Tuesday, 25 September 2012

அடிசில் 36

பால் கோவா

                                    - நீரா -தேவவையான பொருட்கள்:
பால்  -  2 லீற்றர்
சீனி  -  200 கிராம்
ஏலக்காய் பொடி  -  1 சிட்டிகை
மிளகுப் பொடி  -  1 சிட்டிகை

செய்முறை:
1.  அடி கனமான அடிப்பிடியாத பாத்திரத்தில் பாலை ஊற்றி மெல்லிய சூட்டில் காச்சவும்.
2.  பால் அடிப்பிடியாது எந்நேரமும் துழாவவும்.
3.  மூன்றில் ஒரு பங்களவு பால் வற்றிவரும் பொழுது சீனியைச் சேர்த்து கிண்டவும்.
4.   யாவும் கரண்டியுடன் சேர்ந்து வரும் பொழுது ஏலக்காய், மிளகுப் பொடி சேர்க்கவும்.
5.  பாலில் உள்ள நெய் பிரிந்து வரும் போது இறக்கி விரும்பிய வடிவில் பிடித்தோ, வெட்டியோ எடுக்கவும்

குறிப்பு:
இதனை நம் முன்னோர் திரட்டுப்பால் என அழைத்தனர். பாலில் நெய் இருப்பதால் நெய் சேர்க்கத் தேவை இல்லை. வெண்ணெய் இல்லாத பாலானால் சிறிது நெய் சேர்க்கவும்.

Monday, 24 September 2012

மாண்டதுவே!


அவமே நாளைக் கழித்துகந்து
           ஆங்காரத்துள் ஒளித்திருந்தே
பவமே புணரும் காரணத்தால்
           பாவப்புனையுள் வீழ்ந்திருந்தேன்
தவமே அறியாத் தடுமாறி
           தானெனஎண்ணி மகிழ்ந்திருந்தே
சிவமே உணராச் சிந்தையதாய்
          சோர்ந்தெனதுள்ளம் மாண்டதுவே!

Sunday, 23 September 2012

எவரும் யாதும் யானாகும் பேரின்ப நிலை

 பக்திச்சிமிழ் - 37

மனித மனம் மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போன்றது. அது ஒரு கண நேரம் கூட ஓரிடத்தில் நிலைத்து நிற்காது. கற்பனைக் குதிரையில் தாவி ஏறி அண்ட கோளங்களையே ஒரு கணத்தில் சுற்றி வரும். அப்படிப்பட்ட மனித மனம் எனும் சிந்தனை செதுக்கப்பட்டதாலேயே இன்றைய மனிதர்களாகிய நாம் இயற்கையுடன் போட்டி போட்டு, இயற்கையை அழித்து எம் வசதிகளைப் பெருக்கி வாழ்கின்றோம். இந்த வசதி வாய்ப்புகள் யாவும் ஒருசில மனிதரின் சிந்தனையின் வெளிப்பாட்டாலாயே எமக்குக் கிடைத்திருக்கின்றன. எதுவித சிந்தனையும் அற்று, மற்றையோரின் எண்ணத்தால் கிடைத்தவற்றை பணம் கொடுத்து வாங்கி மகிழ்கிறோம். 

உதாரணமாகச் சொல்வதானால் தொலைக்காட்சி (TV) எப்படி வேலை செய்கின்றது? அதனை யார் கண்டுபிடித்தார்? என்னென்ன தொழில் நுட்பங்கள் அதற்கு தேவை? அத்தொழில் நுட்பங்கள் எப்படி தொழிற்படுகின்றன? போன்ற பலவாறன கேள்விகளுக்கு விடை தெரியாமலே அதனைப் பார்த்து இரசிக்கிறோம். மனிதர் கண்டுபிடித்த பொருட்களையே எவையெவை, என்ன செய்கின்றன என்பதை அறியாமலே வாழும் நாம், உலகப் பொருள்கள் யாவும் எமது என்றும், எனது என்றும் இறுமாந்து வாழ்கிறோம். இந்த இறுமாப்பை செருக்கு என்றும் சொல்வர்.

பொருள்களின் மேல், உறவுகளின் மேல், மொழியின் மேல், நாட்டின் மேல் ஏன் நம் மதத்தின் மேலும் ஆழ்ந்த பற்று வைத்து நம்மை நாமே அறியாதவர்களாக இருக்கிறோம். இந்தப் பற்று இருவகைப்படும்.   யான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. ஆசையே பற்றுகளுக்கு காரணம். ஆசை விலக விலக பற்று அற்றுப்போகும். எதற்காக பற்றுக்களை நீக்க வேண்டும்? அதனால் அடையும் பயன் என்ன? பற்றுக்கள் நீங்கினால் வானவர்க்கும் அதாவது தேவர்க்கும் கிடைக்க முடியாத உயர்ந்த உலகமாகிய முத்தி உலகம் கிட்டும் என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்.
“யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”

இந்த யான் எனது ஆகிய இரு பற்றுக்களும் நீங்கினால் பார்க்கும் இடம் எங்கும் கடவுள் இருக்கும் கருவறையாகத் தெரியுமாம் என்கிறார் தாயுமானசுவாமிகள்.
“என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின்
சன்னதியாம் நீ பெரிய சாமி பராபரமே”                                     
                                                - (பராபரக் கண்ணி)

இப்படி பார்க்கும் இடம் எங்கும் கடவுளாகத் தெரியக் காரணம் என்ன?  எனது என்பதும் யான் என்பதும் வேறாக நீங்கிப் போக, எவரும் யாதும் யானாகும் தன்மை வருமாம். எவரும் என்று அழைக்கப்படுகின்ற உயர்திணை உயிர்களும், யாதும் என்று சொல்லப்படுகின்ற அஃறிணைப் பொருட்களும் தானே என உணரும் நிலைவரும். எப்பொருளும் தானாகும் நிலையே அது. அது கற்பனைக்கு எட்டாத நிலையாகும். அதனை
“எனது யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
          இதய பாவன அதீதம் அருள்வாயே!”                
                                               - (திருப்புகழ்)
என அருணகிரிநாதர் காட்டுகிறார். எனது யான் என்று சொல்லப்படுகின்ற அகப்பற்றும் புறப்பற்றும் வேறாக அற்றுப்போக, எவ்வுயிரும் எப்பொருளும் ஒன்றாகி மனதால் எண்ணிப் பார்க்கமுடியாத அந்த நிலையில் நானாகும் தன்மையை (எனக்குக் கிடைக்க) அருள்வாய். அந்த இன்பநிலையே பேரின்ப நிலையாகும்.
இனிதே,
தமிழரசி.

Thursday, 20 September 2012

வளைத்தெடுக்க மாட்டேனா!

ஆசைக்கவிதைகள் - 43

ஓர் ஊரின், அல்லது ஒரு நாட்டின் எல்லையில் உள்ள காட்டை கண்டங்காடு என்று அழைப்பர். கண்டம் என்பது எல்லை, முடிவு என்ற கருத்தையும் தரும். அதனை காவற்காடு என்றும் கூறுவர். காவற்காடு அந்த ஊரின் அரணாக இருக்கும். அரசர்கள் ஆண்ட காலத்தில் பகைவரும், காட்டு விலங்குகளும் ஊருக்குள் நுழைந்து தீங்கு செய்யாதிருக்க, கண்டங்காட்டை பலம்பொருந்திய வீரர்கள் காவல் செய்வர். 

அப்படிப்பட்ட பெருவீரன் ஒருவன் கண்டங்காட்டை காவல் செய்தான். அவனைத் திருமணம் செய்ய இருக்கும் கன்னிப்பெண், அவன் மேலாடை இன்றி காவல் செய்வதைக்கண்டாள். அவனது கட்டான உடலை மற்றவர் பார்த்து, கண்பட்டு அவனுக்கு ஏதாவது நடந்திடக்கூடாது என்ற காரணத்தால் மேலாடையால் உடலை மூடச்சொல்கிறாள். தான் திருமணம் செய்ய இருப்பவளின் முன்னே மேலாடை இன்றி நிற்கக் கூச்சப்பட்டு, அவளைக் கடைக்கண்ணால் பார்க்கிறான். 

