Saturday, 27 October 2012

அடிசில் 38


உருளைக்கிழங்கு ரொட்டி
                              - நீரா -

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு  -  2
வெட்டிய கீரை  -  ½  கப் 
வெட்டிய வெங்காயம்  -  1 
வெட்டிய பச்சைமிளகாய்  -  1
வெட்டிய கருவேப்பிலை   -  கொஞ்சம்
மிளகாய்ப் பொடி  -  ½ தேக்கரண்டி
மாங்காய்ப் பொடி  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  1 தேக்கரண்டி
கடுகு  -  1 தேக்கரண்டி 
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி

ரொட்டிக்கு தேவையானவை: 
கோதுமை மா  -  1¼ கப்
தண்ணீர்  -  ½ கப்
உப்பு  -  1  சிட்டிகை

செய்முறை:
1.  உருளைக்கிழங்கை அவித்து,  உரித்து, உதிர்த்திக் கொள்க.
2.  பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கொதித்தடும் கடுகைத் தாளித்து, சீரகம், பச்சைமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை என்பவற்றை வதக்கி வெட்டிய கீரை, மிளகாய்ப் பொடி, மாங்காய்ப் பொடி, உப்புச் சேர்த்து கீரை வெந்ததும், உருளைக்கிழங்கை இட்டு கிளரவும்.
3.  யாவும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது இறக்கி, ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்க.
4.  வாயகன்ற பாத்திரத்தில்ரோட்டிக்கான மாவில் ஒருகப் மாவை இட்டு, உப்பும் சேர்த்து, தண்ணீர் விட்டு குழைத்து, அரை மணி நேரம் ஊறவிடவும்.
5.  ரோட்டி மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து, கிண்ணம் போல் செய்து அதற்குள் ஒவ்வொன்றுள்ளும் ஒவ்வொரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடி தனித்தனி உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க. 
6.  மிகுதி மாவை ஒரு தட்டில் தூவி உருண்டைகளை வட்டமான ரொட்டியாகத் தட்டி வைக்கவும்.
7.  தட்டையான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, தட்டிய ரொட்டியை இருபக்கமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். 

   

Thursday, 25 October 2012

ஆசைக்கவிதைகள் - 46


மன்னி மன்னிப் போறவளே!


அழகான பெண்களைக் கண்டால் அவர்களின் வயதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாது ஆண்கள் கிண்டல் செய்வது வழக்கம். மார்பளவு தண்ணியில் நடந்து செல்லும் பெண்ணின் மார்பைப் பார்த்து ஆண் கிண்டல் செய்வதையும், அதற்கு அப்பெண் சொல்லும் பதிலையும் திருகோணமலையின் இந்த நாட்டுப்பாடல்கள் சொல்கின்றன. அவன் மாதளங்காய் என்று அவளது மார்பை சுட்டியதற்கு, அவள் தன் மார்பை மாம்பிஞ்சு என்றும், குழந்தையை பாலப்பிஞ்சு என்றும் கூறுவது நாட்டுப்புற வழக்கத்தை அழகாகச் சொல்கிறது. பெண் சொல்லும் பதிலின் முடிவு “பால் முலயடா பாதகா” என்று ஏசுவதாகவும், “பால் முலையடா பாரெடா” என்று கூறுவதாகவும் இருக்கின்றது. அது கூறும் பெண்ணின் இயல்பைப் பொறுத்தது.

ஆண்: மார்பளவு தண்ணியில
                     மன்னி மன்னி போறவளே!
            மாரிலே ஆடுமந்த
                     மாதளங்காய் என்ன விலை?

பெண்: மாதளங் காயும் அல்ல
                       மாவடு பிஞ்சும் அல்ல
             பாலப் பிஞ்சு குடிக்கும்
                       பால் முலயடா பாதகா!            
                             -  நாட்டுப்பாடல் (திருகோணமலை)
                                        பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Wednesday, 24 October 2012

தருவாய் சிவகதி!

  
            

  


                 பல்லவி
நடமிடும் பாதன் நாயகியே உன்றன்
நயனங்கள் திறந்தெனை ஆதரியே!
                                                    - நடமிடும் பாதன்
                  அனுபல்லவி
மடமையை நீக்கி மதியை வளர்த்திட
மானச குருவாய் வந்தமர்ந்தனையே!
                                                     - நடமிடும் பாதன்
                     சரணம்
பொங்கி வீழ் அருவியும் பூங்குயில் கீதமும்
சிங்கத்தின் சீற்றமும் சங்கத்தின் நாதமும்
துங்கமயில் ஆடலும் தங்கமான் துள்ளலும்
எங்கெங்கும் இசையென உள்ளத்து உள்ளவே
ஐங்கரனை முன்னமர்த்தி ஆர்வமுடன் எனைநோக்கி
பைங்கரம் தொட்டு பக்குவமாய் மடி இருத்தி
மங்கல வாழ்த்துரைத்து மகிழ்வோடு 
பைந்தமிழ் தானுரைத்தாய் பரிவோடு 
                                                      - நடமிடும் பாதன்
மீட்டிட்ட வீணையில் விரைந்தெழு நாத
கூட்டுட்ட இசையின் குழுமிய வேத
பாட்டிட்ட பரத நளின நவ
பாவ ராக தாளங்களும் பயில
மையிட்ட விழிகள் மருட்டிடவும்
மந்தாரப் புன்னகை மயக்கிடவும்
கையிட்ட வளைகள் குழுங்கிடவும்
கைத்தாளம் இடுவாய் கனியோடு
                                                      - நடமிடும் பாதன்
முருகாய் மலராய் மருவாய் மெருகாய்
அருவாய் உருவாய் அனைத்துமாய் நின்றாய்
கருவாய் உயிராய் கருத்தாய் கலந்தாய்
சீரும் கல்வியும் சிறந்தோங்கு செல்வமும்
பேரும் புகழும் பெருமையும் தரவே
குருவாய் வந்தாய் குறைகள் களைந்தாய்
திருவாய் திகழ்வாய் திருவருள் பொழிய
தருவாய் சிவகதி! தாயே சிவசக்தி!
                         சரணமம்மா...... அம்மா......

[ஆரணியின் பரதநாட்டியத்திற்காக 2003ல் எழுதியது]

Tuesday, 23 October 2012

குறள் அமுது - (47)

குறள்:
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”                                       - 350

பொருள்:
பற்றேயில்லாத இறைவனின் பற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். பற்றுக்களை விட்டுவிடுவதற்காக  அப்பற்றைப் (இறைவனின் பற்றை) பற்றிக் கொள்ளுங்கள்.

விளக்கம்:
இத்திருக்குறள் துறவு என்னும் அதிகாரத்திலுள்ள கடைசிக்குறள். துறவு என்பது உலகத்தின் மேல் உள்ள பற்றுக்களைத் துறத்தல்[நீக்கிவிடுதல்]. இன்னொரு வகையில் சொல்வதானால் துறவென்பது ஆசைகளை களைந்து விடுதலாகும். எமது துன்பங்களுக்குக் காரணம் பற்றாகும். அதனாலேயே பெரியோர் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றனர். 

துன்பத்தையோ இன்பத்தையோ அளக்க அளவுகோல் இல்லை. ஒருவருக்கு இன்பமாக இருப்பது மற்றவருக்குத் துன்பமாக இருக்கலாம். உயிர்களை வதைத்தும் கொன்றும் சிலர் இன்பம் அடைகின்றார்கள் அல்லவா? எனவே இன்பமும் துன்பமும் அவரவரின் மனப்பண்பைப் பொறுத்து இருக்கும்.

பற்று இருவகைப்படும். ஒன்று அகப்பற்று. மற்றது புறப்பற்று. நானே பெரியவன், நானே செய்வேன் என்ற எண்ணத்தால் வரும் தலைக்கனத்துக்கு அகப்பற்றே காரணம். இது எனது வீடு, இது எனது கார், நீ எனது வேலையாள் என்ற இறுமாப்புக்கு புறப்பற்றே காரணம். இவ்விரு பற்றுக்களையும் பற்றிப் பிடித்துக்கொண்டு சுழல்வதாலேயே அடிக்கடி துன்பத்தால் துடிக்கின்றோம். 

இவ்விரு பற்றுக்களையும் நீக்கினால் துன்பம் இல்லாது இன்பமாக வாழலாம். பற்றுக்களை நீக்கி வாழ்வது மிகவும் இலகுவான செயல் அல்ல. பிறந்த கணப்பொழுது முதலே ஏதோ ஒன்றின் மேல் பற்று உடையவராகவே வாழ்கிறோம். பால், உணவு, உடை, கல்வி, வேலை, பொருள், தாய், தந்தை, சுற்றம், வீடு, நாடு, மொழி என பற்றுக்கள் விரிந்து செல்கின்றன. 

இன்பங்களில்  சிறந்த இன்பம் பேரின்பம்.  பேரின்பத்தில் மூழ்கித் திளைக்கும் வழி என்ன? பற்றைவிட்டால் பேரின்பம் காணலாம். ஒரு பற்றை விடுவதற்கு இன்னொன்றைப் பற்றுகிறோம். தாய்வீட்டில் வாழ்ந்த பெண், தாய் எனும் பற்றைவிட்டு காதலன் எனும் பற்றைப் பிடித்து இன்பம் காண்பது போல, யான் எனது என்னும் உலகப் பற்றைவிட்டு, பற்றே இல்லாத இறைவனின் பற்றைப் பற்றிப் பிடித்தால் பேரின்பம் காணலாம். 

Saturday, 20 October 2012

சிறுவர்கள் நாம் இங்கு கூடிசிறுவர்கள் நாம் இங்கு கூடி 
கானுயர் பெருங்காடு சூழ் 
குளத்தினை நாடி
வானுயர் மரத்தினைத் தேடி
விடுவிடெனத் தாவி ஏறி,
சேணுயர் கொம்பினில் ஆடி 
சடசடென நீரிடைப் பாய்ந்து 
நாணெறி அம்மென நீந்தி
நித்தலும் விளையாடி
செப்படி வித்தைகள் 
செய்குவம் பாரீர்!
                - சிட்டு எழுதும் சீட்டு 43

Friday, 19 October 2012

பூசைகள் சர்ப்பனையே! (வஞ்சனையே!)
இதனை நான் சொல்லவில்லை. அதுவும் பூசை செய்வோரைப்பற்றி “இவர் செய்யும் பூசைகள் வஞ்சனையே” என்று பட்டினத்தார் கூறியுள்ளார். அவர் அப்படிக்கூறக் காரணம் என்ன? அவர் மட்டுமல்ல எம் முன்னோர்கள் பலரும் பலவிதமாக எடுத்துக் கூறி இருப்பினும் நாம் அவற்றை சிறிதும் பொருட்படுத்துவதே இல்லை. 


அதனாலேயே உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கோயில்கள் கட்டி, கும்பாபிஷேகம் செய்து காலம் தவறாது பூசைகள் நடாத்திக் கொண்டு இருக்கிறோம். அந்தப் பூசைகளுக்காக எவ்வளவு பொருட்களை நாம் அள்ளி வழங்குகிறோம். நம்மை பிறர் பக்தன் என்று சொல்லவேண்டும் என்பதற்காகவும் எம்மைப்போல் திருவிழாச்செய்ய யார் இருக்கிறார் என்று கூறிப் பெருமை கொள்வதற்காகவும் பொருளை அள்ளி இறைப்போரும் இருக்கின்றனர். நாம் செய்யும் பூசைகள் யாவும் உண்மையானவையா? அவர் சைவக்குருக்கள், இவர் சிவாச்சாரியார், மற்றவர் பரம்பரை ஐயர் என்று ஏதேதோ காரணங்கள் கூறி, பட்டங்கள் சூட்டி கடவுளுக்கு பூசை செய்வோரை கடவுளுக்கும் மேலாக மதிப்பது சரியா?

பட்டினத்தார் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போமா?

“நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே” 

‘முறைகள்(நேமங்கள்), நம்பிக்கைகள்(நிட்டைகள்) என்று சொல்லியும், வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் நீதிநெறி என்று கூறியும், ஓமங்கள் செய்யவேண்டும், நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்யவேண்டும் எனவும், காலை, உச்சிப்பகல், மாலை நேரங்களில் மந்திரங்களால் செய்யும் வழிபாடு (சந்தி செபமந்திரம்) என்றும், தியானத்தில் மூச்சை அடக்கி இருக்க வேண்டும் (யோகநிலை) என்றும், கடவுளின் பெயர்களைக் கூறுங்கள் (நாமங்கள்) என்றும், சந்தனத்தையும் திருநீற்றையும் பூசி அழகாக சாமங்கள் தோறும் இவர்கள் செய்கின்ற பூசைகள் வஞ்சனையே (சர்ப்பனையே)’.  என்று பூசைகள் செய்வதற்காகச் சொல்லப்படும் அத்தனை சொற்களையும் சேர்த்து தொகுத்து எல்லாவற்றையும் வஞ்சனையே என்று கோடிட்டு பட்டினத்தார் காட்டித்தந்தும் நம் தமிழ்ச்சாதி இன்னும் அவர் சொல்லைப் புரிந்து கொள்ளவில்லையே!

வஞ்சனை என்றால் என்ன? உள் ஒன்று நினைத்து, புறம் ஒன்று செய்வது வஞ்சனையாகும். தாங்கள் செய்வது மடமை என்பதும் கபடம் என்பதும் பூசை செய்வோர் பலருக்கு நன்றாகத் தெரியும். மனித வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றிக்காகவே தெரிந்தும் அவர்கள் பூசைகளை செய்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து, நம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டும். ‘வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்’ என்பது தமிழர் சொன்ன உலகநீதி அல்லவா?
இனிதே,
தமிழரசி.

Wednesday, 17 October 2012

நயப்பது எப்போதோ?


கண்ணினில் இருக்கின்றாய்
           களிநடம் புரிகின்றாய்
எண்ணிய கருமங்கள்
           எளிதினில் அருள்கின்றாய்
திண்ணிய திடந்தோளில்
           திகழ்தரு கடம்போடு
நண்ணியே வருகின்றாய்
           நயப்பது எப்போதோ!

Sunday, 14 October 2012

என்னவள கூட்டிவாவே!

 ஆசைக்கவிதைகள் - 45

பண்டைய இலங்கையில் இருந்த சங்ககாலப் பழமைமிக்க ஊர்களில் குதிரைமலையும் ஒன்று. சங்கப் புலவரான பெருந்தலைச் சாத்தனாருக்குத், தன் தலையை வெட்டி எடுக்கும் படி தனது உடைவாளைக் கொடுத்த கொடைவள்ளலான குமணன் அரசாண்ட மலையே குதிரைமலை. நான் ‘கொழும்பும் குமணனும்’ என்று எழுதிய ஆக்கத்தைப் படித்தவர்கள் அதனை அறிந்திருப்பர். அக் குதிரைமலை இப்போதும் மன்னாரில் இருந்து புத்தளம் செல்லும் பாதையில் உள்ள வில்பத்து பூங்காவனத்தின் ஒருபகுதியாக இருக்கிறது. அந்தக் குதிரைமலையின் இடிந்தகரையில் ஓர் இளைஞன் வாழ்ந்தான். அவனுக்கு வசதிகள் இருந்தும் திருமணம் நடைபெறவில்லை. தன் மன ஏக்கத்தை காகத்திற்குச் சொல்லி, ‘என்னவளைக் கூட்டி வா!’ என்கின்றான்.
குதிரைமலை

