Saturday, 31 March 2012

அக அழகு


ஒருவரின் அக அழகை முகமே காட்டுகின்றது. அதனாலேயே எமது பண்டைத் தமிழ்ப் பெரியோர்கள் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” எனும் முதுமொழியை எம்மிடையே விதைத்துச் சென்றனர். எனவே முகத்தை அழகுடன் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதரின் முகத்திலும் ஏதோ ஓர் அழகும், கவர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. அவரவரது சிகை அலங்காரத்தைப் பொறுத்து அழகு கூடும், குறையும். மிகப் பெரிய காதுள்ளவர்கள் காதை தலைமுடியால் மறைத்து தலையலங்காரம் செய்ய அவர்கள் அழகு கூடும். இப்படிச் சின்னச் சின்ன மாற்றங்களால் உங்கள் அழகை நீங்கள் கூட்டிக் கொள்ளலாம். 
அலங்காரமே மனித நாகரீகத்தின் ஆணிவேர். அலங்காரம் என்பது ஒரு தனிப்பெரும் கலை. நாம் நம்மை ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டிய விடையங்கள் நிறையவே இருக்கின்றன. சாதாரணமாக வீட்டில் இருப்பது போல் வேலைக்குச் செல்லமுடியாது. மணப்பெண் அலங்காரத்துடனும் போகமுடியாது. எனவே நாம் எங்கு செல்கிறோம் என்பதைப் பொறுத்தே எமது ஒப்பனை அமைய வேண்டும். முக அமைப்பிற்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு ஒப்பனை இருக்க வேண்டும். மற்றவர் செய்கிறார் நாமும் அவர் போல் செய்வோம் என்று செய்யக்கூடாது. ஒப்பனை செய்திருக்கிறோம் என்பதே தெரியாது முகம் மிக இயல்பாக இருப்பது போல் தெரியவேண்டும். 
ஒப்பனைப் பொருட்டளை வாங்கும் போது உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக எண்ணெய்த் தன்மை உள்ளதா வறண்டதா என்பவற்றை பார்த்து வாங்க வேண்டும். விலை அதிகமானது தோலிற்கு நல்லது என்று எண்ணாது பரிசீலனை செய்து வாங்குங்கள். அதுபோல் விலை குறைவாக இருக்கின்றது என்பதற்காக உங்கள் தோலிற்கு பொருத்தம் இல்லாதவற்றையும் வாங்காதீர்கள். அதனால் தோல் பாதிக்கப்படும். முதலில் கையில் பூசி அலர்ஜியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அழகு சாதனப் பொருட்கள் நாட்செல்ல நாட்செல்ல பழுதடைவதால் அவற்றை வாங்கும் பொழுது சிறிய அளவில் வாங்குவது நல்லது. 
முகத்திற்கு பூசிய அலங்காரத்தோடு இரவில் நித்திரை செய்யக்கூடாது. படுக்கைக்குப் போகுமுன் முகத்தை நன்கு கழுவி ஒப்பனையை போக்கிக் கொள்ளவும். முகத்தில் பருக்கள் வருவதற்கு முக அலங்காரப் பொருட்களும் ஒரு காரணமாகும். முகத்தில் பருக்கள் வருவதைத் தடுப்பதற்கு முகத்தைக் கழுவித் துடைத்த பின்பு உறங்குவது நல்லது.

அக அழகு என்பது முக அழகு மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. உங்கள் நடை, உடை, நாகரிகத்துடன் பொதறிவு, நளினம், அன்பு, பண்பு இரக்கம் எல்லாம் சேர்ந்த ஓர் அரிய கலவையே அக அழகாகும். நன்கு வயது முதிர்ந்த கிழவிகள் பொக்குவாயுடன் சிரிப்பதே மனதை கொள்ளை கொள்ளும் அழகாக இருக்கின்றதே! அது ஏன்? அன்பிலும் பண்பிலும் முதிர்ந்ததினால் அவர்கள் அழகாய் இருக்கிறார்கள். ஆகவே அன்பும் பண்பும் எம்மைவிட்டு அகலாது பார்த்துக் கொண்டால் அக அழகு தானாகவே மிளிரும்.   

கழலடி காணலாமே!


இந்த உலகின் இயக்கத்திற்கு எது காரணம்? அது எப்படி இருக்கும்? அது எங்கே இருக்கிறது? அதனை அடையும் வழி என்ன? என மனிதமனத்துள் எழுந்த பல வகையான கேள்விகளுக்கு மனிதன் கண்ட விடையே இறைவன். அதனால் உலகிலுள்ள சமயங்கள் யாவும் இறைவன் எனும் பொருளை அறிவது எப்படி என்பதை தத்தமக்கு எட்டிய முறையால் சொல்ல முற்படுகின்றன. எனினும் எந்த சமயமும் இறைவனை அறியும் வழியை உறுதியாக அறுதியிட்டுச் சொல்லவில்லை. காரணம் இறை எனும் பொருளை உணர்வால் உணர்ந்தே அறியமுடியும். ஒருவரின் அன்பை, உள்ள நெகிழ்ச்சியை எப்படி உணர்வால் உணர்கிறோமோ அப்படி இறைவனை உணர்வாலே உணரமுடியும். 
எவ்வாறு எமது உணர்வால் இறைவனை உணர்ந்து அறியலாம் என்பதை மிகத் தெளிவாக நம் சைவசமயச் சான்றோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் திருநாவுக்கரசு நாயனார் பல தேவரங்களில் இறைவனைக் காணும் வழியை கூறியுள்ளார். நான்முகனும் நாராயணனும் தேடிக் காணமுடியாத இறவனை தன்னுள்ளே தேடிக் கண்டு கொண்டதாக மார்தட்டும் அவர், இறைவனை இலகுவாகக் காணும் வழியை சொல்கிறார்.
"உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகழியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனுந் திரிமயக்கி
இடம்படும் ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே"
உடம்பாகிய வீட்டினுள் எமது உள்ளம் அகல் ஆக (எண்ணெய்விடும் தகழியாக), அதில் மடமை நிறைந்த உணர்வை நெய்யாக விட்டு, உயிரைத்திரியாகப் போட்டு, அறிவெனும் தீயால் விளக்கை ஏற்றி, அந்த ஒளியில் இருந்து பார்த்தால் கடம்பு மலர் மாலையை அணியும் முருகனின் தந்தையாகிய சிவனின் திருவடியைக் காணலாமாம். 
இறைவனைக் காண மிகச்சிறந்த இந்த வழி இருக்க நாம் ஏன் சுவாமிமார்களை நாடிச்செல்கிறோம்?  

குறிப்பு:
சொல்விளக்கம்
1.  மனையகம்  -  வீடு
2.  உள்ளம்  -  மனம்
3.  தகழி  -  அகல்
4.  மடம்  -  மடமை/ அறியாமை
5.  அட்டி  -  விட்டு/இட்டு/ ஊற்றி
6.  கடம்பமர் காளை  -  கடம்பு மலர் மாலை அணியும் முருகன்
7. தாதை  -  தந்தை
இனிதே,
தமிழரசி.

Friday, 30 March 2012

ஆசைக்கவிதைகள் - 26

ஆராஞ்சு பார் கிளியே!

ஆண்: தண்ணிக்குப் போன
                     தவமயிலே தாராவே உன்
           கண்கள் சிவந்து 
                     கடுங்கோபமான தென்ன.
ஆண்:  கோபத்தை உள்ளடக்கி
                      கொஞ்சம் தயவு செய்து
            ஆர் மேல குற்றமென்னு 
                      ஆராஞ்சு பார் கிளியே.
                                             -  நாட்டுப்பாடல் (விடத்தல்தீவு)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

குறள் அமுது - (27)


குறள்:
ஈன்றபொழுதின் பெரிது உவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்                           - 69

பொருள்:
தாய் பிள்ளையைப் பெற்றெடுத்த நேரத்தில் அடைந்த இன்பத்தை விட, இவள் மகன் சான்றோனாக இருக்கிறான் என பிறர் சொல்வதைக் கேட்கும் போதே மகிழ்ச்சி அடைவாள். 

விளக்கம்: 
ஒரு தாய்க்கு தன் உயிரோடு கலந்திருந்த குழந்தையை பெற்றெடுத்த நேரத்திற்பட்ட துன்பங்கள் யாவும் குழந்தையைப் பார்த்ததும் இன்பமாக மாறிவிடும். அந்தக் கணம் அவள் வாழ்வில் மீண்டும் வரப்போவதில்லை. ஆனால் அதைவிட நல்ல மகிழ்ச்சியை அள்ளித்தரும் நேரங்கள் அவள் வாழ்வில் வரும். குழந்தை வளர்ந்து நல்லவனாக இருப்பதைப் பார்த்து மகிழ்பவள் தாய்தானே.
ஒரு பெண் காலின்பக் களிப்பில் கலந்து பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்க முன் அவள் மனதில் உதிக்கும் எண்ணங்கள் எத்தனை? எத்தனை? என்குழந்தை பெண்ணா! ஆணா! கருப்பா! சிவப்பா! என்ற சாதாரண எண்ணங்களை விட, என்குழந்தை அன்புடனும் பண்புடனும் உலகம் வாழ வழிவகுக்கும் அறிவாற்றலுடனும் யாவரும் புகழ வீரனாக இருக்க வேண்டும் என வயிற்றுள் குடியிருக்கும் குழந்தையோடு தன் உணர்வை பகிரும் தாய்மாரும் இருக்கின்றனர். அத்தகைய தாய்மார் பெற்ற குழந்தைகள் சான்றோராய் வரக்கூடும். 
வள்ளுவர் ‘சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்கின்றாரே, சான்றோன் என்றால் என்ன? சான்று என்றால் எடுத்துக்காட்டு. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே சான்றோர். அவர் மனிதகுலத்திற்கு முன்னோடியாக வழிகாட்டியாக விளங்கக்கூடும். எல்லோரிடத்திலும் அன்பும், பேச்சில் உண்மையும், பழிச்சொற்களுக்கு அஞ்சும் தன்மையும், உலகம் முன்னேற என்ன செய்யலாம் என்ற சிந்தையும், எல்லா உயிரையும் ஒன்றென மதிக்கும் கருணையும் சான்றாண்மை ஆகும். சான்றோருக்கு இக்குணங்கள் இயல்பாகவே இருக்கும்.

தான் பெற்றபிள்ளை படித்து பேரறிஞன் ஆனாலும் பெரும் செல்வமுடையவன் ஆனாலும், புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்தாலும், பிறர் அவனைப் பாராட்டி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும் போதே ஒரு தாய் பேரின்பம் அடைவாள். உங்கள் தாய்மார் உங்களை பெற்றெடுத்த நேரத்தைவிட அதிகமாக மகிழ்ச்சி அடைய வேண்டுமா, நீங்கள் உலகஉயிர்கள் மகிழ்வுடன் வாழவழி வகுக்கும். சான்றோனாய் உலகத்திற்காக வாழுங்கள். 

இதழாய் மலர்ந்தேன்


பசுந்துளிராய் முகிழ்ந்தே - மெல்ல
பசுந்தளிராய் அவிழ்ந்தே
இளந்தளிராய் விரிந்தே- மெல்ல
இளமிலையாய் அசைந்தே
முதிரிலையாய் அலைந்தே - மெல்ல
பழமிலையாய் வீழ்ந்தே
சருகாய் சாய்ந்து கிடந்தேன் - எனினும்
பெண்ணே! உன் இதழாய் மலர்ந்தேன்
கலைஞனின் எண்ணக் கருவினில்.
                                                                       - சிட்டு எழுதும் சீட்டு - 26

Thursday, 29 March 2012

அடிசில் 19


தக்காளி ஊறுகாய் 
                              - நீரா -
தேவையான பொருட்கள்:
தக்காளி  -  300 கிராம்
இஞ்சி  -  1” துண்டு 
உள்ளிப் பல்  -   10 
செத்தல் மிளகாய்  -  10
கரைத்த புளி  -  1 மேசைக்கரண்டி 
மஞ்சள் தூள்  -   1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்  -   1/4 தேக்கரண்டி
வெந்தயம்  -   1/4 தேக்கரண்டி
கடுகு  -  1/4 தேக்கரண்டி
எண்ணெய்  -  1 மேசைக்கரண்டி 
உப்பு  -  தேவையான அளவு 
செய்முறை:
1.  தக்காளியைக் கழுவி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்க.
2.  இஞ்சி, உள்ளிப்பல், செத்தல் மிளகாய் மூன்றையும் கரைத்த புளிவிட்டு நறுவல் துருவலாக அரைத்துக் கொள்க.
3.  வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து தூளாக்கிக் கொள்க.
4.  வாயகன்ற பாத்திரத்தைச் சூடேற்றி எண்ணெய் விட்டு கடுகை தாளிக்கவும்.
5.  கடுகு வெடித்ததும் வெட்டிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் இட்டு பொரியவிடவும்.
6.  அதனுள் அரைத்த விழுதை சேர்த்து மிகக் குறைந்த சூட்டில் வேகவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது வெந்தயத்தூளைப் போட்டு கிளறி இறக்கவும்.
7.   நன்றாக ஆறியதும் நீர்த்தன்மை அற்ற போத்தலில் இட்டு காற்றுப் போகாது மூடிவைத்து பரிமாறவும்.

தாள் வணங்கப் பெற்றேன்

பார்க்கும் பறவை எங்கும் நின்
          பக்குவம் கண்டேன்
யார்க்கும் கிடைத்தரிய நல்
          பாக்கியம் பெற்றேன்
நீர்க்குள் குமிழி போல்
          வாழ்க்கைய தாயினும்
மார்க்கம் கண்டேன் நின்
          தாள் வணங்கப் பெற்றேன்.

Wednesday, 28 March 2012

தாய்மொழி தமிழ் - பகுதி 5கோலெழுத்தாயும், கண்ணெழுத்தாயும், குயிலெழுத்தயும் பண்டைய தமிழர் எழுதிய தமிழ்  எழுத்தை தமிழி எனச் சொல்வர்.  கி மு முதலாம் நூற்றாண்டில் இருந்த சமவயங்க சுத்த என்னும் நூலில் 18 வகையான எழுத்துக்களின் பெயர்கள் உள்ளன. அவற்றுள் தாமிழி என்பதும் ஒன்று. இந்தத் தமிழி எழுத்துக்கள் ஈழத்திலும் தமிழகத்திலும் அகழ்வாராய்வின் போது கிடைத்த வண்ணம் இருக்கின்றன. தமிழியை தமிழ்-பிராமி எனவும் அழைப்பர். 
நம் தமிழ் எழுத்தின் தொடக்க எழுத்தாக இன்று கருதப்படும் தமிழி எழுத்து தோன்றியதற்கு பல இட்டுக்கட்டிய கதைகளைக் கூறுகின்றனர். பண்டைய நாளில் இந்தியாவில் எழுதப்பட்டு வந்த எழுத்துவகைகளுள் ஒன்றே பிராமி என்றும், அதை படைப்புக் கடவுளான பிரமன் பெயரால் பிரம்மி என அழைத்தனர்  என்றும் சொல்வர். ஆனால் அதற்கான எதுவித ஆதாரமும் அதைச் சொல்பவர்களிடம் இல்லை. வேறுசிலர் பிராமி மௌரிய பேரரசனான அசோகன் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். அந்தக் கருத்திற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை.
அசோகனின் கல்வெட்டு
உண்மையில் அசோகனின் கல்வெட்டுக்களில் இருந்த எழுத்தை ப்யூலர் என்னும் மேல்நாட்டு அறிஞரே பிராமி என்ற பெயரால் குறிப்பிட்டார். அவர் பிராமி என்ற பெயரை எங்கிருந்து பெற்றார், ஏன் அக்கல்வெட்டுக்களின் எழுத்தை பிராமி  எனக்குறிபிட்டார் என்ற விபரம் தெரியவில்லை. அசோகனின் கல்வெட்டுக்கள் கிடைத்த பின்னரே இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டின் மலைக்குகைகளில் பண்டைத் தமிழ் கல்வெட்டுக்களைக்  கண்டுபிடிக்கத் தொடங்கினர். அந்தக் கல்வெட்டுக்களில் காணப்பட்ட எழுத்துக்கள் அசோகனின் கல்வெட்டுகளில் இருந்த பிராமி எழுத்தைப் போல இருந்ததால் அவற்றை பிராமி என்றே அழைத்தனர். 
தமிழ்க் கல்வெட்டுக்களை முழுமையாகப் படித்தறியாது அவை என்ன மொழியில் இருக்கின்றன என்பதையும் அறியாது தம் மனம் போன போக்கில் தமிழருக்கு எழுத்தை எழுதக் கற்றுக் கொடுத்தவர் வடக்கே இருந்து வந்த பௌத்தமத பிக்குகளே என்றெல்லாம் எழுதிக் குவித்தனர். அக்கல்வெட்டுக்களை படித்தறிந்த போது அவை தமிழே என்பதை அறிந்தனர். எனினும் ப்யூலர் வைத்த பிராமியின் பெயரால் பண்டைய தமிழ் கல்வெட்டுக்களும் அழைக்கப்பட வேண்டுமென ஒருசில வரலாற்றறிஞர்கள் விட்டாப்பிடியாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பண்டைய எழுத்துக்களை வடபிராமி, தென்பிராமி, தமிழ்பிராமி, சிங்கள பிராமி என வட்டாரத்திற்கு ஒரு பெயாரால் அழைத்து தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். 
சோகனால் எழுதப்பட்ட கல்வெட்டுக்களை ப்யூலர், பிராமி எனக்குறிப்பிட்டதும் அதை நம்பி தொடர்ந்து எழுதி வருபவர்களுக்கு, அசோகனின் பிராமிக் கல்வேட்டுக்களில் தமிழுக்கே உரித்தான சிறப்பெழுத்துக்கள் அதிகமாக இருந்தும், அசோகனின் காலத்திற்கு முந்திய பண்டைத்தமிழ் கல்வெட்டுக்கள் பல இப்போது கிடைத்தும் அவற்றை பண்டைத்தமிழ் எழுத்தென்றோ தமிழி என்றோ எழுதவும் சொல்லவும் கூசுவது ஏன்?
சங்க இலக்கியங்களில் சங்கப்புலவர்கள் சொன்ன ஊர்களையும் விடயங்களையும் அப்படியே எடுத்துக்காட்டும் தமிழி எழுத்திலுள்ள இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

அகநானூறு திருப்பரங்குன்றத்தை
“ அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை”       - (அகம்: 59: 12)
எனக் கூறுகின்றது. சங்கப்பாடல்களிலேயே இசையமைந்த பாடல்களைத் தருவது பரிபாடல். அதில் மூன்று பாடல்களை நல்லந்துவனார் பாடியிருக்கிறார். அதில் திருப்பரங்குன்றத்தைப் பற்றி அவர்பாடிய பாடலாக ஒரு பாடல் இருக்கிறது. மற்றவை அழிந்தன போலும். 
திருப்பரங்குன்றக் குகைக் கல்வெட்டு
நல்லந்துவனார் போற்றிப்பாடிய திருப்பரங்குன்றத்து குகையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் 
 ‘அந்துவன் கொடுபிதவன்’ 
என தமிழி எழுத்தில் எழுத்தப்பட்டுள்ளது. அந்துவன் என்பவன் கற்படுக்கையை செய்து கொடுப்பித்தான் என்பதே இதன் கருத்தாகும். அந்துவன் என்ற பெயரில் சேர அரசர்களும் வேறு பலரும் இருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. 
ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் நெடுமான் அஞ்சி, மலையமான் ஆண்ட கோவலூரை அழித்ததை
“ முரண்மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!”       - (புறம்: 99: 13 - 14)
என ஔவையார் புகழ்ந்து பாடியுள்ளார். 
ஜம்பைமலைத் தமிழிக் கல்வெட்டு
அந்த கோவலூருக்கு (இன்றைய திருக்கோவிலூருக்கு) அருகே இருக்கும் ஜம்பைமலையின்  தமிழிக் கல்வெட்டு நெடுமான் அஞ்சி சமணர்க்கு செய்து கொடுத்த பள்ளிப் படுக்கை பற்றி சொல்கிறது.  அக்கல்வெட்டில்
“சதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி ஈத்த பாழி”
என வெட்டப்பட்டுள்ளது. அசோகனின் கல்வெட்டும் அதியமானை சதியபுத்திர எனச் சொல்வதாலும்  ஜம்பைமலைக் கல்வெட்டு அசோகன் கல்வெட்டின் எழுத்தின் வடிவத்தைப் போல இருப்பதாலும் அதனை அசோகனின் கலாமாகிய கி மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர். 
கரூர் மாவட்ட புகலூர் ஆறுநாட்டார் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு 
மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆ . . . . . . . ல்லிரும்பொறை மகன் பெருங் 
கடுங்கோன் மகன் கடுங்கோன் (இ)ளங்கடுங்கோ 
(இ)ளங்கோ ஆக அறுப்பித்த கல்.
எனச்சொல்கிறது. அந்தக் கல்வெட்டு கூறும் அரசர்களின் பெயர்களை சங்ககால சேர அரசகளின் புகழ்பாடும் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலரும், எட்டாம்பத்தில் பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழாரும், ஒன்பதாம்பத்தில் இளம்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர் கிழாரும் ஒழுங்காக அப்படியே தந்துள்ளனர். 
இப்படி தமிழகத்தில் பரவலாகக் கண்டு பிடிக்கப்பட்ட சமணப்படுக்கைகள் பற்றிய சங்ககால கல்வெட்டுக்களைப் போல் அல்லாது, சங்க இலக்கியம் சொல்லும் செய்திகளை தேனி மாவட்டத்தில்  புலிமான்கோம்பை என்ற ஊரில் கிடைத்த மூன்று நடுகற்கள் காட்டுகின்றன. 
“விழுத்தொடை மறவர் வில்லிடை வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் .......................”                - (அகம்: 53: )
என அகநானூற்றில் சொல்லப்பட்டது போலவே அந்நடுகற்கள் எழுத்துடை நடுகற்களாக அதுவும் பண்டைத் தமிழ் எழுத்துடை நடுகற்களாக இருக்கின்றன. 
“ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே”       - (தொல்: 20: 3)

