Thursday, 31 January 2013

மானுட வீரமா? விவேகமா?மனிதநேயம் என்னவென்று அறியாது
மனம்அது இருண்டு மனக்குருடான
மானிடரே! மானுடனெனும் மமதையில்
மரம்அதை வெட்டுதல் வீரமா? விவேகமா?

ஊரெங்கும் உள்ள மரங்களை வெட்டி
ஊர்குருவி தன்னோடு குஞ்சுகள் மாள
ஏறெடுத்தும் பாரா ஏதிலாரே! உங்கள்
ஏகபோக வாழ்க்கை வீரமா? விவேகமா?

ஆறறிவு படைத்தீர்! ஆற்றலும் கொண்டீர்!
ஆனந்த வாழ்வென்று சொல்லி நாளும்
பாரெங்கும் உள்ள பசுமையை அழித்து
பாழாக்குதல் உமது வீரமா? விவேகமா?

பாழான நிலத்தில் நீரற்றுப் போம்
பாழ்நிலம் தன்னில் நீர்அது தேடி
நிழல்அது தேடி நித்தமும் அலைந்து
நுடங்குதல் மானுட வீரமா? விவேகமா?  
                                                   - சிட்டு எழுதும் சீட்டு 49

Wednesday, 30 January 2013

ஆசைக்கவிதைகள் - 52

மறக்க மனம் நாடுதில்லை

அந்திவானம் மெல்ல சிவந்தது. அதைக் கண்ட இலுப்பக்கடவையில் வாழ்ந்த இளநங்கை மனமும் துள்ளல் நடை போட்டது.  மாலை நேரம் ஆகும் போது அவளது மச்சான் அங்கு வருவான் என்பது அவளுக்குத் தெரியும். அவன் வருவது அவளைப் பார்க்கவே என்பது ஊரே அறிந்த விடயம். ஆனால் அவளோ ஏதும் அறியாதவள் போல நடந்து கொள்வாள். மாலை நேரம் ஆனதும் அவள் தன்னை அலங்கரித்தாள்.  மெல்லச்சென்று கட்டிலில் சாய்ந்து இருந்தாள். மச்சான் வரும் சத்தம் கேட்டதும் நன்றாகத் தூங்குவது போல் கிடந்தாள். வந்தவன் அவள் அருகே வந்து பார்த்தான். அவள் தனக்காகவே, ஒரு திட்டதுடன் (சூசனம்) பொய்த்தூக்கம் கொள்கிறாள் என்பதை அவன் அறிந்து கொண்டான். அதனால் அவள் கேட்கட்டும் என்று சொல்கின்றான். 

மச்சான்: கண்டு உவக்கும் பூநிறத்தாள்
                     கமலப்புள்ளி மான்குலத்தாள்
               சுரும்பிரையும் பூமுலையாள் இப்ப 
                     சூசனத்தில் நித்திரை காண்

மச்சான்: தங்கக் குடமே
                     தளம்பாத பாற்குடமே
               மங்காத மாணிக்கமே
                     மறக்க மனம் நாடுதில்லை
                                      - நாட்டுப்பாடல் (இலுப்பைக்கடவை)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Tuesday, 29 January 2013

குறள் அமுது - (53)


குறள்:
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”                       - 202

பொருள்:
கொடிய செயல்கள் தீமைகளை உண்டாக்கி, பலவகையான கேடுகளைத் தருவதால் நெருப்புக்கு பயப்படுவதைவிட கொடிய செயல்கள் செய்யப் பயப்பட வேண்டும்.

விளக்கம்:
‘கொடிய செயல்களைச் செய்ய ஏன் பயப்பட வேண்டும்?’ என உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள். தீயசெயலால் துன்பம் வருகின்றது என்றோ, தீமை விளைகின்றது என்றோ உங்கள் மனம் சொல்லக்கூடும்.

நெருப்பு அது பற்றி எரிவதற்கு தகுந்த சூழல் மட்டும் கிடைத்து விட்டால் தொடர்ந்து எரித்து எல்லாவற்றையும் அழிக்கும். கெட்ட செயல்களும் வளவர்வதற்கு ஏற்ற சூழல் அமைந்துவிட்டால் அதனால் பாதிப்படைந்தோரை மட்டுமல்ல, செய்தோரையும் செய்யத்தூண்டியோரையும் அழிக்கும்.

“அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
என்பது பாரதியார் பாடல்.

பாரதியார் ஒரு சிறிய நெருப்புப் பொறியை எடுத்து மரப்பொந்தில் பத்திரமாக இருக்கட்டும் என்று வைத்தாராம். அது அக்காட்டையே அழித்துவிட்டதாம். நெருப்பில் சிறிய பெரிய நெருப்பு என்ற பேதம் இருக்கிறதா? இல்லையே. தீயசெயல்களிலும் பெரியவை சிறியவை என்ற பேதம் கிடையாது.

நெருப்பு எமக்குத் தேவையான உணவுகளை சமைக்கவும், குளிர் போக்கவும், வெளிச்சத்தை பெறவும் எனப்பலவகையிலும் உதவுகிறது. எனினும் அது எம்மைச் சுடுகிறது, எரிக்கிறது என்று அதனை பயன்படுத்தாமல் இருக்கிறோமா? இல்லையே. ஏனெனில் நெருப்பு எமக்கு பல நன்மைகளைச் செய்கிறது. ஆனால் தீய செயல்கள் அப்படிபட்டவை அல்ல. என்றோ அறியாப்பருவத்தில் செய்த தீய செயல்கூட, நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் வேறு வடிவமாக வந்து தாக்கும். அதனாலேயே தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார். 

நம் முன்னோர்கள் தாம் கண்ட அனுபவத்தால் தீயவை எவை, நல்லவை எவை என எமக்குப் பிரித்து எழுதி வைத்துள்ளார்கள். கொலை செய்தல், களவு எடுத்தல், பொய்சொல்லல், புறங்கூறல், மது அருந்துதல் போன்ற எத்தனையோ தீய செயல்களை பெரிய பட்டியலிட்டு எமக்காக வைத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றிலிருந்து விலகி வாழ்தல் நன்றாகும்.

நெருப்பில் எம்மை நாமே எரித்துக் கொள்வோமா? அந்த நெருப்புக்கு பயப்படும் நாம் அதைவிடக் கூடிய துன்பங்களை அள்ளித்தரும் கொடிய செயல்களுக்கு அதிகமாகப் பயப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர். 

Sunday, 27 January 2013

[1] ஈழத்து.....


“இதயதாகம்”
பளிங்கு செறிந்தன்ன பல்கதிர் இடை இடை
பால்முகந்தன்ன பசுவெண் நிலவு”     
                                        – வெள்ளைக்குடி நாகனார்
இயற்கையின் இனிய இன்பத்தை இதயம் இரசித்துக் கொண்டிருந்தது. இதய இரசனைக்கு காலமென்ன? நேரம் என்ன? கால, நேர, தூரம் என்ற எல்லைக் கோடுகள் அற்ற ஓர் அற்புத உலகம் அது. அந்த உலகில் வலம் வருபவர்களால் தான் புதுமைகள் படைக்கப்படுகின்றன. எந்தப் புதுமைப் படைப்புக்காக, இதயம் இயற்கையை இப்படி ஆழ்ந்து இரசிக்கின்றது என்ற எண்ணமே அற்ற நிலையில் மனம் இயற்கையோடு இணைந்து கிடந்தது.
வானமெங்கும் வெள்ளிமணிச் சிதறல்களாக நட்சத்திரங்கள் கண் சிமிட்டிச் சிரித்தன. எதைக்கண்டு இவை இப்படி ஆரவாரமாக கண் சிமிட்டிச் சிரிக்கின்றன? மேற்குத் திசையில் வான்நிலவு தங்கத் தகடாக மேகங்களின் ஊர்வலத் தினிடையே புகுந்து புகுந்து நட்சத் திரங்களின் பார்வைக்குத் தேவை யான பொன்ஒளியை அள்ளி வழங்கிக் கொண்டிருக்க நட்சத்திரங்களின் பார்வையோ உலகோருக்கு நாகரீகத்தைக் கற்றுக்கொடுக்கும் நாகர் நாட்டின் மேல் இருந்தது. நாகர் நாடு பெருவளநாட்டின் வடமேற்குத் திசை முழுவதும் பரவியிருந்தது.
சந்திரவர்ணக்கற்கள் ஒளிவீசும் நெடிது ஓங்கிய பெரியகோட்டை மதில். அதனை அடுத்து அடர்த்தியாக வானுற ஓங்கி வளர்ந்த பெரும் காடுகள். இக்காடுகளின் இடையே பச்சைமலை, பவளமலை எனத்தொடரும் மலைகளும், அவற்றிலிருந்து வீழும் அருவிகளும் அருவிகளிலிருந்து தவழ்ந்து ஓடும் ஆறுகளுமாக இயற்கை அங்கே கொஞ்சிவிளையாடிக் கொண்டிருந்தது. இயற்கைக்குப் பஞ்சமான இடங்களில் செயற்கை இயற்கையாகக் காட்சியளித்தது.
இயற்கையை செயற்கையால் படைக்க முடியும் என படைப்புக் கடவுளாகிய பிரமனுக்கே போட்டியாக ஒருவன் இருந்தான். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அறச்சாலைகள், ஆதுல சாலைகள், அங்காடிகள், பள்ளிகள், மன்றங்கள், சதுக்கங்கள், மலர்ச்சோலைகள், வாவிகள் யாவற்றிலுமே ஓவியங்களும், சிற்பங்களும் காட்சியளிக்க, அழகாகக்கட்டி பொன்னாலும், மணிகளாலும் இரவைப் பகலாக்கி உலக நாகரீகத்திற்கு முதல் வித்திட்டவனே அவன். அவனே விசுவகர்மா. சிற்பக்கலையின் தெய்வமாக வணங்கப்படும் விசுவகர்மாவால் வடிவமைக்கப்பட்டதே நாகர் நாடு.
அங்கே இயற்கையாக இருந்த குளங்களிலும், ஆறுகளிலும், அருவிகளிலும் செயற்கை மிருகங்களும் பறவைகளும் குளித்து, குடித்து நடித்தன. செயற்கைப் பொய்கைகளிலும், ஆறுகளிலும், அருவிகளிலும் இயற்கை மிருகங்களும், பறவைகளும் குளித்து, குடித்து களித்தன.
தெளிந்த நீரும், மண்ணும், மலையும், குளிர்நிழலைத் தரும் காடும் இயற்கை அரண்களாக இருந்து பாதுகாத்த நாகர் நாட்டை அமுதமாகிய மழையைத் தரும் மழை மேகங்கள் குடையாகக் கவிந்து நின்று விண்ணவர்களிடம் இருந்தும் காத்தன.
ஆதலால் எது இயற்கை? எது செயற்கை? எனப் பிரித்தறியவும், விசுவகர்மா எத்தகைய அற்புத சொர்க்கத்தை மாடமாளிகைகளுக்குள் அமைத்து வைத்திருக்கின்றான்? என்பதை உள்ளே புகுந்து பார்கவும் நட்சத்திரங்களாலும் முடியவில்லை. பார்ப்பவர்கள் தலைநகர் எது? புறநகர் எது? என அடையாளம் காணமுடியாது எல்லா நகரமுமே நாகர் நாகரீகத்திற்கு கட்டியம் கூறிக்கொண்டு இருந்தன. எனவே எல்லா வளமும் நிறைந்திருந்த நாகர்நாட்டின் அழகை முழுமையாக இரசிக்க இயலாமலும், நாகர்களின் தலைநகரை கண்டுபிடிக்க முடியாமலும் நட்சத்திரங்கள் திண்டாடி மருள மருள விழித்தன.
இப்படி நட்சத்திரங்கள் தலைநகர் எது? எனத் தடுமாறிக் கொண்டிருக்கும் போது நாகநகர மக்கள் இன்பக் கேளிக்கைகளில் ஆடிப்பாடி சுவைத்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். நகர் காவலரும், ஆபத்துதவிகளும், இரவுப்பணிபுரிவோரும் தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அகில உலகையே வியக்கவைக்கும் பல அற்புதங்கள் இந்த இரவிலிருந்து அரங்கேறப் போகின்றது என்பதை உணராமலே உலகப்பந்து மெல்லச் சுழன்றது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலத்து இயற்கையையும் ஒன்றாக இரசிக்கவே விசுவகர்மா தன் தலைநகரை அந்த இடத்தில் கட்டியிருந்தான். அங்கிருந்த கற்பகப் பூங்காவின் நடுவே பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட வசந்தமாளிகை ஒய்யாரமாக எழுந்து நின்றது. அதன் ஏழாவது மாடியின் சித்திரமண்டபத்து வசந்தமஞ்சத்தில் அமுத்தால் செய்த மின்னற் கீற்றென பட்டுப்பஞ்சணையில் அவள் சாய்ந்திருந்தாள்.
சாரளத்திற் பதித்திருந்த ஒளியுமிழ் கற்கள் அவளது இணையற்ற பேரழகை வெளிச்சமிட்டுக் காட்டின. அந்தப் பேரழகையும் விஞ்சி அவளது அகன்று விரிந்த கண்களிலும் மலர் முகத்திலும் அறிவின் பொலிவு தெரிந்தது. எதையோ சாதிக்கப் பிறந்தவள் என்பதை அவை சொல்லாமல் சொல்லின. சாரளத்தின் ஊடாக கோட்டை மதிலையும் தாண்டி வடமேற்குத் திசையில் அவள் பார்வை பதிந்திருந்தது. கடலில் பெரிய மரக்கலங்களும் நாவாய்களும் காட்சியளித்தன.
அவளது முன் நெற்றியில் சூடியிருந்த நாகசூடிகை  செம்மஞ்சள்நிற ஒளியைச் சிந்தியது. அவ்வொளியில் அவளது மனத்தின் உணர்வுகளை முகம் அறியத்தந்தது. அவள் கண்கள் இன்பத்தையும், மருட்சியையும் மாறி மாறிக்காட்டின.
“ஆகா! என்ன அற்புதம்! இதைத்தான் எதிர்பார்த்தேனா?” எனக்கூறியவள், திடீரென மஞ்சத்தின் மேல் ஏறிக்குதித்து “கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!” என்று ஆனந்தக் கூத்தாடினாள். இவ்வளவு நேரமும் அவளின் செய்கைகளை இரசித் தபடி அவளது தாய்மைப் பேரழகை ஓவியத்துள் அடக்க முயன்று கொண்டிருந்த மயன் தூரிகையையும் விட்டு விட்டு “இளமதி!” என ஓடோடிவந்து மனைவியை கைத்தாங்கலாகப் பிடித்து மஞ்சத்திலிருந்து இறக்கினான்.
அவனின் அன்புப் பிடியில் சிக்கிய இளமதியின் உடலிருந்த பேரானந்தத்தை மயன் உணர்ந்தான். அவன் கலைஞன் ஆதலால் அந்தக் கலைச்செல்வியின் உள்ளத்து உணர்வுகள் அவனையும் சென்று தாக்கியது.
மெல்ல அவளை நோக்கிக் குனிந்து, காதில் இரகசியமாக “இளமதி”! ” நீ கண்டுகொண்டது என்ன? நானும் அறிந்து கொள்ளலாமா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டான். மயனின் சுவாசக்காற்று இளமதியின் காதோர சுருண்ட முடிகளில் பட்டு அவளைக் கூச்சமூட்டியது. அதனால் அவள் இந்த உலகசூழுலுக்கு மெல்லத் திரும்பி இருந்தாள்.

