Wednesday, 13 February 2013

[2] ஈழத்து.....சென்றது….

நாகர் நாடு பெருவள நாட்டின் நாகதிசை முழுவதும் பரவி இருந்தது. நாக நாட்டு அரசனான விசுவகர்மா இயற்கையின் செழிப்பை செயற்கையின் பொலிவால் பெருகூட்டி நாகர் நாட்டை வடிவமைத்திருந்தான். நாகர் நாட்டின் எழிலை முழுமையாகக் காணமுடியாது, நட்சத்திரங்களும் ஏங்கின. அந்த நாகர் நாட்டின் வசந்த மாளிகையின் வசந்த மஞ்சத்தில் இளமதி சாய்ந்து இருந்தாள். திடீரென மஞ்சத்தின் மேல் ஏறிக் குதித்து கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் என்று ஆனந்தக் கூத்தாடிய அவளை மயன் மஞ்சத்திலிருந்து இறக்கினான். மயனை வசந்த மாளிகையின் உச்சியில் இருந்த நிலா முற்றத்திற்கு அழைத்துச் சென்று தான் கண்டதைக் காட்டி தன் இதய தாகம் தீர்ந்தது என்றாள்.

இனி…

இதய ராகம்
நாக நாடு நடுக்கின்று ஆள்பவன், 
வாகை வேலோன், வளைவணன் தேவி
                                 - சீத்தலைச்சாத்தனார்

இளமதியின் பேச்சில் இருந்த உறுதியும் தெளிவும் மயனைச் சிந்திக்க வைத்தது. அப்படி என்ன இதய தாகம் இவளுக்கு இருக்க முடியும்? இதுவரை காலமும் இதய தாகம் இருந்தாக என்னிடம் சொன்னதில்லையே என எண்ணியவனாக அவள் காட்டியதை மிகவும் அக்கறையாக நிதானத்துடன் பார்த்தான்.
அவள் காட்டிய திசையில் பரதவர்களின் நாவாய்கள் விளக்குகளுடன் சென்று கொண்டிருந்தன. அவற்றிற்குப் பின்னே மகர மீன்கள் நிலவின் குளிர்மையில் சல்லாபித்துக் களித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. மகரமீன்கள் இப்படி ஒன்றன் பின் ஒன்றாகக் குதித்துகளிப்பது வானவிற்கள் அலையலையாகத் தோன்றி மறைவது போல் இருந்தது.
தண்நிலவின் பொன் ஒளியில் நாவாய்களில் பரதவர்கள் யாழில் விளரிப்பண்ணை இசைத்து நெய்தற் பறையும் நாவாய்ப் பம்பையும் அடித்துச் செல்வதும், அந்த விளரிப் பண்ணின் இசையில் மயங்கும் “பசுந்தலைக் கூர்வாய் மகர மீன்கள்” சல்லாபித்துக் களிப்பதும் அவன் அறியாதது அல்ல. அனல் வாய் மகர மீன்கள் நெய்தற் பறையின் ஒலிக்கு மயங்குவதையும், நாவாய்ப் பம்பையின் ஒலிக்கு மிரள்வதையும் அவன் கண்டிருக்கின்றான். மகர மீன்களை மயக்க விளரிப் பண்ணை யாழில் வாசித்து மண்டிச் செல்லும் பரதவரை ‘மண்டைப்பாணர்’ என அழைப்பதும், அவை இசையில் மயங்கிக் களிக்கையில் அவற்றின் பின்னே பெரிய மரக்கலங்களில் வரும் பரதவர், கடலலையின் மேல் குதித்து விளையாடும் மகர மீன்களின் மேல் முறுக்கிய கயிற்றில் கட்டப்பட்ட விசையுறு எறி உளிகளை எய்து கொல்வதும், அம்மீன்களை கொல்லும் பரதவரை ‘கொடுவாய்ப் பரதவர்’ என அழைப்பதும் அவன் அறிந்ததே.

மீன்களைச் சாகடிக்க உபயோகப்படுத்துவதால் விளரிப் பண்ணைச் ‘சாப்பண்’ என்றும், நெய்தற் பறையை ‘சாப்பறை’ என்றும் அழைப்பதும் அவனுக்குத் தெரியும். மகர மீன்கள் தோலுக்காகவும், என்புக்காகவும், மீன் எண்ணெய்க்காகவுமே கொல்லப்படுகின்றன. அவனின் இராச்சியத்தில் அவன் கட்டளைப்படியே அம்மீன்கள் கொல்லப்படுகின்றன. அம்மீன்களிலிருந்து எடுக்கும் எண்ணெய்க்கு நறுமணமூட்டி நகர விளக்குகள் எரிக்கப்படுகின்றன. அவை யாவும் அரச தருமமாகும்.
அப்படிக் கொல்லப்படும் மகரமீன்கள் சிந்தும் இரத்தம் பீறிட்டு வானவில் போல் சிதறுவது பார்ப்பவர் நெஞ்சைக் கலக்கும். அம்மீன்கள் எழுப்பும் மரண ஓலமோ கேட்ப்போரைக் கதிகலங்கச் செய்யும். அத்தகைய ஒரு கொடூர காட்சி இன்னும் சிறிது நேரத்தில் அங்கே நடக்கப் போகின்றது என்பதை அவன் உணர்ந்தான்.
வெகு தூரத்தில் கடலின் இடையே அவை எழுப்பும் மரண ஓலத்தை இளமதியால் கேட்க முடியாது. எனினும் தாய்மையின் தலை வாசலில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவள் அந்தக் காட்சியைப் பார்ப்பது கருவுள் இருக்கும் குழந்தைக்கு ஆகாதே என நினைத்தான்.
இளமதியைப் பார்த்து, “இளமதி! மகர மீன்களின் சல்லாபத்திற்கும், உன் துள்ளளுக்கும் இதய தாகத்திற்கும் என்ன தொடர்பு? இதய தாகம் என்று பெரிய வாத்தையாகச் சொல்கின்றாயே! ஏன் அதை என்னிடம் சொல்லாமல் உனக்குள்ளே மூடி வைத்திருந்தாய்? அது நியாயமா? அதுவும் நீ கருவுற்றிருக்கும் நிலையில் மன உலைச்சல்களுக்கு இடம் கொடுக்கலாமா? அது…….”
மயன் வார்த்தைகளை முடிக்கு முன்னே இளமதி கைகொட்டிச் சிரித்து, “எனக்கு மன உலைச்சல் என்று யார் சொன்னது?” எனக் கேட்டாள்.

“உன் இதய தாகம் தீர்ந்தது என்று நீதானே சொன்னாய். இதய தாகம் இருந்திருந்தால் அது மன உலைச்சலைத்தானே கொடுத்திருக்கும் இல்லையா?”

அவன் வார்த்தைகளைக் கேட்டு சிரித்தபடி “நாக நாட்டுப் பேரரசின் மாமன்னரே! இதய தாகம் வேறு மன உலைச்சல் வேறு. மனித மனத்தின் பண்பு மூன்று வகைப்படும். அறிவு, கருணை, மனத்திடம் மூன்றும் மனிதப் பண்பின் உயிர் நாடியாகும். சிலருக்கு இவை பிறவியிலேயே கிடைக்கின்றது. பலர் இவற்றை முயன்று அடைகின்றார்கள். தனக்குத் தெரிந்தது எது தெரியாதது எது என்பதை அறிவுள்ளவன் அறிந்து வைத்திருப்பான். மனத்திடம் உள்ளவனுக்கு பயம் கிடையாது. கொடும் புலியையும் கருணையோடு காப்பாற்றுவான். மனித மனப் பண்பின் பேரதிசயம் என்ன தெரியுமா? மிக மிக உயர்ந்த நிலையில் உள்ள மனிதமனப் பண்பும், மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள மனிதமனப் பண்பும் என்றென்றும் மாறுவதில்லை. உயர்ந்த மனப்பண்பு உள்ளவரின் அகமனம் வளர்ச்சி அடைந்திருக்கும். தாழ்ந்த மனப்பண்பு உள்ளவரின் அகமனம் வளர்ச்சி அடைந்திருக்காது”. 
“உயர்ந்த மனப்பண்பு உள்ளவர்களிடமே இதய தாகங்கள் தோன்றும். இப்படித் தோன்றும் இதய தாகங்கள் உலக வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இவர்கள் என்றும் உற்சாகமாக இருப்பார்கள். தாழ்ந்த மனப்பண்பு உள்ளவர்களிடமே மன உலைச்சல்கள் தோன்றும். அவை அவர்களை மந்த நிலைக்கு உள்ளாக்குவதால் கூட்டுப் புழுக்களாக முடங்கிப் போகிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையே அழிந்து போகின்றது.”
தலை தாழ்த்தி, “அரசே! எனக்கு மன உலைச்சலா? இப்போது சொல்லுங்கள் உங்கள் தீர்ப்பை” என அபிநயம் பிடித்து நின்றாள்.

மயனும் அவளைப் பார்த்து, “மாதரசே! தண்டனிட்டேன். நாகப் பேரரசின் அரசியாருக்கு தீர்ப்புக் கூற என்னால் முடியுமா?” என்று கூறி வளைந்து குனிந்து நிமிர்ந்தவன், “இந்த இரு வார்த்தைகளுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா? அப்போது எனக்குத்தான் மனக் கலக்கம் இருந்தது. அதுவும் இப்போது போய் விட்டது. ஆனால் தாழ் மனப்பண்பு எனக்குத்தான் இருக்கின்றது போலத் தெரிகின்றது” என வாய்விட்டு சிரித்தபடி” ஓரக்கண்ணால் கடலைப் பார்த்தான்.

