Tuesday, 7 February 2012

சங்ககால காதற்பெருவிழாக்கள் - பகுதி 1

அன்பின் பல படி நிலைகளில் காதலும் ஒன்று. அதுவே பத்தியாகக் கனிந்து முத்திக்கும் வழிவகுப்பதை பக்தி இலக்கியங்கள் காட்டுகின்றன. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதற்கு வித்திட்டதும் காதலே. இன்பங்களில் தலைசிறந்த இன்பம் காதலின்பம். உலகிலுள்ள அசையும் உயிர்கள் யாவும் காதலில் திளைத்து மகிழ்வதாலேயே இவ்வுலகம் பல்லாயிரக்கோடி உயிர்ப்பேதங்களுடன் கண்ணிற்குக் குளிர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. காதல் இன்பமே இல்லாத உலகை உங்கள் மனக்கண் முன் ஒருகணம் நிறுத்திப் பாருங்கள். இடுகாட்டு அமைதியோடு வற்றல் என்புக் கூடாய் அது காட்சி அளிக்கும்.
காதலில்லா தனிமை வாழ்க்கை மனவெறுமையைக் கொடுத்தது. அது உலக வளர்ச்சியைத் தடைசெய்தது. அதனால்  
“அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரம் தளிர்தற்று”
என்ற உண்மையை சங்கத்தமிழர் அறிந்திருந்தனர் என்பதை இக்குறள் எடுத்துச் சொல்கிறது. உலக இயற்கை மனிதனுக்கு கற்றுத்தந்த பாடங்களில் மனிதன் கல்லாமல் கற்ற பாடம் காதல் பாடமே. காதலை உணரமுடியாத சில மனிதர்களும் இருக்கிறார்கள். பற்று, பரிவு பாசம், கருணை, இரக்கம், அன்பு, காதல், பக்தி யாவுமே உலக உயிர்களை ஒன்றிணைக்கும் சக்தியாகும்.

பாலை வனத்தில் பட்டமரம் துளிர்விடுமா? பரிவை அன்பை, காதலை உணரமுடியாதவர்கள் பாலைவனத்தின் பட்டமரம் போன்றாவர்கள் என்பது வள்ளுவப் பெருந்தகையின் முடிவாகும். காதல் இன்பத்தேன் அருந்தி தான் சுவைத்ததை மிகச்சுருக்கமாக சுவையூட்டிச் சொன்னவர் திருவள்ளுவரே. அவர் எழுதிய முப்பாலில் இன்பத்துப்பாலை நீங்களும் கொஞ்சம் சுவையுங்கள் அதன் உண்மை புரியும்.

காதல் வேறு காமம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். காதலால் விளைவது இரு மனங்களின் சேர்க்கை. காமத்தல் விளைவது இரு உடல்களின் சேர்க்கை. காமத்தின் இயல்பைச் சொல்லுமிடத்தில் மலரைவிடக் காமம் மிகவும் மென்மையானது என்று திருவள்ளுவர் காமத்திற்கு முடிசூட்டியுள்ளார். காமத்தையே மலரைவிட மென்மையானது எனப்போற்றியவர்கள் காதலை எப்படிப் போற்றியிருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.   

தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் மனிதத் தன்மையை எம்முள் வளர்த்து எடுப்பதும் காதலே. ஒருவனுக்காக ஒருத்தியும் ஒருத்திக்காக ஒருவனும் தன்னலம் அற்று உருகுவதே காதல். அவரில் ஒருவருக்கு தன்னலம் கூடினாலும் அங்கே இல்லறம் கசக்கும். ஆதலால் காதல் எனும் சக்தியே இந்த உலக இயற்கையின் இதயத்துடிப்பை இயங்குகின்றது எனச் சங்ககாலத் தமிழர் தமது அனுபவத்தாற் கண்டு காதலைப் போற்றினர். பண்டைய தமிழருக்கு காதலே வீரத்தின் விளைநிலமாக விளங்கியது. தன்நாட்டின் மீதும் தமது அரசின் மீதும் தம் இனத்தின் மீதும் கொண்ட காதலால் வீரத்தை விரும்பிப் போற்றினர். காதலும் வீரமும் அவர்களின் இரு கண்களாயின. காதல் வாழ்வும் வீரவாழ்வுமே அவர்களின் இலக்கியங்களாயின.
காதல் மனிதமனத்துள் நிகழ்வதால் காதலை 'அகம்' எனவும் வீரம் வெளியே தெரிவதால் வீரத்தைப் 'புறம்' எனவும் அழைத்தனர். சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றி சொல்லும் நூல்கள் யாவும் பண்டைய தமிழரின் காதல் வாழ்வை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. காதலைப் போற்றியதுடன் அவர்கள் நின்றுவிடவில்லை. காதலுக்காக பெருவிழாக்களே எடுத்தனர். காதல் பெருவிழாவை சங்ககாலத் தமிழர் காமன் விழா, வில் விழா, வில்லவன் விழா, பங்குனி விழா, உள்ளி விழா, இந்திர விழா எனப்பல பெயர்களில் கொண்டாடியதைக் காணமுடிகின்றது. அப்பெருவிழாவை ஒருநாள் இருநாள் அல்ல தொடர்ந்து இருபத்து எட்டு நாட்கள் கொண்டாடியுள்ளனர். 
இடைச்சங்க காலத்திற்கும் முன் வாழ்ந்தவனாகக் கருதப்படும் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் எனும் சோழ அரசன் செய்த இந்திரவிழாவை, மணிமேகலை
 மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நாலேழ் நாளிலும் நன்கினி துறைக"
         
 - (மணிமேகலை: 1: 7 - 8)

எனக்கூறுவதால் அதனை அறியலாம். 

ஒருமாதம் முழுவதும் நம் பண்டைத்தமிழ் மூதாதையர் கொண்டாடிய காதல் திருவிழாவை நாம் காதல் பெருவிழா என்று அழைப்பது தானே பொருத்தமாக இருக்கும். மாசிமாத சித்திரை நட்சத்திரம் தொடக்கம் பங்குனிமாத சித்திரை நட்சத்திரம் வரையுள்ள இருபத்தெட்டு நாட்கள் அந்தக் காதல் பெருவிழாவை அரசர் முதல் ஆண்டிவரை எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடினர். இலக்கியங்கள் இந்திரவிழா காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்ததாகச் சொல்கின்றன. சிம்மனூர் செப்பேடோ மதுரையில் நடந்த இந்திரவிழாவையும் சொல்கிறது. சங்கத்தமிழர் கொண்டாடிய காதல் பெருவிழாக்களை தொடர்ந்து காணுவோம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment