Saturday 31 December 2011

சண்முகன் உதித்தான்



                                    பல்லவி
சரவணப் பொய்கை மீதினிலே
சண்முகன் உதித்தான் பாரினிலே!
                                              - சரவணப் பொய்கை
                         அனுபல்லவி
புரமதுமூன்றும் எரித்தவன் புதல்வன்
கரமதில்வேலுடன் காத்திடும் முதல்வன்
                                              - சரவணப் பொய்கை
                             சரணம்
பிரணவப் பொருளை பிழையறச் சொல்லா
பிரமனைச் சிறையில் இட்டனன் அதனால்
பிரணவப் பொருளை பரமனுக்கு உரைத்து
பரமகுருவாய் அமர்ந்தவன் அவனே!
                                                - சரவணப் பொய்கை
இனிதே,
தமிழரசி

Friday 30 December 2011

அடிசில் .8

பேப்பர் தோசை
                        - நீரா -








தேவையானவை:
வெள்ளைப்பச்சை அரிசி  - 1½ கப்
வெள்ளைப் புழுங்கல் அரிசி  - ¾ கப்
வெள்ளை அவல்  - ¾ கப்
உழுந்து  -  ½ கப்
வெந்தயம்  1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 
தேவையான அளவு உப்பு

செய்முறை:
1.  நல்லெண்ணெய், உப்பு தவிர்ந்த மற்றவற்றை கழுவி நான்கு மணி நேரம் உறவிடவும்.
2.  அவற்றை பட்டுப்போல் அரைத்துப் புளிக்க விடவும்.
3.  புளித்ததும் உப்புச் சேர்த்துக் கரைத்துக் கொள்க.
4. தோசைக்கல்லை அளவான வெப்பத்தில் சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி பேப்பர்போல் மிகமெல்லியதாகப் பரப்பி நல்லெண்ணெய் விட்டுச் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு:

அவலுக்குப் பதிலாக கொஞ்சம் சோறும் சேர்த்து அரைக்கலாம்.
* * எந்தத் தோசை என்றாலும் கொஞ்சம் மைசுர்பருப்புச் சேர்த்து அரைத்தால் அரைமணி நேரத்திலேயே புளித்து விடும்.

நினைக்க மனம் அழுவதென்ன? - 2


கந்தனே! கருணைப் பெருநிதியே! நீ
          தந்தைக்கு உபதேசம் செய்திடவே
சிந்தை நிறைந்தே சிவனும் கேட்டனனே!
           விந்தை மிகுந்த இவ்வுலகில்
மைந்தர் உரைப்பவை விருப்புடன்
          தந்தையர் கேட்பதுண்டோ?
தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மானிலத்து
          மன்னுயிர்க் கினிதென்று இயம்பியவுரை
                   நினைக்க மனம் அழுவதென்ன?
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
இலண்டன் கவியரங்கொன்றில் சொன்னது.

Wednesday 28 December 2011

குறள் அமுது - (15)


குறள்:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் - 605

பொருள்:
விரைந்து செய்ய வேண்டியதை மெல்லச் செய்வது, செய்யும் செயலை மறந்தே போவது, எதையும் செய்யாது சோம்பியிருப்பது, தூங்கியே காலத்தைக் கழிப்பது, ஆகிய நான்கும் கெட்டழிந்து போவார் ஏறும் உல்லாசக்கப்பலாகும்.

விளக்கம்:
ஒருவர் தான் செய்யவேண்டிய வேலையை நீடித்து செய்வது நெடுநீராகும். என்னால் எதனையும் செய்யமுடியாது என சோர்ந்து இருத்தல் மடியாகும். ஓயாததூக்கத்தை துயில் என்பர். கெட்டழிந்து போவோரே கெடுநீரார். காமக்கலனை உல்லாசக்கப்பல் எனப்பொருள் கொண்டுள்ளேன். 
இக்குறளில் திருவள்ளுவர்  குறிப்பிட்ட நான்கு செயல்களும் நேரத்தை வீணாக்குபவையே. நெடுநீராகிய உல்லாசக்கப்பலில் ஏறினால் அது எம்மை ஆமை வேகத்தில் தொழிற்படவைத்து இன்று காலையில் முடிக்கவேண்டிய வேலையை மூன்று மாதங்களின் பின் முடிக்கவைக்கும். மறதி என்ற உல்லாசக் கப்பலில் ஏறிப்பயணம் செய்தால் நாம் செய்யும் வேலைகளையே மறக்கவைத்து அல்லற்படுத்துவதோடு வைத்தபொருளை எங்கு வைத்தோம் எனத்தேடித்தேடியே பல மணித்துளிகளைக் கரைக்கும். நம்மில் பெரும்பாலானோர் பவனிவருவது இந்த மறதியெனும் உல்லாசக்கப்பலிலேயே. 

