Wednesday, 27 February 2013

அடிசில் 47

முந்திரிப்பருப்பு பால்
- நீரா -

தேவையான பொருட்கள்:
முந்திரிப்பருப்பு  -  1 கப்
தண்ணீர்  -  2 கப்
சீனி  -  ½ கப்
வனிலா ஐஸ்கிறீம்  -  ½ கப் 
ஏலக்காய் பொடி  -  ½ சிட்டிகை

செய்முறை:
1.  முந்திரிப்பருப்பை 2 - 3 மணிநேரம் ஊறவிட்டு வடித்தெடுக்கவும்.
2.  ஊறவைத்த முந்திரிப்பருப்புடன் மேலே கொடுக்கப்பட்ட மற்றப்பொருட்களையும் லிக்குடைசரில் (liquidiser) போட்டு அடித்து எடுக்கவும்.

குறிப்பு:
1.  தண்ணீருக்குப் பதிலாக பாலும் விடலாம்.
2.  முந்திரிப்பருப்பை வறுத்தும் பாவிக்கலாம்.

Tuesday, 26 February 2013

திருத்தளி உவந்த வேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                                  - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்அருணகிரி தருதமிழ் தேனினில் மனமுருகி
           அடிமையை மறக்கலாமோ
ஔவைக்கு நாவலின் கனியுதவு சூட்டிலே
          அன்புநைந் துருகலுண்டோ
கருணையுள முருகனே அழகனே கந்தனே
           கலியுகக் கடவுளென்றும்
காங்கேயனே குகா வள்ளிகுஞ் சரிபாகா
            கார்த்திகை மைந்தனென்றும்
தருணமிகு சண்முகா சற்குரு சடாட்சரா
            தழலுருவ மானவேலா
தக்கோர் மனக்குகையில் மிக்கஒளி வீசியே
            தலைமுறைவிளங்க அருள்வாய்
திரணமென வருதீங்கு தீருநின் சேவடி
          சேவித்து வாழ்பவர்க்கே
செல்வர்மலி கிளிநொச்சி நன்னகர் மேவிவளர்
          திருத்தளி உவந்தவேளே!

Monday, 25 February 2013

மாசிமகமும் மாந்தை மயனும்பண்டைய மனிதன் இயற்கையிடம் இருந்து புதுப்புதுப் பாடங்களைக் கற்றான். இயற்கையின் நுட்பங்களை இன்றைய மனிதனாலும் முழுமையாக அறிய முடியவில்லை. எனவே அன்றைய மனிதரின் நிலை எப்படி இருந்திருக்கும்? எனினும் அவன் கற்ற பாடங்கள் இயற்கையைப் பற்றி அவனைச் சிந்திக்க வைத்தது. சிந்தனையின் ஆற்றலால் இயற்கையை ஆராயமுற்பட்டான். அதன் விளைவாக அவனைச்சூழ இயற்கை போட்டிருந்த புரியாத புதிரான முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினான். தன்னால் அவிழ்க்க முடியாது மாபெரும் புதிராய் தோன்றிய இயற்கையின் சீற்றத்தைக் கண்டு பயந்தான். தனது சக்தியின் ஆற்றலுக்குள் அடங்காத இயற்கையின் சக்தியைக்கண்டு பயந்த மனிதன் அதனை வழிபடத் தொடங்கினான்.

இயற்கையை வழிபட்ட போதும் இயற்கையைப் பற்றிய சிந்தனையை மனிதன் நிறுத்தவில்லை.  இடியாய், மின்னலாய், மழையாய், வெள்ளமாய், கடல் கோளாய், புயலாய், சூறாவளியாய், பனியாய், குளிராய், வெப்பமாய், நெருப்பாய், பூகம்பமாய், பாம்பாய், யானையாய், விலங்காய், பறவையாய் பூமியில் அவனைத்தாக்கிய இயற்கையின் எல்லாவடிவங்களையும் ஆராய்ந்தான். பூமியையும் தாண்டி மனிதனின் சிந்தனை விரிந்தது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அண்ட கோளங்கள் என அவன் பார்வையும் விரிந்தது.