அங்கே உல்லாசமாக அலையலையாகப் பாய்ந்து குதித்துச் செல்லும் பசுந்தலைக் கூர்வாய் மகர மீன்களை, விசையுறு எறி உளிகளைக் கொண்டு எய்து வீழ்த்த கொடுவாய்ப் பரதவர்கள் ஆயத்தமாகிறார்கள் என்பதை உணர்ந்தான். அதற்காக கொடுவாய் பரதவர் வானத்தை நோக்கி, எரியும் கொள்ளிக் கணைகளை எய்தார்கள். அந்தக் கொள்ளிக் கணைகளின் வெளிச்சத்திலேயே மகர மீன்களைக் குறி வைத்து விசையுறு எறி உளிகளை எய்யப்போவதை மயனின் கண்கள் பார்க்கத் தவறவில்லை.
மயனின் சிரிப்பை இரசித்தபடி, “தாழ்நிலை மனப்பண்பு உள்ளவர்கள் மனக்கலக்கத்தால் சித்தம் சிதறி பித்துப் பிடித்துப் போய் விடுவார்கள். உங்களுக்குப் பித்துப் பிடித்து விட்டதா?” என்று இளமதி கேட்டாள்.
“சித்தம் சிதறி பித்துப் பிடிக்காமலா நடுச்சாமமாகிய பின்னும் நித்திரை இன்றி நாக நாட்டு பேரரசியின் பின் குட்டி நாய் போல் ஓடி வருகிறேன்” என கண் சிமிட்டிச் சிரித்தான்.
“இளமதி! நீ உன் பெயரைப் போல் அறிவிலும் இளமதியாய் இருப்பாய் என நினைத்தேன். நீ அறிவில் முழுமதியாய் இருக்கின்றாயே, எனக் கூறியபடி கொடுவாய்ப் பரதவரின் விசையுறு எறி உளிக்கு இரையாகி வீழ்ந்து இறக்கும் மகர மீன்களை அவள் பார்க்காதவாறு அவளின் முன்னே வந்து மறைத்து நின்று அவளை அணைத்தான்.
அவன் ஏன் அப்படிச் செய்கின்றான் என்பதை உணராமலே சமழ்த்து (நாணி) அவனின் பரந்த மார்பில் முகம் புதைத்தாள். அவளின் உடலில் ஏற்பட்ட சமழ்ப்பைப் போக்க, அவளை மெல்ல விலத்தி மோவாயைப் பற்றி நிமிர்த்தினான். அவளின் தலையின் முன் நெற்றியின் மேலே அணிந்திருந்த ஐந்தலை நாக சூடிகையின் மனோமயமாமணி சிந்திய ஒளியில் சுடர்விட்ட அவள் எழில் முகத்தின் மனோகரமும், சமழ்ப்பால் முகத்தில் ஏற்பட்ட செம்மையும், கண் சிமிழ்த்தலும் மயனை அவளிடம் சிறைப்பட வைத்தன.
மயன் எப்போது இளமதியின் மோவாயைப் பற்றி முகத்தை நிமிர்த்தினானோ அந்த நேரத்தில் இருந்து வானத்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிச் சிரித்து ஆரவாரம் செய்தன. எத்தனை காலம் இந்த நிமிடத்திற்காக அவை காத்திருந்தன. உலகெங்கும் தேடினாலும் கிடைக்க மாட்டாத அரிய மாமணி அல்லவா அது! அதற்கு விலை ஏது? மனோமய மாமணியின் ஒளியையும், அதை அணிந்திருந்த எழிலரசியின் பேரழகையும் ஒன்றாகப் பார்த்து இரசித்த பெருமிதம் நட்சத்திரங்களின் கண் சிமிட்டலில் தெரிந்தது.
ஆயிரக் கணக்கான மாசுணங்கள் சூழ இருக்கும் ராஜமாசுணமே மனோமயமாமணியை வைத்திருக்கும் இத்தகைய ராஜமாசுணத்தைக் கொன்று அதன் மாமணியை எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு மாசுணத்தைக் கண்டாலே படையே நடுங்கும். அவ்வளவு பெரிய பேருருவமும், விரைவும், கொடிய நஞ்சை பிளிற்றியடிக்கும் ஆற்றலும் உடையது. பெரும் படையே அதன் நச்சுத் துளிச் சிதறல் பட்டு அழிந்திருக்கின்றது. அதனாலேயே ‘பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ என்ற பழமொழி உருவானது.


கயவர்களான தேவர்களாலேயே இந்த மனோமயமா மணியை எடுக்க முடியவில்லை. தேவர்களின் தலைவனான தேவேந்திரனே இம்மாமணியைப் பார்க்க நாகர் நாட்டிற்கு வந்தான். விசுவகர்மாவை தேவர்கள் பகைத்துக் கொண்டதில்லை. தேவர்களில் பலர் விசுவகர்மாவின் குலப் பெண்களை திருமணம் செய்திருந்தமையே அதற்குக் காரணமாகும். நாகர் நாட்டு மங்கையர்களின் ஈடற்ற பேரழகும் கலைஞானமும் தேவர்கள் மனதை ஓர் உலுக்கு உலுக்கி வைத்திருந்தது.

மனோமயமாமணியின் ஒளிக்கதிரின் வர்ணஜாலத்தில்  மயனும் இளமதியின் இதயராகத்தை கேட்கத் தொடங்கினான். அவன் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன. நாமும் இதயதாக ராகத்தைக் கேட்போம்......

No comments:

Post a Comment