ஆண்:
இடிஞ்சகர ஓரத்தில
          இத்திமர நிழலிருக்கு
கடிச்சுத் தின்ன கரும்பிருக்கு
          கட்டழகி யாரிருக்கா!

ஒத்தமாட்டு வண்டிகட்டி
          ஓட்டிச்செல்ல நானிருக்க
கத்தும்கிளி குரலசைய  
          கதையளக்க யாரிருக்கா!

முத்துச்சம்பா நெல்லிருக்கு
          மூணுகாணி நிலமிருக்கு
பக்குவமாய் சமச்செடுக்க
           பக்கத்துணை யாரிருக்கா!

காளைமாடு நாலிருக்கு
           காவலுக்கு நாயிருக்கு
களத்துமேடில நானிருந்தா
           கஞ்சியூத்த யாரிருக்கா!

ஐஞ்சுவெள்ளி குடமிருக்கு
           ஐம்பொன் நகையிருக்கு
பஞ்சுமெத்த தானிருக்கு
           படுத்துறங்க யாரிருக்கா!

ஆறுகடந்து வந்தா
           அழகான வீடிருக்கு
ஆற்றுமண மேட்டில 
            அடியளக்க யாரிருக்கா!

பத்துபடி பால்கறந்தா
            பகிர்ந்துதர யாரிருக்கா
எத்தித்திரி காக்கையாரே
            என்னவள கூட்டிவாவே!
                              -  நாட்டுப்பாடல் (குதிரைமலை)
                                          - பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
இனிதே,
தமிழரசி.

Saturday, 13 October 2012

குறள் அமுது - (46)

குறள்:
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”                                - 941

பொருள்:
திருக்குறளில் உள்ள 'மருந்து' என்னும் அதிகாரத்தின் முதலாவது குறள் இது. வாதம் பித்தம் கோழை (சிலேற்பனம்) என்று மருத்துவ நூலோர் எண்ணியச் சொல்லிய மூன்றும் கூடினாலும் குறைந்தாலும் நோயை உண்டாக்கும்.

விளக்கம்:
எமக்கு எதனால் நோய் வருகிறது என்ற காரணத்தை திருவள்ளுவர் இக்குறளில் கூறுகிறார். அக்காரணத்தையும் மருத்துவ நூலோர் சொன்னதாச் சொல்கிறார். இக்குறளில் நூலோர் எனப் பன்மையில் திருவள்ளுவர் குறிப்பது, அவர் காலத்திற்கு முன் மருத்துவ நூலை எழுதியோரையே. திருவள்ளுவர் காலத்தில் தமிழில் பல மருத்துவ நூல்கள் இருந்ததையும் இக்குறள் ஒரு வரலாற்றுப் பதிவாகச் சொல்கிறது.

இந்நாளில் வாத, பித்த, சிலேற்பனம் எனச் சொல்வதையே வளி முதலாக எண்ணிய மூன்றும் என்கிறார். அவற்றை அந்நாளைய மருத்துவ நூலோர் வளியை முதலாவதாகக் கொண்டு எண்ணியதாகத் சொல்கிறார்.  வளி - வாயு - காற்று - வாதம் யாவும் ஒன்றே. உயிர்களின் உடலின் உள் உறுப்புக்களின் தொழிற்பாட்டிற்கு உதவும் வளியை வாதம் என்று அழைப்பர். நூலோர் வளி, பித்தம், கோழை எனக் கணக்கிட்டுச் சொன்ன மூன்றும் நோய்கள் அல்ல. எம் உடல் நன்கு தொழிற்படத் தேவையானவை. 

