ஒரு வெள்ளி பாக்குவெட்டி இருந்தது. அப்பாக்குவெட்டி ஒரு நாள் காணாமல் போய்விட்டது. அதைத் தேடித் தேடிக் களைத்துப் போனார். அப்பாக்குவெட்டி தனக்கு எப்படி எல்லாம் உதவியது என்பதை இராமச்சந்திர கவிராயர் ஒன்றொன்றாக நினைத்துப்பார்த்தார். அவரது கவிதை நெஞ்சில் கவிதை பிறந்தது. ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்தார்

“விறகு தறிக்க கறி நறுக்க வெண்சோற்று உப்புக்கு அடகு வைக்கப்
பிறகு பிளவுகிடைத்ததென்றால் நாலாறாகப் பிளந்து கொள்ளப்  
பறகு பறகென்று சொறிய பதமாய் இருந்த பாக்குவெட்டி
இறகு முளைத்து பறந்ததுண்டேல் எடுத்தீராயின் குடுப்பீரே”

என எழுதி அவரது வீட்டு திண்ணைவாசலில் தொங்கவிட்டார். தெருவால் போவோரும் வருவோரும் அக்கவிதையைப் படித்து சுவைத்து சிரித்து மகிழ்ந்தனர். அவருக்கு அந்த வெள்ளிப் பாக்குவெட்டி கிடைத்ததோ இல்லையோ எமக்கு ஒரு நல்ல கவிதை கிடைத்துள்ளது. 

‘வீட்டில்சமைப்பதற்கு வேண்டிய விறகைத் தறிக்கவும், சமைக்கத் தேவையான காய்கறிகளை நறுக்கவும், சோற்றுக்குப்போட உப்பு வாங்க காசு இல்லாத நேரம், நகை அடகுவைக்கும் கடையில் அடகு வைக்கவும், கொட்டப்பாக்கு [பிளவு] கிடைத்தால் நாலாறு துண்டுகளாக பிளந்து கொள்ளவும், முதுகு கடித்தால் பறகு பறகென்று (பாக்கு- வெட்டிக் காம்பால்) சொறியவும் உதவியாய் [பதமாய்] இருந்த பாக்குவெட்டி, திடீரென்று இறகு முளைத்து பறந்து போயிருந்தால் அதை எடுத்தீர்கள் ஆனால் தாருங்களேன்’ என்றுபாடியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 26 March 2013

நன்னகர் துலங்க வளர் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
தன்கை வருந்தியே முயல்கின்ற வாக்கம்
          தான்பயன் பெறுமுன்னரே
தயவின்றி யிரவினிற் றுயில்விழித்தே திருடி
          தம்வயிறு கழுவு கயவர்
பொன்பொருள் பறித்துமே போகங்கள் செய்புலையர்
          போக்கிலாச் சண்டாளர்கள்
போகவிட்டே புறங் கூறித்  திரிந்திடும்
          புற்றுநோய் வாயர்களையும்
இன்பந்தரும் பெரிய கனவான்கள் போலவே
          இளித்துவாய் பகல்கழித்து
ஏழைகள் தேனியெனத் தேடு செல்வத்தை
          எத்திப்பிடுங்கும் எத்தர் 
துன்பந் துடைக்கவோ வடிவேல் பிடித்தனை
          தூக்கியழி வேலினாலே
துட்டநிக் கிரகமருள் கிளிநொச்சி நன்னகர்
          துலங்க வளர் கந்தவேளே!

Monday, 25 March 2013

எம்முடன் அழியாது நிலைத்திருப்பது எது?

பக்திச்சிமிழ் - 50
இந்த உலகத்தையும் அதில் நிறைந்து இருக்கும் உலகப் பொருட்கள் யாவற்றையும் உண்மை என நாம் நம்புகிறோம். எமது சிறுவயதில் ஆசை ஆசையாக அழுது வாங்கிய எத்தனையோ பொருட்கள் உண்மையானவையல்ல என்பதை வயது வந்ததும் அறிந்து கொள்கிறோம். அது போல் அவரவர் மனவளர்ச்சிக்கு தக்கபடி உண்மையல்லாதவற்றை உற்றுணர முயன்றோர் பலராவர். அத்தகையோர் தாம் கண்ட அநுபவ உண்மையை எமக்காகத் தந்து சென்றிருக்கிறார்கள்.

என்றென்றும் அழியாது நிலைத்து இருக்கும் பொருள் எது என்பதை மனிதராகிய நாம் உணர்வதில்லை. 
“பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு”                               -(குறள்: 36: 1) 

‘உண்மையாக நிலைத்து இருக்காத பொருட்களை (பொருளல்லவற்றை), உண்மையானவை (மெய்பொருள்) என்று நம்பும் (உணரும்) மயக்கத்தால் (மருளால்) நாம் துன்பம் அடைகிறோம்’ என்று திருவள்ளுவர் மிகச்சுருக்கமாக சொல்கிறார்.

அழியும் பொருட்கள் எவை? என்பதை அறிந்தால் தான் அழியாப்பொருட்கள் எவை என்பதையோ! எது என்பதையோ! அறியமுடியும். கம்பர் தாம் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் அழிவன எவை? அழியாதது எது? என தான் அறிந்தை சொல்லிச் சென்றுள்ளார்.

வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளண்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே!
                                                      - சரஸ்வதி அந்தாதி - 26

‘சேர்த்து வைக்கும் பொருட்களும், இல்வாழ்க்கையால் வரும் பொருட்களூம் மற்ற எல்லாவிதமான உலகப்பொருட்களும் பொய்யாய் அழிந்து போகும் பொருளேயன்றி என்றும் நிலத்து இருக்கும் பொருளல்ல. பூவுலகில் மெய்யான பொருளாயும், அழியாத பொருளாயும், மேன்மையான பொருளாயும், எம்மை உய்விக்கும் பொருளாயும் இருப்பது கலைமகளின் உரைப்பொருளே’ என்று கம்பர் கலைமகளின் பெருமை கூறுகிறார். கம்பரின் முடிவின் படி நாம் அழியும் வரை எம்முடன்ட என்றும் அழியாதிருப்பது கல்வியே ஆகும்.
இனிதே,
தமிழரசி.

Sunday, 24 March 2013

வாழி நீ! அம்மா!கட்டிய கணவனும் கைவிட்டு ஏகினும்
பெற்றிட்ட மைந்தரும் பெருமையில் மறக்கினும்
சுற்றிய சுற்றமும் சுமையென ஒதுக்கினும் 
பெட்டியும் கட்டிலும் பெரும்பொருள் யாவும்
எட்டியும் பாரா எட்டடி நிலமிசை எழு
கொட்டிலே ஆனாலும் குடிசையே ஆனாலும்
கற்றிட்ட வித்தையால் கைவருந்தி உழைத்திடு
பெற்றியைப் பெற்றாய் வாழி நீ! அம்மா!
                                                                                  - சிட்டு எழுதும் சீட்டு 55

Saturday, 23 March 2013

ஆசைக்கவிதைகள் - 58எதால மச்சி நாவரவோ!

மச்சான்: சுற்றிவர அக்கு வேலி
                         சூழவர அடப்ப வேலி
               எங்கும் ஒரே வேலி
                         எதால மச்சி நா(ன்) வரவோ!

மச்சாள்: அக்குவேலி மேல படங்கிட்டு
                         அடப்பவேலி கீழ கிடங்கிட்டு
               பக்குவமாய் வாரும் மச்சினரே!
                         நல்லபாம்பிருக்கு வாசலிலே!

மச்சான்: நல்லபாம்பு படமெடுத்தா  வசம்பு                         
                         வச்சிருக்கே(ன்) மச்சியரே!
               நட்டநடு சாமத்திலே தூங்காது                        
                         காத்திருப்பா(ய்) ஊசலிலே! 
                                       - நாட்டுப்பாடல் (கிடாப்பிடிச்ச குளம்)
                                                     (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
குறிப்பு:
வசம்பின் மணத்திற்கு பாம்புகள் கிட்ட வருவதில்லை. வசம்பின் மணத்திற்கு பாம்பு கிட்ட வராது என்பதை வன்னி மக்கள் அறிந்திருந்தனர். 

