Saturday, 3 August 2013

[13] ஈழத்து......


சென்றது...........
நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற மலைவாசி போல் சித்தன் என்ற பெயருடன்  நாககடம் சென்றான். அங்கிருந்து அறுவை மருத்துவத்தின் பின்னர் போடும் நுதிமயிர்த்துகில் குப்பாயம் தைக்கச் சென்ற மயன் கறமன் கற்காட்டின் காட்டின் நடுவே இருந்த அருவியில் குளித்தான்.
இனி..........

இரத்தினபுரி

“கல் பிறங்கு1 வைப்பின்2 கடறு அரை யாத்த3 நின்
தொல் புகழ் மூதூர்4 செல்குவை ஆயின்”
                                                        - நச்செள்ளையார்

இந்த உலகத்தில் கடறு இருக்கும் இடங்கள் யாவும் மிகவும் அற்புதமானவை. அங்கே கூர்கூராய் வானுற ஓங்கிய கடறுகள் காடுபோலவும் இருக்கும். கடறு சார்ந்த சில இடங்கள் பாலை வனமாயும்  இருக்கும். கொட்டும் அருவி வீழும் பசும் பொய்கையும் இருக்கும், அருவிகளிலிருந்து வீழ்ந்து ஓடும் ஆற்று நீரில் பொன்னும் மணியும் புரள்வதாயும் இருக்கும். பல நிறங்களில் வெட்சியும் இருக்கும், தாளிப்பனையும் இருக்கும். கடறில் மிளிரும் பொன்னும் இருக்கும். கடறு சூழ்ந்த மலைகளில் நீலம், மரகதம், மாணிக்கம், வைரம், வைடூரியம், கோமேதகம் எனப்பலவகை இரத்தினப் பாறைகளும் இருக்கும். அப்படி கடறு கொட்டிச் சிதறிய வளம் அந்த இடத்தை இரத்தினபுரி ஆக்கியது. 

பொன்னும் மணியுமென உலக இயற்கை சிந்தும் வளமெலாம் கடறு நிலத்திலே கொட்டிச் சிதறிக் கிடப்பதால் கடறை, இந்த உலகப்பந்து தனது இடையில் மேகலையாகக் கட்டி இருக்கிறது. அந்த மேகலையில் இலங்கும் பதக்கமாய் காட்சி தருவதே இரத்தினபுரி. அங்கே நூற்றுக்கணக்கான அருவிகள்5 வீழ்ந்து  நாகநாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கிக் கொண்டிருந்தன. அங்கிருந்த பேரருவித் தடாகத்தை நோக்கியே கரியநிறப் புரவி பாய்ந்து வந்தது.
கடறு [stone-forest, china]

அதன் சத்தத்தைக் கேட்டு திரும்பிய மயன் இரத்தத்தில் தோய்ந்த நத்தனையும் புரவியையும் கண்டான். நத்தா! என அழைத்தபடி புரவியை நோக்கிப் பாய்ந்து ஓடினான். மயனைக் கண்ட நத்தத்தனும் சித்தா! எனக் கத்தியவாறு புரவியை நிறுத்தினான். 

‘சித்தா! என்னை இரு புரவிவீரர்கள் துரத்திவருகின்றனர்,’ என்றான் நத்தன். 

அதைப் பொருட்படுத்தாத மயன், ‘உன்னை யாளி தாக்கியதா? காயங்கள் எதாவது இருக்கா?’ எனக்கேட்டபடி நண்பனை அன்போடு பார்த்தான். 

‘சித்தா! யாளி என்னைத் தாக்கவந்தைதைப் பார்த்தாயா!’ என்றான் நத்தன் வியப்போடு. தொடர்ந்து ‘என்னையாவது யாளி தாக்குவதாவது, என்மேல் பாய்ந்த யாளியின் வயிற்றைக் குறுவாளால் குத்திக் கிழித்துக் கொன்றேன். அதன் இரத்தமே என்மேலும் குதிரைமேலும் சிந்தியது. நான் கொன்ற யாளியை, மாவீரத்துடன் அம்பெய்து கொன்ற புரவிவீரர்களே, என்னைக் காத்து பின்தொடர்ந்து வருகின்றனர்’ எனக்கூறிச் சிரித்தான். 

நத்தத்தனின் பேச்சிலிருந்து அவனுக்கு ஏதும் தீங்கு ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொண்ட மயன் ‘ஏற்கனவே மூக்கறுபட்ட [துதிக்கை] யாளியை மூன்று பேர் சேர்ந்து கொன்றீர்கள்’ எனக் கூறியபடி, புரவியின் கடிவாளத்தைப் பிடித்திழுத்து அருவிக்கு நத்தனை அழைத்துச் சென்றான். மலையிலிருந்து தவழ்ந்து வீழும் அருவியின் வேகம் ஒரு நொடியிலேயே யாளியின் இரத்தத்தை நத்தத்தனிலிருந்தும் புரவியிலிருந்தும் போக்கியது. 