“உங்களுக்குச் சொல்லாமலா?” சற்று யோசித்தவள், இங்கிருந்து காட்டுவது சரியல்ல, காட்டுகின்றேன். வாருங்கள்” என அவன் கையைப் பிடித்து இழுத்து அழைத்துச் சென்றாள். செம்பஞ்சுக் குழம்பு பூசிச்சிவந்த அவளது மென்பாதம் தாவித் தாவி படிகளில் ஏறுவதால் ஏற்பட்ட மாணிக்கச் சிலம் பொலி ஓர் இசையாய் தோன்றியது.

அதைக் கேட்டபடி, நாகநாட்டின் பேரரசனான என்னையே சிறுகுழந்தையைப் போல் இழுத்துச் செல்கின்றாளே, எனத் தன் மனைவியின் செயலை நினைத்து மயன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். இவள் நாகப் பேரரசின் அரசியாதலால் நானும் இவள் குழந்தை தானே என்ற முடிவுக்கு வந்தான். அதற்குள் அவர்கள் வசந்தமாளிகையின் நிலா முற்றத்திற்கு வந்திருந்தார்கள். இள மதியின் பார்வை சென்ற திசையில் மயனின் பார்வையும் சென்றது. “இளமதி!” உன்னை, இப்படிப் பரவசப்படுத்த நாகதிசையில் என்ன இருக்கின்றது?” என்று கேட்டான். அவள் தன் தளிர்க்கரங்களை நீட்டி ‘அதோ பாருங்கள்! அதோ பாருங்கள்! கடலலையின் மேலே அடுத்தடுத்து எழுந்து விழுவதைப் பாருங்கள் என் இதயதாகம் தீர்ந்தது” என்றாள். அவள் காட்டியதைப் பார்த்த மயன், அவளின் சொற்களைக் கேட்டு திடுக்கிட்டு, வியப்புடன்…
“இதயதாகமா?” என்றான்.”
“ஆம், என் இதயதாகமே” என்றாள் அவள் உறுதியாக…