சொல்விளக்கம்:
அக்குவேலி - முள்வேலி
அடப்பவேலி - கிடுகால் மறைத்து அடைத்த வேலி
படங்கு - சாக்கால் ஆனது
ஊசல் - ஊஞ்சல் 

Friday, 22 March 2013

குறள் அமுது - (59)


குறள்:
“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் 
யாதுஒன்றும் கண்பாடு அரிது”                             - 1049

பொருள்:
எரியும் நெருப்பினுள் கிடந்து தூங்க முடியும். ஆனால் வறுமைக்குள் எந்தவகையாலும் தூங்குதல் அரிதாகும்.

விளக்கம்:
ஔவையார் ‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்றார்.  ஆனால் திருவள்ளுவரின் நல்குரவு அதாவது வறுமை எனும் அதிகாரம் இளமை என்ன? முதுமை என்ன? எக்காலத்திலும் வறுமை கொடிதே என்கின்றது. காரணம் வறுமை என்பது ஒருசிறு துன்பமல்ல. பலவகைப்பட்ட   துன்பங்களின் ஒட்டு மொத்த சேர்க்கையாகும். அடுத்து அடுத்து வரும் பல துன்பங்களால் நிரப்பப் படுவதால் வறுமைக்கு நிரப்பு என்ற பெயரும் தமிழில் உண்டு. நித்திரை கொள்வதை துஞ்சல் என்றும் கண்பாடு என்றும் அழைப்பர்.

வேள்வித்தீ போல் கனன்று நெருப்பு எரிந்தாலும் அந்நெருப்பினுள் நிம்மதியாகப் படுத்து தூங்க முடியுமாம். ஆனால் அடுக்கடுக்காக வந்த பல துன்பங்களால் நிரம்பி வழிகின்ற வறுமைக்குள் ஒருபொழுதுகூட கண்மூடித்தூங்குவது மிக அரியசெயலாகும். வன்னிப்போரின் போது நெருப்புக் குண்டுகள் இடையேயும் அவற்றைவிடக் கொடிய கொத்துக் குண்டுகளிடையேயும் தூங்கி எழுந்த நம் மக்கள் இன்று தூக்கம் இழந்து துடிப்பது ஏன்? 

வன்னிப்போர் நடந்த பின்னர் நாம் அறியாத எத்தனையோ விதவிதமான புதுப்புதுத் துன்பங்கள் அன்றாடம் அவர்களை நாடி வந்து சேர்கின்றன. எல்லா வளமும் நிறைந்து இருந்த மக்களிடம் இன்று நிற்க நிழல் இல்லை, குடிக்க நீரில்லை, படிக்க பள்ளி இல்லை, பல்கலைக்கழகம் என்ன, எங்கும் பேசும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வாழும் வறுமையெனும் நிரப்பினுள் எப்படித் தூங்க முடியும்? 

ஈழத்தில் வாழும் நம்மவர்களின் நிலையில் நின்றே திருவள்ளுவரும் ‘நெருப்பில் படுத்து உறங்கினாலும் உறங்க முடியும், வறுமைத் துன்பமாகிய நிரப்பினுள் எந்தவகையிலும் கண்மூடித் தூங்க முடியவில்லையே” எனத் தவிக்கும் குறள் இது.

Thursday, 21 March 2013

சங்ககாலத் தாய்மார் - பகுதி 2

காவற்பெண்டு என்பவர் சங்ககாலத்தில் வாழ்ந்த பெண் புலவர்களில் ஒருவர். அவருக்கு ஒரே ஒரு மகன். அவரின் வீட்டிற்கு வந்த அயல் வீட்டுப் பெண்ணொருத்தி அங்கிருந்த தூணைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நின்று ‘உன் மகன் எங்கே இருக்கிறான்?’ எனக்கேட்டாள். அதற்கு
“சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!”              - (புறம்: 86)

என் சிறுவீட்டின் அழகிய தூணைப் பற்றிப்பிடித்து நின்று ‘உன்மகன் எங்கே உள்ளான்’ என்று கேட்கிறாய், என்மகன் எங்கே இருக்கிறான் என்பதை அறியேன். புலி கிடந்து சென்ற கற்குகை போல, அவனைப்பெற்ற வயிறு இதோ இருக்கிறது. அவன் போர்க் களத்திலே தான் தோன்றுவான்' எனக் காவற்பெண்டு  சொல்கிறார். மகனின் வீரத்தில் மட்டுமல்ல, தான் தாயாக வளர்த்த வளர்ப்பில் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் அந்தத் தாயால் இப்படி பேசியிருக்கமுடியும்?  

இரண்டாயிர வருடங்களுக்கு மேற்பட்ட பழக்கமாக தமிழர்களிடம் இன்றும் இருப்பது, அடுத்தவர்களைப் பற்றி வம்பு பேசுவதாகும். அப்படி வம்பு பேசுவதில் பெண்களே முன்னிற்கின்றனர். அதில் மட்டும் சங்ககாலத்திற்கும் தற்காலத்திற்கும் எதுவித மாற்றமும் இல்லை. சங்ககாலத்தில் ஒரு கன்னிப்பெண்ணைப் பற்றி ஊரார் வம்பு பேசினர். அதனைக் கேள்விப்பட்டாள் தாய். எடுத்தாள் சிறு தடி. தடி வளைய வளைய போட்டாள் மகளுக்கு அடி. ஊராரின் வம்பால் தாயிடம் அடிவாங்கிய மகள் வீட்டில்  நடந்ததுதை அவளின் தோழிக்கு சொன்னதை நற்றிணை காட்டுகிறது.
“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறுகோல் வலத்தனள் அன்னை அலைப்ப
அலைந்தனன் வாழி! தோழி!”                                      - (நற்றிணை: 149)

நம்மூர் தெருவில் சிலரும் பலருமாகச் சேர்ந்து நின்று கடைக்கண்ணால் பார்த்து, ஆ! அப்படியா? என்று மூக்கு நுனியை சுட்டுவிரலால் தொட்டு, ஆச்சரியப்பட்டு, என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லித் தூற்றியதை அறிந்த என் தாய் (அன்னை), சிறுதடியால் அடித்தாள். அடி தாங்கமுடியாமல் நான் துடித்தேன்’ என தோழிக்குக்ச் சொல்கிறாள். 

இந்த தாய்போல் இன்னொருதாயும் மகளை அடித்து விட்டாள். பின்னர் தான் செய்த தவறுக்கு வருந்தி என்ன செய்யலாம் எனச்சிந்திக்கிறாள். அன்னி என்பவர் திதியனின் காவல் மரமான புன்னை மரத்தை வெட்டியது அந்தத தாய்க்கு ஞாபகம் வருகிறது. வெட்டப்பட்ட புன்னைமரம் எப்படியெல்லாம் துடி துடித்திருக்கும்? அப்படித்தானே என் மகளும் துடித்திருப்பாள், என தன் கைக்கு தானே தண்டனை வழங்கிக் கொள்வதை அகநானூறு (145) படம் பிடித்து வைத்துள்ளது.

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே”
என அரசுக்கும் உலகுக்கும் தத்தம் கடமைகளை எடுத்துகூறிய பொன்முடியாரின் மகன் போர்புரிந்து அடிபட்டு வீழ்ந்து கிடக்கின்றான். பொன்முடியார், போர்க்களத்திற்குச் சென்று மகனைப் பார்க்கின்றார். அவன் சிறுவனாக இருந்த காலத்தில் ‘பாலை கிண்ணத்தில் ஏந்தியபடி, அவனைப்பிடித்து பாலைக்குடி என ஊட்டவும் குடியாது முரண்டு பிடித்தான். கோபப்பட்டவள் போல் சிறுதடியை எடுத்து ஓங்க பயந்து நடுநடுங்கி பாலைக்குடித்தான். ஆனால் இன்றோ யானைகளைக் கொன்றதோடு, மார்பில் அடிபட்டு கேடயத்தின் மீது வீழ்ந்து கிடக்கின்றான். அவனை தூக்கி எடுத்து ‘ஐயோ! மார்பில் அம்பு தைத்துள்ளதே!’ என வருந்தினேன். இளந்தாடியை உடைய அவனோ ‘அதனை யான் அறியேனே’ என்றான். ஏனெனில் முன்பு பெரும்போர்புரிந்து இறந்த மாவீரனின் மகனல்லவா அவன்,” என்று மகனைப் பார்த்துக் கலங்கிப் பெருமிதம் கொள்ளும் மறக்குலத் தாயாக பொன்முடியார் நிமிர்ந்து நிற்கிறார். (புறம்: 310).

வீதியால் போகும் அழகான ஆடவர்களை மகள்மார் பார்க்கக் கூடாது என கதவை மூடிய தாய்மாரையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.

“தாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலா அங்கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு”                                             - (முத்தொள்ளாயிரம்: )

சேர அரசனான கோதை என்பவன், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்து குதிரைகள் பூட்டிய தேரில் வருவதை கன்னிப்பெண்கள் பார்க்காதிருக்க தாய்மார் வீதிக்கதவை அடைக்கின்றனர். மகளிரோ திறக்கின்றனர். இப்படி இவர்கள் மாறி மாறிச் செய்ததால் வீதிக்கதவின் குமிழே தேய்ந்ததாம் என்கிறது முத்தொள்ளாயிரம்.

இப்படியெல்லாம் பொத்திப்பொத்தி வளர்த்த கன்னியரும் காளையரும் காதலில் களித்து ஒன்றுபட்டு ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு சென்றனர். அப்போது சங்ககாலத் தாய்மார் தவித்த தவிப்பைப் பார்ப்போமா? 

சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி
ஓரை ஆயமொடு பந்துசிறிது எறியினும்
‘வாராயோ!’ என்று ஏத்தி.........
............................................
என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்
நுந்தை பாடும் உண் என்று  ஊட்டிப்
பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான்
நலம்புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறனிலாளனோடு இறந்தனள் இனிஎன
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்,
......................................................
.......................  நீர்இல் நீள்இடை
மடத்தகை மெலியச் சாஅய்
நடக்கும் கொல், என நோவல் யானே”                    (அகம்: 219)
   
“செல்வம் கொழிக்கும் பெரிய வீட்டிலே காற்சிலம்பு ஒலிக்க நடந்து திரிந்தவள். அவளது தோழிமாருடன் சிறிது நேரம் பந்துவிளையாடினாலும் களைத்திருப்பாளே என எண்ணி, கிண்ணத்தில் உள்ள பாலை ‘எனக்காக இப்ப உண்டாய், உன் தந்தைக்காகவும் உண்’ என ஊட்டுவேன். இப்படி பிறந்த நேரம் முதல் பற்பல சிறப்புகள் செய்து, அழகெலாம் ஒன்றுசேர்ந்த என் மகளைப் பேணி வளர்த்தேன். பொன் நகைகள் அணிந்த என் இளய மகளோ, அறன் இல்லாத ஒருவனுடன் வீட்டைவிட்டு போய்விட்டாள் அதற்காகக் கூட நான் வருந்தவில்லை. செந்நாய்கள் மானைப் பிடித்துண்ணும் நீர் இல்லா நீண்டநெடு வழியில், தன் இளமை அழகு போகுமாறு மெலிந்து, உடல்வருந்த நடப்பாள் அல்லவா? என வருந்துகிறேன்” என்று ஒரு தாய் புலம்புவதை கயமனார் எனும் சங்ககாலப்புலவர் பாடியுள்ளார்.

மகள் ஒருத்தி தன் காதலனுடன் வீட்டிற்குத் தெரியாமல் வேறுநாட்டிற்குப் போகிறாள் என்பதை அவளை வளர்த்த செவிலித்தாய் அறிந்தாள். அவர்களைத்தேடி அவர்கள் சென்ற வழியில் எதிரே வருவோரை எல்லாம் ‘ என் மகளைக் கண்டீர்களா?’ எனக் கேட்டுக் கேட்டுச் செல்கிறாள். பாலைவனமும் குறுக்கிடுகிறது. தாயன்பால் உந்தப்பட்டு தனியே பாலைவனத்தின் கற்களின் மேலும் முற்களின் மேலும் நடந்து செல்கிறாள். தன் எதிரே வந்த அந்தணர்களைப் பார்த்து, 
“................  கொளநடை யந்தணீர்! .........
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறிகாட்சியர்
அன்னார் இருவரைக் காணீரோ பெரும!”
“அந்தணர்களே! என்மகளும் இன்னொருத்தியின் மகனும் காதலால் கட்டுண்டு இருவருமாய் இவ்வழியே சென்றதைக் கண்டீர்களா?” எனக்கேட்கிறாள். அதற்கு அவர்கள் 
“ காணோம் அல்லேம் கண்டனம் கடத்திடை
ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர் நீர் போறீர்