மலையடிவாரத்தில் ஒரு ஆம்புழை6 இருப்பதைக் கண்ட நத்தத்தன், ‘சித்தா! அங்கு பார்த்தாயா, ஒரு ஆம்புழை இருக்கிறது. இங்கு சுரங்கப்பாதை இருக்கவேண்டுமே.’ என்றான். 

‘என்னை இந்த ஆம்புழையூடாகத்தான் வாலகன் கூட்டிவந்தது’ என்றான் சித்தன்.

‘சித்தா! நீ ஆம்புழையினூடாக வந்தபடியால் இந்தக் கடறுப்பகுதியை சரியாக பார்த்திருக்க மாட்டாய். இந்த இடம் ஒரே மர்மமாக இருக்கிறது. கனல் கக்கும் கடறின் நடுவே இங்கே பேரருவி கொட்டுகிறது. சுற்றிலும் வெட்சிமலர்க்காடு, ஆம்பிமனைகள், ஆம்பிமனைகள் கூட தலைவாசலும் வீடுமாக இரட்டைமனைகளுடன்7, சிறுவரிருந்து கதைகேட்கும் திண்ணைகளோடு இருக்கின்றன. பொன்னும் மணியும் எடுப்பார் இன்றிச் சிதறிக்கிடக்கிறது. காவல் மறவர்களும், புரவிவீரர்களுமாக இந்த இடம் காட்சி தருகின்றது. இப்படியொரு இந்திரபுரி நமது நாகநாட்டில் இருப்பது எனக்குத் தெரியாது,’ என்ற நத்தனைப் பார்த்து,

கடறுகளிடையே இக்கால ஆம்பிமனைகள் [Nubavillage in sudan]
 [Photo: source - Wikipedia]

‘இது இந்திரபுரி அல்ல இரத்தினபுரி,’ என்றான் சித்தன்.

‘இரத்தினபுரியா? இங்குதானே நாகநாட்டின் இரத்தின சிங்க ஆசனத்தின் மாணிக்க கல்லைத் தந்த மாணிக்க பாறை இருக்கிறது. அதுமட்டுமா நாகநாட்டின் மருத்துவம் உலகெங்கும் புகழடையவும் மாணிக்க கற்களே காரணம் அல்லவா?’ என்றவன், முகிலனை நினைத்துக்கொண்டு ‘நாம் விரைவாக நுதிமயிர்க்குப்பாயம் தைத்து எடுத்துப் போகவேண்டும்’ எனச் சொன்னான்.

அருவியில் நீராடிவந்த நத்தன் ஈர ஆடையைப் பிழிந்து மீண்டும் உடுத்தான். 

நத்தத்தனின் கோரமான தோற்றத்தையும், ஈர ஆடை உடுப்பதையும் பார்த்த மயன், நத்தா! இன்னும் பதினைந்து, பதினாறு நாழிகை நேரம் பொறுத்துக்கொள், அதன் பின்னர் நீ நாகவல்லித்தாயாரின் மகனாக உலாவரலாம்,’ என மிகத்தாழ்ந்த குரலில் சொன்னான்.

‘நான் மட்டுமா!’ என்றான் நத்தன். 

நத்தத்தனை துரத்தி வந்த புரவிவீரர்கள், நத்தன் இன்னொரு மலைவாசியுடன் பேசுவதைக்கண்டு வானுற ஓங்கினின்ற கடறின் பின் ஒளிந்து நின்று வேவுபார்த்தனர்.

அதைக்கண்ட மயன், ‘நத்தா! உன்னைக் காவல் காக்கும் புரவிவீரர்கள் நம்மை வேவுபார்க்கிறார்கள். நாம் கொஞ்சம் இரைந்தே பேசவேண்டும்’ என்றான். 

இருவரும் மலைவாசிகளின் மொழியில் பேசிக்கொண்டனர். 

அங்கே கலகல என நகைத்தபடி மதுக்கலசங்களுடன் இளங்கன்னியர் சிலர் வந்தனர். அவர்கள் தமது கரியகூந்தலை முறுக்கியும், சுருட்டியும், பின்னலிட்டும், கொண்டையிட்டும்,  ஊசி போன்ற வெட்சி9 மாமலர்களைச் சூடியிருந்தனர். அருவிக்கரையில் மலைவாசிகளான சித்தனையும், நத்தனையும் கண்டதும் அவர்களது கலகலப்பு அடங்கியது. நத்தனின் கோர8 தோற்றத்தைப் பார்த்த ஒருத்தி பயந்து கத்தினாள். 
வெட்சி

அவள் ஏன் கத்துகிறாள் என்பதை அறியாத சித்தன், வாலகனைக் கண்டு கத்துவதாக நினைத்து வாலகனுக்கு சீழ்க்கை அடித்தபடி வாலகனை நோக்கி விரைவாக நடந்தான்.