தாகம் தீர்க்க வரும்…

Saturday, 26 January 2013

அடிசில் 43


கரட் அல்வா       
                              - நீரா -

தேவையான பொருட்கள்:
கரட் துருவல்  -  200 கிராம்
சீனி  -  ½ கப்
பால்  -  ½ கப்
சிறிதாக ஒடித்த முந்திரிப்பருப்பு  -  ¼ கப்
நெய்  -  1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி  -  1சிட்டிகை
உப்பு  -  ½ சிட்டிகை

 செய்முறை:
1.  பாலை நன்கு சூடாக்கிக் கொள்க.
2.  அரைவாசி நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
3.  அந்த நெய்யினுள் துருவிய கரட்டைப் போட்டு ஈரத்தன்மை நீங்கும்வரை வறுக்கவும்.
4.  அதனுள் சூடாக்கிய பாலைச் சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும். 
5.  பால் வற்றியதும் சீனி, நெய், முந்திரிப்பருப்பு போட்டுக் கிளறி, யாவும் ஒன்றாக கரண்டியுடன் சேர்ந்து வரும் போது உப்பும், ஏலப்பொடியும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Friday, 25 January 2013

திருவருள் செய் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                                  - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்

அன்புருகு செந்தமிழில் அருணகிரி நாதருக்கு
          அடியெடுத்துக் கொடுத்தும்
ஆராய்ந்த களவியலில் நம்பிமகள் ஈடேற
           அருங்கா மகிழ்ந்தணைந்தும்
என்புருக நோற்ற நக்கீரன் சிறைமீள
           ஏந்துவேல் ஏவிநின்றும்
ஏழுலகும் அடிதொழப் பேரருள் புரிந்துசீ
           ரலைவாய் மகிழ்ந்திருந்தும்
இன்புதவு குஞ்சரியை இந்திரனிடந் திருப்
           பரங்குன்றி லேற்றருளியும்
ஏகுநீர் ஓங்கார இசைமருவு இரணைமடு
          எழில் வளர்க்குங்கழனியிற்
செந்நெல்விளை கிளிநொச்சி சேர்கந்த கோட்டம்
          திருமருவ வீற்றிறிருக்குஞ்
செவ்வேழெனும் பெயர்கொள் செல்வனே!
           திருவருள்செய் கந்தவேளே!

Thursday, 24 January 2013

பக்திச்சிமிழ் - 43

ஒற்றைக் கண்ணால் விழித்திடுமே!

- சாலினி -

சங்ககாலத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் ஓர் அழகிய சித்திர மண்டபம் இருந்தது. அதனை எழுத்து நிலை மண்டபம் என அழைத்தனர். அங்கே பலவகையான ஓவியங்கள் கீறப்பட்டிருந்தன. அவற்றை சென்று மக்கள் பார்த்தனர். அப்படி பார்ப்போரில் சிலர் தமக்கு தெரியாதை தெரிந்தவரிடம் கேட்டனர். தெரிந்தவர்கள் அதற்கு பதில் கூறினர்’ என்கிறது பரிபாடல்.

“என்று ஊழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும் 
இரதி காமன் இவள் இவன் எனா அ
விரகியர் வினவ வினா இறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக்கல்லுரு
ஒன்றியபடி இதென்று உரை செய்வோரும்
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்”            - (பரிபாடல்: 19: 48 - 53)

அந்த சித்திர மாண்டபம், ‘வானத்திலுள்ள சந்திரன் சூரியனுடன் சேர்ந்த சுடர்களாகிய நட்சத்திரங்களையும் பார்த்து எப்போ அவற்றுக்கு அழிவுவரும் என ஆராய்வோரும், இவள் இரதி, இவன் காமன் எனக்காட்டி மயங்கி கேட்போரும், அதற்கு விடை கூறுவோரும், இந்தப் பூனை இந்திரன், இவள் அகலிகை, இவன் எழுந்து சென்ற கவுதமன், இவன் கோபத்தால் உண்டான கல்லுருவம் (அகலிகை) இது என்று ஒவ்வொரு ஒவியங்களையும் காட்டி சொல்வோருமாக’ பல வகைப்பட்ட ஓவியங்களுடன் இருந்தது. 

