Tuesday, 31 January 2012

குறை ஒன்றும் அறியேன்

                             பல்லவி
உனைத் தேடுவதல்லால் வேறு
குறை ஒன்றும் அறியேன் இக்குவலயத்தில்
                                                   - உனைத் தேடுவதல்லால்

                           அனுபல்லவி
பிறைசூடும் பெம்மான் பெருந்தேவியே!
மறைஓதும் மாமுனிவரும் போற்றும்
                                                   - உனைத் தேடுவதல்லால்

                                சரணம்
அரைஞாணும் புரிநூலும் துலங்க
பறைபோலும் வயிற்றோடு பாலகனாய்
முறையாக வலம் வந்து பழம் பெற்ற
கறையானை பணிந்தேத்தும் அம்மையே!
                                                   - உனைத் தேடுவதல்லால்

அசைந்தாடும் மயிலேறி அகிலம் வலம்வந்து
கசந்த மனத்தனாய் கயிலைவிட்டேகி
அசலந்தனில் ஆண்டியாய் நின்ற வேலனை
இசைவுடன் பழம் நீ என்றழைத்த அன்னையே!
                                                    - உனைத் தேடுவதல்லால்

சாக்கியனார்

                          


உயிர்கள் யாவற்றிலும் இறைவன் இருக்கின்றான். அவன் ஒருவனே. அவன் எல்லோருக்கும் பொதுவானவன். இதுவே பண்டைய தமிழர் எமக்கு தந்து சென்றுள்ள சமயக் கொள்கை. சாதி, மத வேறுபாடு இல்லாத ஒரு தனிப்பெரும் மதமாக தமிழர் மதம் நின்ற போதே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ 
என அவர்களால் முழங்க முடிந்தது.
அந்த முழக்கத்தில் இருந்து முகிழ்ந்ததாலே, சைவ சமயத்திலுள்ள திருத்தொண்டர் புராணம் சாதி, மத வேறுபாடில்லாத ஓர் ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. அதனாலேயே சைவசமயம் ஒரு பௌத்தமதப் பிக்குவை அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டும் உள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள் என்பதைக் காட்டுவதே சாக்கியனார் வரலாறு.    காவியுடை அணிந்த பௌத்தபிக்கு, அதுவும் வேளை தவறாது சிவலிங்கத்தை கல்லால் அடித்தார். அவருக்கும் சிவன் அருளினார். இதை பல தமிழ்ச் சைவச்சான்றோர்கள் விதந்து உரைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் தெற்கே இருக்கும் காலடி என்ற ஊரிலிருந்து எட்டு வயது சிறுவன் புறப்பட்டான்.  வடஇந்தியாவரை காலால் நடந்து சென்று இந்திய மதங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான். அந்த எட்டு வயதுச் சிறுவனே ஆதிசங்கரர். அத்தகைய ஆதிசங்கரரே கடவுளின் அருளைப்பெற வழி இருக்கிறதா எனத்தடுமாறி, நினைப்பதாலும் தவத்தாலும் பக்திப் பாடல்களைப் பாடுவதாலும் உன்னை அடைய முடியுமா? வில்லால் அடித்தவனுக்கும் (அருச்சுனன்), கல்லால் எறிந்தவனுக்கும் (சாக்கியனார்) அருள் புரிந்தாயே! நான் என்ன செய்தால் உன்னை அடையலாம் எனக் கேட்டதை சிவானந்தலகரி சொல்கிறது.
உழவர்களின் புகழை
“மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை” 
எனப்பாடிய கம்பர் கூட
“எச்சிற்கையால் கல்லெறிந்த கை
சங்கமங்கை சாக்கியனார் கை”                   
                                         - (திருக்கை வழக்கம்: 5)
என்று சாக்கியனார் கையை பதிவு செய்துவைத்துள்ளார். 
ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் இடையே வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரும் 
“கல்லினால் எறிந்து கஞ்சிதாமுணுஞ் சாக்கியனார்
நெல்லினார் சோறுனாமே நீள்விசும்பு ஆளவைத்தார்”    
                                          -(ப. திருமுறை: 4: 49: 6)
என்று தமது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே சாக்கியனார் எழாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்பது தெளிவாகின்றது. 
சாக்கியனார் சங்கமங்கை எனும் ஊரில் உழவர் குடியில் பிறந்தார். காஞ்சிபுரத்தில் கல்வி கற்றார். அங்கே பௌத்தமத சங்கத்தாருடன் சேர்ந்து பழகியதால் புத்த பிக்கு ஆனார். இவர் காலத்தில் பௌத்தமதமே காஞ்சிபுரப் பகுதியில் முக்கிய மதமாக இருந்திருக்க வேண்டும். அதனால் யாரும் கவனிக்காதிருந்த சிவலிங்கத்தை தெருவிற்கிடந்த செங்கற் சல்லியால் (உடைந்த செங்கற் துண்டுகள்) அடித்து தனது சைவசமய வெறுப்பைக் காட்டினார். அதனால்  ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தை கல்லால் அடித்த பின்னரே உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டார்.
தேவாரங்களைத் தொகுத்து எமக்கு அளித்த நம்பியாண்டார் நம்பியும் சாக்கியனார் செயலை 
“திகழ்தரு மேனியில் செங்கல் எறிந்து சிவபுரத்து
புகழ்தரப் புக்கவன் ஊர் சங்கமங்கை புவனியிலே”   
                                                    - (ப.திருமுறை: 11)
என திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். 