பலவுறு நறுஞ்சாந்தம் படுபவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே”               - (கலி: பாலை: 8)

‘காணாமலில்லைக் கண்டோம். கொதிக்கின்ற பாலவனத்தின் வழியே ஆணழகனுடன் செல்லும் அழகிய நகைகளையணிந்த செழிப்பு மிக்கவளின் தாய்போலத் தெரிகிறீர். மலையில் வளரும் சந்தனம் பூசுபவர்க்கு அல்லாமல் மலைக்கு என்ன பயனைக் கொடுக்கும்? நினைத்துப் பார்த்தாள் உம்மகள் உமக்கும் அப்படித்தான். அழகிய வெண்முத்துக்கள் கடலினுள் விளைந்தாலும் அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராய்ந்து பார்த்தால் உம்மகள் உமக்கும் அப்படித்தான். ஏழு சுரங்களால் யாழினுள் பிறக்கின்ற இசையானது கேட்பவர்க்கு அல்லாமல் யாழுக்கு என்ன பயனைக் கொடுக்கும் எண்ணிப்பார்த்தால் உம்மகள் உமக்கும் அப்படியே. எனவே அவளுக்காக வருந்த வேண்டாம் என வழியெலாம் தேடி ஓடிய தாயின் தவிப்பைத் தணியச்செய்யும் பெருமக்களையும் கலித்தொகை காட்டுகிறது.

‘பால் குடிக்க மறுக்கும் சிறுமி. தேன்கலந்த பாலை பொற்கிண்ணத்தில் ஏந்தியவாறு, பூங்கொத்தால் பொய்யாக அடிப்பது போல் மிரட்டியபடி நற்றாய் செல்கிறாள். செவிலித்தாய் அவளைப்பிடிக்க ஓடுகிறாள். அவளோ இவர்கள் நுழைய முடியாத பூம்பந்தருக்குள் நுழந்து கொள்கிறாள். அப்படி பால் குடிக்காது பொற்சிலம்போடு ஆடித்திரிந்த சிறுமி, வளர்ந்து திருமணம் செய்து கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். இப்போதோ ஒருநேரம் விட்டு ஒருநேரம் உண்கிறாள். அவளது கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததைக் கண்டு, தந்தை கொடுத்த பொருளையும் வாங்காது, வாழுகின்ற பண்பை எங்கு கற்றாள்?’ என வியப்படைந்த செவிலித்தாய், அதனை நற்றாய்க்கு சொல்லும் காட்சியும் சங்க இலக்கியத்தில் இருக்கின்றது.

செவிலித்தாய் ஒருத்தி தான் வளர்த்த மகள், குழந்தை பெற்றிருப்பதை சென்று பார்த்துவந்து நற்றாய்க்கு 
“பாணர் முல்லை பாடச் சுடைழை
வாணுதல் அரிவை முல்லை மலைய
இனிது இருந்தனனே நெடுந்தகை
துனிதீர் கொள்கைத் தன்புதல்வனொடு பொலிந்தே”        - (ஐங்குறுநூறு - 408)
என எடுத்துச் சொல்வைதை ஐங்குறுநூறு ஒரு அழகிய காட்சியாக இப்பாடலில் சித்தரிக்கிறது.

அதாவது ‘பாணர்கள் முல்லைப்பண்ணை பாட, ஒளிவீசும் அணிகலன்களையும், ஒளிமிக்க நெற்றியையும் உடைய நம் மகள் முல்லை மலர்களைச் சூடி இருக்க, மேன்மைமிக்க அவளது தலைவன் அவளைப் பார்த்து மகிழ்ந்து, அழகாக மகனுடன் சேர்ந்து இனிது இருந்தான்’ என வளர்த்த தாய் பெற்றதாய்க்கு சொல்கிறாள்.

மகள் தாயாவதைப் பார்த்து மகிழ்ந்தவாறு தாய்த்தாய் நாடி இவ்வுலகம் சுழல்வதை சங்க இலக்கியங்கள் நிறையவே சொல்கின்றன. தாய் இல்லாவிடின் உலகேது? உலக உயிர்ப்பேது?
இனிதே,
தமிழரசி.