அப்படி தமது சிந்தனையையும் பார்வையையும் விரித்த மனித இனத்தில் ஈழத்தமிழ் இனமும் ஒன்று. பண்டைத் தமிழரின் கலைகளின் பிறப்பிடமாக மட்டுமல்ல, மனிதநாகரீகத்தின் தொட்டிலாகவே ஈழம் விளங்கியது. ‘ஈழம்’ என்ற சொல்லே மனிதநாகரீக வளர்ச்சிக்கு அது எதனைக் கொடுத்தது என்பதைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது. அந்தச் சொல் எதனைக் குறிக்கின்றது என்பதே எம்மில் பலருக்குத்தெரியாது. அதிலும் எமது தமிழ்ச்சரித்திர ஆராச்சியாளர்களுக்கும் தெரியாதிருப்பது மிக மிக வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

ஈழம் என்றால் என்ன? ஈழம் என்பது பசும்பொன். அதாவது ஆற்று நீரிலிருந்து மணலை அரித்து எடுத்த பொன்னை ‘ஈழம்’ என பண்டைய தமிழர் அழைத்தனர். நீரிலிருந்து எடுக்கப்பட்ட பொருள் - ஈரத்துடன் குளிர்ச்சியும் அழகும் சேர்ந்து இருந்ததால் ‘ஈழம்‘ என்றனர். ஈரப்பொன்னுக்கு வழங்கிய பெயர் அதனைக் கொடுத்த நாட்டின் பெயராக நிலைபெற்று நிற்கிறது. பொன்னாவெளி, பொன்னாலை, பொன்பரப்பி, பொன்கொடுதீவு போன்ற இடங்கள் தமது பெயரால் ஈழத்தின் பழமையைச் சொல்லாமல் சொல்வதோடு, தொல்பொருள் ஆய்வில் எமது பண்டைய வரலாற்றுக் களஞ்சியமாகவும் இருக்கின்றன.

தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்களில் ஒன்றான ‘ழ’கரம் இச்சொல்லோடு சேர்ந்து இருந்து பொன்போல ஒளிவிடச்செய்தும் தமிழர் ‘ஈழம்’ என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்பதை அறியாது இருப்பது ஏன்? நீரிலிருந்து பொன் எடுக்க முடியுமா? என சிலர் நினைக்கலாம். இன்றும் ஈழத்தின் பாலியாறு, உப்பனளவக்கை போன்ற ஆற்றங் கரைகளில் மணலோடு மணலாக பொன் துகள்கள் இழுபட்டுச் செல்வதைக் காணலாம். நீயூசிலாந்தில் உள்ள ஆற்று நீரில் இருந்து பொன் அரித்து எடுப்பதையே மேலே உள்ள படம் காட்டுகிறது. 

பண்டைய தமிழர், தாம் கண்டுபிடித்த முதல் உலோகப்பொருளை பொன் என அழைத்தனர். அவர்கள் அன்று அழைத்த இரும் பொன் (இருண்டபொன்) இரும்பு எனவும், செம் பொன் (சிவந்த பொன்) செம்பு எனவும் மருவி இருப்பதைப் பாருங்கள். எனவே அவர்கள் பொன்னை வைத்தே மற்றைய உலோகங்களுக்கு பெயர் வைத்து அழைத்தனர் என்பதை இதனால் நாம் அறியலாம்.

சங்ககாலப் பெண்புலவரான நெட்டிமையார் புறநானூற்றில் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியை 
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியருக்கு ஈந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் ப்ஃறுளி மணலிலும் பலவே”          - (புறம்: 9: 9 - 11)
என வாழ்த்துகிறார்.

முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோரில் ஒருவனாகிய நெடியோன் என அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் செந்நீரிலிருந்து எடுத்த பசும்பொன்னை கூத்தர்களுக்குக் கொடுத்தான் என்ற செய்தியை இப்பாடல் சொல்கிறது. நெட்டிமையார் ‘செந்நீர்ப் பசும்பொன்’ என்று சொல்வது, ஈழப் பொன்னையே. அவர் “நன்னீர் ப்ஃறுளி மணலிலும் பலவே” என வாழ்த்துவதால் அவரது காலத்தில் பஃறுளி ஆறு ஓடிக்கொண்டிருந்தது என்பது தெளிவாகின்றது. ‘மயன் காலத்திற்குப் பின்னர் கடல் கோள்களுக்கு முன்பு முதற்சங்க காலத்தில் இன்றைய ஈழத்திற்கு மேற்கே, தமிழகத்திற்கு தெற்கே இருந்த நிலப்பரப்பை (குமரிக்கண்டத்தின் ஒரு பகுதியை) ஆண்ட நெடியோனால் வெட்டப்பட்டதே பஃறுளி ஆறு’ என மாந்தை மாண்மியமும் சொல்கிறது. நெடியோன் காலத்தில் தமிழர்கள் நன்னீரில் இருந்து ஈழப்பொன்னை எடுத்தார்கள் என்பதை நெட்டிமையாரின் பாடல் சொல்லாமல் சொல்கிறது.