சாக்கியனார் தமது ஆத்மாவின் தேடலால் சைவநெறி நல்ல நெறி எனக்கண்டார். தமது பௌத்தமதச் சின்னங்களை அணிந்து கொண்டே சிவனை நினைவாலே சுவைக்கத் தொடங்கினார். அதனை பட்டினத்தடிகள்
“கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்னினைந்து எறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள் பிழைத்தின்றே” 
                          - (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை: 25)
எனக்கூறியுள்ளார்.
ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பிச்சாபாத்திரத்தில் பிச்சை எடுத்து உண்பதே அந்நாளைய பௌத்த பிக்குகளின் வழக்கம். சாக்கியனாரும் பிச்சை எடுத்து உண்பதற்காக ஒரு நாள் பல இடங்களில் அலைந்து திரிந்தார். அன்று அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல பசியோ வாட்டி வதைக்க மேலும் சில வீடுகளுக்குச் சென்றார். 

ஒரு வீட்டில் கொஞ்சம் கஞ்சி கிடைத்தது. வெயிலும் பசியும் வாட்டியதால் கஞ்சியை கையால் அள்ளிப் பருகத் தொடங்கினார். சிவலிங்கத்திற்கு கல்லெறியாது கஞ்சி பருகத் தொடங்கியது அவரது ஞாபகத்திற்கு வந்தது. எழுந்து ஓடிச்சென்று எச்சிக்கையால் சல்லிக் கல்லை எடுத்து சிவலிங்கத்திற்கு எறிந்தார். அந்தச் சல்லியுடன் அவர் கையில் ஒட்டியிருந்த கஞ்சிச் சோற்றுப் பருக்கை சிவலிங்கத்தில் விழுந்தது. விழுந்த சல்லி மலரானது. அடுத்த சல்லி, அடுத்த சல்லி என எறிந்த சல்லி யாவும் மலர்களாகக் குவிந்தன. சாக்கியனார் சிவனின் திருவருளில் திளைத்தார். 
இறைவனின் அந்த அருள் திறத்தை,
“.... பொய்த்தவன் காண் புத்தன் மறவாதோடி
எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்”      
                                           - (ப.திருமுறை: 6: 52: 8)
என திருநாவுக்கரசர் போற்றுகின்றார்.
சிவன் தன்னிடம் உண்மையான அன்புடையோர் குற்றம் செய்தாலும் அவற்றைக் குறையாகக் கொள்ளாது,  நல்ல குணமாகக் கருதும் புதுக் கொள்கை உடையவர். அதனால் தான் சிவனின் திருவடிகளை அடைந்து வணங்குவதாக சுந்தரமூர்த்தி நாயனார் தமது தேவரத்தில் கூறியுள்ளார். அப்படி குற்றம் செய்தவர்களில் ஒருவராக சாக்கியனாரையும் காட்டுகிறார் பாருங்கள்.
“நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
       நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்றசூதன் நற்சாக்கியன் சிலந்தி 
          கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றமே செய்யினும் குணமெனக் கருதும்
         கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்...”
                                              - (ப.திருமுறை: 7: 55: 4)
சாக்கியனார் செய்த குற்றத்தைக் குணமாகக் கொண்ட சிவன் நாம் செய்யும் குற்றத்தையும் குணமாகவே கொள்வான் என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் எமக்குக் காட்டித் தந்துள்ளார்.
இனிதே,
தமிழரசி.

Sunday, 29 January 2012

ஆன்றோர் உரைப்பீரே!வன்னித் தமிழ் மண்ணின்
          வேங்கைகள் நாம் என்றே
அன்னை உரைத்த உரை
           அன்றே அழிந்ததன்றோ!
சின்னஞ் சிறு சிறுவர்
          சிரிப்பு மறைய முன்னே
   அன்னை மறைந்த தென்ன
             ஆன்றோர் உரைப்பீரே!
                                            - சிட்டு எழுதும் சீட்டு (19)

Thursday, 26 January 2012

குறள் அமுது - (19)


குறள்:
“அருளென்னும் அன்புஈன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு”                                  - 757
பொருள்:
அன்பு பெற்றெடுத்த அருள் என்ற குழந்தை, பொருளென நாம் கூறும் செல்வச் செவிலித் தாயாலேயே இருக்கிறது.
விளக்கம்:
எவரிடத்தில் இரக்கம் இருக்கின்றதோ அவரிடத்தில் அன்பு இருக்கும். அன்பு ஒரு தாயைப் போன்றது. ஒரு தாயை சேய் உணர்வது போல அன்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். தன்நலம் அற்று பிறருக்காக மனம் உருகுவதே அருள். அது ஒரு சக்தி. அந்த சக்தி எல்லோர் இடத்திலும் இருப்பதில்லை. அன்பு இருப்பவர் நெஞ்சிலே அருள் சுரக்கும். அதாவது அருள் பிறக்கும். குழவி என்றால் குழந்தை. குழந்தை பிறப்பது போல அன்புள்ளவர் நெஞ்சிலே அருள் பிறக்கிறது. அதனையே வள்ளுவர் ‘அருளென்னும் அன்பீன் குழவி‘ என்றார்.
அன்பு எனும் தாய் பெற்றேடுத்த குழந்தையை நாம் அருள் என்கிறோம். எத்தனையோ ஏழை எளியவர் நெஞ்சங்களிலும் அருள் பிறக்கிறது. ஆனால் அதனால் நீண்டகாலம் வாழ முடியாது. அது பிறந்த அக்கணமோ அல்லது சிறிது நேரத்தின் பின்போ மாண்டு போகிறது. அன்பான ஓர் ஏழையின் வீட்டிற்கு ஒரு முதியவர் வந்து உணவு கேட்கிறார். ஏழையிடம் ஏதும்  இல்லை எனினும் குடிக்க நீராவது கொடுப்பான். ஆனால் முதியவரின் பசியை தீர்க்கவில்லையே என வருந்துவான். காரணம் என்ன? அவனின் நெஞ்சில் பிறந்த அருளை வளர்த்து முதியவரின் பசிக்கு தாரைவார்க்க அவனிடம் பொருளில்லை.
அதனால் திருவள்ளுவர் பொருளென்ற செல்வமே அருளை வளர்க்கின்றது என்ற கருத்தில் அன்பு பெற்ற அருட்குழந்தை செல்வச் செவிலியால் வாழ்கின்றது என்றார். எனவே அன்பு உள்ளவர் நெஞ்சில் பிறக்கின்ற அருளை வளர்க்க பொருளைப் பயன்படுத்துங்கள். 

மணிபூங்குன்று தந்த போரின் சுவடு

ஆசைக்கவிதைகள் - 18

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகநேயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லி மனிதநேயத்தின் மாசற்ற சன்றோனாக உயர்ந்து நிற்பவர் மணிபூங்குன்றனார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என அவர் முழங்கிய இடமே  மணிபூங்குன்று. அப்பாடலில் 
"கல்பொருது இரங்கும் மல்லற் பேராற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல"                - (புறம்: 192: 8 - 9)
என்று இன்றும் ஒட்டிசுட்டானுக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் பேராற்றைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது அப்பாடலை எழுதுவோர் பேரியாறு என மாற்றி எழுதி வன்னிமண்ணின் வரலாற்றை மழுங்கச் செய்கின்றனர். மணிபூங்குன்றனார் என்ற அவரது பெயரையும் கணியன் பூங்குன்றனார் எனவும் எழுதுகின்றனர். இவற்றைக் கண்டும் காணாதவர்களாக நாம் இருப்பது தவறு. இப்படியான இடைச் செருகல்களே தமிழரின் வரலாற்றைச் சிதைத்து நாம் நாடு இழந்து மாற்றான் நாட்டு வீதியில் நிற்பதற்குக் காரணமாகும். 

வீரமும் போரும் தமிழரின் மறம் என எண்ணி வாழ்ந்தவன் தமிழன். அதனால் அவன் காலங்காலமாக இழந்தவை எண்ணில் அடங்கா. உலகெலாம் கூடி நடத்திய இன்றைய வன்னிப்போரை மட்டுமா ஈழத்து வன்னிமண் கண்டது? அதற்குமுன் எத்தனையோ போர்களைக் கண்ட களபூமியது. சோழரும், சாவகரும், சிங்களவரும், போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும்,  ஆங்கிலேயரும் தாக்கத் தாக்க எதிர்த்து நின்று களமாடி பகைவரை வென்றாரும் வீழ்ந்தாருமாய் வாழ்ந்த தமிழரின் களபூமிதானே வன்னிமண்.

அப்படி நடந்த ஒரு போரில் பேராற்றங்கரையிலிருந்த மணிபூங்குன்றில் வாழ்ந்தோரில் பலர் அழிந்தனர். அங்கே உயிர் தப்பியவர்களில் வயதான ஒரு கிழவனும் கிழவியும் இருந்தனர். அவர்களுக்கு உறவு என்று சொல்ல ஒருவரும் இல்லாது எல்லோரும் இறந்துபோயினர். அந்த ஊரே அழிந்து உண்ண உணவற்று இடுகாடாயிற்று. அவர்களால் அங்கு வாழமுடியாத நிலை. உயிர் தப்பியோர் வேறு வேறு ஊருக்குப் போய்விட்டனர். ஆதலால் அவர்கள் இருவரும் அந்த தள்ளாத வயதிலும் வேறு ஊர் செல்வதற்கு ஆற்றங்கரையில் ஓடத்திற்காக காத்திருந்தனர்

(இக்காலத்தைப் போல அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இருக்கவில்லை. போர்களில் யானை, குதிரை அழிய நேர்ந்தால் தரைவழியில் செல்வதைவிட படகில் செல்வது மிகவும் வசதியாக இருந்தது. தமிழில் ஆறு என்பதற்கு வழி என்ற காரணப்பெயரும் இருக்கிறது.)

(கீழ்லுள்ள படம், 1870ல் இலங்கையில் யானை வயல் உழுததற்கான ஆதாரம்)
[Image courtesy: Wade G Burck]

அந்நாளில் வன்னிப்பகுதி மக்களிடம் ஐம்பது, நூறு ஏக்கர் என வயல் நிலம் இருக்கும். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிர்களை மாடு கொண்டு போரடிக்கலாம் (சூடு மிதிக்கலாம்). ஐம்பது ஏக்கர்,  நூறு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிரை மாட்டைக் கொண்டு அடிக்க முடியுமா? அதனால் ஆனை கொண்டே போரடிப்பர். பெரும் வீரர்களே ஆனையைக் கொண்டு சூடுமிதிப்பர்.


ஓடத்திற்காக காத்திருந்த போது அந்த மூதாட்டிக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. இளமையில் சிங்கம் போலிருந்த தன் காதற்கணவன் முதுமையில் துன்பப்படுவதையும் போரால் ஊர் அழிந்ததையும் யாருமற்றவராய் தாமிருப்பதையும் ஓடத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் நாட்டுப்பாடலாக வடித்திருக்கிறார் அந்த மூதாட்டி.