வேவுபார்த்துக் கொண்டிருந்த இரு புரவிவீரரும், சித்தன் பெண்களைப்பார்த்து சீழ்க்கை அடிப்பதாக நினைத்து, புரவியில் வந்து சித்தனை மறித்தனர். 

அவர்களில் ஒருவன் ‘நாடோடியான நீ! நாககடத்து இரத்தினபுரிப் பெண்களுக்கா சீழ்க்கை அடித்தாய்? எனக்கேட்டவாறு தன் கைத்தண்டால்10 சித்தனின் தலையில் ஓங்கி அடித்தான். 

சித்தனின் தலையில் இருந்து இரத்தம் ஒழுகியது. அதைக்கண்ட வாலகன் எழுந்தோடி வந்தது. 

வாலகன் ஓடிவருவதைக் கண்ட இளங்கன்னியர் நடுங்கினர். அதைப்பார்த்த சித்தன் வாலகனுக்கு ஏதோ சொன்னான். அவன் சொன்னதைக் கேட்ட வாலகன் அந்த இடத்திலேயே நின்றது. 

வாலகனை அங்கே எதிர்பாராத  மற்றப்புரவிவீரன் ‘நாககடத்தில் இருக்கவேண்டிய வாலகன் எப்படி இங்கு வந்தது?’ என்றான்.

அதற்கு ‘வாலகன் எங்கூட வந்தது,’ என்ற சித்தன், தொடர்ந்து ‘நம்மள நாககடத்து மருத்துவர் நுதிமயிர் துகில் வாங்க சிற்றாற்றங்கரைக்கு அனுப்பினாரு, நா அங்கீருந்து குப்பாயம் தைக்க யீங்க வந்தேனூங்க’ என்றான்.

‘ஓ! சுக்கிராச்சாரியாரின் வாலகனை உன்னுடன் மருத்துவர் அனுப்பினாரா?’ என்றான் புரவிவீரன்.

‘மருத்துவர் அனுப்பல்லீங்க. அதுவா வந்தீச்சுங்க’ என்றான் சித்தன்.

அதுவா வந்தீச்சா? ‘நீயார்?’ என்று மயனைக் கேட்டனர்.

‘யானு மலைவாசிங்க, அதுக்கு நம்மள புடிச்சு போச்சுதுங்க. மஞ்சில தூக்கி வைச்சிட்டு வந்தீச்சிங்க. நீயீங்க பாத்தீங்க தானுங்க, நா சொன்னா அதண்ட நிக்குதீங்க’ என்றான்.

தண்டம்11 கொடுத்த புரவிவீரன் ‘சித்தன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு நகைத்து, ‘வாலகன் உன்னை மஞ்சு மேல் தூக்கிவைத்துக் கொண்டு வந்ததா? எந்த வழியால் வந்தது? நாககடமே விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்த நேரம் பார்த்து வாலகனைக் கடத்தி வேற்றுநாட்டாருக்கு விற்க, மலைவாசியான நீ ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறாய், சொல் நீ எந்த நாட்டரசனின் ஒற்றன்?’ என்று மீண்டும் சித்தனின் முதுகில் அடித்தான்.

வாலகன், நின்ற இடத்திலிருந்து பிளிறியது. கோபத்துடன் தலையை ஆட்டியது.

அதுவரை வேடிக்கை பார்த்து நின்ற இளங்கன்னியர் பயந்து ,ஒருவருக்குள் ஒருவர் ஒடிங்கினர்.

சித்தன் மீண்டும் அடிவாங்குவதைக் கண்டு அங்குவந்த நத்தன், புரவிவீரர்களைப் பார்த்து ‘குற்றம் செஞ்சாதவன, அடியீப்பது நாககடத்து சுக்கிரநீதியா12? சாமீ’ என்றான். 

புரவிவீரனுக்கு கோபம் தலைக்கேறியது, ‘எனக்கு நீ சுக்கிரநீதி சொல்லித்தருகிறாயா?‘ எனக்கேட்டு,  அடிக்கப் போனான்.

சாமீயோ! என்னய அடி சாமி, ஆனா சுக்கிர நீதிப்படி அடி சாமி! தண்டம் கொடுக்கறவ தங்க பேர, ஊரறிய சொல்லீட்டு கொடுக்கனூமில்லையா சாமி! அது தானுங்க சாமி சுக்கிர நீதி. நம்ம பேராவதூ தெரியூமா சாமீ! ஏஞ்சாமி ஓம்பேர சொல்லாம ஓம்பாட்டுக்கு  தண்டங் கொடுக்கறாய்ய் சாமீ. நா என்ன செஞ்சேஞ் சாமீ!’ என்றான் நத்தன்.

புரவிவீரனிடம் அடிவாங்கி குற்றவாளியாய் நின்றநிலையிலும், நத்தத்தன் சொல்வதைக் கேட்டு மயன் வியப்படைந்தான். ‘இவ்வளவு நாளும் பசுத்தோல் போர்த்த புலியாக என்னோடு இருந்தானோ? இல்லை, சிங்கக் குட்டி கர்ச்சிக்கும் காலம் வந்துவிட்டது கர்ச்சிக்கிறது போலும்’ என நினைத்தான்.

என் பெயரைச் சொல்லப் பயமா? நான் நாககடத்து தண்டக்காவலன்13, என் பெயர் தீக்கண்ணன்.  இவன் இளங்கன்னியரைப் பார்த்து சீழ்க்கை அடித்ததோடு, வம்பு செய்ய ஓடிவந்தான். நாகநாட்டுப் பெண்களுக்கு வம்பு செய்தால் தண்டனை என்ன என்பது சுக்கிரநீதி தெரிந்த உனக்குத் தெரியாதா?” என்றான்.

நத்தன், “சாமீயோ! சாமி!, எப்புடிசாமி சொல்லுவ, அவன் வம்புசெஞ்சத பாத்தீயாசாமி! அந்தப் பொண்ணுகட்ட  கேளூ சாமி!” எனக்கூறினான்.

தீக்கண்ணன் கன்னியரைப் பார்த்து, ‘இவன் சீழ்க்கை அடித்தான் தானே?’ என்றான்.

அவர்களும் ‘ஆமாம்’ எனத்தலையை ஆட்டினர். 

சித்தனைப் பார்த்து, ‘நீ சீழ்க்கை அடித்ததை கன்னியரே ஒப்புக்கொண்டுவிட்டனர். நீ என்ன சொல்கிறாய்?’ என்றான்.

‘நா சீக்கை அடிச்சே, ஆனா...’ என்று சொல்லவந்ததைச் சொல்லிமுடிக்க விடாது,

‘அவனே சீழ்க்கை அடித்ததை ஒப்புக்கொள்கிறான். நீயார் எனக்கு நீதி சொல்ல,’ என நத்தனுக்குக் கூறியபடி, தீக்கண்ணன் சித்தனை அடிக்கத் தண்டை ஓங்கினான் .

ஓங்கிய தண்டம் மயனின் முதுகைப் பதம்பார்க்க முன்னம் புரவியிலிருந்த தீக்கண்ணனை வாலகன் துதிக்கையால் சுற்றி கடிதோச்சியது.14

ஒளிரும்......

சொல்விளக்கம்:
1. கல் பிறங்கு - கல்லால் சூழப்பட்ட
2. வைப்பு - நிலப்பகுதி
3. அரையாத்த - இடையில் கட்டிய
4. தொல் புகழ் மூதூர் - தொண்டு தொட்டே புகழுடன் விளங்கும் பழைய ஊர்.
5. நூற்றுக்கணக்கான அருவிகள் - இரத்தினபுரி மாவட்டத்தில் இன்றும் 109 அருவிகள் வீழ்கின்றன.
6. ஆம்புழை - ஈரமான சிறுவாயில் [ஈரமான - சுரங்கவாயில்]
7. இரட்டை மனைகள் - தலைவாசல் திண்ணையுடன் கூடிய இளைப்பாறும் அல்லது கதைத்து மகிழும் இடமாக இருக்க அதற்கு பின்னே வீடு தனியே இருக்கும். பெரும்பாலும் தலைவாசல் மனையில் ஆண்கள் உறங்குவர், அது காற்றோட்டமுள்ளதாக சுவரற்ற வெளியாகவும் இருக்கும். பெண்களும் குழந்தைகளும் மற்ற மனையினுள் உறங்குவர்.
8. கோரம் - அச்சம் [கோர தோற்றம் - அச்சம் தரும் தோற்றம்]
9. “கடற்றில் கலித்த முடச்சினை வெட்சி
     தளை அவிழ் பல்போது கமழும்
     மை இரும் கூந்தல்”                          - (குறுந்தொகை: 209: 5 - 7)
10. கைத்தண்டால் - கைக்கோல்/கைத்தடி
11. தண்டம் - தண்டனை
12. சுக்கிரநீதி - சுக்கிராச்சாரியாரால் எழுதப்பட்ட நீதி நூல்
13. தண்டக்காவலன் - கட்டளைக் காவலன்
14. கடிதோச்சியது - மிகவிரைவாகத் தூக்கியது.

No comments:

Post a Comment