பொன்னை மட்டும் அவர்கள் எடுக்கவில்லை, மண்ணிலிருந்து மாணிக்கத்தை, மரகதத்தை, வைரத்தை, வைடூரியத்தை எல்லாம் பிரித்து, மெருகூட்டி எடுத்தார்கள். அதைவிட செயற்கை மணிகளையும் செய்தார்கள். இன்றைய தொல்பொருள் ஆய்வுகள் பண்டைய தமிழர் செய்த பலநிற மணிகளை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஈழத்து மாந்தையில் பலநிற  மணிகளைச் செய்து  கி மு 3ம் நூற்றாண்டில் எகிப்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். செம்மஞ்சள்(Orange), நீலப்பச்சை(Bluish Green) நிறமணிகள் தமிழ்நாட்டின் அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் கிடைக்கவில்லை. அவை மாந்தையில் மட்டுமே கிடைக்கின்றன. எனவே மணிகளின் நிறத்தைக் கொண்டு, மாந்தையில் இருந்தே அவை எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதை தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்படி வாழ்ந்த  ஈழத்தமிழினத்தின் இன்றையநிலை மனதை உறுத்துகிறதே! 

நாம் தமிழர்கள், ஆனால் எங்கள் சரித்திரம் என்ன? என்பது எங்களுக்குத் தெரியாது - தெரியவும் கூடாது, என்று கங்கணம் கட்டி வாழும் கூட்டத்தார் ஒரு புறம் இருக்க, பழங்கதை பேசிப்பேசியே தமிழன் அழிந்தான் என்று புலம்புவோர் ஒரு புறம் இருக்க, ‘பழமை பேசி செழுமை தேடு” என்னும் முதுமொழிக்கு இணங்க ஆடலான் ஆகிய நடராஜனின் வரலாற்றின் வாயிலாக தமிழர் வாழ்வின் பொற்காலத்தை - தொன்மையை சிறிது எடுத்துக் காட்டப் போகிறேன்.

இதிலே முழுமையாகத் துலங்கப் போகிறவர்கள் ஈழத்தமிழர்களே. இன்று உற்றார் பெற்றார் இன்றி வீடற்று, நாடற்று மாற்றான் நாட்டு மண்ணிலே சிலப்பதிகாரம் கூறும் ‘புலம் பெயர் மாக்கள்’ போல் வாழும் நிலை வந்துவிட்ட போதும் ஈழத்தமிழரின் அறிவியல் (விஞ்ஞான), அருளியல் (சமய) தத்துவ விளக்கங்களை உலகுக்கு எடுத்தியம்ப இருப்பது இந்த ஆடலான் வடிவான நடராஜத் திருவுருவமே.

நடராஜ வடிவத்தை உலகுக்கு முதன் முதல் அறிமுகம் செய்தவன் மயன் என்னும் பழந்தமிழ் சிற்பி. இவன் ஓர் அரசன். ஈழத்தின் வடமேற்கே இருக்கும் மாந்தையை தலைநகராகக் கொண்டு உலகின் வடமேற்குப் பாகத்தை ஆண்ட தமிழ் அரசன். ஈழத்தை மயன் ஆண்டதை இதிகாசங்கள் மட்டுமல்ல விஸ்வபுராணம், மாந்தை மாண்மியம், மாந்தைப் பள்ளு, உலக சரித்திரம் (H G Wells), An Historical Political and Statistical Account of Ceylon (Charles Pridham) போன்ற நூல்களும் எடுத்துச் சொல்கின்றன. 

இவனின் வழித்தோன்றலான நல்லியக்கோடன் இலங்கையை ஆண்டதை
நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறு இன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்”      - (சிறுபாணாற்றுப்படை: 120 - 123)
என சங்கப்புலவரான நல்லூர் நத்தத்தனார் புகழ்கின்றார்.

மயனே தமிழர்களின் கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, வானியற் கலை, மரக்கல கலை போன்ற கலைகளின் முதலாசிரியன் ஆவான். அவன் இயற்றிய ‘மயமதம்’ எனப்படும் நூல் அறிஞர்களாலும் சிற்பிகளாலும் இன்றளவும் போற்றப்படுகின்றது. அவன் எக்கலையிலும் வல்லவன் என்பதை பழந்தமிழ்க் கலைநூல்கள் சொல்கின்றன.

இந்திரவிழாவில் அமைக்கப்பட்டிருந்த தோரண வாயில்களும், மண்டபங்களும் மயனால் சொல்லப்பட்ட விதிமுறைப்படி, மரபு வழுவாது கட்டப்பட்டதால் அறிஞர்களால் புகழ்ந்து பேசப்பட்டதென இளங்கோவடிகளும் மயனின் பெருமையைப் பேசுகிறார். அதனை  

“மயன் விதித்துக் கொடுத்த மரபின் இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்”  
                                                   - (சிலம்பு - 108 -109)
என அவர் சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளதால் அறியலாம்.