பெண்:  மாடுகட்டிப் போரடிச்சா
                      மாளாது என்னு சொல்லி
             ஆனகட்டி போரடிச்ச
                       ஆளான சிங்கமல்லோ!
பெண்:  ஆடுகட்டக் கூடாம
                      அல்லற்படு நாளாச்சு
             ஊரு சனமெல்லாமே
                       கூண்டோடு போயாச்சி
பெண்:  ஓடுகின்ற ஆற்றோரம்
                       ஓடம்வரும் காத்திருப்பம்
             தேடிவர யாரிருக்கா
                        தேம்பியழக் கூடலயே!
                                                     - நாட்டுப்பாடல் (மணிபூங்குன்று - பேராற்றங்கரை) 
                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இனிதே,
தமிழரசி.

Wednesday, 25 January 2012

அடிசில் 11


இனிப்புப் புளிப்பு பீட்ரூட் சலட்
                                                       - நீரா -

தேவையானவை:
2 பீட்ரூட்
1 தக்காளி
1 கறிமிளகாய்
1 வெங்காயம்
1 மே.கரண்டி எலுமிச்சம் சாறு
1 மே.கரண்டி ஒலிவ் எண்ணெய்
2 தே.கரண்டி மிளகுதூ ள்
2 தே.கரண்டி தேன்
தேவையான அளவு கடல் உப்பு


செய்முறை:
1.  பீட்ரூட், வெங்காயம் இவற்றின் தோலை நீக்கி தக்காளி, கறிமிளகாய் என்பவற்றுடன் கழுவி, எல்லாவற்றையும் மிகவும் மெல்லிய ஈர்க்குப் போல வெட்டிக்கொள்க.
2.  வெட்டிய மரக்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து வைக்கவும்.
3.  சிறு கிண்ணத்தில் எலுமிச்சம் சாறு, ஒலிவ் எண்ணெய், மிளகுதூள், தேன் நான்கையும் நன்றாக அடித்துகொள்க.
4.  அடித்த கலவையை வெட்டி வைத்துள்ள பீட்ரூட் கலவையுள் விட்டு உப்பும் சேர்த்துக் கலந்து கொள்க.

Sunday, 22 January 2012

தியாகிகள்


கோடி கோடியாய் பிறந்த
           தமிழர் இங்கு ஒரு
                    நாடுமின்றி வாழ்கிறாரெடா

கோடி கோடியாய் பிறந்த
          அவரில் யார் தான்
                  நிலைத்து நிற்கிறாரெடா

தாய் மண் வாழ்கவென்று
          தன்னுயிர் ஈந்த தியாகிகள்
                   திலகமெனத் திகழ்கிறாரெடா

அவரே தமிழீழ மண்ணின்
          சரித்திரப் பொன்னெழுத்தில்
                     நிலைத்து நிற்கிறாரெடா.
                                                           - சிட்டு எழுதும் சீட்டு (18)

Friday, 20 January 2012

பார்த்தறியாப் பெருமையனே!

பாரோரும் விண்ணோரும்

          பார்த்தறியாப்  பெருமையனே
ஊறாரும் உற்றாரும் 
          உறவின்றிப் போயிடினும்
பூவாரத் தொழுது
          புனைந்து தமிழ் பாடயிலே
நீயாரக் கேட்டு
          நீள் நிதியம் தந்திடுவாய்.

Thursday, 19 January 2012

தைத்திருநாள் அது தையலர் நாள் - பகுதி 2

நீரின்  தேவையையும் அதைப் பெருக்கும் வழியையும் பண்டைத்தமிழர் நன்கு அறிந்திருந்தனர் என்பதை அப்புறனூற்றுப் பாடல் தெளிவாகக் காட்டுகிறது. இளமையாக என்றும் வாழவேண்டுமா? அதற்கு அமிழ்தம் வேண்டும். அந்த அமிழ்தத்தைத் தேடி  வானவர் நாட்டிற்கு போகவேண்டியதில்லை. ‘மழை தவறாமல் பெய்வதால் உலகம் இயங்குகின்றது. ஆதலால் மழையே உலகஉயிர்களை வாழ்விக்கும் அமிழ்தம் என்பதை
“வானின்று உலகம் வழங்கி வருதலாற்
தானமிழ்தம் என்று உணரற்பாற்று”
எனத் திருக்குறள் சொல்கிறது.
நீர் என்ற அமிழ்தத்தால் உலகம் செழித்து வாழவேண்டும் என்பதற்காக  அன்றைய பெண்கள் மார்கழி மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை நோன்பு நோற்றார்கள். அதனைச் சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்கின்றன. அன்றைய தமிழரின் சமூக வாழ்வியற் கட்டமைப்பை நெறிப்படுத்திய பெண்களின் பங்கை அவை சொல்கின்றன எனக் கொள்ளலாம். பண்டைய தமிழர் விரதத்தை நோன்பு என்றே அழைத்தனர்அது தமிழரின் நோன்பின் தொன்மையைக் காட்டும். ஆனால் முஸ்லீம்களின் விரதத்தையே நோன்பு எனச் சொல்வதாக பலரும் எழுதுகின்றனர். அப்படி எழுதுவோர் சங்க நூல்களைப் புரட்டிப் பார்ப்பது நல்லது. 

மந்தி ஒன்று தினைக் கதிரை கவர்ந்து சென்று தன் கடுவன் குரங்குடன் இருந்து உண்டது. அதனைச் சங்ககாலத்தில் வாழ்ந்த  புலவர் ஒருவர் பார்த்தார். அக்காட்சி அவருக்கு, பனி பெய்து   நனைந்த முதுகுடன் நோன்பு நோற்கும் பெண்கள் தைமாத விரத உணவை உண்ண இருந்தது போல் தோன்றியது. அதனை 
“வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தைஊண் இருக்கையின்.........”              
                         - (நற்றிணை: 22: 6 - 7)

என  நற்றிணை வரியில் படம் பிடித்துள்ளார். சங்ககாலத்தில் நோன்பு நோற்ற பெண்களை 'நோன்பியர்' என அழைத்ததையும் அவர்கள் தைமாதத்தில் நோன்பிருந்ததையும் பெயர் தெரியாத அந்தச் சங்கப்புலவர் வரலாற்றுப் பதிவாக தந்துள்ளார். 

இவரைப் போலவே நற்றிணையில் பூதன் தேவனாரும்
இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்  
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்”             - (நற்றிணை: 80: 6 - 8)
என நகையணிந்த தோழியரோடு சேர்ந்து, நாணம் அவளைத் தடுக்கவும் தைமாதக் குளிரில் நீராடும் பெருந்தோளையுடைய இளம்பெண்ணைக் காட்டுகிறார்.
தைமாதத்தில் பெண்கள் நீராடிய குளத்தை 
“நறுவீ ஐம்பால் மகளிராடுந்
தைஇத் தண்கயம்”                          - (ஐங்குறுநூறு: 84: 3 - 4)
என ஐங்குறு நூறும் சொல்கிறது.
பெண்கள் உலக நன்மைக்காக நோன்பிருந்து நீராடியது போல நல்ல கணவன் தமக்குக் கிடைக்க வேண்டுமென தைத்திங்களில் நீராடி, வீடு வீடாகச் சென்று பாடி தாம் பெற்றதை பலருக்கும் உவந்து கொடுத்தை 
தையில் நீராடி தவம் தலைப் படுவையோ”  
எனவும்
“பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடி நீ
எய்திய பலர்க்கீந்த பயன் பயக்கிற்பதோ”
எனவும் கலித்தொகை சொல்லும். 
இப்பாடல் வரி நல்லதொரு செய்தியை எமக்குச் தருகிறது. அந்நாளில் தவம் செய்வோரும் நோன்பு நோற்போரும் நாளைக்கு வேண்டுனென விரும்பாது தமக்குக் கிடைத்தை அன்றே மற்றவர்க்கு கொடுத்து விடுவர். ஆனால் இன்று தவம் செய்யும் சுவாமிமாரிடம் கோடி கோடியாக முடங்கிக் கிடக்கிறது. அது சுவாமிமாரின் குறையல்ல. அவர்களுக்கு அள்ளிக் கொடுப்போரின் அறியாமை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை உணர்ந்து,  பிறருக்கு கொடுத்து தாமும் வாழும் பழக்கத்தை இளம் சிறுவர் சிறுமியர்க்கு உண்டாக்க ஏற்பட்டதே தைநீராடலாகும். 

இந்நோன்பு பெண்களால் மார்கழித் திருவாதிரை வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்து திருவெம்பாவையாக, பாவை நோன்பாகத் தொடங்குகின்றது. மாணிவாசகரின் திருவெம்பாவையும் ஆண்டாளின் திருப்பாவையும் அதைச்சொல்லும். மார்கழித் திருவாதிரை அன்று மார்கழி நீராடி, தொடர்ந்தும் அம்பாஆடலாய் நீராடி, தைப்பூசம் வரையும் நோன்பிருப்பர்.  நாற்பது நாட்களுக்கு மேலாக, பனியென்றும் குளிரென்றும் பாராது நோன்பிருந்த பெண்கள், நோன்பின் பயனைப்பெற தைமாத முதல் நாளில் இருந்து தெய்வத்திடம் வேண்டுவர். அதனால் தை முதல்நாளை தைத்திருநாளாக தையலர் கொண்டாடினர். தைப்பூசத்தன்று நீராடி அந்நோன்பை நிறைவு செய்வர். நோன்பை நிறைவு செய்ய ஆடிய நீராடல், தைநீராடல் என சங்கத்தமிழரால் போற்றப்பட்டது. 
திருஞானசம்பந்தரும்  தேவாரத்தில் 
“மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் 
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்று பெண்கள் தைப்பூசம் கொண்டாடியதைக் சொல்கிறார். 
இத்தேவாரத்தில் பெண்களை நேரிழையார் என்கிறார். ஆடை நெய்வதற்கு இரண்டு விதமாக நூல் பாவிக்கப்படும். ஒன்று நெடுக்கவும் மற்றது குறுக்கவும் போகும். நெடுக்காக ஓடும் நூல் நேரிழை எனவும் குறுக்காக ஊடும் நூல் ஊடு இழை எனவும் அழைக்கப்படும். நெசவுக்கு நேரிழை தானே ஆதாரம்! எத்தனை ஆயிரம் ஊடு இழை இருந்தாலும் நேரிழை இல்லாவிட்டால் அது ஆடையாகாது. உலகையே நேரிழையாகத் தாங்குபவள் பெண் எனக்கருதியே அன்றைய தமிழர் பெண்களை நேரிழையார் என்றனர். நேரிழை, தையல் போன்ற பெண்பாற் சொற்களுக்கு எதிரான ஆண்பாற் சொற்கள் தமிழில் இல்லை என்பதும் இங்கு நோக்கதக்கது. நேரிழையாய் நிமிர்பவளும் தையலாய் கட்டுபவளும் கட்டுப்படுபவளும் பெண்ணே!
நேரிழையார் கொண்டடிய தைத்திருநாள் அது தையலர் நாள் தானே?
இனிதே,
தமிழரசி.

Tuesday, 17 January 2012

குறள் அமுது - (18)


குறள்:
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி”                        - 226

பொருள்:
ஒன்றும் இல்லாதவனின் கொடிய பசியைத் தீர்த்தலே பொருளுள்ளவன் தனது பொருளை சேமித்து வைக்க வேண்டிய இடமாகும்.