புலிமான்கோம்பைக் கல்வெட்டு
எனத் தொல்காப்பியர் சொன்ன ஆகோள் பற்றிய செய்தியின் உண்மைத் தன்மையை  
“கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்”
என முதலாவது  நடுகல் எடுத்துச் சொல்கிறது.  கூடல் ஊரில் ஆ கோள் நடந்த போது இறந்த பேடு தீயன் அந்தவன் என்பானுக்கு நட்ட கல் எனச்சொல்கிறது. அந்நடுகல்லில் உள்ள தமிழி எழுத்து வடிவத்தைக் கொண்டு இக்கல் கி மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் மற்றைய இரு நடுகற்களும் கி மு மூன்றாம் நூற்றாண்டிற்கும் முந்தியவை எனவும் பேராசிரியர் கா இராஜன் சொல்லியுள்ளார். தொடர்ந்து சங்கத் தமிழ்கூறும் செய்திகளை நடுகற்களில் காண்போம்.
இனிதே,
தமிழரசி.

எங்கே நிம்மதி

நம்மை நாமே வாழ்க்கைப் போராட்டத்திலும் வேலைப் பழுவிலும்  மெல்ல மெல்லத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் ஏற்படும் மனவேதனையில் எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி என நிம்மதியைத் தேடுகிறோம். உண்மையில் நிம்மதி நம்மிடமே இருக்கின்றது. அதைத்தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. நிம்மதி வேண்டுமாயின் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். உலக உயிர்கள் அனைத்திற்கும் ஓய்வு அவசியம். உடலுக்கு முழுமையான ஓய்வைக் கொடுப்பது நித்திரையே.

முன்பெல்லாம் மனிதர் உடலால் உழைத்து வாழ்ந்தனர். ஒவ்வொரு நாளும் பெருந்தூரம் நடந்தனர். அதனால் அவர்களால் நன்றாக நித்திரை கொள்ள முடிந்தது. இந்தக் கணினி யுகத்தில் பெரும்பாலும் இருந்த இடத்திலேயே வேலை செய்கிறோம். மனிதனின் உடல் உழைப்பு குறைந்து மூளைக்கு வேலை கூடிவிட்டது. உடல் உழைப்பு இல்லாததால் நித்திரைக்கும் மருந்து குடிக்க வேண்டிய நிலையில் வாழ்கிறோம்.
நித்திரை இன்மைக்கு பொதுவாக உடல்நலக் குறைவு, மனஉளைச்சல் (கோபம், பொறாமை, பயம், காதல் போன்ற உணர்வுகள்) காரணம் என்றாலும் வேறுகாரணங்களும் இருக்கின்றன. இக்காலப் பழக்கங்களான 
  1. நேரம் போவது தெரியாது தொலைக்காட்சி பார்ப்பது.
  2. செல்போனில் மணிக்கணக்கில் பேசுவது.
  3.   வலைத்தளத்தில் அரட்டை அடிப்பது.
  4.   அதிக உணவை வயிறு புடைக்க உண்பது.
  5.   உண்ணாமலே உறங்குவது.
போன்றவைகளும் நித்திரையைக் குறைக்கின்றன.
நித்திரை குறைந்தாலும் கூடினாலும் உடல்நிலை பாதிக்கப்படும். மெலட்டோனின் (melatonin) என்னும் ஓமோன் சுரப்பதாலேயே எமக்கு நித்திரை வருகின்றது. அந்த ஓமோன் அதிகமாகச் சுரந்தால் நித்திரையும், குறைவாகச் சுரந்தால் நித்திரை இன்மையும் ஏற்படுகின்றது.  அவ்வோமோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாகவும் சுரக்கின்றது. ஆதாலால் இருளான இடத்தில் நன்றாக நித்திரை கொள்ளலாம்.
மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் ஓய்வைக் கொடுத்து புத்துணர்ச்சியைத் தருவது நித்திரையே. நித்திரைக்கும் ஞாபகசக்திக்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். ஆழ்ந்த நித்திரை கற்கும் ஆற்றலைக்கூட்டும். படித்து களைத்திருக்கும் மூளை நித்திரையால் புத்துணர்ச்சி பெறுகிறது. அதனால் காலையில் எழும்பும் பொழுது ஞாபக்சக்தியும் கூடுகிறது. சோர்வு, கவனக்குறைவு, மறதி போன்றவை நித்திரை இன்மையால் உண்டாகின்றன. 
மனவுளைச்சல்களால் வரும் மன அழுத்தத்தின் போது கோர்டிசோல் (cortisol) எனும் ஓமோன் சுரக்கின்றது. அதனால் நித்திரை இன்மை ஏற்படுவதோடு இரத்த அழுத்தமும் கூடும். அது இரத்த நாடிகளில் கல்சியப்படிவை உண்டாக்கி அவற்றைத் தடிப்படையவும் செய்யும். அதனால் இருதய நோய்க்கு நித்திரை இன்மை காரணமாகின்றது. எனவே மனித வாழ்க்கைக்கு நித்திரை மிகவும் முக்கியமாகும். நித்திரையின் போது சுரக்கும் ஓமோன்கள் உடலின் கொழுப்பைக் குறைத்தல், தசைகளைப் பழுது பார்த்தல், தோலைப்புதுப்பித்தல் போன்றவற்றைச் செய்து உடலின் வளர்ச்சிக்கும் நோயற்ற வாழ்வுக்கும் உதவுகின்றன. 
உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா? கவலைகளை ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு சூடான பாலில் 2 தேக்கரண்டி தேன்விட்டு கலக்கிக் குடியுங்கள். நல்ல காற்றோட்டமுள்ள சத்தம் இல்லாத, இருளான இடத்தில் உறங்குங்கள். உங்கள் இமைகள் நித்திரையைத் தழுவ, நிம்மதி உங்களைத் தழுவிக்கொள்ளும்.     

பக்திச்சிமிழ் - 20

கணபதிவர அருளினன்   
 - சாலினி -
நாம் ஆனைமுகத்தவனை பிள்ளையார், கணபதி, விநாயகன் எனப்பல பெயர்களால் அழைத்து வணங்குகின்றோம். இந்து சமயத்தவர்கள் எந்தக்காரியத்தை செய்யத்தொடங்கும் போதும் பிள்ளையாரை வணங்கிய பின்பே செய்வது வழக்கமாகும்.  இன்று உலகெங்கும் பிள்ளையாருக்கு கோயில்கள் இருக்கின்றன. பிள்ளையார் வணக்கத்தை உலகெங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் ஈழத்தமிழர்களே. எமது பண்டைத் தமிழ் மூதாதையராகிய சங்ககாலத் தமிழர் பிள்ளையார் என்ற கடவுளை எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் பிள்ளையாரை வணங்கவில்லை என்பதே உண்மை.
தமிழருக்கு பிள்ளையாரை அறிமுகம் செய்து வைத்த பெருமை சிறுத்தொண்டரையே சேரும். இவர் நரசிம்ம பல்லவனின் தளபதியாய் வாதாபிக்கு படையெடுத்து சென்று வென்று வந்தபோது அங்கிருந்த பிள்ளையாரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார். செங்கட்டாங்குடியில் உள்ள கணபதீச்சரம் கோயிலில் வைத்து வணங்கினார் என்பது வரலாறு. இவர் கி பி 630ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இவர் காலத்தில் வாழ்ந்த சைவசமயச் சான்றோர்களாகிய திருஞானசம்பந்தரும், அப்பருமே முதன் முதல் தமிழர் வரலாற்றில் பிள்ளையாரைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். 
இலண்டனில் படிக்கும் பிள்ளைகளூக்கு சமயம் ஒரு பாடமாக இருக்கின்றது. அந்த சமயபாடம் எல்லா  மதங்களையும் தனித்தனியே சிறிது சிறிது விளக்கிச் சொல்கிறது. அப்படிச் சொல்வது நல்லது என்றே நினைக்கின்றேன். அதனால் ஒவ்வொரு மதங்களும் என்ன சொல்ல வருகின்றன என்ற ஒரு சிறு தெளிவு பிள்ளைகளுக்கு ஏற்படும். இந்து சமயத்தைக் கூறும் பகுதியில் பிள்ளையாரின் பிறப்பைப் பற்றி ஒரு கதை வருகின்றது. அக்கதை சிவமகாபுராணத்தில் இருக்கின்றது. 
ஒருநாள் பார்வதிதேவி அவரின் உடலில் இருந்த ஊத்தைகளை திரட்டி ஒரு பிள்ளையை உருவாக்கி, அதற்கு உயிர் கொடுத்து காவலுக்கு வைத்துவிட்டு நீச்சல் தடாகத்தில் குளிக்கச் சென்றாராம். அங்கே வந்த சிவனை அப்பிள்ளை போகவிடாது தடுக்க, சிவன் பிள்ளையின் தலையை துண்டித்தார். அதனைக் கண்ட பார்வதி அழுதார். அதனால் சிவன் ஒரு யானையின் தலையை வெட்டி பிள்ளையின் உடலில் பொருத்தி உயிர்பெற்று எழச்செய்தார். அவரே பிள்ளையார். இதுவே அக்கதை. 
இந்து சமயக் கதைகளில் ஒன்றாக அதைப் படிக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக அக்கதையில் சிறு மாற்றம் செய்திருக்கிறார்கள். பார்வதிதேவியின் உடலில் இருந்து எடுத்த ஊத்தைக்குப் பதிலாக பார்வதிதேவி பூசிக்குளிக்க வைத்திருந்த அரைத்த சந்தனத்தில் பிள்ளையார் செய்ததாக அக்கதை மாற்றப்பட்டுள்ளது. இந்து சமயம் கூறும் பிள்ளையாரின் கதைகளில் இதுவும் ஒன்று.
நம் சைவசமயம் என்ன சொல்கிறது?. உமையம்மையார் பெண்யானையின் உருவத்தை எடுக்க, பெரிய ஆண்யாணையின் வடிவத்தோடு தனது அடியை வணங்குபவரின் துன்பத்தை நீக்கும் பொருட்டு, சிவன்  பிள்ளையார் பிறக்க அருள் செய்தார். பிள்ளையாரை தமிழருக்கு அறிமுகம் செய்து வைத்த சிறுத்தொண்டநாயனார் காலத்து கதையே இது. ஏனெனில் இக்கதையை ஞானக்குழந்தையாகிய 
திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். 
நம் எல்லோருக்கும் தெரிந்த தேவாரமே அது. எனினும் பலர் அத்தேவாரம் என்ன சொல்கின்றது என்பதைக் கண்டு கொள்வதில்லை. உமையும் சிவனும் பெண்யானையாகவும் ஆண்யானையாகவும் உருவெடுக்கப் பிறந்தவரே பிள்ளையார் எனக்கூறும் தேவாரத்தை ஒருக்கால் படித்துப் பாருங்கள். 
“பிடியதன் உரு உமை கொள மிகுகரி அது
வடிவொடு தனது அடி வழிபடுமவர் இடர் 
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே”


பிடி [பெண்யானை] அதன்  உரு [வடிவத்தை] உமை கொள [எடுக்க] மிகுகரி [பெரிய ஆண்யானை]அது
வடிவொடு [வடிபத்தோடு] தனது அடி வழிபடும் அவர் [தனது அடியை வழிபடுபவரது] இடர் [துன்பத்தை]
கடி[களைய] கணபதி வர அருளினன் [பிள்ளையார் பிறக்க அருள்செய்தார்] மிகுகொடை
வடிவினர் [தியாகராசராகிய சிவன்] பயில் வலிவலம் உறை இறையே”


சொல்விளக்கம்

1.  பிடி  -  பெண்யானை
2.  உரு  -  உருவம்
3.  கொள  -  எடுக்க
4.  கரி  -  ஆண்யானை
5.  வடிவொடு - வடிவத்தோடு
6.  இடர்  -  துன்பம் 
7.  கடி  -  கடிதல் (நீக்குதல்)
8.  மிகுகொடைவடிவினர் - தியாகராசராகிய சிவன் 

பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 2

எத்தனை விதமான இயல்புகள் படைத்தவனாக மனிதன் இருக்கின்றானோ அத்தனை விதமான இயல்புகளையும் இறைவனிடம் பக்தி பண்ணுவதற்கு அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதவாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை நாம் அநுபவத்தில் காண்கின்றோம். எம்மிடம் பொருளில்லையே, வீடு இல்லையே, குழந்தை இல்லையே என ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் துன்பப்படுகிறோம். துன்பப்படுதல் என்னும் எமது இயல்பால் நாமே பெரும் துன்பத்துக்கு உள்ளாகின்றோம். 


துன்பம் மனிதனுக்கு உதவாதது என்பது மற்றைய சமயநெறிகளின் கோட்பாடு. ஆனால் துன்பத்தாலேயே பெரும்பயன் அடையலாம் என்று திருவாசகம் புகட்டுகின்றது. இறைவன் எனும் மேலாம் நிலையைத் தான் இன்னும் அடையவில்லையே என்று மனிதன் வேண்டியவாறு துன்பமடையட்டும்.

எம்மானே உன் அருள் பெறுநாள்
          என்றென்றே வருந்துவனே”


எனத் துன்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொள்ளலாம். பக்தி வெள்ளத்தில் மூழ்கி வருந்தித் துன்பப்படும் வழியை

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
          இறப்பு அதனுக்கு என் கடவேன்
வான் ஏயும் பெறில் வேண்டேன்
          மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”                (திருவாசகம்: 5: 12)
எனக் காட்டித்தந்துள்ளார்.
அப்படி வருந்த வருந்த பக்திஅருவியில் தோயலாம். உப்புப் பொதி நீரில் கரைவது போல எம்மை நாமே துன்பத்துள் கரைத்துக் கொள்ள வேண்டும். அப்போது துன்பத்தை நாம் உணரமாட்டோம்.