மயன் எவ்வாறு ஆடலான் வடிவத்தை உருவாக்கினான் என்பதை இன்றைய விஞ்ஞானக் கருத்துகளுக்கு அமையவே கூறுகிறான். சூரியனின் ஒளிக்கதிரிலுள்ள துகள், ஒரு கனபரிமான வடிவாக இருக்கிறது. அதனுள் மிளிர்வது ஒளியே. இவ்வொளிக்கட்டியை சிற்சபை அல்லது சிற்றம்பலம் என்றும் அதனுள்ளே இருக்கும் ஒளியை மூலம் (மூலப்பொருள்) என்றும் மயன் சொல்கின்றான்.

மூலப்பொருளினுள் இருக்கும் ஒளியானது ஒடுங்கி விரியும் தன்மையானது. அந்த மூலப் பொருள் இடம் இருந்து வலமாகச் சுழல்கின்றது. அச்சுழற்சியை அவன் காலம் என்கிறான். அக்கால ஓட்டம் ஒரே சீராக நடைபெறுகின்றது என்றும் அந்த சீரான ஓட்டத்தை சீலம் எனவும் சொல்கின்றான். அந்த சீரான ஓட்டமுடைய துகள்களின் சேர்க்கையால் பல உருவங்கள் - வடிவங்கள் - பொருட்கள் தோன்றுகின்றன எனவும் அவற்றை கோலம் என்றும் குறிப்பிடுகிறான். அந்தக் கோலங்களே ஞாலங்களை தோற்றுவிக்கின்றனவாம். 

விண்வெளியிலுள்ள நட்சத்திரங்களையும் கோளங்களையும் உண்டாக்கும் நெபுலாக்கள் கூட அண்டவெளியின் வளியும் தூசியும் சேர்ந்த திரட்சியே என்பது இன்றைய விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு சொல்லும் கருத்தாகும். வளியும் தூசியும் சேர்ந்த அத்திரட்சி, தன்னீர்ப்புச் சக்தியால் ஒன்றாக இணைந்து சுற்றி, உப்பி கோளமாக மாறும் என்கின்றனர். இத்தகைய கருத்தையே மயனும் ஞாலத்தின் தோற்றம் என்று இன்னொரு விதத்தில் சொல்கிறான்.அவன் கூறிய துகளை இன்று நாம் அணு என்று அழைக்கின்றோம். அதாவது அணுவிலுள்ள மூலம் கால ஓட்டத்தால் சீலமாகி, அச்சீலத்தால் கோலங்களை உருவாக்கி ஞாலத்தை ஏற்படுத்துகிறது எனவிளக்குகிறான். இத்தகைய விஞ்ஞானக் கருத்துக்களைக் கூறும் மயன் தொடர்ந்து, மூலம் (மூலப்பொருள்) தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒருவிசையை ஏற்படுத்தி காலத்தை (காலமாகடவுளை) உண்டாக்கி, அதனைக் கட்டுப்படுத்தி சீலமாக்கி அதிலிருந்து கோலங்களை உருவாக்கி ஞாலங்களைப் படைத்துக் கொள்கின்றது எனக்கூறி மூலப் பொருளே ஞாலமாக விரிகின்றது எனும் சைவசமயக் கொள்கையையும் எமக்குச் சொல்கின்றான்.

அணுவின் உள்ளிருந்து ஒடுங்கி விரியும் ஒளியின் சீரான நடுக்கத்தை ஆடல் என்று கூறி, அந்த ஆடலுக்கு மயன் கொடுத்த வடிவமே இன்று உலகம் போற்றும் ஆடலான் வடிவமாகும். அவன் விஞ்ஞான சமயக் கொள்கைகளை ஒன்று சேர்த்தே ஆடலான் திருவுருவை வடிவமைத்தான். நடராஜ வடிவத்தின் அறிவியல் தன்மையே இன்றைய மேற்குலக விஞ்ஞான அறிஞர்களையும் அதன் பக்கம் இழுத்திருக்கின்றது. அதனாலேயே European Center for Nuclear Research (CERN) வரை இரண்டு மீற்றர் உயரம் ஆன ஆடலான் திருவுருவம் சென்றிருக்கிறது. அதன் புகழ் அங்கிருந்து NASA வுக்கும் சென்றுவிட்டது.  

மயன் ஐந்தொழிலையே (மூலம், சீலம், காலம், கோலம், ஞாலம்) தனித்தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராஜத்திருவுரு என்கின்றான். மாந்தை மயன் இத்திருவுருவை மரகதக்கல்லில் செய்தான். நடராஜவடிவமும் பீடமும் சேர்த்து ஏழு அடி உயரமான மரகதக்கல்லால் ஆன அத்திருவடிவம் உத்தரகோசமங்கையில் இருக்கிறது. 