விளக்கம்:
அற்றான் - தனக்கென ஏதும் இல்லாதவன். காசு, பணம், வீடு, வாசல், குடும்பம், குழந்தை, சொத்து, சுகம் ஏதும் இல்லாதவன். ஏழ்மையாலோ நோயாலோ, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை அழிவுகளாலோ, போர்களாலோ, வஞ்சனையாலோ ஏதும் இல்லாதவனாக ஆக்கப்பட்டவன். பிழைக்கவழி தெரியாததாலோ, வலது குறைந்ததாலோ ஏதும் அற்றவனாக இருப்பவன். இப்படி யாராக இருப்பினும் அவன் யாதும் அற்றவனே.

இவ்வாறு ஒன்றும் அற்றவன் என நாம் நினைப்பவன் இடமும் ஒன்று இருக்கிறது. அதுவே அழிபசி. என்றும் தீராத பசி. அறாத பசி. உண்ண உண்ணப் பெருகும் பசி. காலையில் உண்டோமே என்று மாலையில் பசியாது இருக்குமா? அது தொடர்ந்தும் அழியாதிருப்பதால் அது அழிபசி. 

இதைப்பார்த்தே நம் முன்னோர் 
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்”                           - (நல்வழி -26)
என்றார்கள்.

எனவே மனிதனை விட பசி மிக ஆற்றல்கூடியது. பசியின் ஆற்றலில் மனிதப்பண்புகள் அழிந்து போய்விடும். எம் உயிர் உள்ளவரை எம்மோடு தொடர்ந்து வருகின்ற மனிதப்பண்புகளை மட்டும் அல்ல எம்மையே அழித்து ஒழிக்க வல்லது பசி. ஆதலால் பசிக்கு திருவள்ளுவர் ‘அழிபசி’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.

பெற்றான் யார்? முன்னோரது செல்வத்தையோ அரச மாணியத்தையோ தனது முயற்சியால் உழைத்த பொருளையோ பெற்றவனே பெற்றானாவான். சேமித்து வைக்கும் நிதி வைப்பு எனப்படும். உழி என்பது இடம். பொருள் சேமித்து வைக்கும் இடமே வைப்புழி. வைப்பு + உழி = வைப்புழி. ஏதோ ஒரு வகையில் பொருளைப் பெற்றவர்களாக நீங்கள் இருக்கிறீர்களா! உங்களிடம் பொருள் இருக்கிறதா! அதனை ஏதும் அற்றவர்களின் அழியாப்பசியைத் தீர்த்து அவர்களின் வயிற்றில் சேமியுங்கள் எனக்கூறும் குறள் இது.

ஆசைக்கவிதைகள் - 17

பொங்கிப் புதிது உண்ணல்

பெண்:  செந்நெல். கதிரடித்து
     .                   சிந்திய நெல்லுக் குத்தி
              தீட்டிவந்த பச்சரிசி
                        சிரிக்குதலோ முத்து முத்தா
ஆண்:  செம்மாதுள முத்தாக
                     சிரிக்குமந்த முத்தோடு
            சிறுபயறு வறுத்துக்குத்தி
                      சேர்த்துவையு(ம்) மச்சியரே!
பெண்:  செங்கரும்பு சாறெடுத்து
                       தேனோடு கலந்தெடுத்து
              கட்டிவெல்லொ(ம்) கடைந்தெடுத்து
                       கலந்துவையு(ம்) மச்சினரே!
                                           -  நாட்டுப்பாடல் (வவுனிக்குளம்)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

புதிதாக விளைந்த தானியங்களை கொண்டு பொங்கி, அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணல் பன்நெடுங்காலமாக தமிழர் கடைப்பிடித்து வரும் வழக்கமாகும். அவ்வழக்கத்தை 'பொங்கிப் புதிது உண்ணல்' என்றும் 'நாள் புதிது உண்ணல்' என்றும் கூறுவர். வவுனிக்குளத்து நாட்டுப்பாடல் பொங்கிப் புதிது உண்ணலுக்காக செய்த ஏற்பாட்டைச் சொல்கிறது. புறநானூற்றுப் பாடல் ஒன்று குதிரை மலைக் குறவர் நாள் புதிது உண்ணப் பொங்கியதைச் சொல்கிறது. 

“அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்”   - (புறம்: 168: 1 - 13)

மலையில் இருந்து அருவி ஆர்பரித்து வீழ்ந்து ஓட, மூங்கில் மரம் நிறைந்து,  மிளகு வளரும் அகன்ற மலைச்சாரல். அங்கே அச்சமில்லாத பன்றி  ஒன்று தன் கூட்டத்தோடு கார்த்திகைச் செடியின் கிழங்கு வெளியே தெரியும் படி கிண்டி உழுதது. அப்படி பன்றி உழுத புழுதியில் குறவர் விதைத்த தினை விளைந்து கதிரும் முற்ற,  அத்தினையை நல்ல நாளில் புதிதாக உண்பதற்காக காட்டுப்பசுவின் நுரையோடு கூடிய இனிமையான பாலை மானிறைச்சி நாறும் பானையில் உலையாகவிட்டு, சந்தன விறகால் எரித்து பாற்சோறாகச் சமைப்பர். கூதாளி மலர்ச்செடி சூழ்ந்த காட்டுமல்லிகை முற்றத்திலே செவ்வாழை இலையில் பகிர்ந்து உண்பர்.