இறைவனைப் பக்திசெய்ய  ‘அதுவேண்டும், இதுவேண்டும் என ஏங்கி, ஏங்கி வருந்தும் எம்மியல்பை சற்றே மாற்றி 
“தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”
என இறைவனை நினைத்து ஏங்குமாறு திருவாசகம் சொல்கிறது.
‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது பழமொழி. உலகில் எங்கு சென்றாலும் யாரைச்சந்தித்தாலும் பகையை வளர்க்கும் குணமுடையவர் பலர் வாழ்கின்றனர். பகைமை பொல்லாதது. அதனை முற்றாகக் களைந்து எறியவேண்டும். ஆனால் பக்திநெறி, பக்தியில் மூழ்குவதற்கு பகைமையையும் நன்றாகப் பயன்படுத்து. அதை வேண்டியவாறு வளர்த்துக்கொள்.  அதை முற்றாக இறைவனிடம் திருப்பிவிடு. எவ்வளவுக்கு எவ்வளவு நீ இறைவனை வெறுக்கிறாயோ, நாத்திகம் பேசுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனுடைய இறைமை உனக்குக் கிட்டுகின்றது எனச்செப்புகின்றது. 
கண்ணனை வெறுத்த கம்ஸன் கடிதில் கண்ணன் மயம் ஆகவில்லையா? முருகனைப் பகைத்த சூரன் என்ன ஆனான்? அவர்களைப்போல் கடவுளை முற்றுமுழுதாக வெறுக்கக் கற்றுக்கொள்பவர்கள் பாக்கியவான்களே. சிவனைப் பகைத்து சினந்து எழுந்து வேள்விசெய்த தக்கனுக்கு சிவன் அருள் செய்ததை 
“தக்கனையும் எச்சனையும் 
           தலை அறுத்துத் தேவர் கணம்
தொக்கன வந்தவர் தம்மை
           தொலைத்தது தான் என் ஏடி
தொக்கன வந்தவர் தம்மைத்
           தொலைத்தருளி அருள் கொடுத்து அங்கு
எச்சனுக்கு மிகைத் தலைமற்று
            அருளினன் காண் சாழலோ”                     - (திருவாசகம்: 12: 5)
மாணிக்கவாசகர் திருச்சாழலில் எமக்கு காட்டித்தந்துள்ளார். எனவே நீங்கள் எவருடனும் பகைக்க வேண்டுமா அந்தப்பகையை முழுமூச்சாக இறைவன் மேல் திருப்புங்கள், அருள் கிடைக்கும். கடவுளை அடைதல் ஒன்றிலே மகிழ்ந்திருப்பவன் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்னும் பெருநிலையை அடைந்துவிடுகிறான். மனிதப்பண்பில் கெட்டது என்றது ஏதுமில்லை. எந்தப் பண்பையும் தெய்வத்திடம் செலுத்த வேண்டும். ஏனைய இடத்தில் செலுத்தப்படும் மனிதப் பண்புகளால் நன்மையும் வருவதுண்டு. கேடும் வருவதுண்டு. அவற்றை கடவுளிடத்தில் திருப்பினால் நிலையான நன்மையே வரும். ஏனெனில் கடவுள் ஒருவரே நலனுடையான். கேடில்லான். மனிதன் தனிடமுள்ள இயல்புகள் யாவற்றையும் தெய்வத்திடம் திருப்பி விடுவானேயாகில் தெய்வீகம் அவனுக்கு சொந்தமாகிவிடுகின்றது என திருவாசகம் செப்புகின்றது.
ஆசை, மோகம், காமம் என்பன கொடியதிலும் கொடியது. மனிதனுடைய உயிரை அது உறிஞ்சிவிடுகின்றது. காமத்திற்கு உட்பட்டு உலகம் ஓயாது தட்டழிந்து கொண்டிருக்கிறது. அத்தகைய காமத்தையும் திருவாசகம் பயன்படுத்துகிறது. கடவுளிடத்து மோகம் கொள்கின்ற அளவுடைய கொடிய காமம் அருட்பித்தாக மாறிவிடுகின்றது. அம்பிகையின் பெயர்களில் சிவகாமியும் ஒன்று. சிவகாமி என்றால் சிவனிடத்து காமம் கொள்பவள். உயிர்கள் எல்லாம் அப்பெயருக்குரிய நிலையை அடைய வேண்டும். 
“நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்”                    - (திருவாசகம்: 17: 3)
என்ற அளவுக்கு காமம் கொள்கின்ற பக்தர்கள் சிவமயமாய் மாறிவிடுவார்கள்.

திருவாசகத் தேனாற்றில் ‘திருத்தசாங்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதுவும் அதுபோன்ற பகுதிகளும் ஞானக்கவிஞராகிய மாணிக்கவாசகரின் தெய்வக்காதலை சுவைபட எடுத்துச் சொல்கின்றன. தசாங்கம் என்பது அரசர்க்குரிய பத்துச் சிறப்புக்களாகும். அரசர்களுக்கு எல்லாம் அரசனாகிய திருவாரூர் தியாகராஜனின் பத்துச் சிறப்பு அங்கங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி அதை திரும்பச் சொல்லும்படி பச்சைக்கிளியை வேண்டிப் பாடுகிறாள் மணிவாசகத் தலைவி

“ஏரார் இளம் கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் 
சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெள்மலரான் பால்கடலான் செப்புவபோல
எம்பெருமான் தேவர்பிரான் என்று”                               - (திருவாசகம்: 19: 1)
கையிலே கிளியை வைத்து கொஞ்சிக் கெஞ்சி அழகொளிரும் இளமையான கிளியே! வெண்தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் பால்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும் எங்கள் திருப்பெருந்துறை மன்னனின் சிறப்புமிக்க திருநாமத்தைச் சொல்வது போல ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர்பிரான் என்று ஆராய்ந்து ஆராய்ந்து சொல்வாயாக எனக் கேட்கிறாள் கடவுட்காதலி. ஞான ஏக்கம் என்பது காதல் ஏக்கமாக வெளிப்பட்டு திருவாசகத் தேனாகச் சொட்டுகிறது. அந்தத் திருவாசகத் தேனாற்றில் எப்படி ஞானக்காதலி ஆகலாம் என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.