வளி அதாவது வாதம் மூச்சு விடுவதற்கும், இரத்த ஓட்டத்திற்கும், மலம், சிறுநீர், வியர்வை, விந்து என்பன கழிவதற்கும் உதவுகிறது. பித்தம் உண்ட உணவு செரிக்கவும், பசி, தாகம் ஏற்படவும் பார்வைக்கும் உதவுகிறது. கோழை தசை நார்களின் இயக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது. அந்நாளைய மருத்துவர் கை மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே ஆள்காட்டி விரல், நடுவிரல் மோதிரவிரல் நுனி மூன்றையும் மெல்ல வைத்து அழுத்தியும் தளர்த்தியும் நாடி பார்ப்பர். ஆள்காட்டி விரலால் வாதத்தின் தன்மையையும், நடு விரலால் பித்தத்தின் தன்மையையும், மோதிர விராலால் கோழையின் தன்மையையும் ஆராய்ந்து என்ன நோய் என்பதைக் கண்டுடறிவர்.

இந்த மூன்றின் அளவும் காலநிலை மாற்றத்தாலும், இயற்கையின் வேறுபாட்டாலும், நுண் கிருமிகளின் தொழிற்பாட்டாலும் மட்டுமல்ல எமது உணவு, உடை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றாலும் கூடிக் குறையும். பண்டைய மருத்துவ நூலை எழுதியோர் சொன்ன வாதம், பித்தம், கோழை ஆகிய மூன்றின் அளவும் கூடினாலும் குறைந்தாலும் நோய் வரும். ஆதலால் இந்த மூன்றின் தன்மையும் மாறுபடாது இருப்பின் நோய் எம்மை நெருங்காது.

Wednesday, 10 October 2012

அறிந்தும் அறியாதது - 1

கடம்பமலர் எது?

சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமலரை, விக்கிபீடியா (Wikipedia) கடம்ப மலர் என்று சொல்லவில்லை. கிருஷ்ணன் கோபியருடன் ஆடி மகிழ்ந்த மரத்தை ஹிந்தியில் “கடம்ப்” என்பார்கள். அதனையே விக்கிபீடியா சொல்கிறது. அதன் தாவரவியற் பெயர் கடம்ப(Cadamba) என முடிவதால் இந்திய மொழிகளில் எல்லாம் அதனை கடம்ப (Neolamarchia Cadamba) என அழைப்பர். அந்த மரத்தை சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமரம் (kadamba) என பலரும் நினைக்கிறார்கள். அப்பூவை கீழேயுள்ள படத்தில் பாருங்கள். உருண்டையாக கோளமாக இருக்கின்றது.  அதன் நிறமோ மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்தே இருக்கின்றது.

கிஷ்ணன் கோபியருடன் ஆடிய கடம்பா[கடம்ப்] மரப்பூ

எமது சங்ககாலப்புலவர்கள் சங்க இலக்கியங்களில் கூறியிருக்கும் கடம்பமரத்தில்  வெண்கடம்பு (Barrintonia Calyptrata), செங்கடம்பு(Barringtonia Acutangula) என இருவேறு கடம்பமரங்கள் இருக்கின்றன. கடம்பமரத்தை மராமரம் என்றும் தமிழில் சொல்வர். கடம்பமலர் எப்படி இருக்கும் என்பதை சங்க இலக்கியப் பாடல்களால் அறிவோமா?

“நெடுங்கான் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி
வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு”               
                                             - (ஐங்குறுநூறு: 383)

முருகன் அணிந்த வெண்கடம்ப மரப்பூ

வலமாகச் சுழன்று ஒவ்வொரு பூவாக கீழிறங்கி வந்து, தொங்குகின்ற வெள்ளைநிறப் பூங்கொத்தைப் பறிக்க உயர்ந்த கடம்பமரத்தின் சிறுகிளையைப் பற்றிப் பிடித்ததாக ஐங்குறுநூறு சொல்கிறது. ‘வலஞ்சுரி வால் இணர்’ எனும் சொல் வலமாகச் சுரித்த வெள்ளைநிற(வால்) பூந்துணரை கடம்பம் பூந்துணராகச் சுட்டுகின்றது. வெண்கடம்ப மரம் இருந்ததையும் அதன் மலர் பூந்துணராகத் தொங்குவதையும்  இந்த ஐங்குறுநூற்றுப் பாடலால் அறியலாம்.


முருகன் அணிந்த செங்கடம்ப மரப்பூ

“செங்கான் மராஅத்து வரிநிழல் இருந்தோர்”     
                                             - (ஐங்குறுநூறு: 381)
சிவந்த பூ(செங்கான்) உள்ள கடம்பமர நிழலில் இருந்தவர்களை இப்பாடல் வரிகாட்டுகிறது. ஆதலால் செங்கடம்பு மரமும் இருந்தை நாம் தெரிந்து கொள்ளலாம். 

விக்கிபீடியா காட்டும் கடம்பபூப் போல் கோளமாக, சங்க இலக்கியம் சொல்லும் கடம்ப பூந்துணர் இருக்காது என்பதை முருகனின் மார்பில் அசையும் கடம்பபூமலையை 
“இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து 
உருள் பூந்தண்தார் புரளும் மார்பினன்”     
                                          -(திருமுருகாற்றுப்படை: 10 -11)
என்று நக்கீரர் சொல்வதும் எடுத்துக் காட்டுகிறது.

“உருள்பூந்தண்தார்” என்பது உருளை வடிவான பூந்தார் என்பதையே குறிக்கின்றது. அது உருண்டை (கோளம்) வடிவான பூந்தாரைக் குறிக்கவில்லை. மேலே படத்தில் உள்ள வெண்கடம்பு மலரும் செங்கடம்பு மலரும் உருளையாக இருப்பதைப் பாருங்கள். அத்துடன் இன்று திருப்பதி என அழைக்கும் இடம் அந்நாளில் வெண்கடம்புக் காடாக இருந்ததால் வெண்கடம் என்றும் வேங்கடம் என்றும் அழைக்கப்பட்டது. அதனை திருப்பதி இறைவனை வெங்கடேஸ்வரன் என்றும் வேங்கடேஸ்வரன் என்றும் சொல்வதால் அறியலாம். 

நம் முன்னோர் சொன்ன உண்மையான கடம்பமலர் எது என்பதை நாம் அறிந்துகொள்வதோடு அதனை எமது இளம் தலைமுறயினர்க்கு எடுத்துச் சொல்வோமா!
இனிதே,
தமிழரசி.

Monday, 8 October 2012

அடிசில் 37

பேரீச்சம்பழக் கேக்

                                               - நீரா -
தேவையான பொருட்கள்:
விதையற்ற பேரீச்சம் பழம்  -  500 கிராம்
தேயிலைச் சாயம்  -  1 கப் 
பட்டர்  -  250 கிராம்
சீனி  -  250 கிராம்
ரவை  -  250 கிராம் 
முட்டை  -  4
திராட்சை வற்றல் (currants) - 50 கிராம்
வெட்டிய முந்திரிப் பருப்பு  -  50 கிராம்
அப்பச்சோடா  -  2  தேக்கரண்டி
வனிலா  -  1½ தேக்கரண்டி 

செய்முறை:
1.  பேரீச்சம் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி தேயிலைச் சாசத்தில் 6 - 7 மணி நேரம் ஊறவிடவும்.
2.  பட்டரையும் சீனியையும் சேர்த்து அடிக்கவும்.
3.  அவற்றுடன் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும்.
4.  ரவையுடன் அப்பச்சோடாவைக் கலந்து அரித்துக்கொள்க.
5.  அரித்த ரவையை சிறிது சிறிதாக முட்டைகலவையுடன் சேர்த்து கலந்து கொள்க.
6.  அக்கலவையுள் முந்திரிப்பருப்பு, திராட்சை வற்றல், வனிலா மூன்றையும் சேர்த்து மெதுவாக கலந்து கேக்டின் உள் இட்டு மட்டப்படுத்தவும்.
7.  அதனை 180°C யில் சூடேறிய அவணில் 50 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

Sunday, 7 October 2012

நயினை சிவ நாகராஜ நாயகி


கீதமேடையில் பாடுவாள் - தினம் 
           கீதநாத சொரூபினி
வேதமேடையின் வித்தகி - நல்ல 
            வேதஞான ரூபினி

பாதகிண்கிணி ஆர்க்கவே - பதம் 
            பாடியாடு பாவகி
நாதமேடையில் ஆடுவாள் - நிதம் 
            நாகபூசண நாதகி

மோகமேடையின் மோகினி -மன 
           மோனராக மாயகி
நாகமேடையில் தூங்கிடும் - சிவ
            நாகராஜ நாயகி
இனிதே,
தமிழரசி.

Saturday, 6 October 2012

ஆசைக்கவிதைகள் - 44

மடியிருத்தி காண்பதெப்போ!


இலங்கை வரலாற்றைப்பற்றி இருக்கு வேதத்திலும் பேசப்பட்ட ஓரிடம் புலத்தியநகர். அதனை நாம் இன்று பொலநறுவை என அழைக்கின்றோம். இருக்கு வேதகாலத்திற்கு முன்பே நாகரீகச் செழுமை உடையவர்களாக தமிழர் அங்கு வாழ்ந்ததை இருக்கு வேதம் எமக்கு அறியத்தருகின்றது. பன்னெடுங் காலமாக மனிதநாகரீகத்தில் பண்பட்ட இடத்தில் வாழ்ந்த ஒர் இளைஞன் தன் மச்சாளின் அழகைக் கூறி ஏங்கும் நாட்டுப்பாடலே இது.

ஆண்: முத்து முத்தாப் பல்லழகு
                    முல்லை போல சிரிக்கயில 
          சொக்கத் தங்க நிறத்தழகு
                     சொக்கி என்ன இழுக்குதல்லோ!

           மை எழுது கண்ணழகு
                      மயக்கி என்ன அழைக்கயில 
           பையப் பைய நடையழகு
                      பாக்க மனம் ஏங்குதல்லோ!

            கத்தும் குயில் குரலழகு
                      காதோரம் கேக்கயில 
            நித்திரையில் உன் அழகே
                       நினைவாக நீளுதல்லோ!

            பூச்சூடும் பின்னல் ஆடயில
                       பின்னி மனம் கிரங்குதல்லோ
             மச்சாளே! மயக்குமுன் அழகெலாம் 
                       மடியிருத்தி காண்பதெப்போ!
                                         -  நாட்டுப்பாடல் (பொலனறுவை)
                                        (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 


எஸ் ஏ ராஜ்குமார் இசையில் ஹரிஹரன் பாடிய கண்ணுபடப் போகுதையா படப்பாடலும் இந்நாட்டுப் பாடலைப் போல, காதலியின் அழகை எடுத்துக் கூறும். அப்பாடலில் இருந்து சில வரிகள்.


"மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணிப் பல்லலகு
                                                                       - மூக்குத்தி முத்தழகு 
பத்துவிரல் பூவழகு பாதம் தங்கத் தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு
மருதாணிக் கொடிபோல மவுசாக அவ நெரமா
ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ 
மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ
வலை வீசும் கண்ணழகு வளைந்தாடும் இடையழகு
கருநாகக் குழல் அழகு கற்கண்டு குரல் அழகு ....
                                                                         - மூக்குத்தி முத்தழகு "