Sunday, 27 January 2013

[1] ஈழத்து.....


“இதயதாகம்”
பளிங்கு செறிந்தன்ன பல்கதிர் இடை இடை
பால்முகந்தன்ன பசுவெண் நிலவு”     
                                        – வெள்ளைக்குடி நாகனார்
இயற்கையின் இனிய இன்பத்தை இதயம் இரசித்துக் கொண்டிருந்தது. இதய இரசனைக்கு காலமென்ன? நேரம் என்ன? கால, நேர, தூரம் என்ற எல்லைக் கோடுகள் அற்ற ஓர் அற்புத உலகம் அது. அந்த உலகில் வலம் வருபவர்களால் தான் புதுமைகள் படைக்கப்படுகின்றன. எந்தப் புதுமைப் படைப்புக்காக, இதயம் இயற்கையை இப்படி ஆழ்ந்து இரசிக்கின்றது என்ற எண்ணமே அற்ற நிலையில் மனம் இயற்கையோடு இணைந்து கிடந்தது.
வானமெங்கும் வெள்ளிமணிச் சிதறல்களாக நட்சத்திரங்கள் கண் சிமிட்டிச் சிரித்தன. எதைக்கண்டு இவை இப்படி ஆரவாரமாக கண் சிமிட்டிச் சிரிக்கின்றன? மேற்குத் திசையில் வான்நிலவு தங்கத் தகடாக மேகங்களின் ஊர்வலத் தினிடையே புகுந்து புகுந்து நட்சத் திரங்களின் பார்வைக்குத் தேவை யான பொன்ஒளியை அள்ளி வழங்கிக் கொண்டிருக்க நட்சத்திரங்களின் பார்வையோ உலகோருக்கு நாகரீகத்தைக் கற்றுக்கொடுக்கும் நாகர் நாட்டின் மேல் இருந்தது. நாகர் நாடு பெருவளநாட்டின் வடமேற்குத் திசை முழுவதும் பரவியிருந்தது.
சந்திரவர்ணக்கற்கள் ஒளிவீசும் நெடிது ஓங்கிய பெரியகோட்டை மதில். அதனை அடுத்து அடர்த்தியாக வானுற ஓங்கி வளர்ந்த பெரும் காடுகள். இக்காடுகளின் இடையே பச்சைமலை, பவளமலை எனத்தொடரும் மலைகளும், அவற்றிலிருந்து வீழும் அருவிகளும் அருவிகளிலிருந்து தவழ்ந்து ஓடும் ஆறுகளுமாக இயற்கை அங்கே கொஞ்சிவிளையாடிக் கொண்டிருந்தது. இயற்கைக்குப் பஞ்சமான இடங்களில் செயற்கை இயற்கையாகக் காட்சியளித்தது.
இயற்கையை செயற்கையால் படைக்க முடியும் என படைப்புக் கடவுளாகிய பிரமனுக்கே போட்டியாக ஒருவன் இருந்தான். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அறச்சாலைகள், ஆதுல சாலைகள், அங்காடிகள், பள்ளிகள், மன்றங்கள், சதுக்கங்கள், மலர்ச்சோலைகள், வாவிகள் யாவற்றிலுமே ஓவியங்களும், சிற்பங்களும் காட்சியளிக்க, அழகாகக்கட்டி பொன்னாலும், மணிகளாலும் இரவைப் பகலாக்கி உலக நாகரீகத்திற்கு முதல் வித்திட்டவனே அவன். அவனே விசுவகர்மா. சிற்பக்கலையின் தெய்வமாக வணங்கப்படும் விசுவகர்மாவால் வடிவமைக்கப்பட்டதே நாகர் நாடு.
அங்கே இயற்கையாக இருந்த குளங்களிலும், ஆறுகளிலும், அருவிகளிலும் செயற்கை மிருகங்களும் பறவைகளும் குளித்து, குடித்து நடித்தன. செயற்கைப் பொய்கைகளிலும், ஆறுகளிலும், அருவிகளிலும் இயற்கை மிருகங்களும், பறவைகளும் குளித்து, குடித்து களித்தன.
தெளிந்த நீரும், மண்ணும், மலையும், குளிர்நிழலைத் தரும் காடும் இயற்கை அரண்களாக இருந்து பாதுகாத்த நாகர் நாட்டை அமுதமாகிய மழையைத் தரும் மழை மேகங்கள் குடையாகக் கவிந்து நின்று விண்ணவர்களிடம் இருந்தும் காத்தன.
ஆதலால் எது இயற்கை? எது செயற்கை? எனப் பிரித்தறியவும், விசுவகர்மா எத்தகைய அற்புத சொர்க்கத்தை மாடமாளிகைகளுக்குள் அமைத்து வைத்திருக்கின்றான்? என்பதை உள்ளே புகுந்து பார்கவும் நட்சத்திரங்களாலும் முடியவில்லை. பார்ப்பவர்கள் தலைநகர் எது? புறநகர் எது? என அடையாளம் காணமுடியாது எல்லா நகரமுமே நாகர் நாகரீகத்திற்கு கட்டியம் கூறிக்கொண்டு இருந்தன. எனவே எல்லா வளமும் நிறைந்திருந்த நாகர்நாட்டின் அழகை முழுமையாக இரசிக்க இயலாமலும், நாகர்களின் தலைநகரை கண்டுபிடிக்க முடியாமலும் நட்சத்திரங்கள் திண்டாடி மருள மருள விழித்தன.
இப்படி நட்சத்திரங்கள் தலைநகர் எது? எனத் தடுமாறிக் கொண்டிருக்கும் போது நாகநகர மக்கள் இன்பக் கேளிக்கைகளில் ஆடிப்பாடி சுவைத்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். நகர் காவலரும், ஆபத்துதவிகளும், இரவுப்பணிபுரிவோரும் தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அகில உலகையே வியக்கவைக்கும் பல அற்புதங்கள் இந்த இரவிலிருந்து அரங்கேறப் போகின்றது என்பதை உணராமலே உலகப்பந்து மெல்லச் சுழன்றது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலத்து இயற்கையையும் ஒன்றாக இரசிக்கவே விசுவகர்மா தன் தலைநகரை அந்த இடத்தில் கட்டியிருந்தான். அங்கிருந்த கற்பகப் பூங்காவின் நடுவே பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட வசந்தமாளிகை ஒய்யாரமாக எழுந்து நின்றது. அதன் ஏழாவது மாடியின் சித்திரமண்டபத்து வசந்தமஞ்சத்தில் அமுத்தால் செய்த மின்னற் கீற்றென பட்டுப்பஞ்சணையில் அவள் சாய்ந்திருந்தாள்.
சாரளத்திற் பதித்திருந்த ஒளியுமிழ் கற்கள் அவளது இணையற்ற பேரழகை வெளிச்சமிட்டுக் காட்டின. அந்தப் பேரழகையும் விஞ்சி அவளது அகன்று விரிந்த கண்களிலும் மலர் முகத்திலும் அறிவின் பொலிவு தெரிந்தது. எதையோ சாதிக்கப் பிறந்தவள் என்பதை அவை சொல்லாமல் சொல்லின. சாரளத்தின் ஊடாக கோட்டை மதிலையும் தாண்டி வடமேற்குத் திசையில் அவள் பார்வை பதிந்திருந்தது. கடலில் பெரிய மரக்கலங்களும் நாவாய்களும் காட்சியளித்தன.
அவளது முன் நெற்றியில் சூடியிருந்த நாகசூடிகை  செம்மஞ்சள்நிற ஒளியைச் சிந்தியது. அவ்வொளியில் அவளது மனத்தின் உணர்வுகளை முகம் அறியத்தந்தது. அவள் கண்கள் இன்பத்தையும், மருட்சியையும் மாறி மாறிக்காட்டின.
“ஆகா! என்ன அற்புதம்! இதைத்தான் எதிர்பார்த்தேனா?” எனக்கூறியவள், திடீரென மஞ்சத்தின் மேல் ஏறிக்குதித்து “கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!” என்று ஆனந்தக் கூத்தாடினாள். இவ்வளவு நேரமும் அவளின் செய்கைகளை இரசித் தபடி அவளது தாய்மைப் பேரழகை ஓவியத்துள் அடக்க முயன்று கொண்டிருந்த மயன் தூரிகையையும் விட்டு விட்டு “இளமதி!” என ஓடோடிவந்து மனைவியை கைத்தாங்கலாகப் பிடித்து மஞ்சத்திலிருந்து இறக்கினான்.
அவனின் அன்புப் பிடியில் சிக்கிய இளமதியின் உடலிருந்த பேரானந்தத்தை மயன் உணர்ந்தான். அவன் கலைஞன் ஆதலால் அந்தக் கலைச்செல்வியின் உள்ளத்து உணர்வுகள் அவனையும் சென்று தாக்கியது.
மெல்ல அவளை நோக்கிக் குனிந்து, காதில் இரகசியமாக “இளமதி”! ” நீ கண்டுகொண்டது என்ன? நானும் அறிந்து கொள்ளலாமா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டான். மயனின் சுவாசக்காற்று இளமதியின் காதோர சுருண்ட முடிகளில் பட்டு அவளைக் கூச்சமூட்டியது. அதனால் அவள் இந்த உலகசூழுலுக்கு மெல்லத் திரும்பி இருந்தாள்.

“உங்களுக்குச் சொல்லாமலா?” சற்று யோசித்தவள், இங்கிருந்து காட்டுவது சரியல்ல, காட்டுகின்றேன். வாருங்கள்” என அவன் கையைப் பிடித்து இழுத்து அழைத்துச் சென்றாள். செம்பஞ்சுக் குழம்பு பூசிச்சிவந்த அவளது மென்பாதம் தாவித் தாவி படிகளில் ஏறுவதால் ஏற்பட்ட மாணிக்கச் சிலம் பொலி ஓர் இசையாய் தோன்றியது.

அதைக் கேட்டபடி, நாகநாட்டின் பேரரசனான என்னையே சிறுகுழந்தையைப் போல் இழுத்துச் செல்கின்றாளே, எனத் தன் மனைவியின் செயலை நினைத்து மயன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். இவள் நாகப் பேரரசின் அரசியாதலால் நானும் இவள் குழந்தை தானே என்ற முடிவுக்கு வந்தான். அதற்குள் அவர்கள் வசந்தமாளிகையின் நிலா முற்றத்திற்கு வந்திருந்தார்கள். இள மதியின் பார்வை சென்ற திசையில் மயனின் பார்வையும் சென்றது. “இளமதி!” உன்னை, இப்படிப் பரவசப்படுத்த நாகதிசையில் என்ன இருக்கின்றது?” என்று கேட்டான். அவள் தன் தளிர்க்கரங்களை நீட்டி ‘அதோ பாருங்கள்! அதோ பாருங்கள்! கடலலையின் மேலே அடுத்தடுத்து எழுந்து விழுவதைப் பாருங்கள் என் இதயதாகம் தீர்ந்தது” என்றாள். அவள் காட்டியதைப் பார்த்த மயன், அவளின் சொற்களைக் கேட்டு திடுக்கிட்டு, வியப்புடன்…
“இதயதாகமா?” என்றான்.”
“ஆம், என் இதயதாகமே” என்றாள் அவள் உறுதியாக…

தாகம் தீர்க்க வரும்…

2 comments: