Thursday 31 May 2012

குறள் அமுது - (34)


குறள்:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங் கூறும் ஆக்கம் தரும்”                             - 183

பொருள்:
புறங்கூறிப் பொய்யாக நடித்து உயிர்வாழ்வதை விட சாவது அறங்கள் கூறுகின்ற நன்மையைத் தரும்.
விளக்கம்:
ஒருவர் இல்லாத இடத்து அவரை இகழ்ந்து கூறுதல் புறங்கூறுதலாகும்.நேர்மை இல்லாது போலியாக வாழ்தலே பொய்த்து உயிர்வாழ்தல். புறங்கூறுதல் என்பது ஆழ்ந்த கருத்தைத் தரும் சொல்லாகும்.  இது பொய்சொல்வதையோ பழிசொல்வதையோ குற்றங்குறை சொல்வதையோ நேரடியாகக் குறிக்கவில்லை. ஒருவரைப் பற்றி அவர் இல்லாத இடத்தில் பேசுவதால்  சொல்லப்பட்ட விடயம் அவரைச் சென்றடையும் போது திரிபடையக்கூடும். அதனால் வரும் கேடு பலரை இன்னலடையச் செய்யலாம்.
புறங்கூறலை குறளை எனவும் கூறுவர். கொற்கைவேந்தன் எனும் அறநூல் ‘கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு’ எனச் சொல்லும். காற்றுடன் சேர்ந்த நெருப்பு எப்படி அழிவுகளை ஏற்புடுத்துமோ அப்படி புறங்கூறுவதால் பலருக்கும் அழிவுகள் ஏற்பட வழியுண்டு. 
ஒருவரைக் காணாத போது தூற்றியவர் கண்டபோது மிகக் குழைந்து புகழ்ந்து பேசுவதே நேர்மையற்று  பொய்யாக நடித்து உயிர் வாழும் செயலாகும். அப்படி நேர்மை கெட்டு பயனடைந்து வாழ்வதை விட சாவது எவ்வளவோ மேல். கண்டபோது ஒன்றும் காணாத போது வேறொன்றும் கூறுவது வஞ்சகச் செயலாகும். அறமில்லா நெஞ்சிலேயே வஞ்சகம் வளரும். அறமில்லாததைச் செயலைச் செய்வதைவிட வஞ்சகம் செய்வது கொடிய செயலாகும். எனவே அத்தகையோர் இறப்பதால் அறநெறி கூறும் நன்மைகள் வரும். 
ஒருவரின் பின்னால் புறங்கூறி, அவரின் முன் புகழ்ந்து பேசி பொய்யாக நடித்து பயன்பெற்று, கூனிக்குறுகி வாழ்வதைவிட வறுமையால் சாவது மேலாகும். ஏனெனில் அதனால் அறநூல்கள் சொல்கின்ற நன்மைகள் உண்டாகும். 

Wednesday 30 May 2012

ஆசைக்கவிதைகள் - 33


முகம் துடைப்பது எக்காலம்?
அவன் பட்டப்படிப்பை முடித்து வேலை செய்கிறான். எனினும் அவனது எண்ணச் சிறையில் சிறையிருக்கும்  சிறுவயது தோழியை மறக்க முடியவில்லை. அவளைப் பார்க்க மாமனெல்லை வந்தான். அவளைக் கண்டான். அவளில் தான் எத்தனை மாற்றங்கள். பத்து வயது சிறுமியாக சிறகடித்துப் பறந்து திரிந்தவள் இன்று பருவமங்கையாக நிற்கிறாள். அதுவும் சீவிச் சிங்காரித்து சீலை கட்டி நிற்கிறாள். சீலை கட்டியவளைப் பார்த்ததும் 

ஆண்: புள்ளிப் புள்ளி சேலைக்காறி
                     புளியங்கொட்டை ரவுக்கைக் காறி
           அள்ளி அணைத்திடவே ஆவல்
                     கொண்டேன் பெண்மயிலே
எனப் பாடினான். 