இப்பரிபாடல் சொல்லும் காமனை, சிவன் எரித்தை இராவணன் தனது சிவதாண்டவ தோத்திரத்தில் 
“கராளபால பட்டிகா தகக் தகக் தகக் ஜ்வலத்
தநஞ் ஜயாதூரரீக்ருத ப்ரசண்டபஞ்ச சாயகே”     - (சிவதாண்டவதோத்திரம்: 7)
என்று பாடியுள்ளான். அதாவது விழித்த நெற்றிக்கண்ணின் தக தக தக எனப் பிரகாசிக்கும் அக்கினிச் சுவாலையால் மன்மதனை எரித்தாராம்.

திருநாவுக்கரசு நாயனாரும் சிவனின் ஒற்றைக் கண்ணே காமனைப் பொடியாய் வீழ்த்தியது என்கிறார்.
“ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்துள்ள
          உறுபிணியும் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ
           வெள்ளப் புணற்கங்கை செஞ்சடை மேல்  
இழித்திடுமே ஏழுலகுந் தானாகுமே
           இயங்கும் திரிபுரங்கள் ஓரம்பினால் 
அழித்திடுமே ஆதி மாதவத்துளானே
           அவனாகில் அதிகை வீரட்டனாமே”             - (பன்.திருமுறை: 6: 4: 6)

காமனை பொடியாகக் எரித்ததை தஞ்சைப் பெரிய கோயிலில் புடைப்புச்சிற்பமாகக் காணலாம். புடைப்புச் சிற்பத்தின் இரண்டாவது வரியில் காமன் சிவனுக்கு கணை தொடுப்பதையும், மூன்றாவது வரியில் காமன் எரியுண்டு வீழ்வதையும், அதற்குப் பக்கத்தில் ரதியும் காமனும் சிவனை வணங்குவதையும் காணலாம். இராவணன் காலம் தொடங்கி இன்றுவரை காமனை எரித்த கதை தமிழர்களால் பேசப்படுகிறது. அதன் காரணம் என்ன? 

Wednesday, 23 January 2013

மிருகநேயத்துடன் பாருங்களேன்!

முட்டும் முரட்டுக் காளை என்று
மூக்கணாம் கயிறு இட்ட மூடரே!
முட்டும் பிஞ்சுப் பாலகன் என்
முத்த மழையில் நனைந்து நல்ல
பட்டுக் கைவிரல் தழுவலிலே நிதம்
பரவசமாய் பரிவுடன் நிற்பது எது?
முட்டும் முரட்டுக் காளையா இது?
மூர்க்கம் தவிர்த்து மெல்லக் கொஞ்சம்
மிருக நேயத்துடன் பாருங்களேன்!
                                                                                                            - சிட்டு எழுதும் சீட்டு 48

Tuesday, 22 January 2013

தாயிருக்கும் இடம் எங்கே?

ஆசைக்கவிதைகள் - 51கீழேயுள்ள நாட்டுப்பாடல் நெருப்பில் நீரும், கடலில் மேகமும் (மழை), விதையில் வேரும், தெருவில் தேரும், உலகில் ஊரும் இருப்பதாகாக் கூறி, தாய் எங்கே இருப்பாள் என்ற நல்ல பதிலை சொல்லு! சொல்லு! என்று விடுகதை போடுகிறது. அத்துடன் நெருப்பிலிருந்து நீரும், கடலில் இருந்து மழையும், விதையிலிருந்து தாவரங்களின் வேரும் வரும் என்ற விஞ்ஞானக் கருத்துக்களையும் சொல்கிறது. இன்றைய விஞ்ஞான உலகம் நிரிலிருந்து நெருப்பையும், நெருப்பில் இருந்து நீரையும் உண்டாக்கலாம் என்று சொல்கிறது. 

வன்னியின் கிடாப்பிடிச்ச குளத்தில் வாழ்ந்த மக்கள் 1946ம் ஆண்டிற்கு முன்பே அதனைஅறிந்து வைத்திருந்தனர் என்பதை இந்த நாட்டுப்பாடல் எமக்கு அறியத்தருகிறது. கடலில் இருந்து மழையும், விதையில் இருந்து வேரும் வரும் எனும் உண்மையை  வன்னிமக்கள் தமது அனுபவத்தால் கண்டனர் எனக் எடுத்துக்கொண்டாலும், நெருப்பில் நீர் இருக்கும் என்ற உண்மையை எப்படி அறிந்தனர்? விஞ்ஞான அறிஞர்கள் யாராவது அந்நாளில் வாழ்ந்தார்களா? இது பற்றி அறிந்தவர்கள் பதில் தாருங்கள். பெற்ற தாயிருக்கும் இடத்தையும் கண்டுபிடியுங்கள்.