இந்த நடராஜ வடிவத்தின் தலையில் கங்கை இல்லை. கங்கைபற்றிய எண்ணமும் கருத்தும் தமிழரிடம் பரவமுன்னர் இந்த நடராஜ சிலை செய்யப்பட்டது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும். மரகத நடராஜரின் இடையில் புலித்தோலும் இல்லை. இடுப்பிலோ, கழுத்திலோ பாம்பும் இல்லை. இதுவே தொன்மையான நடராஜர் என்பதை இவையாவும் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன்  உத்தரகோசமங்கை இன்றும் 'ஆதிசிதம்பரம்' என்றே அழைக்கப்படுகின்றது. மாந்தைக்கு வடமேற்கே இருக்கும் உத்தரகோசமங்கை மயனின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக  இருந்ததை மாந்தை மாண்மியம் கூறுகிறது. எனவே எழில்மிகு நடராஜவடிவை ஒரு தமிழனான மயன் வடிவமைத்தான் என்றால் அவனின் காலத்திற்கு முன்னர் தமிழர் கலைகளும் கலாச்சாரமும் எவ்வளவு உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும் அதுவும் ஈழத்தில். இது ஆராயப்பட வேண்டிய விடயம். 

மயனால் சிற்றம்பலத்துள் (துகள் - அணு) நின்று ஒளிரும் மூலப்பொருளை நடம்புரியும் ஒளிநடராஜனாக பரம்பொருளாய் இவ்வுலகம் அறிகின்றது. ஈழத்தமிழ் மன்னன் ஆன மயன் உயிர்ப்பும், உணர்வும், இசையும், நடமும், காலமும் விளக்கும் நடராஜவடிவை ‘மாசிமகம்’ என்னும் முழுமதி நாளன்று இந்த உலகிற்கு உவந்தளித்தான். ஆதலால் தமிழர்கள் மாசிமகத்தை ஒரு பெருநாளாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். 

தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டின் பிறப்பிடமாக ஈழமும் ஈழத்தமிழரும் விழங்கினார்கள் என்பதற்கு ஈழத்தமிழ் அரசனான மயன் அமைத்த ஆடலான் சிலையும் நூல்களும் சான்று பகர்கின்றன. இந்த உண்மைகளை மயமதம், மாந்தை மாண்மியம் போன்ற நூல்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
இனிதே, 
தமிழரசி.

குறிப்பு:
கலசம் இதழில் 1994ல் ஆடலான் என்ற தலைப்பிலும், இலண்டன் சுடரொளியில் 2008ல் பண்டைத் தமிழர் கலைகள் என்ற தலைப்பிலும் நான் எழுதியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

Sunday, 24 February 2013

பக்திச்சிமிழ் - 47


பத்தியைக் கொடு!
- சாலினி -


தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள காலடி என்னும் இடத்தில் எட்டுவயதுச் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் வாழ்ந்த காலத்தில் இந்தியா முழுவதும் பல் வேறுபட்ட சமயங்களிடையே பகை ஏற்பட்டது. எங்கும் சமயத்தின் பேரால் சண்டைகள் நடந்தன. அச்சிறுவன் அவற்றைத்தீர்க்க  புறப்பட்டான். காலடியில் இருந்து புறப்பட்ட அச்சிறுவன் இந்தியாமுழுவதும் காலால் நடந்து சென்று பல்கிப் பெருகி இருந்த சமயங்களை சைவம், வைணவம், சாக்தம். கௌமாரம், சௌரம், காணபத்யம் என ஆறு சமயங்களாகப் பிரித்தான். அச்சிறுவனே ஆதிசங்கரர். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் காலத்தில் கூட இன்று உலகெல்லாம் பேசப்படும் இந்துசமயம் - இந்துமதம் போன்ற பெயர்கள்  இந்தியாவில் இருக்கவில்லை என்பதை ஆதிசங்கரர் வரலாறு காட்டுகிறது.