அவனின் பாட்டைக் கேட்டவளின் முகம் கோபத்தால் சிவந்தது. அவளின் கோபத்தைக் கண்டதும் தனது தவறை உணர்ந்தான். அவளுக்கு அவன் யாரென்பது தெரியாது. அவர்களின் இளமைக் காலம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவளுக்கு ஒரு ஐந்து வயதிருக்கும். பாடசாலைவிட்டு பிள்ளைகள் எல்லோரும் போய்விட்டார்கள். அன்று அவளின் தாய் அவளை அழைத்துப் போக வரவில்லை. அதனால் அவள் அழுது கொண்டு அங்கிருந்த அன்னமுன்னா (Annona squamosa) மரத்தின் கீழே நின்றாள். அப்படி அவள் அழுது கொண்டு நிற்பதைக் கண்ட பன்னிரண்டு வயதுச் சிறுவனான அவன், தனது லேஞ்சியால் அவளது கண்ணீரைத் துடைத்து அவளின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவன் மாமனெல்லையைவிட்டுப் பல்கலைக்கழகம் போகும்வரையும் இருவரும் ஒன்றாகவே பாடசாலை சென்றுவந்தனர். காலவோட்டத்தால் அவள் அவனை அடையாளம் காணவில்லை. எனவே தான் யார் என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக 'கண்ணீர் துடைத்த' கதையைப் பாடுகிறான்.
ஆண்: அன்னவன்னா மரத்தின் கீழே 
                    அழுது கொண்டு நிற்கக் கண்டு
           மெழுகுதிரி லேஞ்சி கொண்டு
                    முகம் துடைப்பது எக்காலம்.
                                               -  நாட்டுப்பாடல் (மாமனெல்லை)
                                                 (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Tuesday 29 May 2012

இன்னும் ஏன் இந்த உறக்கம்?

இன்று நாம் மனிதர்களின் கடவுட்கொள்கையை ‘மதம்’ என்று அழைக்கிறோம். மதம் என்ற சொல் சங்கத்தமிழ் நூல்களில் அழகு, வலிமை, செருக்கு என்ற கருத்திலேயே வருகின்றது. முதன் முதலில் மதம் என்ற சொல்லை மாணிக்கவாசகரே கடவுட் கொள்கையாகப் போற்றித்திருவகவலில்,
“சமயவாதிகள் தம் தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைத்தனர்”      
                                       -(திருமுறை: 8: 4: 52 - 53)
எனக்குறிப்பிடுகின்றார். 
இவருக்கு முன் ‘சமயம்’ என்ற சொல்லை கடவுட்கொள்கையாக கி பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீத்தலைச்சாத்தனார், 
“நவை அறு நன் பொருள் உரைமினோ, என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள்”                                              
                                      - (மணிமேகலை: 27: 1 - 4)
என்று தாமியற்றிய மணிமேகலையில் ‘சமயக் கணக்கர் திறம் கேட்ட காதையில்' பயன்படுத்தி இருக்கிறார்.
இதிகாசகாலத்திற்கு முன்பிருந்தே சிவவழிபாடு தமிழரிடம் இருக்கின்றது. ஆனால் அவர்கள் ‘மதம்’ என்றோ 'சமயம்' என்றோ அதனை அழைக்கவில்லை. அது ஏன்? நாமே சமைத்துச் சாப்பிடும் போது அதனை விருந்து என்கிறோமா? இல்லையே. உறவினரோ, நண்பரோ வந்து உண்டால் அதனை விருந்து என்கிறோம். அதுபோல் தமிழ் தனிமொழியாயும் ஒரே கடவுட்கொள்கையுடனும் இருந்த போது மதம் என்றோ, சமயம் என்றோ அழைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. 
தமிழர்களாகிய திராவிடர்களை நோக்கி ஆரியமும் ஆரியக் கடவுட் கொள்கையும் இந்தியாவின் வடக்கே இருந்து வந்தது. அதனை இலங்கைவரை பரப்பியவர்கள் ஆரிய முனிவர்களும் அவர்கட்கு துணைநின்ற இராம இலட்சுமணருமே. அக்காலத் தமிழரிடம் கொலை வேள்வி செய்யும் பழக்கம் இருக்கவில்லை. அந்நாளில் யாகங்கள் செய்தவர்கள் வடநாட்டினரே. அவர்கள் அசுவமேத யாகம் (உயிருடன் குதிரையை நெருப்பிலிடல்), கஜமேத யாகம் (உயிருடன் யானையை நெருப்பிலிடல்), நரமேத யாகம் (உயிருடன் மனிதனை நெருப்பிலிடல்) போன்ற பல யாகங்களைச் செய்தனர். அதனை அவர்கள் புனித வேள்வி என்றும் அக்கொலை வேள்வியைத் தடுத்தவர்களை அரக்கர் என்றும் அழைத்தனர். அத்தகைய கொலைவேள்வி செய்தவர்கள் அரக்கர்களா? தடுத்தவர்கள் அரக்கர்களா?
இராம இலட்சுமணர் துணையுடன் முனிவர்கள் செய்த கொலைவேள்வி காட்டுமிராண்டிச் செயல் அல்லவா? இராம இலட்சுமணர்களால் கொல்லப்பட்டவர்களில் திரிசிராவும் ஒருவன். இராம பாணத்தால் திரிசிரா இறந்ததைக் கம்பர் 
“திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும்”      
                                            - (கம்பராமாயணம்: 3010) 
என, அமெரிக்க இரட்டைக் கோபுரம் சரிந்தது போல அங்கலாய்க்கிறார். சிகரம் என்று சொல்வதிலிருந்து அவனது உயர்வை, மேம்பாட்டை எமக்குக் காட்டிச் சென்றுள்ளார். இராவணனின் தாய் கைகசியின் தங்கை மகனே திரிசிரா. திரிசிரா ஆண்ட இடம் இன்றும் அவன் பெயராலே அழைக்கப்படுகின்றது. அதுவே தமிழகத்தின் திரிச்சிராப்பள்ளி [திரிசிரா + பள்ளி]. தற்போது திருச்சி என்கின்றோம். அவனை மட்டுமல்ல,
“கோல மாமலரொடு தூபமும்
          சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வலிபடப் பொருந்தினார்”            
                                            -(திருமுறை: 3: 91: 6)      
எனச் திருஞானசம்பந்தரும்
திருவையாறு
வாலியார் வணங்கி ஏத்தும்
          திருவையாறு அமர்ந்த தேன்”    
                                           -(திருமுறை: 4: 39: 2)     
என நாவினிக்க திருநாவுக்கரசரும் சொல்லி மகிழ்ந்த வாலியை இராமர் மறைந்து இருந்து கொன்றார்.
ஈழத்தமிழர் வரலாற்றிலே முதன் முதல் மதமாற்றத்தை சாடிய சான்றோன் இராவணனே. திருமுறைகள் போற்றும் இராவணன் சைவன் என்பதற்கு அவன் பாடிய சிவதாண்டவ தோத்திரமும் சாமகீதமுமே சாட்சி.
இராமேஸ்வரத்தில் இராமர் ஆலமர நிழலில் இருந்து ஆகமங்களை ஆராய்ந்தார். ஆலமரப் பறவைகளின் சத்தம் அவரது ஆராய்ச்சியைத் தடைசெய்தது. அதனால் அவர் பறவைகளைக் கொன்று பறவைகள் எழுப்பிய சத்தத்தை அடக்கினார் என்று ஆழ்வார்கள் விதந்து உரைக்கிறார்கள். சீதையை சிறைமீட்க இராமேஸ்வரம் வந்தவருக்கு ஆகம ஆராய்ச்சி எதற்கு? மதபோதனை ஆளர்களுக்கே அது தேவையானது. அதுமட்டுமல்ல, விபீடணனை வைணவர்கள் ஆழ்வார் (விபீடண ஆழ்வார்) என்றழைப்பதும், ‘விபீடண சரணாகதி’ வைணவமதக் கருப்பொருளாக இருப்பதும், இராமர் திராவிடரை மதம் மாற்றவே தெற்கே வந்தார் என்பதை உறுதி செய்கின்றன. 
இராமர் சிவபூசை செய்தார். ஏனெனில் பழம்பெரும் சிவபக்தர்களான வாலியை, இராவணனைக் கொன்றபாவம் தொலையச் செய்ததாக பல இடங்களில் தேவாரம் செப்புகின்றது. 
“தென்னிலங்கைத் தசமுகன் 
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்”      
                                               -(திருமுறை: 3: 10: 2)
என இராமேஸ்வரத்தில் இராமர் சிவலிங்கம் ஸ்தாபித்ததை, திருஞானசம்பந்தர் தமது மூன்றாம் திருமுறைத் தேவாரத்தில் சுட்டுகிறார்.
இராமர் ஆரியக் கடவுட்கொள்கையை இலங்கைவரைப் பரவச்செய்த பின்னர் ஆரிய, திராவிடக் கடவுட்கொள்கைகள் ஒன்று சேர்ந்து தோன்றிய சமயத்தையே நாம் இன்று ‘இந்துசமயம்’ என்று அழைக்கின்றோம். அப்படித் தோன்றிய இந்துமதம் கொலைவேள்வியைத் தடுக்கவில்லை. இந்துவாகப் பிறந்த புத்தர், அரசவாழ்வையும் மனைவியையும் மகனையும் துறந்து ஒவ்வொரு வேள்வி வேள்வியாய்ச் சென்று வேள்விகளைத் தடைசெய்தார். அவரது கொல்லா அறக்கொள்கையே பின்னாளில் பௌத்த மதம் ஆகியது.
புத்தரைவிடக் கடுமையாக உயிர்க்கொலையை எதிர்த்த ‘மாவீரர்’ இந்துமதத்தில் இருந்த சைவமதக் கொள்கையை ஆதரித்தார். ஆதலால் சமணம் தமிழகத்தில் நிலைத்தது. புத்தரும், மாவீரரும் இந்துவாகப் பிறந்து இந்துமத தத்துவத்தைச் சாடியவர்களே. இவர்களது பெயரைக்கூறி இவர்களுக்குப் பின்வந்த பௌத்தரும், சமணரும் பிறமதத்தவரைத் துன்புறுத்தியதால் தமிழர்கள் அம்மதங்களை வெறுத்தனர். இவ்விரு மதங்களைச் சாட திருஞானசம்பந்தர் பிறந்தார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் காலத்தில் சைவமும் தமிழும் நலிந்து கிடந்ததை நாம்,
“வாயிருந்தும் தமிழே படித்தாளுறா
 ஆயிரம் சமணும் அழிவாக்கினான்”                           
                                           -(திருமுறை: 5: 58: 9)                 
என திருநாவுக்கரசர் பாடி வருந்தியதில் இருந்து அறியலாம். 
திருஞானசம்பந்தர் தாம்பாடிய ‘தோடுடைய செவியன்’ பதிகத்திலேயே
புத்தரொடு பொறியில் சமணும் புறங்கூற”                  
                                           -(திருமுறை: 1: 1: 10) 
என தமது மூன்று வயதிலேயே அவர்களை வம்புக்கிழுக்கத் தொடங்கி, 8000 சமணர்களை கழுவில் ஏற்றி சைவசமயத்தை நிலைநாட்டினார்.
“நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு
          அரசரும் பாடிய நற்றமிழ் மாலை 
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானைத்”          
                                           -(திருமுறை: 7:67: 5)
என்ற சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், திருஞானசம்பந்தர் காலத்தில் மீண்டும் தமிழ்ப்பாமாலை பாடி அர்ச்சித்தல் தொடங்கி அது சுந்தரர் காலத்திலும் நடந்ததற்குச் சான்றாகிறது.
எட்டு வயதான ஆதிசங்கரர் பிறமதங்களைச் சாடி, மாயாவாதப் பிரசாரத்தை சுழற்காற்றுப் போல் நாடெங்கும் செய்ததை மாணிக்கவாசகர்,
“மிண்டிய மாயா வாத மென்னும்
         சண்ட மாருதம் சுழித்தடித் தார்த்து”        
                                          -(திருமுறை: 8: 4: 54 - 55)
என்கிறார்.
இவ்வாறு காலத்துக்கு காலம் மதமாற்றச் சாடல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. புதிய மதக் கொள்கைகள் உருவாகவும் அதனால் மதமாற்றம் ஏற்படவும் காரணம் என்ன? எமது மதக் கொள்கையில் இருக்கும் மூடநம்பிக்கைளும், பல முரண்பாடுகளும், எவருக்கும் புரியாத மொழியில் எமது மதக்கொள்கைகளைப் பேணுவதுமே. இதனை உணர்ந்தே சுவாமி விவேகானந்தரும் மதச் சண்டைகளூக்குக் காரணம் சமஸ்கிருத மொழியே, சமஸ்கிருத மொழிநூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றார்.
இங்கு கோயில் ஒன்றில் அர்ச்சகர் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கண்மூடிக்கேட்டேன். தொலைக்காட்சியில் நீங்கள் செய்தி பார்க்கிறீர்கள். செய்தியாளர் தமிழைக் கொலை செய்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சியை நிறுத்துவீர்கள். அன்றேல் வேறொரு நிகழ்ச்சியைப் பார்ப்பீர்கள். கோயிலில் அதைச் செய்யமுடியுமா? நான் இளவயதில் சமஸ்கிருதம் கற்றபோது ஆசிரியர் கூறினார், ‘செந்தமிழும் நாப்பழக்கம்' என்று கூறுவது தவறு. எந்த மொழியும் நாப்பழக்கமே. அதிலும் சமஸ்கிருதம் - மறைமொழி ஆதலால் அதனை உச்சரிக்கும் போது முறையாக உச்சரிக்க வேண்டும். அல்லது கும்பகர்ணன் ‘நித்திய வரம்’ வாங்கப்போய் ‘நித்திரா வரம், வாங்கிய கதையாய் முடியும்‘ என்று. அதன் உண்மையை அன்று உணர்ந்தேன். 
அது அர்ச்சகர் தவறு அல்ல. எமது தவறே. நாமோ கோயில் பொறுப்பாளர்களோ, சமஸ்கிருதம் அறிந்திருந்தால் இப்பிழைகளை உணரமுடியும். நயினை கைலாயநாதக்குருக்கள் போன்ற சமஸ்கிருதம் வல்ல அந்தணர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த, என் தந்தை போன்ற அறிஞர்களும் சமஸ்கிருத புலமையுடையவர்களாக இருந்ததால் கோயில் மந்திரங்கள் இலக்கணச்சுத்தமாக சொல்லப்படுவதை ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டனர். அந்த நிலை இன்று இல்லை. அர்ச்சகர்விடும் தவறு மற்றவர்க்கு தெரிவதில்லை. 
அனேகமான மந்திரங்கள் ஒலிநாடாவாகவும் ஒலித்தட்டாகவும் வெளிவருகின்றன. பெரும்பாலும் அவற்றிற்கு ஆங்கிலத்தில் கருத்தும் கூறப்பட்டுள்ளது. நம் இளம் தலைமுறையினர் மந்திரங்களின் உண்மைத்தன்மையை அறிய ஆங்கிலக் கருத்து உதவிபுரியும்.  எனவே  பக்தர்களுக்கு கோயிலில் அர்ச்சனை செய்யும் மந்திரங்களையும் அவற்றின் கருத்துக்களையும் எழுதிக் கொடுத்தால் எல்லோரும் படித்துப் பயனடைவார்களே! இதனை இலண்டன் திருக்கோயில்கள் ஒன்றிய நிர்வாகிகள் செய்வார்களா?
எல்லா மதங்களூம் உண்மைதான். ஆனால் ஒரு மதமும் முழுமையானது இல்லை. இந்த உண்மை நம்மில் பலருக்கு நன்கு தெரியும். இருந்தும் 'எமக்கு இன்னும் ஏன் இந்த உறக்கம்?' எமது மதக் கொள்கைகளின் முரண்பாடுகளை, மூடநம்பிக்கைகளை களைந்து எறிந்தால் என்ன? ஒவ்வொரு சைவமகாநாடு நடக்கும் போதும் அடுத்த மகாநாட்டின் முன் இந்தக் கொள்கையை இப்படி சீர்திருத்துவது என முடிவெடுத்து, அதைச் செயற்படுத்தினால் சைவமகாநாடு நடத்துவதில் பயன் இருக்கும். நாம் அப்படி சீர் செய்யாவிட்டால் இன்றைய எமது மதக்கொள்கையைச் சாட யாரோ ஒருவர் நிச்சயம் வருவார். 
இனிதே, 
தமிழரசி 
(இலண்டன் சைவ மாநாடு சிறப்புமலர்  - 2004ல் எழுதியது)

Monday 28 May 2012

அடிசில் 25

சிக்கின் 65

                                   - நீரா -


















தேவையான பொருட்கள்:
கோழி  - 300 கிராம்
கட்டித்தயிர்  - 150 கிராம்
மல்லித்தூள்  -  2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  2 தேக்கரண்டி
மசாலாத்தூள்  -  1 தேக்கரண்டி
வினிகர்  - 2 தேக்கரண்டி
அரைத்த உள்ளி  -  தேக்கரண்டி
அரைத்த இஞ்சி  -  தேக்கரண்டி 
எலுமிச்சம் பழச்சாறு  -  3 தேக்கரண்டி
எண்ணெய்  -  பொரிப்பதற்கு
உப்பு  -  தேவையான அளவு
செய்முறை:
1.  மெல்லியதாக வெட்டிய கோழி இறைச்சியை எலுமிச்சம் சாற்றில் புரட்டி, 2 நிமிடம் ஊறவிடவும்.
2.  அதனுள் எண்ணெய் தவிர்ந்த மற்றவற்றை இட்டு நன்றாகக் கலந்து 2 - 3 மணிநேரம் ஊறவிடவும்.
3.  பின்னர் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
1965ம் ஆண்டு சென்னை ‘புகாரி ஹோட்டலில்’ அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கோழிப்பொரியலின் பெயரே சிக்கின் 65. 