சங்ககாலத் தமிழரின் 'நாள் புதிது உண்ணும்' வழக்கமே 'தைப்பொங்கலாக' இன்று வடிவெடுத்திருக்கிறது என்பதற்கு இப்புறநானூற்றுப்பாடல் சான்றாகும். அன்றைய குறவர் புதுநாளில் புத்தரிசி, புதுப்பால் விட்டுப் பொங்கி, செவ்வாழை இலையில் மல்லிகை மணக்கும் முற்றத்தில் இருந்து பகிர்ந்து உண்டதையே இன்றைய தமிழராகிய நாமும் தைப்பொங்கல் நாளில் நம்மூரில் செய்தோம். இரண்டாயிர வருடங்களுக்கு மேல் ஆனபோதும் தமிழரின் தனித்துவம் மாறவில்லை என்பதற்கு இப்பாடலும் பொங்கலுமே சாட்சி.

எப்போது சொல்வோம்?

ஆனஞ்சு தேனஞ்சு
பக்திச்சிமிழ் [13]


உலகெல்லாம் பரந்து வாழும் இன்றைய தமிழர் மூலைக்கு மூலை கோயில்கள் கட்டி குடமுழுக்கு செய்கிறோம். ஆனால் குடமுழுக்கு என்று சொன்னால் 'அது என்ன?' என்று கேட்கும் நிலையில் வாழ்கிறோம். கோயில்கள் கட்டி கும்பாபிசேகம் செய்கிறோம் எனக் கூறினால் எல்லோருக்கும் புரியும். அதனாலேயே தமிழரைப் பார்த்து பாரதியார் 
"நாமமது தமிழரெனக் கொண்டிங்கு 
          வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்"
என்று கேட்டார் போலும். அவர் அப்படிக் கேட்டு ஒரு நூற்றாண்டு ஆகியும் நாம் இன்னும் தமிழராய்  மாறவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். இன்றும் பிறமொழிச் சொற்களுக்கு முன்னர் தோன்றிய பழந்தமிழ்ச் சொற்களைப் புறந்தள்ளுவது ஏனோ! தமிழர் என்று சொன்னால் மட்டும் போதாது. தமிழராய் தமிழைப் பேசவும் வேண்டும்.

எத்தனை சைவ மகாநாடுகள்? எத்தனை வகை வகையான தமிழ்ச்சங்கங்கள்? உலகத் தமிழ் மகாநாடுகள்? நாடாத்தி இருக்கிறோம்? அந்தச் சைவத்தமிழ் மகாநாடுகள் எந்த அளவுக்கு தமிழையும் சைவ சமயத்தையும் வளர்த்தன என்பதை இதனை வாசித்த பின்னர் சொல்லுங்கள். அதனை நாம் அறிந்து கொள்வது நல்லதல்லவா? எல்லா மகாநாடுகளிலும் ஓர் ஒற்றுமை இழையோடுகிறது. அதுவே பொன்னாடை போர்த்தும் போர்வைப் பண்பாடு.  
"கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்"            - (சிறுபா.படை: 85 - 87)
என மயிலுக்குக் கலிங்கப்பட்டுப் போர்த்திய பேகனைப் புகழ்ந்து பாடிய இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இன்று இருந்தால் நம்நிலை கண்டு நாணுவார்.

கோயில் கும்பாபிசேகம் என்று சொல்லாமல் கோயில் குடமுழுக்கு எனச் சொன்னால் என்ன? அர்ச்சனை எனச் சொல்லத் தெரிந்த நமக்கு, பூசனை, பூசை எனக் கூற முடியாதிருப்பதேன்? அதனால் நம் பெருமை குறைந்தா போய்விடும்? கோயில்களில் தமிழ்ச்சொற்களைக் கூறாதீர்கள் என்று யாராவது தடுக்கிறார்களா? சைவசமயத்தவர் போற்றும் நாயன்மார் பாடிச் சென்ற தமிழ்ச் சொற்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது திருக்கோயில் அறக்காவலர்களதும், கோயில் ஒன்றியங்களினதும் கடைமையாகும்.
           
நம் திருக்கோயில்களில் ஏதாவது ஒரு கோயிலில் சிறப்புப் பூசை நடைபெற இருக்கின்றது என வைத்துக் கொள்வோம். கோயில் பூசகர் 'ஆனஞ்சு, தேனஞ்சு' எடுத்து வந்தீர்களா?, என எம்மைக் கேட்கிறார். அவர் என்ன கேட்டார் என்பதை விளங்கி, எம்மில் எத்தனை பேர் உடனே பதில் கூறுவோம்? 

ஆனால் அவர் அக்கேள்வியை சற்று மாற்றி பஞ்சகௌவியம், பஞ்சாமிர்தம் எடுத்து வந்தீர்களா? எனக் கேட்டிருந்தால் உடனே பதில் சொல்வோம். தமிழ்ச் சொற்களான ஆன் ஐந்தும், தேன் ஐந்தும் தெரியாத தமிழர் நாம். என்னையும் சேர்த்தே இங்கே கூறுகிறேன். நாம் இப்படி இருந்தால் எம் வருங்காலத் தலைமுறையினருக்கு எப்படி வழிகாட்டப் போகிறோம்?
ஆன் என்றால் பசு. சங்கத்தமிழர் பசுவை ஆன் என அழைத்ததை குறுந்தொகையில் வெள்ளிவீதியார்
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு”      
                                                     - (குறுந்தொகை: 27: 1-2)
எனக்கூறியதால் அறியலாம்.
பக்தி இலக்கிய காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் ஆனைந்து என்றும் ஆனஞ்சு என்று பஞ்சகௌவியத்தை அழைத்ததை அவர்கள் பாடிய பதிகங்கள் காட்டுகின்றன. பக்தி இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளில் உள்ள எந்த ஒரு பாடலும் பஞ்சகௌவியம் எனச் சொல்லவில்லை.   அன்றைய தமிழர் பசுவில் இருந்து தாம் பெற்ற  பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்ற ஐந்து பொருட்களையும் ஆனஞ்சு எனப் பொதுவாக அழைத்தனர். அவற்றைப் பூசைக்குப் பயன்படுத்தினர்.

அதனை
ஆனஞ்சு ஆடுமுடியானும் ஐயாறுடை ஐயனே”   
                                                      - ( ப.தி.முறை: 2: 6: 5)
என்று திருஞானசம்பந்தர் மட்டுமல்லாமல் அருளாளர் பலரும் சொன்னதைக் காணலாம்.

திருநாவுக்கரசு நாயனாரும்  நான்காம் திருமுறையில்
"அட்டகா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடி
சிட்டராய் அருள்கள் செய்வார்"
                                                      - (ப.திருமுறை: 4: 41: 2)
என்கிறார். அவர் ஐந்தாம் திருமுறையிலும்
"அன்பின் ஆனஞ்சு மைந்துடன் ஆடிய"
                                                      - (ப.திருமுறை: 5: 80: 3)
என்று இறைவன் அன்பால் ஆனஞ்சையும் விருப்பத்துடன் [மைந்துடன்] பூசிக் குளித்தார் என்கிறார்.

இறைவன் இருப்பதை உணராது இவ்வுலக வாழ்வில் இடிபட்டு, திகைத்து நின்ற திருநாவுக்கரசு நாயனார், தனது மனக்கலக்கத்தை
"ஆனஞ்சுமாடியை நான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன்றுடையான் தன்னை 
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே” 
                                                      - (ப.திருமுறை: 6: 68: 1)
எனக்கூறியவர்
"அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர்
செவ்வான வண்ணர் என் சிந்தையரே"
                                                      - (ப.திருமுறை: 6: 95: 2)
என்று மனம் மகிழ்ந்ததையும் ஆறாம் திருமுறை காட்டுகிறது. 

ஏழாம் திருமுறையில் சுந்தர்மூர்த்தி நாயனாரும் சிவன் 
அஞ்சும் கொண்டு ஆடுவார்”                         
                                                      - ( ப.தி.முறை: 7: 17: 4)
எனப் புகழ்கிறார்.

சைவசமய நாயன்மார் மட்டுமல்ல ஆழ்வார்களும் ஆனஞ்சு என்றே பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். திருமழிசையாழ்வார் தமது பாசுரத்தில்
ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ”  
                                                     - (திருச்சந்த விருத்தம்: 94)
என வணங்குகிறார். தமிழராய் வாழ்ந்தவர்கள் ஆதலால் தமிழில் அழைத்தனர்.

இவர்கள் எவருமே பஞ்சகௌவியம் என்று சொல்லவில்லை. இவ்வருட்பாடல்களுக்கு கருத்து எழுதிய உரையாசிரியர்களே பஞ்சகௌவியம் என்ற சொல்லை அங்கு இழுத்து வந்துள்ளனர். 

பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தாய் இருந்த ஆனைந்து, பஞ்சகௌவியமாக மாறிய போது பால், தயிர், நெய்யுடன் பசுஞ்சாணமும் பசுமூத்திரமும் வந்து சேர்ந்து கொண்டது. ஒரு பண்பட்ட நல்ல சமுதாயம் ஆனைந்தையா? பஞ்சகௌவியத்தையா? தொடர்ந்து பயன்படுத்தும் என்பதை நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் கொடுமுடி நடராஜன் பஞ்சகௌவியத்தை பயிர்களுக்கு ஊட்டச்சத்தாகப் பாவிக்கிறார் என அறிந்தேன்.

அன்றைய தமிழரின்  தேன் ஐந்தே இன்றைய  பஞ்சாமிர்தம். மாம்பழம். பலாப்பழம், வாழைப்பழம், தேன், சர்க்கரை ஐந்தையும் கலந்து செய்வதே தேனைந்து. இன்று ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக பஞ்சாமிர்தத்தைச் செய்கிறார்கள். பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து அமிர்தம் சேர்ந்தது என்று பொருள் தரும். பழநிப் பஞ்சாமிர்தமே உலகப் புகழ் பெற்ற பஞ்சாமிர்தமாகும். பழநிப் பஞ்சாமிர்தத்தில் முக்கியமாக மலைவாழைப்பழம், பேரீச்சம்பழம், கற்கண்டு, சர்க்கரை, தேன், நெய் என்ற ஆறும் இருக்கும். ஆனால் அதன் பெயர் பஞ்சாமிர்தம். எப்படி கோயில் அறக்காவலர்களால் இப்படி எல்லாம் சொல்ல முடிகின்றதோ!

தேனஞ்சிலும் ஆனஞ்சிலும் ஆடிய இறைவனை திருநாவுக்கரசு நாயனார் காட்டுகிறார் பாருங்கள்.
வானஞ் சாடும் மதி அரவத்தொடு
தானஞ்சாது உடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே. 
                                                      - (ப.தி.முறை: 5: 44: 10)
நாம் போற்றும் நாயன்மார்களுக்கும் அருளாளர்களுக்கும் 'தேனஞ்சாகவும்' 'ஆனஞ்சாகவும்' தெரிந்தவை எமக்குமட்டும் தெரியாமல் போனதேனோ! தமிழராய் தேனஞ்சு, ஆனஞ்சு என எப்போது சொல்வோம்? கோயில்கள் கட்டினால் மட்டும் போதுமா? கோயிற் கருவறைக்குள்ளும் தமிழ் செல்ல வழிவிடுங்கள்.
இனிதே,
தமிழரசி.