ஆதிசங்கரர் தாமியற்றிய சிவானந்த லஹரி என்ற நூலில், ‘பரம்பொருளே! உன்னிடம் நான் எதைக் கேட்பேன்? நான் பயன்படுத்தக்கூடிய பொருள் ஏதாவது உன்னிடம் இருக்கிறதா? எனக்கு உணவு தா எனக்கேட்கமுடியுமா? நீ உண்டதோ நஞ்சு. எனக்கு ஆபரணங்களைத் தா எனக்கேட்க முடியுமா? நீ அணிவதோ பாம்பு. நான் உடுப்பதற்கு உடையாவது கேட்க முடியுமா? நீ உடுப்பதோ யானைத்தோல். நான் பிரயாணம் செய்ய வாகனம் கேட்கமுடியுமா? உன்னுடம் இருப்பதோ கிழட்டு எருது. உன்னிடம் இருப்பவை யாவும் எனக்கு உதவாதவையே. ஆதலால் சம்போ மாகாதேவா! உன் பாதகமலங்கள் இருக்கின்றனவே, அவற்றை உணரும் பக்தியைக் கொடு’ எனக்கேட்கிறார். 
“அசனம் கரலம் பாணீகலாபோ
வசனம் சர்மச வாகனம் மஹோக்ஷ:
மம தாஸ்யஸி கிம் கிமஸ்தி சம்போ
தவ பாதாம்புஜ பக்தி மேவ தேஹி”      - (சிவானந்த லஹரி: 87)

குறிப்பு:
சிவனை வழிபடுவது - சைவம்
விஷ்ணுவை வழிபடுவது - வைணவம்
சக்தியை வழிபடுவது - சாக்தம்
முருகனை வழிபடுவது - கௌமாரம்
சூரியனை வழிபடுவது - சௌரம்
பிள்ளையாரை வழிபடுவது - காணபத்யம்.

Saturday, 23 February 2013

உண்டு களித்திரு இன்பமாய்!கள்ளம் கபடம் இல்லா
வெள்ள மனச் சிரிப்பு!
உள்ளக் களிப்ப தனை
மெல்லக் காட்டும் இரு
கண்ணில் மிளிரும் ஒளிர்ப்பு!
மண்ணும் கல்லும் புல்லும்
மற்றுள யாவும் இயற்கையொடு
பின்னிப் பிணைந்து வாழ்கையில்
மானுடர் மட்டும் மாறியே
மமதையில் அழிகிறார் இங்கென
எண்ணிச் சிரித்திடும் செல்வமே!
பண்டைய தமிழரின் பண்போடு
வெண் பொங்கல் பாலுடன்
உண்டு களித்திரு இன்பமாய்!
                                            - சிட்டு எழுதும் சீட்டு 52

Friday, 22 February 2013

ஆசைக்கவிதைகள் - 55

முத்தமிடத் தோணுதல்லோ!
மச்சான்: முத்துமுத்துப் பல்லழகு
                         பார்க்கயில மச்சாளே!
                முத்தமிடத் தோணுதல்லோ
                          என் மச்சாளே!

மச்சாள்: முத்தமிடத் தோணுதென்னா
                         என் மச்சானே!
               முத்துப்பல்ல கழற்றிடவா
                         என் மச்சானே!  

மச்சான்: சொக்குப் பொடி போடும்
                         என் மச்சாளே!
                பொக்குவாய் ஆனதெப்போ
                         என் மச்சாளே!

மச்சாள்: பொக்குவாய் ஆனதிப்போ
                         என் மச்சானே!
               பக்கலிலே வந்ததென்ன
                         என் மச்சானே!

மச்சான்: பக்கம்வந்து அணைத்திடவே
                          என் மச்சாளே!
               பக்கலிலே யாருமில்லை 
                          என் மச்சாளே! 
                                                     - நாட்டுப்பாடல் (இணுவில்)
                                                      - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

குறிப்பு: சொக்குப் பொடி - மயங்கவைக்கும் பொடி/மயக்கும் பொடி

Thursday, 21 February 2013

குறள் அமுது - (56)


குறள்:
“கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை”                                         - 765

பொருள்:
எமனே சினந்து எதிர்த்து வந்தாலும், கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றலே படையாகும்.

விளக்கம்:
கூற்று - கூற்றுவன் - யமன். உடன்று என்றால் தீராக்கோபம். எங்கே போர்கள் இடம் பெறுகின்றனவோ, அங்கெல்லாம் கூற்றுவனின் தீராக்கோபம் கொப்பளிக்கும்.  உயிர்கள் குற்றுயிராய், குலை உயிராய், இரத்த ஆற்றில் மிதக்கும். ஊறுகின்ற கிணற்றிலும் உதிரம் ஊறும். ஓடுகின்ற நதியிலும் உதிரம் ஓடும். கண்பிதுங்கி கைகால் சிதறி பாலகரும் பாவையரும் பரிதவிக்க பாலும் கிணற்றில் தூக்கி எறியப்படுவர். உடல் துண்டிக்கப்பட்ட தலை இன்னோர் உடலின் மேல் இருந்து தன் உடல் ஆடி அசைந்து வீழ்வதைப் பார்க்கும். இது போர்களம் எங்கும் காலம் காலமாக நடைபெறும் காட்சியாகும். 

அதுவே நம் கண்முன்னால் நம்மவர்க்கு, நம் இனத்திற்கு, நம் தேசத்திற்கு, நடந்த போது கூற்றுவனையே கூரறுக்க மானமுள்ளவர் மனம் கொதிக்கவில்லையா? அந்தக் கொதிப்பு உண்டாக எது காரணமோ அதுவே கூற்று உடன்று மேல்வந்த நிலை. கூற்று உடன்று மேல் வந்த போது கொத்துக் குண்டுகளால் பல்லாயிரக்கணக்கான நம்மவர் உடல்கள் விழுந்து வன்னியை மயானபூமி ஆக்கிக் கொண்டிருந்தன. அதனை இங்கே தொலைக்காட்சியில் பார்த்து துடிதுடித்து அழுது உண்ணாது உறங்காது ஏங்கித் தவித்து உலகநாட்டின் வீதிகளிலே  நீதிகேட்டு நின்றதை மறந்திருக்க மாட்டீர்கள்.

வந்தோரை வாழவைத்த வன்னிமண், குருதிபடிந்த வறள்நிலமாய் இடுகாடாய் மாறுவதைப் பார்த்து, இனமானம் பெரிதென இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கூடி இலண்டன் வீதியில் நடை போட்ட செயலே கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல். அந்த ஆற்றல் ஈழத்தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல உலகத் தமிழ் இனத்துக்கும் காலங்காலமாக இருக்கிறது. நாம் போர்வாள் ஏந்தத் தேவையில்லை அறிவு எனும் கூர்வாள் ஏந்தினாலே தோதும். கூடி எதிர் நிற்கும் ஆற்றலாகிய படையும் எம்மிடம் இருப்பதை திருவள்ளுவரே எமக்குக் காட்டித்தந்துள்ளார். 

படை என்றால் என்ன? எல்லோரும் கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல்(வீரம்) படை என்று கூறப்படும். கூற்றுவன் தீராக்கோபத்துடன் எம்மை எதிர்த்து வந்தாலும், நாமெல்லோரும் ஒற்றுமை என்னும் சங்கிலியால் கட்டுண்டு, கூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல் என்னும் படையைக் கொண்டு கூற்றுவனையே வெல்லலாம். ...... வெற்றி கொள்வோம்.   

Wednesday, 20 February 2013

மனைவியெனும் அருளமுதம் 1இன்றைய கர்நாடக சங்கீத இசைமேதைகளால் ‘சங்கீத பிதாமகர்’ [கர்நாடக இசையின் தந்தை]  எனப் புகழப்படுபவர் புரந்தரதாசர்.  இவர் 15ம் நூற்றாண்டில் இந்தியாவின் கன்னட மாநிலத்தில் இருந்த புரந்தடகட எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது தந்தை ஒரு வைரவியாபாரி. தந்தையின் தொழிலையே இவர் தொடர்ந்து நடாத்தி வந்தார். புரந்தரதாசர் செல்வத்தை மேலும் மேலும் சேர்த்ததால் ‘நவகோடி நாராயணன்’ என்ற பெயரும் பெற்றார். அவர் கோடீஸ்வரராய் இருந்தும் நகையடகு வியாபாரத்தில் சிறிதும் இரக்கம் இன்றி அதிகவட்டி வசூலித்து வந்தார். மகாகஞ்சன். 
இவரின் இக்குணக்கேடுகளைக் கண்ட அவரது மனைவி சரஸ்வதிபாய் மனம் நொந்து அழுதாள். சொல்லியும் பார்த்தாள். அவர் திருந்தவே இல்லை. பணம் பண்ணுவதே அவரின் குறிக்கோளாக இருந்தது. இதனால் அவள் அவ்வூர்க் கோயிலில் இருக்கும் பண்டரிநாதரே சரண் என வணங்கி வந்தாள். 

பிராமணர் ஒருவர் புரந்தரதாசரின் நகைக்கடைக்கு வந்து, மகனின் உபநயனத்திற்குக் காசு கேட்டார். அப்பிராமணரை “நாளைக்கு வா காசு தாரன்” எனக்கூறி பல நாட்கள் ஏமாற்றிவந்தார். அந்தப் பிராமணர் கடைசியில் புரந்தரதாசர் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சரஸ்வதிபாயிடம் காசு கேட்டார். அவள் தன் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள். அப்பிராமணர் அவ்வைரமூக்குத்தியை விற்பதற்கு புரந்தரதாசரிடமே சென்றார். அம்மூக்குத்தியை அடையாளம் கண்ட புரந்தரதாசர், பிராமணரை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டு தன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் “மூக்குத்தி எங்கே?” எனக்கேட்டார்.

அவர் கோபத்துடன் நிற்கும் நிலையைக் கண்டு பயந்த சரஸ்வதிபாய், விசத்தை எடுத்துக் குடிக்கப்போனாள். விசக்கோப்பையுள் மூக்குத்தி பளிச்சிட்டது. அவள் அம்மூக்குத்தியை எடுத்து புரந்தரதாசரிடம் கொடுத்தாள். அவர் திகைத்தார். “எப்படி இது வந்தது?” என்றார். “பண்டரிமநாதர் அருள்” என்றாள் அந்த அருள்மாது. சிறிது நேரத்தில் அம்மூக்குத்தியும் மறைந்தது. பூட்டிவைத்திருந்த பிராமணரைச் சென்று பார்த்தார். அப்பிராமணரும் மறைந்தார்.

இதனால் ‘பணம் பெருக்குவது வாழ்க்கை இல்லை’ என்னும் அறிவுத்தெளிவு பெற்ற புரந்தரதாசர், தன் மனைவி ஓர் அருளமுதம் என்பதை நன்கு உணர்ந்தார். மனைவியின் எண்ணப்படி தனது செல்வத்தை எல்லாம் எழை எளியவர்க்கு கொடுத்து மகிழ்ந்தார். அவர் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட கன்னட மொழிப்பாடல்களை இயற்றியுளார். அவர் இயற்றிய இராகமாலிகையில் அமைந்த ‘அனுகாலவு சிந்தெ’ என்னும் பாடலின் முதலாவது சரணத்தில்

“ஸதி இத்தகு சிந்தெ ஸதி யில்லது சிந்தெ
மதிஹீன ஸதியாதரு சிந்தெயு
பிருதிவி யொளகெ ஸ்திகடு செல்வெ யாதரெ
மதிமேரெ இல்லித மோஹத சிந்தெ”   

என ‘மனைவி இருந்தாலும் யோசனை. இல்லாவிடினும் யோசனை. மனைவி புத்தி ஈனமானவளானாலும் யோசனை. மனைவி உலகின் மிகப்பெரிய அழகியாக இருந்தாலும் அளவில்லாத யோசனை, எனக்கூறி எப்பொழுதும் மனிதனுக்கு யோசனை தான். ஶ்ரீரங்கநாதருடன் சேரும்வரையும் யோசனை தான். என்று மிக அழகாக மனித வாழ்க்கையை சித்தரிக்கிறார்.

ஒரு மாபெரும் இசைக்கலைஞரை - இன்றைய இசைஉலகின் தந்தையை உலகுக்கு உவந்தளித்த பெருமை புரந்தரதாசரின் ‘மனையெனும் அருளமுதமாம்’ சரஸ்வதிபாயையே சாரும்.

Tuesday, 19 February 2013

அடிசில் 46

கேரளத்து கோழிக்கறி

                                                    - நீரா -            தேவையான பொருட்கள்:
வெட்டிய கோழி - 500 கிராம்
வெட்டிய வெங்காயம்  -  2கப்
வெட்டிய தக்காளி  - ½ கப் 
பச்சைமிளகாய் - 2 
உள்ளிபல்  -  5
இஞ்சி  -  1” நீளத்துண்டு
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
தேங்காய்ப்பால்  - ½ கப்
கடுகு  - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்  - ½ தேக்கரண்டி
மிளகாய்தூள்  -  3 தேக்கரண்டி
மஞ்சள்தூள்  -  ½ தேக்கரண்டி
மசாலாத்தூள்  - ½ தேக்கரண்டி
மல்லித்தூள்  -  ½ தேக்கரண்டி
எண்ணெய்  -  1 மேசைக்கரண்டி
உப்பு  - தேவையான அளவு

செய்முறை:
1.  உள்ளியையும் இஞ்சியையும் அரைத்துக் கொள்க.
2. அரைத்த விழுதுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வெட்டிய கோழியுடன் கலந்து 30 நிமிடம் ஊறவக்கவும்.
3. அடிப்பக்கம் தடிப்பான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு போட்டு வெடிக்கும் போது பெருஞ்சீரகம், வெங்காயம் இட்டு தாளிக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமாக வரும்பொழுது வெட்டிய தக்களியையும், பச்சைமிளகாயையும் சேர்க்கவும்.
5.  தக்காளி வெந்து வரும்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள், மசாலாத்தூள் மூன்றையும் போட்டு கிளறி, ஊறவைத்த கோழித்துண்டுகளையும் சேர்த்து பிறட்டவும்.
6.  தூள்மணம் கொஞ்சம் குறைந்ததும் அரைக் கப் நீர் விட்டு வேகவிடவும்.
7.  நீர் வற்றிவரும் போது கறிவேப்பிலையைச் சேர்த்து, தேங்காப்பாலையும் விட்டு கொதிக்கவிட்டு, குழம்பு தடித்ததும் இறக்கவும்.