நீரிருக்கும் இடம் எங்கே? 
           நெருப்பல்ல வோ!
காரிருக்கும் இடம் எங்கே
          கடலல்ல வோ!
வேரிருக்கும் இடம் எங்கே
          விதையல்ல வோ! 
தேரிருக்கும் இடம் எங்கே?
          தெருவல்ல வோ!
ஊரிருக்கும் இடம் எங்கே?
          உலகல்ல வோ!
தாயிருக்கும் இடம் எங்கே?
          சொல்லு! சொல்லு!
தட்டாமலே நல்ல பதில்
          சொல்லு! சொல்லு!
                                     - நாட்டுப்பாடல் (கிடாப்பிடிச்ச குளம்)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Monday, 21 January 2013

குறள் அமுது - (52)


குறள்:
“உரம்ஒருவர்க்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார் 
மரம் மக்களாதலே வேறு”                                              - 600

பொருள்:
ஊக்க மிகுதியே ஒருவருக்கு வலிமையாகும். அந்த ஊக்கம் இல்லாதவர் மரங்களே. உருவத்தில் மனிதராகத் தெரிவதே அவர்களுக்கும் மரங்களுக்கும்  உள்ள வேறுபாடாகும்.

விளக்கம்:
திடமான உடலோடும் உயரமாகவும் இருப்பதால் ஒருவரை வலிமையுடையவர் எனச் சொல்ல முடியாது. உள்ளத்தின் வலிமையே உண்மையான வலிமையாகும். மனவலிமை இல்லாதவரின் உடல்வலிமை வலிமையாகாது. இக்குறளில் வெறுக்கை என்பது மிகுதியான என்ற கருத்தை தருகின்றது. ஊக்க மிகுதி உள்ள வெறுக்கை எனப்படும். மனவலிமை உள்ள ஒருவனுக்கு இன்னும் வலிமையைத் தருவது ஊக்க மிகுதியே ஆகும். ஆதலால் எவனிடம் விடாமுயற்சி எனும் ஊக்கம் மிகவும் கூடுதலாக இருக்கின்றதோ அவனே வலிமையுடையவன் ஆவான். 

மரம், தான் வளர்ந்த இடத்திலேயே அசையாது நிற்கும். ஊக்கம் இல்லாதோர் மரத்தைப் போல் அசையாது நின்ற இடத்தில் நிற்பர் என்பதை உணர்த்தவே ‘அஃது இல்லார் மரம்‘ என்றார்.  அத்துடன் மரத்தை போல் இல்லாது உருவத்தால் மனிதராகத் தெரிகின்றனர் எனக் கூறினார். ஊக்கமில்லா மனிதர் உடலால் இயங்கித் திரிவதை மரத்தின் வேர், தளிர், இலை, கிளை, காய்  போன்றவற்றின் இயக்கத்திற்கு சமமாகவே வள்ளுவர் எண்ணினார் போலும். 

அதுமட்டுமல்ல ‘மக்களாதலே வேறு’ என ஏகாரம் போட்டு, மரத்தைவிடவும் முயற்சி ஏதும் செய்யாது சோம்பலுடன் வாழும் மனிதரை பிரித்துக்காட்டுகிறார். ஏன் இந்தப் பிரிப்பு? மரங்களாவது உணவாகவும் மருந்தாகவும், விறகாகவும், வீடாகவும் எத்தனையோ விதத்தில் உயிர்களுக்கு உதவுகின்றது. தன்னையே காப்பாற்ற முடியாத ஊக்கமில்லாத மனிதரால் யாருக்கு உதவமுடியும்?

முயற்சி இல்லா மனிதரோ சோம்பலுக்கு அடிமைப்பட்டு மரத்தைவிடவும் வலிமை அற்று பேடியராய் வாழ்கின்றனர். வலிமையுடையோராய் வாழவேண்டுமா? முயற்சி உடையோராய் வாழுங்கள். விடாமுயற்சியே ஒருவரின் வலிமை எனக்கூறும் குறள் இது.