Wednesday, 29 February 2012

வித்தக விநாயக!


பாதச் சிலம்பு பலவிசை பகர
நாத நர்த்தன மாடிடு நாயக!
வேத மந்திர வித்தக விநாயக!
பேத மறுத்து வெருவினை போக்கிடு.
பேதித்திடு மென் பேதமை எல்லாம்
ஆதி அந்தத்து அகத்தினுள் அடக்கி
நீதியாய் ஆக்கி நித்தலும் நின்
பாத மலர்ப் பதத்தினுள் அமர்த்திடு.

தாய்மொழி தமிழ் - பகுதி 2

செம்மொழியாகும் தகுதியை கிரேக்கமொழி, இலத்தின்மொழி, சீனமொழி, எபிரேயமொழி, சமஸ்கிருத மொழி, தமிழ்மொழி ஆகிய ஆறு மொழிகளே பெற்றிருக்கின்றன. இவற்றில் கிரேக்கமொழி, இலத்தின்மொழி,  சமஸ்கிருதமொழி ஆகிய மூன்றும் இறந்த மொழிகளாகும். 
 • எபிரேயம் - கி பி 2ம் நூற்றாண்டில் வழக்காறு ஒழிந்த மொழியாய் போனது. எனினும் கி பி 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எலியேசர் பென் யெஃகுடா (Eliezer Ben-Yehuda) என்ற மொழியியல் அறிஞர் மீண்டும் உயிர்பெற வைத்துள்ளார். இது இன்றைய இஸ்ரேலின் ஆட்சி மொழியாக வாழ்கிறது.
பழைய சீன எழுத்து (மியூசியம் - ஜேர்மனி)

 • செம்மொழிகளில் சீனமொழியும், தமிழ் மொழியுமே மனிதர்களால் இடைவிடாது தொடர்ந்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வாழுகின்ற மொழிகளாகும். அதிலும் சீனமொழியின் எழுத்துவடிவம் இன்னும் படஎழுத்து நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் தமிழ்மொழி தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே எழுத்தின் படஎழுத்து (உருவெழுத்து), கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று படி நிலைகளையும் கடந்து வரியெழுத்தாகிய நான்காம் நிலையையும் அடைந்துவிட்டது. 
எம்தாய்மொழியாம் தமிழ்மொழி இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றது. பிற மொழியின் உதவி இன்றி பேசவும் எழுதவும் வல்லமொழி. தமிழுக்கே உரிய சங்க இலக்கிய வளத்தால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கு’ என்றும்  உலகுக்கு வழி காட்டும் மொழியாய், உலக மொழிகள் பல பிறந்து வாழ வளர வழிவகுக்கும் தாய்மொழியாயும் நிற்கிறது. அத்துடன் உலக வளர்ச்சிகு எற்ப வளர்ந்து வரும் செம்மொழியாகவும் வாழ்ந்து வரும் செம்மொழியாகவும் இருக்கிறது. ஆதலால் உலகின் சிறந்த ஆறு செம்மொழிகள் உள்ளும் உயர்தனிச் செம்மொழி தமிழே ஆகும்.                                                                                 
                                                                                                     தமிழ் எழுத்து (திரிகோணமலை)
தமிழர் எப்போது எழுதத் தொடங்கினர்? அவர்களின் எழுத்து வடிவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகாண முற்பட்ட போது நான் அறிந்தவற்றை இங்கு சொல்ல விரும்புகின்றேன். தென்கிழக்காசிய மொழிக் குடும்பங்களிடையே உள்ள தொடர்புகள் மிகத்தெளிவு இல்லாது இருக்கின்றன. இது உலகமொழிக் குடும்பங்கள் யாவற்றிற்கும் பொதுவானது என நினைக்கின்றேன். உலகத்தின் தாய்மொழி இதுதான் என இங்கு யாரும் வரையறுத்துக் கூறிவிட முடியாது. அதற்கான வரலாற்று ஆதாரங்களை எவரும் எழுதி வைத்துச் செல்லவில்லை. 
இன்றுள்ள உலகமொழிகள் பெரும்பாலும் படஎழுத்து நிலையில் இருந்து உண்டானவையே. பண்டைய மொழிகள் தொடர்ந்தும் படஎழுத்து வடிவில் எழுதப்பட்டன என்பதை உலக மொழி வரலாறு எமக்குக் காட்டுகிறது. அதற்கு சீனமொழி இன்றும் படஎழுத்து வடிவில் இருப்பதை உதாரணமாகக் காட்டலாம். ஆனால் தமிழ்மொழி என்றோ தன்னை வரியெழுத்து நிலைக்கு உயர்த்திக் கொண்டுவிட்டது. வரியெழுத்து வடிவில் எழுதிய தமிழ் மொழிக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் என்பதை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது. 
தமிழும் படஎழுத்து நிலையில் இருந்து உண்டானது என்பதற்கு எழுத்து என்ற சொல்லே ஆதாரமாக இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் (கி மு 500 - கி மு 200) எழுத்து என்ற சொல்லை சித்திரம் ஓவியம் என்ற பொருளிலும் சொல்கின்றன. சங்கச் சான்றோரான பரணர் அருவி வீழும் கொல்லி மலையை மேலும் அழகு படுத்த கடவுள் வடிவம் கீறிய பாவை அமைத்ததை
“களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவை”                                  
                                                   - (அகம்: 62: 13 - 15) 
 என அகநானூற்றில் கூறியுள்ளார்.
சங்ககாலத்தில் திருப்பரங்குன்றத்திருந்த சித்திர மண்டபத்தில் கண்காட்சிக்கு வகை வகையாக வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியங்களாகக் காட்டுமிடத்தில்
“இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்”
 எனச் சங்ககால புலவரான நப்பண்ணனார் பரிபாடலில் சொல்கிறார். இது சங்ககாலத்தில் ஓவியத்தை எழுத்து என்று சொன்னதைக் காட்டுகிறது. 
“எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்”                                  
                                            - (பரி: 18: 28 - 29)
கோயிலில் வைத்திருந்த ஓவியத்தை எழுதெழில் எனக் குன்றம்பூதனாரும் பரிபாடலில் காட்டுகிறார்.
‘கடவுளின் உருவம் எழுத ஒரு கல் கொணர்வோம்’ என சேரன் செங்குட்டுவன் கூறியதை இளங்கோஅடிகளும்
“கடவுள் எழுதவோர் கல்கொண்டல்லது”  
                                           - (சிலம்பு: கால்கோள்: 14) 
என சிலப்பதிகாரத்தில் சொல்கிறார். 
மணிமேகலையில் சீத்தலைச்சாத்தனாரும்
“கந்துடை நெடுநிலை காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை”                        
                                           - (மணி: துயில்: 94 - 95)
என அற்புதமான ஓர் ஓவியப்பாவையை எழுதியது என்றே குறிப்பிடுகிறார்.
இவையாவும் தமிழ்மொழியும் தன் தொடக்க நிலையில் படஎழுத்தாக வரையப்பட்டது என்பதையே காட்டி நிற்கின்றன.
படஎழுத்து, கருத்தெழுது, அசையெழுத்து என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மனிதன் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உருவங்களைப் படமாகக் கீறினான். உருவத்தால் ஆன அந்தப் படத்தை உருவஎழுத்து என்றும் படஎழுத்து என்றும் கூறுவர். படஎழுத்தில் உள்ள உருவம் அதன் பெயரைக் குறிக்காமல் ஒரு கருத்தைச் சொல்லுமானால் அது கருத்தெழுத்து எனப்படும். அதாவது ‘புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது’ (No Smoking) என்பதற்கு நாம் பயன்படுத்தும் அடையாளத்தைப் போன்றதே கருத்தெழுத்து. அவ்எழுத்துக்கு ஒலி இல்லை. 

அசையெழுத்து என்பது கூட்டெழுத்தாகும். க்+அ எனும் இரு எழுத்துக்களும் கூட்டாகச் சேர்ந்து ‘க’ எனும் எழுத்தை உருவாக்குவது [க்+அ=க] போன்றதே அசையெழுத்து. தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களை அசையெழுத்து என்றும் கூறலாம். 
தாய்மொழியாகிய தமிழில் உள்ள சொற்களில் எழுத்து என்னும் சொல் மிகவும் சுவையான கருத்தாழம் உள்ள சொல்லாகும். எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 28 February 2012

இரண்டு உருவமும் ஒன்றே

பக்திச்சிமிழ் - 17

சங்கரநாராயணன்

இன்றைய தமிழர்களாகிய நம்மில் சிலர் திருமால் தமிழரின் கடவுள் இல்லை சிவனே தமிழரின் கடவுள் என்றும் வேறுசிலரோ சிவன் சைவசமயத்தவர் கடவுள் திருமால் வைணவசமயத்தவர் கடவுள் எனவும் சொல்கிறார்கள். ஆனால் நமது சைவசமய நாயன்மார்களும் வைணவசமய  ஆழ்வார்களும் இத்தகைய பிரிவினையைக் காட்டவில்லை. அதனை அவர்களது பக்திப் பனுவல்கள் மிகத்தெட்டத் தெளிவாகாக் காட்டுகின்றன.
திருநாவுக்கரசு நாயனார் தாம் பாடிய திருவலம்புரம் பதிகத் தேவாரத்தில் 

“தீக்கூர்ந்த திருமேனி ஒருபால் மற்றை ஒருபாலும் 
            அரி உருவம் திகழ்ந்த செல்வர்...”              (பன்.திருமுறை: 6: 58: 3)

என திருவலம்புரத்து இறைவனின் திருவுருவம் ஒருபகுதி தீயின் நிறமாக சிவனாகவும் மறுபகுதி திருமாலின் (அரி) உருவமாகவும் தெரிவதாகச் சொல்கிறார். பாதி சிவனாகவும் பாதி திருமால் ஆகவும் தெரியும் உருவையே சங்கரநாராயணன் என அழைக்கிறோம். இத்தேவாரத்தில் திருநாவுக்கரசர் யார் வலப்பக்கம் இருப்பார் யார் இடப்பக்கம் இருப்பார் என்பதைச் சொல்லவில்லை. 
ஆனால் அதனை சேரமான் பெருமாள் நாயனார் மிகவிரிவாக பொன்வண்ணத்து அந்தாதியில் தந்துள்ளார். சேரமான் பெருமாள் நாயனார் தில்லச் சிதம்பரத்திற்குச் சென்றார். தாம் பார்த்த  தில்லைக்கூத்தனின் பொன்வண்ணத்தை பொன்வண்ணத்து அந்தாதியாகப் பாடினார். அவருக்கு தில்லைக்கூத்தன் குடக்கூத்தனான திருமாலாகவும் தெரிந்தார். அதனை 

“இடமால் வலந்தான் இடப்பால்
          துழாய் வலப்பால் ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
          ஆழி இடம் வலம் மான்
இடமால் கரிதால் வலஞ்சேது
          இவனுக்கு எழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலம் கொக்கரை
           யாம் எங்கள் கூத்தனுக்கே”                 - (பன்.திருமுறை: 11: 6: 6)

இடப்பக்கம் மால், வலப்பக்கம் சிவன்; இடப்பக்கம் துளசி மாலை, வலப்பக்கம் கொன்றை மாலை; இடப்பக்கம் பட்டாடை, வலப்பக்கம் தோலாடை; இடப்பக்கம் சக்கரம்; வலப்பக்கம் மான்; இடப்பக்கம் கருநிறம், வலப்பக்கம் செந்நிறம்; இடப்பக்கம் குடக்கூத்து, வலப்பக்கம் கொக்கரைக்கூத்து. இந்த உருவம்தான் எங்கள் கூத்தனுடையது என்கின்றார். 
இதே கருத்தை ஆழ்வார்களில் மூத்தவரான பொய்கையாழ்வார் தமது  முதல் திருவந்தாதியில் 

அரன்நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல்மறை உறையும் கோயில் - வரை நீர்
கருமம் அழிப்புஅளிப்பு கையது வேல்நேமி
உருவம்எரி கார்மேனி ஒன்று”                              - (முதல் திருவந்தாதி: 1: 5)

அரன், நாரணன் எனும் பெயர்களை உடையவரது ஊர்தி எருதும்[ஆன்விடை], கழுகும்[புள்]. சொல்வது ஆகமமும்[உரை],  வேதமும்[மறை], இருப்பிடம் கைலாயமும்[வரை],  பாற்கடலும்[நீர்], செய்யும் தொழில் அழித்தலும்[அழிப்பு] காத்தலும்[அளிப்பு]. கையில் இருப்பது மூவிலைவேலாகிய சூலமும்[வேல்], சக்கரமும்[நேமி]. எரிபோன்ற செந்நிறமும் கார்போன்ற கருநிறமும் உடைய உருவத்தின் உடல் ஒன்றேதான் என்று கூறியுள்ளார்.
பேயாழ்வார் திருவேங்கடம் கோயிலுக்குப் போனார். அங்கே மூலமூர்த்தியைப் பார்க்கிறார். அவரோ வைணவ ஆழ்வார். அவர் கண்களுக்கோ அந்த மூலமூர்த்தி சடாமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்பும் அணிந்த சிவனாகவும் அடுத்தகணம் நீண்டமுடியும் கையில் சக்கரமும் கழுத்தில் பொன்னாரமும் அணிந்த திருமாலாககவும் மாறி மாறித் தெரிகிறார். திருவேங்கடனை - திருவேங்கடேஸ்வரனாகத் தான் கண்டதை மிகத்தெளிவாக மூன்றாம் திருவந்தாதியில் சொல்கிறார்.

“தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நூலும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து”                      - (மூன்றாம் திருவந்தாதி: 1: 5)

அதனாலேயே திருப்பதியானுக்கு திருவேங்கடேஸ்வரன் என்று பெயர். தமிழராகிய நாம் போற்றும் அந்த அருளாளர்கட்கு எல்லாம் ஓர் உருவாக நின்ற இறை எமக்கு ஏன் வெவ்வேறு உருவாகக் காட்சி அளிக்கிறார்?
இனிதே,
தமிழரசி

Sunday, 26 February 2012

குறள் அமுது - (23)


குறள்:
“நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்”                               - 1045

பொருள்:
வறுமை என்றழைக்கப்படும் பெரும் துன்பத்துள் பலவகைப்பட்ட துன்பங்கள் வந்து சேர்ந்து பெரிதாகும்.

விளக்கம்:
நல்குரவு என்றால் வறுமை. இடும்பை பெரும் துன்பத்தைக் குறிக்கும். வறுமை என்பது சாதாரண துன்பம் அல்ல. அளவிடமுடியாத பெருந்துன்பமே வறுமை. எம்மால் துன்பம் எனச்சொல்லப்படும் எல்லாத்துன்பங்களும் சேர்ந்து கூடிக்குலாவும் இடமே வறுமை. 

ஒருவருக்கு அடுத்தடுத்து வந்த துன்பங்களை இராமச்சந்திரக்கவிராயர்

ஆஈன மழைபொழிய இல்லம்வீழ
             அகத்தடியாள் மெய்நோவ அடிமைசாவ
மாஈரம் போகுதென்று விதைகொண்டோட
             வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள
சாவோலை கொண்டொருவன் எதிரேசெல்ல
             தள்ளஒண்ணா விருந்துவர சர்ப்பம்தீண்ட 
கோவேந்தர் உழுதுண்ட கடமைகேட்க
             குருக்கள்வந்து தட்சணை கொடுஎன்றாரே”
எனப் பாடியுள்ளார்.

ஒருவர் வளர்த்த பசு கன்று ஈன்றது. அப்போது  மழைபொழிய அவரது வீடு இடிந்தது வீழ்ந்தது. மனைவி குழந்தையைப் பெற்றெடுக்க உடல் வருந்தினாள்[மெய்நொந்தாள்]. வேலையாள் இறந்தான்[அடிமை சாவ]. நிலம் காய்கிறதே என விதைக்க ஓடியவரை மறித்து 'கடனைத்தா' என கடன்காரன் கேட்க, மரணச் செய்தியோடு ஒருவன் வர, விருந்தினரும் வந்தார். பாம்பும் அவரைக் கடிக்க, அரச ஊழியன் வரிப்பணத்தைக் கட்டு எனக்கேட்க குருக்களும் தட்சணை கொடு என வந்து நின்றார். 

இத்துன்பங்கள் ஏழ்மை உள்ளவருக்கு வரவில்லை. ஏழ்மையும் வறுமையும் வேறு வேறானவை. பொருள் இல்லாத்தன்மை எழ்மையாகும். துன்பங்களால் வரும் வெறுமை வறுமையாகும். இப்பாடலின் படி அவரிடம் மாடு, வீடு, மனைவி, அடிமை, வயல் என எல்லாம் இருக்கிறது. இருந்தும் அவரும் வறியவரே. ஏனெனில் பல துன்பங்களின் ஒட்டு மொத்த வடிவமே வறுமையாகும்.

பொருள் இருப்பவரே வறுமை எனும் பெரும் துன்பத்தால் துடிக்கும் போது, இருக்க இடமில்லாது, உடுக்க உடையில்லாது, படுக்கப் பாயில்லாது, குடிக்க நீரில்லாது, உண்ண உணவில்லாது, மழையும் வெய்யிலும் வாட்ட, நோய்க்கு மருந்தில்லாது, நடக்கக் காலில்லாது, உண்ணக் கையில்லாது, பார்க்க விழியே இல்லாது அரசபயங்கர வாதங்களால் வறுமை ஆக்கப்பட்டு இருப்போர் நிலையை சிறித்தே எண்ணிப் பாருங்கள்.

இவர்களின் வறுமை என்னும் பெரும் துன்பத்துள் எத்தனை எத்தனை புதுப்புது துன்பங்கள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய வன்னியின் வறுமையைச் சொல்லாமல் சொல்லும் குறள் இது. 

Saturday, 25 February 2012

ஆசைக்கவிதைகள் - 22தேடி அடைந்த மச்சான்
பெண்: நீரருவி கொட்டு தென்னு
            நனைந்து நின்ன வேளயில
            தேனருவி என்னு சொல்லி
            தேடி அடைந்த மச்சான்
             ஊன் உருகி நானும்
             உரு குலைந்த வேளயில
             மானுருவ மயிலு தேடி
             மன்னாரு போனதென்ன?
                                                                                   -  நாட்டுப்பாடல் (பாவற்குளம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

அடிசில் 15

கீரை அரையல்

                                       - நீரா -

தேவையான பொருட்கள்:
கீரை (frozen spinach)  -  1 கப்
சிறிய வெங்காயம்  -  1
சிறிய உள்ளிப் பூடு  -  1
பச்சைமிளகாய்  -  2
கட்டித்தயிர்  -  ½ கப்
மிளகு  -  ½ தே. கரண்டி 
உப்பு  -  தேவையான அளவு
செய்முறை
1.   அறை வெப்பநிலையில் கீரையை இளக வைக்கவும். 
2.   இளகிய கீரையுடன் மேலேயுள்ள மற்றப்பொருட்களைச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

வருவாயா வயலூரா!


கையார கும்பிட்டிலேன் 
          காதாரக் கேட்டிலேன்
நெஞ்சார நினைந்திலேன்
          நாவாரப் பாடிலேன்
மையாரும் கருநீல
          மயில் மீதமர்ந்து
வெய்யாரும்வினை நீக்க
          வருவாயா வயலூரா!

தாய்மொழி தமிழ் - பகுதி 1

தமிழிலே ‘தாயைப்போலப் பிள்ளை நூலைப்போல சேலை’ என்ற இனிய பழமொழி உண்டு. இப்பழமொழி உலகிலுள்ள யாவற்றிற்கும் பொருந்தும். பட்டு நூலில் நெசவு செய்தால் பட்டுத்துணியும், பருத்தி நூலில் நெசவு செய்தால் பருத்தித் துணியும் கிடைப்பது போல எந்தப் பொருளால் எதைச் செய்கின்றோமோ அந்தப் பொருளின் தன்மையையே அது காட்டி நிற்கும். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மொழிகளுக்கும் பொருந்தும்.
மொழி என்றால் என்ன? சிலர் பல ஒலிகளின் தொகுதியே மொழி என்பர். அதனை ஏற்றுக் கொள்வது சிறிது கடினம். ஏனெனில் இடிமுழக்கமும், கடல் அலையின் ஓசையும் ஒலியே. அவற்றை மொழியெனச் சொல்ல முடியுமா? ஆதலால் மனிதர் எழுப்பும் ஒலியின் தொகுதியை பேச்சுமொழி எனச்சொல்லலாம். இன்றைய நிலையில் எமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மற்றவர்களோடு பறிமறிக்கொள்ள உதவுவதே மொழி என்றும் சொல்ல முடியாது. அதுபோல் வெறும் எழுத்துக்களும் சொற்களும் சேர்ந்த கலவையும் மொழியல்ல. 
அது ஓர் இனத்தின் மக்களின் மரபு வழியை, பண்பாட்டை, நாகரீகத்தை, கலைகளின் தன்மையை, காதலை, வீரத்தை,  அரசியல் அமைப்பை, சமயக்கொள்கையை எடுத்துக் காட்டும் பொன் ஏடு. அந்தப் பொன்னேட்டைப் புரட்டிப் பார்த்தால் மூதாதையர் எமக்கு விட்டுச்சென்ற அறிவுச்சுரங்கமாக மொழி இருப்பதைக் காணலாம். முன்னோர் தமது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளையும் ஆய்வுகளையும் எடுத்துச் சொல்வதும் மொழியே.
முதல் தோன்றிய மனிதர் வெவ்வேறு வித ஒலி எழுப்பி ஒருவருக்கொருவர் தமது கருத்தைப் பரிமாறிக் கொண்டதாலும் சைகை மொழியே முதற்தோன்றியது எனலாம். இன்றும் நாம் மொழி தெரியாவிட்டால் எமது கருத்துக்களை சைகையாலேயே மற்றவர்க்கு புரியவைக்க முயல்கின்றோம். வாயால் பேசமுடியாத காதால் கேட்கமுடியாத சிறுகுழந்தைகள் கூட ஒருவரோடு ஒருவர் சைகையால் பேசிக்கொள்வது, சைகை மொழியே மானுடனின் முதல் மொழி என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் உலகின் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எது? என்ன? எங்கே? போன்ற கேள்விகளுக்கு விரல்களை மடக்கி முட்டிக்கையாகப் பிடித்து கையை ஆட்டி சைகையால் கேட்பதும் அந்த எச்சத்தின் மிச்சமே.
மனிதர் மொழியை பலவகையில் பயன்படுத்துகின்றனர். மொழி பேசவும் கேட்கவும் எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல சிந்தனைக்கும், கற்பனைக்கும், கனவு காண்பதற்கும்,  நினைவுகளை மீட்டவும் உதவுகின்றது. இன்றைய பல மொழிகளில் இருக்கும் பிசிருகளுக்கும் சிக்கல் தன்மைக்கும் இவையே காரணமாகும். ஒவ்வொரு மொழியும் அது பிறந்த இனத்தின் செயல் திறனையும் அறிவாற்றலையும் கொண்டே வளர்நடை போட்டு வலம்வருகின்றது. பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டும் துணைபுரிவது மொழியல்ல எனும் உண்மை இவற்றால் பெறப்படும். ஆதலால் மனித மொழியின் பிறப்பே இன்றைய மனிதரின் வளர்ச்சிக்கும் அறிவியற் கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டது.  
உலகெங்கும்  6809 மொழிகள் பேசப்படுகின்றன.  இவற்றில் அநேக மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. பேச்சு வழக்கில் மட்டுமிருக்கின்றன. உலகில் இன்று பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட 3000 மொழிகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்து போகுமாம். ஏனெனில் இரண்டு மூன்று பேர் பேசும் மொழிகளும் பத்து பேர் பேசும் மொழிகளும் ரஷ்யா, சுவீடன், நோர்வே, இந்தியா,  அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இருக்கின்றன.
உயிர்கள் பிறந்து வளர்ந்து அழிவது போல மொழிகளும் பிறந்து வளர்ந்து அழிகின்றன. முதன்மையமான மொழியாகப் பேசுவார் இல்லாது போனாலும் அந்தமொழியால் கிடைத்த இலக்கியம், சட்டம், அறிவியல், சமயக் கொள்கைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் அம்மொழியை இறந்தமொழி என்பர்.  இறந்த நிலையிலிருந்து இல்லாது ஒழிந்த மொழி அழிந்த மொழியாகும்.
                                                                                        
Bo மொழியை கடைசியாகப் பேசியவர் இவரே 
ஒரு மொழி அழியும் பொழுது அந்த மொழி பேசிய குழுமத்தின் எண்ணங்கள், போதனைகள், கண்டுபிடிப்புகள் யாவும் மனித வரலாற்றுச் சுவடியிலிருந்து அழிந்துவிடும். அந்தமான் தீவில் பல்லாயிர வருடங்களாக பேசப்பட்டு வந்த ‘போ’ (Bo) எனும் மொழி 2010ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி அழிந்து போய்விட்டது. அந்த மொழியுடன் அது மனித நாகரீக வளர்ச்சிக்கு வழங்கிய எத்தனையோ சிறந்த சிந்தனைகளும் அழிந்துவிட்டன. உயிர்கள் அழிவதைவிட மொழிகள் அழிவதே உலகவளர்ச்சிக்கு பேரிடராகும். எனெனில் மானுடனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு மொழியே.  மொழிகள் அழிவதற்கு
 • வளர்ச்சி அடைந்த பிறமொழித்தாக்கம்.
 • பிறமொழி மோகம்.
 • தமது மொழிமேல் பற்றில்லாமை.
 • மொழியை எழுதாது, பேசாது தவிர்த்தல்.
 • வளர்ந்து வரும் உலகமயமாக்கம்.
 • இலத்திரன் தொழில் நுட்பத்தாக்கம்.
போன்றவையும் காரணமாகும். இறந்த மொழிகள் மனிதர்களின் முயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்று எழுவதுண்டு. அப்படி உயிர் பெற்ற மொழிகளுக்கு வேல்ஸ் மொழியையும் ஹீப்ரு மொழியையும் உதாரணமாகச் சொல்லலாம். 
உன் தாய்மொழி என்ன எனக்கேட்கிறார்களே!, தாய்மொழி என்றால் என்ன? இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் எவர் என்ன மொழி பேசினாலும் அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டும் மொழியே தாய்மொழியாகும். உயிர்கள் ஒவ்வொன்றும் பண்புகளால் வேறுபடுவது போல மொழிகளும் தத்தமது பண்புகளால் வேறுபடுகின்றன. ஆனால் அவை அடிப்படையில் தத்தமது தாய்மொழியின் பண்புகளை ஒத்தே இயங்குகின்றன. 
இன்று உலகில் ஆறாயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்ட போதும் ஆறு மொழிகளே  செம்மொழிகள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஒரு மொழி செம்மொழி எனும் தகுதியைப் பெறுவதற்கு 
 1. மிகத் தொன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
 2. பிற மொழியின் துணையின்றி தானே தனித்து இயங்கக் கூடிய மொழியாக இருக்க வேண்டும்.
 3. இலக்கிய வளம் நிறைந்த மொழியாக இருக்க வேண்டும்.
 4. அந்த இலக்கியங்கள் அம்மொழி பேசிய மக்களின் பண்பாட்டை, கலைகளை எடுத்துக்காட்ட வேண்டும்.
 5. அம்மொழி தாய்மொழியாய் பல பிறமொழிகளைத் தோற்றுவித்திருக்கவேண்டும்.                           
ஆகிய ஐந்து தகுதிகளும் இருக்க வேண்டும். இத்தகுதிகளைப் பெற்ற உலகின் செம்மொழிகளை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி. 

Friday, 24 February 2012

கலைபயில்வோர் ஞானக்கண்

பக்திச்சிமிழ் [16]

பண்டையோர் பெண்களுக்கு உரிய கலைகள் அறுபத்து நான்கு என்றும் ஆண்களுக்கு உரிய கலைகள் எழுத்திரண்டு என்றும் பிரித்திருந்தனர். எனவே பண்டைனாளில் பெண்களும் ஆண்களும் தத்தமக்குரிய கலைகளைப் பயின்றனர் என்பதை அறியலாம். கலைகளைப் பயில வகை வகையாகக் கலைநூல்களும் இருந்திருக்கின்றன.

“கலையாரு நூல் அங்கம் ஆயினான் காண்
          கலைபயிலுங் கருத்தன் காண்.....”       
                                    - (பன்.திருமுறை: 6: 87: 8)
என சிவனை கலை நூலின் பகுதியாகக் காட்டி கலை பயில்பவனாகவும் திருநாவுக்கரசு நாயனார் காட்டுகிறார்.
திருநாவுக்கரசர் காலத்தில் பலரும் பல கலைகளைப் பயின்றிருக்கிறார்கள். இயல்பான நூல்களைக் கற்பதை விட கலைகளைப் பயில்வதற்கு மிகக் கூடிய ஈடுபாடும் பொறுமையும் கற்பனை வளமும் புதியனவற்றை உண்டாக்கும் திறனும் இருக்கவேண்டும். ஆதலால் கலைபயில்பவர்களின் அறிவுக் கண்ணாய் சிவன் இருப்பதை
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்”    
                                        - (பன்.திருமுறை: 6: 73: 2)
என திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்தில் சுட்டிக்காட்டுகிறார்.


வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறாது ஆயிரம் சமணரும் தன்னைக் கெடுத்ததாகக் கூறிய திருநாவுக்கரசருக்கு செந்தமிழை படித்து அறிய தன்னால் முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கிறது. தமிழை மட்டுமல்ல எண்ணாகிய கணிதத்தோடு பண்ணுடன் சேர்ந்த கலைகளையும் இறைவனின் மேன்மையையும் அறியாதிருந்த அவரை தாய் தந்தையரைப் போல அன்பாய் அரவணைத்து திருஎறூம்பியூர் இறைவன் ஆண்டுகொண்டாராம். ஆதலால் இறவனை நான் அடையப்பெற்றேன் எனச்சிறுகுழந்தை போல் பெருமிதமாகச் சொல்லி மகிழ்வதைப் பாருங்கள்.
“பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
          எண்ணேடு பண்ணிறைந்த கலைகளாய
தன்னை உந்தன் திறத்தறியாப் பொறியிலேனத்
          தந்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
          அடைந்தேனைத் தொடர்ந்தென்னை ஆளாக்கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்
           செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே”     
                                            - (பன்.திருமுறை: 6: 91: 1)

இனிதே,
தமிழரசி.

Thursday, 23 February 2012

அவளும் தாய்தானே!இடையிலோ குழந்தை 
வயிற்றிலோ பசி
தலையிலோ காய்கறிக் கூடை
தாய்மையைச் சுமக்கும்
தாயாய் அவள்
நாடென்ன
மொழியென்ன
இனமென்ன
அவளும் தாய்தானே!
                                 - சிட்டு எழுதும் சீட்டு - 22

Wednesday, 22 February 2012

குறள் அமுது - (22)


குறள்:
“உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்”                        - 540

பொருள்:
நாம் நினைத்ததை அடையும் வரை அதனையே தொடர்ந்தும் நினைத்தால் நினைத்ததை அடைதல் எளிதாகும்.