Saturday 26 May 2012

நேர்மையோடு வாழுவோம்


























துருப்பிடித்த பண்டமாய்
          துலங்கும் எங்கள் மடமையை
நெருப்பெடுத்துக் கருக்கியே
          நேர்மையோடு வாழுவோம்
பெருக்கெடுத்து ஓடிடும்
          பொய்மைப் பேயைப் போக்கியே
செருக்கற்று நாளும் எம்
          செம்மையைப் போற்றுவோம்.      
இனிதே,
தமிழரசி.                                               

Friday 25 May 2012

ஆம்பல் - பகுதி 2

ஆம்பல் மருந்து

சங்க காலத்தில் ஆம்பலின் இதழ், விதை, தண்டு, கிழங்கு என்பன மருந்தாகப் பாவிக்கப்பட்டன. போர்களின் போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயத்திற்கு கருங்குழம்பைப் (மைஇழுது) பூசி (இழுகி), நெருப்பில் கடுகையும் ஆம்பல் இதழ்களையும் இட்டு வரும் புகையை ஊதி இருக்கிறார்கள். அதனை புறநானூற்றில்
“கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதலம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம் பொறிக்கழல் கால் நெடுந்தகைப் புண்ணே”
என்று அரிசில் கிழார் குறிப்பிட்டுள்ளார். இன்றும் நம் நாட்டு மருத்துவத்தில் தென்னங் குருத்து, வேம்பு, புளி, நெல்லி இவற்றின் இலைகளும், அல்லி, தாமரை, குவளை, செவ்வாழைப் பூக்களும் சிரங்கு, கரப்பன், குஷ்டம் போன்ற பல தோல் நோய்களுக்கும் புண்களுக்கும் புகையாக ஊதப்படுகின்றன.
ஆம்பல் குழல்
35,000 ம் ஆண்டுகள் பழைமையான  குழல்
சங்க இலக்கியங்கள் ஒருவகை [புல்லாங்]குழலை ஆம்பல் என சங்கத்தமிழர் அழைத்ததைக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு அழகிய ஆம்பல் குழல் தெளிவான இசையை வெளிப்படுத்தும் என்பதை
“ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற”   
                                                - (குறிஞ்சிப்பாட்டு: 222)
எனக் கூறுகின்றது.
சிலப்பதிகாரம்,
“பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ!”                                  - (சிலம்பு: 7: 2)
பாம்பைக் கயிறாக பால்கடல் கடைந்த திருமால் இங்கு நம் பசு நிரைக்குள் வந்தால் அவன் வாயிலிருந்து இனிமையான ஆம்பல் குழலிசையை கேட்போமா தோழி!' என்கின்றது.

ஆம்பல் தண்டு நடுவே துளையுடையது. அதனை
நீர்வளர் ஆம்பல் தூம்பு திரள் கால்”          - (நற்றிணை: 6)
என நற்றிணை சொல்வதால் அறியலாம். ஆதலால் ஆம்பலின் தண்டில் குழல் செய்திருக்கலாம். மூங்கிலையும் ஆம்பல் என்று பண்டைய சங்கத்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. ஆம்பல் பண்ணை இசைத்த குழலை ஆம்பல் குழல் எனவும் அழைத்திருக்கலாம். அக்கருத்தை ஐங்குறுநூறு 
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்”
                                  - (ஐங்குறுநூறு: 215: 4)
என ஆம்பல் பண் இனியாய்  ஒலித்ததை சொல்வதால் அறியலாம்.

ஆம்பல் பண் [இராகம்]
சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள் இராகத்தை பண் என்று அழைத்தார்கள். ஆம்பல் என்பது ஒரு பண். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் பயன்படுத்திய ஒரு இராகத்தின் பெயர் ஆம்பல். பசுக்களை ஓட்டி வரும் இடையர்களின் ஆம்பல் பண்ணுடன் சேர்த்து யாழில் செவ்வழிப் பண்ணுக்கு மெருகு ஊட்டினார்கள் என்பதை
"ஆபெயர் கோவலர் ஆம்பல் ஒடு அளைஇ
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப”             - (அகம்: 214: 10 - 11)
அகநானூறு சொல்கின்றது.
ஆம்பல் வண்ணம் [இசைப்பாட்டு]
வண்ணம் என்பதை வடிவம், நிறம் (வர்ணம்), குணம், சாயல், விதம் , சந்தம் என பலவிதமாகச் சொல்லலாம். இன்றைய கர்நாடக சங்கீதத்தில் வர்ணம் என்று படிப்பதும் வண்ணம் என்பதும் ஒரே கருத்தையே சுட்டும். சிலப்பதிகாரத்திற்கு விளக்க உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ‘பஞ்சமரபு’ எனும் இசைநூலை அறிவனார் இயற்றியதாகக் கூறியுள்ளார். அந்த பஞ்சமரபு என்ற நூல் இசைப்பாடல்களின் வண்ணங்களை ஐந்தாகாக் கூறுகின்றது. 
  1. பத்திய வண்ணம்
  2. சித்திர வண்ணம்
  3. ஆம்பல் வண்ணம்
  4. பாத்திப வண்ணம்
  5. குவளை வண்ணம்
எனவே தமிழின் இசைப்பாடல் வண்ணத்தில் ஆம்பல் வண்ணமும் ஒன்று. பஞ்சமரபு கூறும் இந்த ஐந்து வகை இசைப்பாடல் வண்ணத்துக்கும் தொல்காப்பியரின் இருபதுவகை பாடல்வண்ணத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. 
ஆம்பல் எண் [இலக்கம்]
பதினைந்து இலக்கம் கொண்ட பேரெண் சங்கத்தமிழர்களால் ஆம்பல் என அழைக்கப்பட்டது. அதாவது நூறு திரிலியனை ஆம்பல் என அழைத்தனர்.
ஆம்பல்  = 100,000,000,000,000 = 1014  = one hundred trillion
சேரலாதன் ஈழத்தின் மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் பெறுமதியான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்ன கைவிட்டான் என்பதை  
“வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”
என அகநானூறு மிக விரிவாகச் சொல்கிறது.

ஆம்பல் காலாளவு
Picture courtesy: NASA
இலத்தீன் மொழியில் மேகத்தை நெபுலா என்பர். அண்டவெளியில் உள்ள தூசியும் வளியும் சேர்ந்த திரட்சியே நெபுலா. நெபுலாக்களில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன. காற்றின் உந்து சக்தியால் நெபுலாக்கள் சக்கரம் போல் சுழல்கின்றன. அப்படி சுழலும் போது ஏற்படும் சக்தியால் இட்லி போல் உப்பி கோளமாக மாறும். அண்டவெளியின் தூசு, கோளமாக (நட்சத்திரமாக, கிரகமாக) மாற எடுக்கும் கால அளவை ஆம்பல் என்று சங்ககால [விண்வெளி] அறிஞர்கள் அழைத்தனர் என்பதை 
"உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்"
என பரிபாடல் சொல்வதால் அறியலாம். ஒன்றின் ஆயுட்காலத்தை ஊழி எனும் சொல் குறிக்கும். 

வான்வெளியில் நட்சத்திரம் உருவாக முன்னர் நெபுலா உப்பி வர எடுக்கும் காலத்தை காற்று ஊழி என்றும், அதற்கான கால அளவை ஆம்பல் என்றும் சங்கத்தமிழர் அழைத்ததைச் சொல்கின்றது. ஓர் ஆம்பல் என்பது எண்ணளவில் நூறு திரிலியனைக் குறித்தாலும், நட்சதிரம் உருவாகும் கால அளவில் அது நிமிடமா, நாளா, மாதமா வருடமா என்பதை அறியமுடியவில்லை. தேடுகிறேன். கிடைத்தால் தருவேன். அழிந்து போன பரிபாடல் பாடல்களில் அவை அழிந்திருக்கலாம்.  எனினும் நம் முன்னோரான சங்ககாலத் தமிழர் இன்றைய விண்வெளி ஆய்வாளர்களிலும் பார்க்க மிக நுட்பமாக நட்சத்திரம் எப்படிப் பிறக்கும் என்பதை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை நம் நெஞ்சம் இனிக்கச் சொல்லலாம்.
இனிதே, 
தமிழரசி

Wednesday 23 May 2012

ஆமைபோல் தெளிவிலாதேன்


தேவாரம் பாடிய மூவரில் திருநாவுகரசு நாயனார் வயதால் மூத்தவர். அவர் தமிழரின் வரலாற்றை தமது  தேவாரங்களில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்து தமிழரின் பண்பாடு, அரசநீதி, சமயக்கொள்கை, சிற்பம், இசை, நாட்டியம், உணவு, உடை போன்ற சமூக வாழ்வியலை அவரின் தேவாரங்களில் இருந்து நாம் வடித்தெடுக்கலாம். அன்றைய தமிழர் சைவ உணவை மட்டும் உண்டு வாழவில்லை. அவர்கள் புலால் உணவும் உண்டிருக்கிறார்கள். அதிலும் ஆமையை இறைச்சியை  உண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத் தமிழரில் சிலர் கடலாமை உண்பார்கள் என நினைக்கின்றேன். 1970 களில் கோவில் வீதியும், ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்திற்கு அருகே கடலாமைகள் விற்பனைக்காக மல்லாத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அவற்றைப் பார்த்ததும், ‘எப்படி அவற்றின் ஓட்டை கழற்றி இறைச்சியை எடுப்பார்கள்?‘ என என் மனத்துள் கேள்வி எழுந்தது. ‘பென்னம் பெரிய கடலாமைகளின் ஓடுகளை வாளல் அரிந்து கழற்றி எடுப்பார்களா?’ என, என் தந்தையிடம் கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்தார். நீ பார்த்தவை பென்னம் பெரிசா என்றார். நான் பார்த்தனவற்றை விட நான்கு ஐந்து மடங்கு பெரிய கடலாமைகள் இருப்பதாகக் கூறி, ஆமை இறைச்சியை எப்படி எடுப்பார்கள் என்பதை எனக்கு விளங்கவைக்க ஒரு பாடலைப் பாடினார். நான் முன் எப்போதும் கேட்காத பாடலாக அது இருந்தது. எனக்கு அப்பாடல் பிடித்திருந்தது. என்ன பாடல்? யார் பாடியது என்றேன்? தெரியவில்லையா என்றார். மீண்டும், மீண்டும்  பாடினார்

“வளைத்து நின்று ஐவர் கள்வர்
          வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றித்
          தழலெரி மடுத்த நீரில் 
திளைத்து நின்று ஆடுகின்ற
          ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன்
           என்செய்வான் தோன்றினேனே”

முன் எப்போதும் இப்பாடலை படியாதவர் இது என்ன பாடல் என ஊகிக்க முடியுமா? இது தேவாரம்.  திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பட்டது. நான்காம் திருமுறையில் இருக்கிறது. இத்தேவாரத்தின்  எந்த ஒரு சொல்லாவது கடவுளைக் குறிக்கிறதா? மிக அருமையாக மனிதவாழ்வைச் சித்தரிக்கிறது. ‘மெய்(உடம்பு), வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள் எனச்சொல்லப்படும் கள்வர்கள் வந்து, என்னை சுற்றி வளைத்து நின்று அச்சத்தை தருகின்றனர்’ எனக் கூறியுள்ளார். 
ஐம்புலன்களும் நல்லவர்கள் அல்லர். கள்ளர்கள். அவரிடம் இருக்கும் நல்லனவற்றைப் பறித்து எடுப்பதே அவர்களின்  நோக்கம். ஐம்புலன்களாகிய ஐந்துபேரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று அவரை  கொள்ளையடிக்க சுற்றிவளைத்ததால் பயத்தால் நடுங்குகிறார். உயிரோடு ஆமையைக் கட்டி உலையில் போட்டு அடுப்பில் ஏற்றி தீமூட்டுவர். உலைநீர் மெல்ல சூடாகத் தொடங்க, ஆமை நான்கு கால்களையும் தலையையும் வெளியே நீட்டி அந்த இதமான சூட்டின் இன்பத்தில் திளைத்து நின்று ஆடுகின்றது. உலைநீர் சூடாகிக் கொண்டிருப்பதையோ அதனால் வரப்போகும் மரணத்தைப்பற்றியோ அது அப்போது அறியாது. ஏனெனில் அதனை அறியும் அறிவு அதற்கு இல்லை. அந்த ஆமை ஐந்து உறுப்புக்களையும் வெளியே நீட்டி எப்படி ஆடுகின்றதோ அது போல அவரும் அறிவுத் தெளிவு இல்லாமல் ஐம்புலங்களால் கவரப்பட்டு சோர்ந்து நின்று ஆடுகிறார். மனிதனாய் பிறந்துவிட்டார் என்ன செய்யமுடியும்?
நாம் பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு காரணம் ஐம்புலங்களே. அறிவில்லாத ஆமை உலைநீரில் நின்று ஆடுவது போல் நாம் எல்லோரும் அறிவுத்தெளிவு இல்லாமல் ஐம்புலன்களுக்கு அடிமையாய் ஆடுகிறோம். இந்த விளக்கத்தை தரும் இடத்தில் அந்நாளைய தமிழர் எப்படி ஆமையைக் கொன்றனர் என்பதைக் காட்டி தமிழர் ஆமை இறைச்சி உண்டதை வரலாற்றுப் பதிவாகத் தந்துள்ளார். 
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
சொல்விளக்கம்:
வளைத்து நின்று - சுற்றி வளைத்து நின்று
ஐவர் - ஐம்புலன்கள்
நடுக்கம் செய்ய - நடுங்கச் செய்ய
தளைத்து - கட்டி
தழலெரி மடுத்த - தீமூட்ட
திளைத்து - இன்பத்தில் திளைத்து (மூழ்கி)
இளைத்து - சோர்ந்து
தோன்றினேனே - பிறந்தேனே