இரண்டு நாளில் தன்னைத் திருமணம் செய்ய இருக்கும் பெருவீரனான அவனின் கூச்சமும், நடுக்கமும்  கடைக்கண் பார்வையும் கண்டு, 'சன்னிக்காச்சல் வந்த காகம்போல' அவனுடல் நடுங்குவதாகக் கூறி அவள் நகைக்கின்றாள். அவனே அவளின் நெஞ்சம் எல்லாம் சூரிய ஒளிபோல நிறைந்திருக்கிறான் என்பதையும் அவனின் நடுக்கம் போக்க வன்னிமரக் காட்டில் தழுவுவாள் என்பதையும் நாட்டுப் பாடலாகச் சொல்கிறாள். 

இந்த நாட்டுப்பாடல் அந்நாளில் ஈழத்தமிழரின் திருமணத்தின் போது ஆணும் பெண்ணும் பூவளையல் போட்டுக் கொள்ளும் வழக்கத்தை சொல்கிறது.

பெண்: கண்டங்காட்டு மூலயில
                       காவலுக்கு நிற்பவரே!
            கண்ணுபடப் போகுதையா
                       கட்டுடல மூடுமையா!
            
            கன்னிஎன் நெஞ்சமெலாம்
                       கதிராக நீர்இருக்க
            கலங்கித் தவிப்பதென்ன
                        கடயோரம் பாப்பதென்ன!

             எண்ணிரெண்டு நாள்போக
                       என்மடியில் நீர்தூங்க
             பெண்மனதை நீர்அறிய
                       பூவளையல் போட்டிடுவார்.

             சன்னிகண்ட காகம்போல
                       சதிராடும் உம்முடல
             வன்னிமரக் காட்டிடையே
                       வளைத்தெடுக்க மாட்டேனா! 
                                             -  நாட்டுப்பாடல் (வன்னிவிளாங்குளம்)
                                                 (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Tuesday, 18 September 2012

குறள் அமுது - (44)


குறள்:
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”                                      - 783

பொருள்:
நூல்களைக் கற்கக் கற்க அவை இன்பம் தருவது போல பண்புடையவர் நட்பும் பழகப் பழக இன்பம் தரும்.

விளக்கம்:
நட்பு எனும் அதிகாரத்தில் உள்ள மூன்றாவது திருக்குறள் இது. அவ்வதிகாரம் நட்பின் சிறப்பைப்பற்றிப் பேசுகிறது. பண்புள்ளவர்களின் நட்பு எப்படியானது என்பதை இக்குறள் சொல்கிறது. நல்ல நூல்கள் படிக்கப்படிக்க, புதுப்புதுக் கருத்துக்களைத் தந்து, நம் அறிவையும் மகிழ்வையும் பெருக்குவது போல பண்புள்ளவர்களின் நட்பும் அறிவையும் மகிழ்வையும் கொடுக்குமாம்.

நல்ல நூல்களைக் கற்கக்கற்க மனிதவாழ்வின் மயக்கங்களை அவை நீக்கும். நமது அறியாமை இருளைப் போக்கி அறிவொளியைத் தருவது நல்ல நூல்களே. சில நூல்களை ஒருமுறை கற்பதைவிட பலமுறை கற்றாலும் அப்போதுதான் கற்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைத் தந்து எம்மை இன்னொரு கோணத்தில் சிந்திக்க வைக்கும். நாம் முன்னர் சிந்தித்துப் பார்க்காத புதுக்கருத்தை அவை தரும். அதற்குக் காரணம் எமக்கு ஏற்பட்ட அறிவுத் தெளிவே. 

“பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்”
பாடு என்பது உலக ஒழுக்கத்தைக் குறிக்கும். பண்பாடு என்பது பண்படுத்தப்பட்ட ஒழுக்கம் ஆகும். பண்பு என்று சொல்லப்படுவது, உலகஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து அதன்படி நடத்தலாகும். உலக ஒழுக்கத்தின் படி நடப்பவரே பண்புடையவர். அப்படி உலக ஒழுக்கத்தை வாழ்ந்து காட்டுகின்ற அரிய மனிதரின் நட்பு எமக்குக் கிடைத்தால் நூல்களால் பெறும் அறிவுத்தெளிவு தரும் இன்பத்தைப் பெறுவோம்.

பண்புடையவர்களின் நட்பால் வரும் இன்பமானது உண்மையானதாகவும், அன்பானதாகவும், அறிவை வளர்ப்பதாகவும் இருக்கும். பண்பானவருடன் பழகப்பழக நாமும் பண்பட்டு பண்பாளர்களாக உயர்வோம். எனவே பண்பாளர்களின் நட்பை நாடித் தேடிக்கொள்ள வேண்டும். சிறந்த நூல்கள் படிக்கப்படிக்க இனிமை தருவது போல உலகத்தோடு சேர்ந்து ஒழுகும் பண்புடையவர் தொடர்பும் பழகப்பழக மகிழ்ச்சியைத் தரும்.

‘நவில் தொறும் நூல்நயம் போலும்‘ என்ற இந்த உவமையில் இலக்கியத்தின் சிறப்பை வள்ளுவர் கூறுவதால் அவர் ஓர் இலக்கிய ஆசிரியராக மட்டுமல்ல ஒரு சிறந்த மாணாக்கனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் பாங்கை காணமுடிகிறது. 

Monday, 17 September 2012

பூங்கவிதை


பெண்மையெனும்
பூங்கவிதை
பேணுமந்த 
தாய்மைக்கு
காலெதற்கு?
வஞ்சியிவள் 
வாழ்வுதனில் 
வந்துதித்த 
செல்வமதைத்
தாங்கி நின்று
தாய்மை எனும்
தத்துவத்தை
தரணிக்குக்
காட்டுகிறாள்.
                 - சிட்டு எழுதும் சீட்டு 41

Saturday, 15 September 2012

அடிசில் 35

கொள்ளு வடை

                              - நீரா -

தேவையான பொருட்கள்:
கொள்ளு  -  1 கப்
வெட்டிய வெங்காயம்  - 1
வெட்டிய பச்சை மிளகாய்  -  5
வெட்டிய இஞ்சி  -  1 தேக்கரண்டி
வெட்டிய கறிவேப்பிலை  - கொஞ்சம்   
தேங்காய்ப்பூ  -  2 தேக்கரண்டி
 மிளகு  -  1/2 தேக்கரண்டி
சீரகம்  -  1/2 தேக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு

செய்முறை:
1.  கொள்ளை நகச்சூடான நீரில் கழுவி, 3 - 4 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீர் இல்லாது வடித்துக் கொள்க.
2.  கொள்ளுடன் தேங்காய்பூ, மிளகு, சீரகம்,  உப்பு சேர்த்து உதிராத உருண்டைகளாகப் பிடிக்கக் கூடியதாக சிறிது தண்ணீர்விட்டு கிரைண்டரில் அரைத்தெடுக்கவும்.
3.  அதனுள் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துக் குழைத்து வடகளாகத் தட்டிக் கொள்க.
4.  வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
5.  சூடான எண்ணெயில் தட்டிய வடைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது தமிழ்ப் பழமொழி. உடலின் நிறையைக் குறைக்க கொள்ளு மிக முக்கியமான உணவாக பண்டை நாட்களில் பயன்பட்டது. அதனாலேயே இப்பழமொழி உண்டானது. கொள்ளு உண்பதால் இரத்த அழுத்தம் குறையும். கொள்ளில் அதிக இரும்புசத்தும் இருக்கிறது.

Friday, 14 September 2012

தமிழரின் நான்மறை எது? - பகுதி 1


தமிழ்மொழிக்கு பலவகைச் சிறப்புக்கள் இருக்கின்றன. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழால் இலங்குவது அதன் தனிப் பெரும் சிறப்பாகும். பிறமொழி பேசிய அறிஞர்கள் சிலர்  வடமொழியாகிய சமஸ்கிருதமே தமிழுக்கு மூலமென தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அவற்றை நம்பி அக்கருத்துக்களை மீண்டும் மீண்டும் சொல்வோர் யாவரும் வடமொழி இலக்கண நூலை படித்தே தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் செய்தார் என உழுதசால் வழியே உழுகின்றனர். 

தொல்காப்பியர் கூறும் செய்யுள் இயலில் வரும் பா வகைகளிலே கலிப்பா, வெண்பா போன்ற செய்யுள் வகைகளை வடமொழி அறியாது. அவை தமிழுக்கே உரித்தான தனித்துவத்தைப் பேணும் செய்யுள் வகையாகும். திருக்குறள் அத்தகைய தனிச்சிறப்புப் பொருந்திய ஈரடி வெண்பாவால் ஆனது. எனவே பழந்தமிழ் நூல்களைக் கொள்ளை அடித்தோரால் திருக்குறளை கொள்ளை அடித்து மாற்றுடை உடுத்தி மீண்டும் எம்முன் நடை பயிலவிட முடியவில்லை. 

அதனாலேயே
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”            - (பாரதியார் பாடல்)
எனப்பாடி தனக்குத்தானே மணிமகுடம் சூட்டிக்கொள்ள பாரதியாரால் முடிந்தது. நம்மை நாமே ‘வான்மறையாம் உலகப்பொதுமறையை உலகுக்கு அளித்து வான்புகழ் கண்ட உலகத் தமிழினம்’ எனக் கூறமுடிகின்றது. 

“தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலில் தோன்றாமை நன்று”           - (குறள்: 236)
என்ற தனது கொள்கைக்கு தானே இலக்கணமாக நிற்பவர் திருவள்ளுவர். 

ஒருவர் எதைச் செய்தாலும் புகழ் உண்டாகும் படி அவரது புகழ் விளங்கச் செய்யவேண்டும். அப்படிச் செய்யமுடியாதவர் அதனைச் செய்வதைவிட செய்யாதிருத்தல் நன்று என்பதே இக்குறளின் கருத்தாகும்.

தன்புகழை இந்த உலகில் என்றும் நிலைத்திருக்கச் செய்யவே திருக்குறளை திருவள்ளுவர் இயற்றி இருக்கிறார் என்பதை
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்”             - (குறள்: 233)
என்ற குறள் காட்டுகிறது.

“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”           - (குறள்: 355)
அல்லவா?  பசி எடுத்தால் நாம் உணவு தேடுவோம். இந்தத் தேடுதலில் முதலில் எழுவது ‘எதை உண்பது?’ என்ற கேள்வி. அடுத்து விரும்பியதை சமைத்து அல்லது உணவகத்தில் சென்று சாப்பிட்டபின்னர் அது எப்படி இருந்தது என்பதை விமர்சிப்போம். உப்பு, காரம்  கூடவா? குறைவா? வெந்ததா, வேகவில்லையா என்ற கருத்துக்கணிப்பு. மூன்றாவதாக உணவு நன்றாக இருந்தால் மீண்டும் அதை உண்ணவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு பாவனை இருக்கும். 

இந்த மூன்று நிலையும் இருந்தால் தான் நாம் மெய்ப்பொருளைக் காணலாம். அதாவது ஒரு பொருளின் உண்மைத்தன்மையை அறிய கேள்வி எழுப்பப்பட வேண்டும். எமக்கு எழும் கேள்வியைப் பொறுத்தே அப்பொருளைப் பற்றிய கருத்துக் கணிப்பை நாம் பெறுவோம். அக்கருத்தே அப்பொருள் என்ன என்ற முடிவைத்தரும். நீரை தேன் என்றும், தேனை நீர் என்றும் நாம் மயங்குவதில்லை. தன்மையான நீரைத் தண்ணீர் என்றும் வெம்மையான நீரை வெந்நீர் என்றும் பாவிக்கிறோம். 

திருவள்ளுவருக்கும் தேடல்கள் இருந்திருந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று அமிழ்தம் என்று சொல்கிறார்களே அது என்ன? அது எப்படி இருக்கும்? உலக இயக்கத்திற்கு காரணமான அமிழ்தம் எது? என்ற தேடல். அந்த தேடலின் பயனாகக் கிடைத்த விடையை திருக்குறளின் இரண்டாவது அதிகாரத்தின் முதற்குறளில் தருகிறார்.
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று”           - (குறள்: 11)
வான் இங்கு மழையைக் குறிக்கின்றது. ‘மழை பெய்வதால் உலகம் இயங்குகின்றது. ஆதலால் மழையே அமிழ்தம் என்று உணர்க’ என்கின்றார். 

இது போன்ற தேடல்களால் கிடைத்த 1330 முத்துக்களை கொண்டதே திருக்குறள். அதனை நாம் வான்மறை என்றும் உலகப்பொதுமறை என்றும் போற்றுகிறோம். மறை என்றால் வேதம். திருக்குறள் என்ன நால்வேதமா? இருக்கு யசூர் சாம அதர்வண வேதங்களையா திருவள்ளுவர் சொன்னார்?  நாம் ஏன் திருக்குறளை மறை என்கின்றோம்? தமிழர்களாகிய நாம் மறைகளை அதாவது வேதங்களை இறைவன் அருளிச் செய்தார் என்கிறோம். 

அதனை சங்ககால இலக்கியமான புறநானுறும் சொல்கிறது.
“நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய் போகாது 
ஒன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”                     - (புறம்: 166)
இறைவனை நீள்நிமிர்சடை முதுமுதல்வன் எனக்கூறி, பழமையானவன் என்று சுட்டுகிறது. புறநானூறு பண்டைத்தமிழரின் மறையை, இறைவனின் வாயிலிருந்து நீங்காத[போகாது], நான்கு [ஈரிரண்டு] வழிகளை அறியத்தரும்[ஆறுணர்ந்த] ஒரு பழையநூல்[ஒரு முதுநூல்] என்கிறது. ஆதலால் இறைவனால் அருளப்பட்ட தமிழரின் வேதம் ஒரே ஒரு நூலே. இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என நான்கு வேதங்கள் இல்லை என்பது தெளிவாகின்றது.  

எனவே இருக்கு, யசூர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை அல்ல. அவற்றில் இறைவன் வேதங்களைச் சொன்னார் என்று எந்தவிதக் குறிப்பும் இல்லை. பல ரிஷிகளும் முனிவர்களும் எழுதிய பாடல்களின் தொகுப்பே அவை. தமிழரின் கடவுள் கொள்கைக்கு இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் முரணானவையே. அப்படியானால் தமிழரின் வேதம் எது? தொடர்ந்து காண்போம்.
இனிதே
தமிழரசி.

Thursday, 13 September 2012

உன்னை நினைந்திருந்தேன்                          பல்லவி
என்னை மறந்தே என்றும்
உன்னை நினைந்திருந்தேன் - கந்தா!
                                               - என்னை மறந்தே
                        அனுபல்லவி
பன்னிரு அருள்விழி ஒளியும்
என்னை காக்குமென்றே - ஐயா!
                                               - என்னை மறந்தே

                          சரணம்
முன்னைத்தவம் செய்திடா மூர்க்கத்தால்
பின்னையான் செய்பிழை யாவுமிங்கே
முன்னைவினைப் பயனாய் மூண்ட தீயாய் 
சின்னத்தனங்கள் செய்து அழிவதற்கோ!
                                                - என்னை மறந்தே

Wednesday, 12 September 2012

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ!

பக்திச்சிமிழ் - 36

மனித இனம் ஒன்று. ஆனால் அது தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட கடவுளர் எத்தனை? எத்தனை? கடவுளர் பலராக, மதங்களும் பல ஆயின. அம் மதங்களின் பேரால் எத்தனை? எத்தனை? போர்கள். மதங்கள் தம்மிடையே ஒன்றோடு ஒன்று மதங்கொண்டு பொருதாமல் இருக்குமானால் இவ்வுலகில் எத்தனையோ அற்புதமான உயிர்கள் மகிழ்ந்து வாழ்ந்திருக்கும். கடவுளை நாடியே எல்லா மதமும் செல்கின்றன. ஆனால் எவையும் முழுமையாக எதனையும் சொல்லவில்லை. ஆதலால் இனிமேலாவது போரின்றி இவ்வுலகம் வாழவேண்டுமானால் மதங்களின் அறியாமை ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மதமும் தம்மிடம் உள்ள மூடநம்பிக்கைகளை கைவிட்டால் அவற்றின் அறியாமை தானே ஒழிந்துவிடும்.

ஏதோ ஒருவிதத்தில் மதங்களோடு மலர்கள் ஒன்றுபடுகின்றன. மலர்களிலும் மதங்களைப்போல் எத்தனை விதங்கள்? எத்தனை நிறங்கள்? எத்தனை மணங்கள்? கடவுளுக்கு வேண்டியது மல்லிகையா? சண்பகமா? தாமரையா? வாசமலரா? வெள்ளை மலரா? சிவனுக்கு வில்வமா? திருமாலுக்கு துளசியா? பிள்ளையாருக்கு அருகம்புல்லா? இன்ன கடவுளுக்கு, இன்ன பூ என்று சொன்னது யார்? இந்த மலர்களும், இலைகளும் இல்லாத இடத்தில் கடவுளை வணங்க முடியாதா? இல்லையேல் அப்படிப்பட்ட இடத்தில் கடவுளே இல்லையா? மலர்களின் மேல் மதங்கள் கட்டும் மூடக்கட்டுக்கள் அறுத்து எறியப்பட வேண்டும்.

எமது மனம் பொய், களவு, சூது, வாது, பொறாமை, வஞ்சகம் போன்ற கயமையால் கறைபடியாது இருந்தால் அது கோடானுகோடி மலர்களுக்கு சமமாகும். இதனை விபுலானந்த அடிகள் மிக அழகாக கூறியிருக்கிறார். ‘உயிர்களுக்கு வேண்டிய யாவற்றையும் அள்ளி வழங்கும் வள்ளலான கடவுளின் திருவடிக்கு ஏற்ற மலர் எதுவாக இருக்கும்? வெள்ளை நிறமான மல்லிகைப் பூவா? அதைவிட உயர்ந்த மலர் வேறுமலரோ?’ என விபுலானந்தர் தமக்கு தாமே கேள்வி கேட்டுக்கொண்டார். உத்தமன் ஆகிய கடவுள் விரும்புவது - வெள்ளை நிறப்பூவும் அல்ல, வேறெந்த மலருமல்ல என்று சொல்லி; எமது மனம் எனும் தாமரை மலரையே [உள்ளக் கமலம்] கடவுள் விரும்புவதாக விடையையும் தருகிறார். அவரது கேள்வியையும் பதிலையும் பாருங்கள். 
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது”
எம்மைத் தவிர எவராலும் பறிக்கமுடியாத, கறைபடுத்த இயலாத வாசமலர் எமது மனமே. அதைவிடச் சிறந்த மலரை எங்கு தேடியும் நாம் பெறமுடியாது. எனவே அதைப் போற்றுவோம். மனம் வாசனை ஆனால் வாய்ப்பது முத்து - முத்தி. 
இனிதே,
தமிழரசி.

Monday, 10 September 2012

பொங்கல் குரவை ஆடுவ மச்சி!


நாட்டுப்புறங்களிலும், கடற்கரையின் புன்னைமர நிழலிலும், பெருவிழாக்களிலும் பண்டைய தமிழர்கள் குரவை ஆடியதை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. சங்ககாலத் தமிழரின் வாழ்வியலில் காணும் பல விடயங்களை மிகவும் சாதாரணமாக ஈழத்தமிழரின் வாழ்வியலிலும் காணலாம். அந்தவகையில் ஒப்புநோக்கி ஆய்வு செய்யப்பட்டால் அதற்கு இந்த நாட்டுப்பாடலும் ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

பாலி ஆற்றங்கரையில் மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலம் போட்டு, தெய்வத்திற்கு பொங்கலிட்டு தாரை, தப்பட்டை முழங்க, விளக்கை ஏற்றி வைத்து, தங்கக்குடத்தில் ஏறிநின்று ஆணும் பெண்ணூம் குரவை ஆடியதை இப்பாடல் சொல்கிறது. குரவைக்கூத்தை தன்னுடன் சேர்ந்து ஆடுவதற்கு மச்சாளை அழைத்த மச்சானையும், இருவரும் சேர்ந்து ஆடும்பொழுது அவளின் ஆடலை, அழகைப் பார்த்து அவன் ஏங்கியதையும், அவன் பார்த்தாலும் பரவாயில்லை, ஆனா தெய்வக் குற்றம் வராம பார் என அவள் சொன்னதையும், குரவை ஆடி தெய்வத்தை வணங்குவோம் என அவனை அவள்  அழைத்தையும் காட்டும் இந்நாட்டுப்பாடல்கள் பாலியாற்றங்கரை மக்களின் வாழ்வியலை சங்கத்தமிழர் வாழ்வியலோடு இணைக்கின்றது.

ஆணும் பெண்ணும்:  மாவிலைத் தோரணம் தொங்கத் தொங்க
                                          மாக்கோலம் போட்டாச்சி
                                ஆவிலை அருகம்புல் சேத்துக் கட்டி
                                         அடுப்பில உலையு வைச்சாச்சி

                ஆண்:     தப்பட்டை தாரை கொட்டக் கொட்ட
                                        ஏமவிளக்கை ஏற்றிவைத்து
                               தங்கக் குடத்தில தாவி நின்னு 
                                       பொங்கல் குரவை ஆடுவ மச்சி!
                               
               பெண்:    பொங்கல் குரவை ஆடயில கூட
                                        ஏங்கித் தவிப்பது யாரு மச்சான்
                             தெய்வ பங்கம்வராம பாரு மச்சான்
                                        தெய்வம் பரவுவ வாரும் மச்சான்.           
                                          -  நாட்டுப்பாடல் (பாலியாறு)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இப்படி பொங்கலிட்டு குரவையாடும் வழக்கத்தை சங்ககாலத் தமிழரும் செய்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. சிலப்பதிகாரத்தில் சங்ககாலத்தில் நடந்த இந்திரவிழாவை எடுத்துச்சொல்லும் இளங்கோஅடிகள் இந்திரவிழாவின் போது பெண்கள் - அவித்த கடலை வகை (புழுக்கல்), எள்ளுருண்டை (நோலை), ஊன்கலந்த சோறு (விழுக்குடை மடை), பொங்கல் முதலியவற்றைப் படைத்து துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் ஆடியதை
புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கெழுந்தாடி”           
                                                  - (சிலம்பு: 5: 68 - 70)
என்கிறார். 

பாலியாற்றங்கரையில் தப்பட்டையும் தாரையும் கொட்ட இரவுவிளக்கு ஒளியில் குரவை ஆடியதுபோல், விளக்கொளியில் முழவை முழக்கிக் கொண்டு துணங்கைக் கூத்து ஆடியதை பதிற்றுப்பத்து காட்டுகிறது.
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணையாக”       
                                                     - (பதிற்று: 52: 13 - 14)

பாலியாற்றாங்கரை ஆணும் பெண்ணும் குரவையாடி தெய்வத்தைப் பரவியது (வணங்கியது) போல சங்ககாலத் தமிழரும் குரவையாடி தெய்வத்தைப் பரவியதை கலித்தொகையில் முல்லைத்திணை பாடிய சோழன் நல்லுருத்திரன் 
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி 
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல்நிலம்
ஆளும் கிழமையோடு புணர்ந்த 
எம் கோ வாழியர், இம் மலர்தலை உலகே”     
                                                         - (கலி: 103: 75 - 79)
என்று கூறியுள்ளார். இதில் சோழன் நல்லுருத்திரன் முல்லை நிலத்தில் (காடும் காடுசார்ந்த இடமும் முல்லை நிலமாகும்) வாழ்ந்தோர் குரவையாடி தெய்வத்தை வணங்கியதாகக் கூறியுள்ளார். பாலியாற்றங்கரை இன்றும் காடும் காடுசார்ந்த இடமாக இருப்பதை நாம் காணலாம். எனவே பாலியாற்றங்கரையில் வாழ்ந்த ஈழத்தமிழரும் சங்ககாலப் பழமையான பண்பாட்டை தொடர்ந்து பேணி வந்தமையை இந்நாட்டுப்பாடல்கள் வரலாறாகச் சொல்கின்றன.  
இனிதே, 
தமிழரசி