விளக்கம்:
உள்ளியது என்றால் நினைத்தது. நாம் நினைத்ததை அடைய வழி என்ன? நாம் செய்ய நினைத்த செயலை மறக்காது தொடர்ந்து நினைத்தலே சிறந்த வழியாகும். எனவே எங்கே எப்படி எந்த துறை சார்ந்த முயற்சியை நீங்கள் செய்தாலும் உங்கள் கடமையை மறந்து போகாதீர்கள். செய்ய வேண்டிய செயலை மறந்திருந்தால் எப்படி எடுத்த காரியத்தில் வெற்றி பெறமுடியும். செல்வச் செழிப்பால், பதவி உயர்வால், களியாட்டங்களால், சோம்பலால் கூட நாம் செய்ய வேண்டிய  செயலை மறந்து இருக்கக் கூடும். ஆதலால் நினத்ததை நினைத்தபடி மிக எளிதில் அடைய அதனயே நினையுங்கள்.
எதைச் செய்தாலும் இழுத்தடித்துச் செய்யாது அன்றே செய்யுங்கள். நாம் எண்ணிய காரியத்தை செய்து முடிக்கும் வரை சோர்ந்து போகாதிருக்க, அதனை மறவாது சிந்திக்க வேண்டும். செய்ய நினைத்ததை எப்படிச் செய்வது? என்னால் தனித்துச் செய்ய முடியுமா? அதற்கு என்னென்ன வேண்டும்? அவற்றை பெறும் வழி என்ன? அவற்றை யார் யாரைக் கொண்டு செய்யலாம்? யார் யார் உதவி செய்வார்கள்?அதைச் செய்வதால் யார் யாருக்கு நன்மை? அதனால் வரும் தீமைகள் என்ன? என நீள நினையுங்கள். நிச்சயமாக உங்கள் கனவை மிக எளிதில் சென்றடைந்து வெற்றி பெறுவீர்கள்.
நாம் எண்ணிய செயலை மறக்காது தொடர்ந்து நினைத்தால் அச்செயலை மிக விரைவாகச் செய்து முடிப்போம் என இக்குறள் கூறுகின்றது.

Tuesday, 21 February 2012

ஆசைக்கவிதைகள் - 21

குக்கூ குக்கூ

குக்கூ குக்கூ அக்கக்கா
கொண்டைல பூவை வையக்கா
கொடத்தை எடுத்துக் கொண்டக்கா
கொளக்கரைக்கு போவக்கா
குக்கூ குக்கூ அக்கக்கா
கூவுங் குயிலு யாரக்கா
கொடத்தில தண்ணி யள்ளக்கா
குடிக்கத் தண்ணி யூத்தக்கா
குக்கூ குக்கூ அக்கக்கா
அத்தான் பேரு என்னக்கா
அழைச்சா கொஞ்சம் நில்லக்கா
அவரு வாராரு பாரக்கா
                                                        -  நாட்டுப்பாடல் (ஒட்டுசுட்டான்)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Monday, 20 February 2012

அடிசில் 14


இறால் பகோடா
                                         - நீரா -

தேவையானவை:
சுத்தம் செய்த இறால்  -  150 கிராம்
கடலைப் பருப்பு   -  250 கிராம்
கடலை மா  -  50 கிராம்
வெள்ளை அரிசி மா  -  50 கிராம்
வெட்டிய பச்சை மிளகாய்  -  6 - 7
வெட்டிய வெங்காயம்  -  2 மே.கரண்டி
வெட்டிய இஞ்சி  -  2 தே.கரண்டி
வெட்டிய கறிவேப்பிலை  -  கொஞ்சம்
சீரகம்  -  1 தே.கரண்டி 
மிளகுப் பொடி  -  1 தே.கரண்டி
செத்தல் மிளகாய்ப் பொடி  -  2 தே.கரண்டி
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு
செய்முறை:
 1. கடலைப்பருப்பை கழுவி அரைமணி நேரம் ஊறவிட்டு வடித்து அரைப்பதமாக அரைக்கவும்.
 2. இறால் பெரிதாக இருந்தால் சிறிது சிறிதாக வெட்டவும்.
 3. ஒருபாத்திரத்தில் அரைத்த கடலைப்பருப்பு, இறாலுடன் எண்ணெய்யைத் தவிர்த்து மற்றப் பொருட்களைச் சேர்த்து இறுக்கமாக உதிர்ந்து விழும் பதத்தில் நீர் தெளித்துக் குழைத்துக் கொள்க.
 4. இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
 5. எண்ணெய் கொதித்ததும் அதனுள் குழைத்த கலவையை பகோடாபோல் உதிர்த்தி போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.