சோம்பலாகிய  உல்லாசக்கப்பல் எம்மை இருந்த இடத்தைவிட்டு நகரவிடாது. சோர்ந்து இருந்த இடத்தில் இருந்தபடியே சுகம் காணவைத்து காலம் ஓடியதை நாம் உணராதவாறு வெகு உல்லாசமாக எம்மை இழுத்துச்செல்லும். துயில் எனும் உல்லாசக்கப்பலில் ஏறி காலவரையறை இன்றி உல்லாசமாகத் தூக்கத்தில் எம் ஆயுற்காலத்தை ஓட்டலாம்.
ஆக இந்த நான்கு உல்லாசக் கப்பல்களில் ஒன்றில் ஏறினாலே அது அழிவைத் தரும். நான்கிலும் எறி நாம் கெட்டழிந்து போக வேண்டுமா? எதைச்செய்தாலும் விரைந்து மறவாது சோம்பலின்றி விழித்திருந்து செய்யுங்கள்.  எனெனில் சுறுசுறுப்பின்மை, மறதி, சோம்பல், நித்திரை ஆகிய நான்கும் உல்லாசமாக இருப்பினும் கேட்டையே தரும்.

Tuesday 27 December 2011

ஆசைக்கவிதைகள் - 14

மாலை செஞ்சி போட்டிடட்டோ!

தாயாக நீ இருந்தால்
          சேயாக நான் இருப்பேன்
வாய்ச்சாலம் உள்ளவளே ஒரு
          வார்த்தை சொன்னால் ஆகாதோ!

வார்த்தை சொன்னால் முத்து
          வழுவி விழும் ஆனால்
பார்த்து புறக்கி நான்
          பத்திரமா தந்திடுவேன்.

செம்பவளம் வாய் திறக்க
          சிதறிய முத்தெடுத்து
சங்குக் கழுத்துக்கு மாலை
          செஞ்சி போட்டிடட்டோ!
                                            -  நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                              (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

ஆதிரையானும் ஆதிசிதம்பரமும் - பகுதி 1

               Image courtesy of Wikipedia

பண்டைய தமிழர்களால் மிக விரைவான பெரிய ஆடல் என்ற பொருளில்  மூதிரை என்றும் யாதிரை என்றும் அழைக்கப்பட நட்சத்திரமே ஆதிரை. இந்த நட்சத்திரம் யாழ் போன்று தெரிந்ததால் யாழ் எனவும், செந்நிறமாக ஒளிர்வதால் செங்கை எனவும் அழைத்தனர்.

பிற்காலத் தமிழர்களால் திரிசங்குமகாராசாவின் திரிசங்கு சுவர்க்கமாகக் கூறப்படும் நட்சத்திரத் தொகுதியில் ஆதிரை நட்சத்திரம் இருக்கிறது. உங்களில் பலரும் சிறுவயதில் வடதிசையில் இருக்கும் இந்நட்சத்திரத் தொகுதியை திரிசங்கு சுவர்க்கமாகப் பார்த்திருப்பீர்கள். அவரின் ஒரு காலாய் செந்நிறத்தில் சுடர்விட்டு ஒளிர்வதே ஆதிரையாகும் (Betelgeuse). இந்த நட்சத்திரத் தொகுதி பார்ப்பதற்கு ஒருவர் ஆடுவது போலவும் தோன்றும்.

மிக வேகமாக மின்னி மின்னி செந்நிறமாய் ஒளிர்வதாலும் மிகத்தொலைவில் இருப்பதாலும் ஆதிரையை சிவனின் நட்சத்திரமாகக் கொண்டனர். முத்தொள்ளாயிரத்தின் கடவுள் வாழ்த்து
"மன்னிய நாள்மீன்மதிகனலி என்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனை - பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் 
ஊர்திரைநீர் வேலி உலகு"
எனக்கூறுவதைப் பாருங்கள்.

இன்றைய அறிவியல் கணக்கின்படி 625  ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த நட்சத்திரம் இருக்கிறது. 2012ல் இரண்டு சூரியன் தெரியும் என்று சொல்கிறார்களே அந்த இரண்டாவது சூரியனாய் சில காலம் இரவை பகலாக்கப் போவதாகக் கூறப்படுவதும் ஆதிரை நட்சத்திரமே. நம்மவர்கள் ஏன் சிவனுக்கும் ஆதிரை நட்சத்திரத்திற்கும் முடிச்சுப்போட்டு சிவனை ஆடல் நாயகனாக உயர்த்தினார்கள் என்பது புரிகிறதா? ஆதிரையனாகிய சிவனாடிய திருநடனத்தை திருஞானசம்பந்தர் 


“ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆர் அழகன்      
                                                                           - (ப. திருமுறை: 3: 61:1)
என மூன்றாம் திருமுறையிலும்

".................... கூரெரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே"              
                                                                            - (ப. திருமுறை: 1:105:1) 
என முதலாம் திருமுறையிலும் போற்றியுள்ளார். எல்லி என்பது இரவு. ஆதிரையன் இரவிலே எரியாக ஆடல்புரிபவன் என்கிறார்.  இவரைப் போலவே சுந்தரமூர்த்தி நாயனாரும்

ஆதியன் ஆதிரையன் அயன்மால் அரிதற்கு அரிய சோதியன் 
                                                                            - (ப. திருமுறை: 7: 97:1) 
என்று தமது தேவாரத்தில் ஆதிரையனாய் சோதிப்பிழம்பாகவே சிவனைப் பாடியுள்ளார். இவ்வாறு தீப்பிழம்பாக எரிகின்ற ஆதிரையை ஆதிரையனாக ஆடல் நாயகனாக வழிபட்ட எம் தமிழ்மூதாதையர் ஆதிரை நாளை பெரு விழாவாகக் கொண்டாடினர். இந்த வழக்கம் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வருகின்றது. சங்கத்தமிழர்ஆதிரைநாளைக் கொண்டாடியதை சங்கஇலக்கியங்கள் காட்டுகின்றன. 
பரிபாடல்             
“ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதர் பன்னொருவர்”     
                                                                               - (பரிபாடல்: 8: 6 - 7)
எனக்கூறுமிடத்தில் சிவனை ஆதிரை முதல்வன் எனக்குறிபிடுகின்றது. இன்றைய இந்துமதச் சடங்குகளில் தாழம்பூவைப்போல் பூசைக்குரிய மலராகக் கருதப்படாத சண்பகப்பூவை சிவனுக்கு சங்கத்தமிழர் சூடி வழிபட்டதை கலித்தொகை கூறும். 
அறும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெருந்தண் சண்பகம் போல"                                        
                                                                              - (கலி: 150: 20 - 21)
சண்பகமலர்

இச்சங்கப் பாடல் சங்ககாலத் தமிழர் சிவனை ஆதிரையான் என அழைத்ததையும் சிவனை சண்பகமலரால் அலங்கரித்ததையும் காட்டுகிறது. ஆனால் நாமோ மூடநம்பிகையுள் கட்டுண்டு நாரதர் சாபமிட்டார், அதனால் சண்பகமலர் பூசைக்குரிய மலரில்லை என்று நல்ல வாசனையும், நோய்தீர்க்கும் மருந்தாகப் பாவிக்கப்படும் ஓர் அருமையான பூவைப் புறக்கணிக்கிறோம். பூசைக்குரிய எட்டுவகைப் பூக்களான புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, தாமரை, நந்தியாவட்டை, அலரி, நீலோற்பலம் என்பவற்றுள் ஒன்றாக இருந்தும் இந்நாளில் சண்பகமலர் புறக்கணிக்கப்படுவது ஏன்? இது கோயில்களின் அறக்காவலர்கள் என தம்மை நிலைநிறுத்துவோர் காதுகளில் சென்று சேர்வது எக்காலமோ!
சங்ககாலத்தமிழர் மார்கழி ஆதிரை நாளை எப்படிக் கொண்டாடினர் என்பதை

கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்

பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பாதாக வியன் நிலவரையென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்”
                                                                              - (பரிபாடல்: 11: 74 - 81)
எனப் பரிபாடல் அழகாகச் சொல்கிறது. 

திருவள்ளுவர் சுட்டிக் காட்டிய  
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்"
                                                                                - (குறள்: 30)
என்னும் அந்தணர் எவரோ அத்தகைய அந்தணரே இப்பாடல் கூறும் 'அந்தணர்'  என்பதை நாம் நன்கு உணரவேண்டும்.    

இடிமுழக்கம் செய்கின்ற கார் மேகங்கள் விலகிச் செல்ல, பனிபொழியும் பின்பனிக்காலத்தில் வெப்பம் தகிக்காது மழையும் பெய்யும். மார்கழியின் (குளத்து - பூராடம்) முழுமதி நாளான ஆதிரை நாளில் நூல்களை விரிவாய்க் கற்ற செந்தண்மையுடையோர் விழாவைத் தொடங்க, பூனூல் அணிந்த அந்தணர் அழகிய கலங்களை ஏந்தி நிற்க, ‘இந்த உலகம் குளிச்சியோடு இருக்கவேண்டுமென’ என வளையல் அணிந்த சங்காலக் கன்னியர் நீராடி ஆதிரை நாளைக் கொண்டாடியதை பரிபாடல் காட்டுகிறது.
பரிபாடல் காட்டும் இந்த ஆதிரை விழாவும் பெண்களால் உலக நன்மைக்காக செய்யப்பட்ட விழாவேயாகும். புரட்சிக்கவிஞன் பாரதி சுட்டெரிக்க முனைந்த பெண் அடிமைத்தனம் தமிழரிடையே வேரூன்றத் தொடங்கிய போது பெண்களால் கொண்டாடப்பட்டு வந்த விழாக்கள் கைமாறிப்போயின. மாணிக்கவாசகர் முதற்கொண்டு பன்னிருதிருமுறைபாடிய சான்றோர்கள் பலர் ஆதிரை விழாவில் பெண்களின் பங்களிப்பை பதிவு செய்துள்ளனர். அவற்றை தொடர்ந்து பார்க்கும் வரை...
இனிதே,
தமிழரசி.

Monday 26 December 2011

பண்டைத்தமிழரின் இசைச்சுரங்கள்

ஊர்த்துவ தாண்டவர்

இந்த உலகத்தையும் அதிலிருக்கும் உயிருள்ள, உயிரற்ற பொருட்களையும் இயக்குவது எது? அப்படி இயக்கும் பொருள் எதுவோ அது தானும் இயங்க வேண்டுமல்லவா?  ஒரு விளையாட்டுத் திடலில் ஒருவர் ஒரு பந்தை எடுத்து வீசுகிறார் என நினையுங்கள்.  அவர் இயங்காது - அசையாது இருக்க அப்பந்து தூரத்தில் போய் விழுமா? இல்லையே. ஆதலால் அவரின் இயக்கமே பந்தின் வேகத்திற்கும் விழுகைக்கும் காரணமாகும். எனவே இவ்வுலக இயக்கத்தையும் ஏதோவொன்று தானும் இயங்கி இயக்குகின்றது என்பதை ஆதிமனிதன் புரிந்து கொண்டான். அந்த இயற்கையை - இயக்கனை வழிபடத் தொடங்கினான். 

அந்த இயக்கத்தை ஆடலாகப்புரிந்து கொண்ட தமிழன், அந்த ஆடலுக்கு வடிவம் கொடுத்து இயக்கனை ஆடல் நாயகனாக உயர்த்தினான். ஆடல் நாயகனின் ஆடல் நிலைகளை பக்தி இலக்கியங்கள் காட்டுகின்றன. காரைக்கால் அம்மையாரே பக்தி இலக்கியங்களிலே ஆடல் நாயகனின் ஆடலை முதன் முதல் பதிவு செய்தவர். 

ஆடலுக்கு பாடலும் தாளமும் மிக இன்றியமையாதன. பாடலுடன் இசைந்த பண்ணும், ஆடலுடன் இசைந்த தாளமும் இருக்கவேண்டும். அப்போது தான் ஆடலை இரசித்துச் சுவைத்துப் பார்க்க முடியும். பாடலுடன் சேர்ந்த பண்ணை அமைக்க சுரங்கள் வேண்டும்.  ச, ரி, க, ம, ப, த, நி என்ற இன்றைய கர்நாடக சங்கீதத்தின் ஏழு சுரங்களும் கர்நாடக இசையின் சுரங்களா?  பண்டைக்காலத் தமிழர் இசைச் சுரங்களை அறிந்திருந்தனரா? என்கின்ற கேள்விகளுக்கு தமிழரின் பக்தியிலக்கியங்கள் மிக அற்புதமான நல்ல விடைகளை பதிவுசெய்து வைத்திருக்கின்றன. 

ஆனால் நாம் அவற்றைத் தொட்டும் பாராமல் அந்தப் புராணம் அதைச் சொல்கிறது. யாவும் சமஸ்கிருதம் தந்ததே என மருண்டு கொண்டு இருக்கிறோம். பக்தி இலக்கியங்கள் யாவும் தமிழே. அவற்றைப் படிப்பதும் கடினம் அல்ல. ஆனால் அவற்றுக்கு கருத்து எழுதியவர்கள் புராணங்களுடன் முடிச்சுப் போடுகிறார்கள். கருத்துக்களை நீக்கிப் படிக்க விரைவில் புரிந்து கொள்ளலாம்.

பண்டைய தமிழர் பாடிய பாடல்களின் இசைச் சுரங்கள் எவை?  பாடலுக்கு ஏற்றவாறு இசையைத் தரும் இசைக் கருவிகளையும் ஆடலுக்கேற்ற தாளத்தைக் கொடுக்கும் தாள இசைக் கருவிகளையும் காரைக்காலம்மையார் பாடி வைத்துள்ளார். 

"துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
                    உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
         தகுணி துந்துபி தாளம் வீணை
         மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
                     தமருகம் குடமுழா மொந்தை வாசித்து 
          அத்தனை விரைவினோடு ஆடும் எங்கள்
            அப்பன் இடம் திருஆலங்காடே"
           - (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்: 9)

பண்டைத் தமிழரின் தமிழ் இசையின் துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகிய ஏழுசுரங்களையும்  பண்னோடு பாடி சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை ஆகிய பதிநான்கு இசைக் கருவிகளையும் வாசித்து மிகவும் விரைவாக இறைவன் ஆடுவாராம். காரைக்கால் அம்மையார் ஓசை எனக்கூறும் சுரத்தை இளங்கோவடிகள் குரல் என்பார். அதுவே சட்ஜம்  'ச' ஆகும். அதாவது காரைக்கால் அம்மையார் கூறிய ஏழுசுரங்களும் 
ஓசை(குரல்)  -  சட்ஜம் ()
துத்தம்   -  ரிஷபம் (ரி)
கைக்கிள்ளை  -  காந்தாரம் ()
உழை -  மத்யமம் ()
இளி  -  பஞ்சமம் ()
விளரி  -  தைவதம் ()
தாரம்  -  நிஷாதம் (நி)
ச ரி க ம ப த நி என்ற வடிவத்தை எடுத்துள்ளன. ச ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களும் தமிழிசையின் சுரங்களே. நாமோ அதனை மாற்றான் தோட்டத்து மல்லிகையாகப் பார்கிறோம்.

ஊர்த்துவத் தாண்டவராய் ஆடும் எங்கள் அப்பன் தனது ஆடலுக்கான தாளத்தைப் பெறுவதற்கு தானே தமருவை, ஒரு வளைந்த கோல் கொண்டு அடித்து ஒலி எழுப்புவதைபடத்தில் பாருங்கள். இது கிடைத்தற்கரிய ஒரு சிலையாகும்.
இனிதே,
தமிழரசி.

Sunday 25 December 2011

அமர்ந்திருக்கக் கற்றிலனே!


கத்தும் குயில் ஓசை எல்லாம்
              கந்தனவன் குரல் ஒலியே
மெத்த அதைக் கேட்டு நானும்
              மெய்மறந்து இருக்கையிலே
சித்தமதில் குடி இருக்கும்
              செம்மையினை உணர்ந்திங்கு
அத்தனவன் அருள் ஒளியில்
               அமர்ந்திருக்கக் கற்றிலனே!
இனிதே,
தமிழரசி.

Friday 23 December 2011

அடிசில்.7

பாகற்காய் வறை
                                     - நீரா -

தேவையானவை:
பாகற்காய்  - 400 கிராம்
தேங்காய்ப்பூ - ½ கப்
வெட்டிய வெங்காயம் - 1
செத்தல்மிளகாய் - 2
கறிவேற்பிலை கொஞ்சம்
கடுகு -  ½ தேக்கரண்டி 
சீரகம் - ½ தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை:
1.  பாகற்காய்களை விதை நீக்கி மிகமெல்லிய அரைவட்டத் துண்டுகளாக வெட்டிக்கொள்க.
2.  அதற்குள் சிறிது நீர் விட்டு 1½ தேக்கரண்டி உப்புப்போட்டு அரை மணிநேரம் ஊறவிடுக. 
3.  ஊறிய பாகற்காயை நன்கு கழுவி நீர் போகப் பிழிந்து எடுக்கவும்.
4.  ஒரு பாத்திரத்தில் 1½ மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் பிழிந்த பாகற்காயை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
5.  இன்னொரு பாத்திரத்தில் தேங்காய்ப்பூவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
6.  அதே பாத்திரத்தில் மிகுதி ½ மேசைக்கரண்டி எண்ணெயை விட்டு சூடானதும் கடுகு, சீரகம், செத்தல்மிளகாய், கறிவேற்பிலை, வெங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
7.  அதற்குள் மிளகாய்த்தூள் சேர்த்து பொரியவிட்டு, பொரித்த பாகற்காய், வறுத்த தேங்காய்பூ போட்டு  கிளறி எடுக்கவும். 
8. ஆறியதும் எலுமிச்சம் சாறுவிட்டு பிசைந்து கொள்க. 

Thursday 22 December 2011

நினைக்க மனம் அழுவதென்ன? - 1













மாஞ்சோலைக் குயில் இணைதேடிக் கூவுகையில்
பூஞ்சோலைதனிலிருந்து இணையாகக் கூவியதும்
தேஞ்சிந்தும் மலரின் மேல் தேன்குருவி ஊதுகையில்
துள்ளுமதன் சிறகடிப்பின் எழிலதனை இரசித்ததுவும்
கானகத்து கவினழகில் கருத்தழிந்து நிற்கையிலே
மான் இனந்துள்ள உடன்துள்ளி ஓடியதும்
தாமரை மலர்பறிக்க தடாகத்தில் நீந்தையிலே
தாவிமுதலை வரக்கண்டும் மலர்பறித்ததுவும்
நினைக்க மனம் அழுவதென்ன?
                                                                                                                     - சிட்டு எழுதும் சீட்டு (13)

குறள் அமுது - (14)


குறள்:
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்                                      - 620

பொருள்:
தாமதிக்காது தளர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்பவர் விதியையும் முறியடித்து வெற்றியடைவர்.

விளக்கம்:
இத்திருக்குறள் 'ஆள்வினை உடைமை' என்னும் அதிகாரத்தில் பத்தாவது குறளாக இருக்கிறது. முயற்சியுடையோராய் இருத்தலை ஆள்வினை உடைமை என்பர். விதியை வெல்லமுடியுமா? என்னும் கேள்விக்கு, முடியும் என்ற பதிலைத் தருகிறது இக்குறள். திருவள்ளுவர் விதியை வெல்லும் வழியை மிகவும் சிறப்பாகக் கூறி இருக்கிறார். 

நீங்கள் செய்து முடிக்க நினைத்த செயலில் தோல்வி வந்துவிட்டதா? விதியே என்று இருந்து விடாதீர்கள். விதியை வெல்வதற்கு, சோர்ந்திருக்காது விரைந்தெழுந்து  தொடர்ந்து செயற்படுங்கள். உங்கள் செயற்திறனால் விடாமுயற்சியால் நீங்கள் செய்து முடிக்க நினைத்ததை முடித்து, விதியை வென்றுகாட்டலாம்.
மனிதர் அறிவற்ற சடப்பொருள் அல்லர். எமக்கு அறிவு இருக்கிறது. மனிதர் தம் விடாமுயற்சியால் ஊழையும் அதாவது விதியையும் வெற்றி கொள்ளமுடியும். இது நம் தலைவிதி என்று செயற்படாதிருக்க மனிதனால் முடியவே முடியாது. அப்படி இருந்திருந்தால் மனிதன் கிரகம் விட்டு கிரகம் தாவ முனைந்திருப்பானா? 
குமரகுருபர சுவாமிகள் 'நீதிநெறி விளக்கம்' என்ற நூலில் கூறியுள்ளது போல் நாம் செயற்பட்டால் இக்குறளில் திருவள்ளுவர் கூறியபடி விதியை வெல்லலாம்.

“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.”                              (நீதி.விளக்கம்: 52) 
தான் எடுத்த செயலைச் செய்து வெற்றியடைய ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக குமரகுருபரர்  இப்பாடலில் தந்துள்ளார். உடல் வருத்தத்தை - நோவைப் பராது, பசி எடுப்பதையும் கண்டுகொள்ளாது, விழித்திருந்து, மற்றவர் செய்யும் துன்பங்களையும் பொருட்படுத்தாது, தன்னைப் புகழ்வோரைப் பார்த்து மகிழாமலும்  இகழ்வோரைப் பார்த்து சினக்காமலும் தான் எடுத்த செயலைக் கண்ணும் கருத்துமாகத் தொடர்ந்து விடாது செய்பவன் வள்ளுவர் கூறியது போல் விதியை வென்று வெற்றியடைவான். விதியை வெல்லவேண்டுமா உங்கள் இலட்சியத்தை நாடி தொடர்ந்து செயற்படுங்கள்.

Tuesday 20 December 2011

துணைதேடிப் பறந்திடிச்சே!


தினைக்கதிர்(படம்: தமிழ் விக்கிபீடியா)
முற்றிய தினையை ஒடிக்கும் காலமது. தமது தினைப்புனத்தில் இருந்து வந்த பெற்றோர் வீட்டிலிருந்த தமது மகளைக் காணாது தேடினர். அவள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள் என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

காலையில் தினை ஒடிக்கப் போனபோது பொன்மணிகள் தொங்கும் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த மகள், இப்படிச் செய்து விட்டாளே என்ற ஆதங்கம் தாய்க்கு. மகள்  யாருடன் சென்றாள் என்பதை அறிந்ததும் தாய் தனது புலம்பலை நாட்டுப்பாடலாக வடிக்கிறாள்.

தாய்:  கனகமணிக் கட்டிலில
                    கண்ணயர்ந்த செல்லக்கிளி
          தினயொடிக்கு நேரத்தில
                    துணைதேடி பறந்திடிச்சி.

தாய்:  ஓடித்திரிந்தால் உள்ளங்கால்
                    நோகும் என்னு
          கூடிச்சுமந்த குஞ்சு
                    கூடுவிட்டு தாவிடிச்சி.

தாய்:  பாடித்திரியும் என்னு  
                     பாலூட்டிவளத்த குஞ்சு
          தேடிப் பறந்திடிச்சே!
                     திக்கத்த பையனோட.
                                                    -  நாட்டுப்பாடல் (முல்லைத்தீவு)
                                               -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இந்த முல்லைத்தீவுத் தாயைப் போலவே சங்ககாலத் தாயொருத்தியும் மகள் காதலனுடன் சென்றதை அறிந்து புலம்புகிறாள். அந்த சங்கத்தாயின் புலம்பலைப் படிப்போரது நெஞ்சமும் அவள் சொல்வது போலவே வேகும்.
 
நொச்சிப்பூ
"ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!
'இனியே தாங்குநின் அவலம்' என்றிர்; அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே!
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடை கற்றன்னவென்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே."        (நற்றிணை: 184)

'எனக்கு இருப்பதோ ஒருமகள். அவளும் போர் செய்வதில் மிகவலிமையும் கூரியவேலையுமுடைய இளைஞனுடன், நேற்று பெரியமலையிலுள்ள கொடியவழியால் சென்றுவிட்டாள். என்னைப் போன்ற அழகான சாயலையுடைய இளமகள், மைதீட்டிய கண்ணின் கண்மணியுள் இருக்கும் பாவை வெளியே வந்து நடந்து பழகியது போல அவள் விளையாடித்திரிந்த நீலமணிபோலும் பூவுடைய நொச்சியையும்  திண்ணையையும் காணூம் போது, அவளை நினைக்க என் உள்ளம் வேகின்றதே! நீங்களோ எனது துன்பத்தை தாங்கிக்கொள் என்கிறீர். அறிவுடையீரே! அது எப்படி முடியும்?' எனக்கேட்கிறாள் அந்த சங்ககாலத்தாய்.

குறிப்பு:
                                   சொல்விளக்கம்
1.  தினை  -  ஒருவகைத் தானியம்           2.  செரு  - போர்
3.  மிகுமொய்ம்பின் - மிக்கவலிமை          4.  காளை  - இளைஞன்
5.  அருஞ்சுரம்  -  கொடியவழி                6.  நெருநல்  -  நேற்று
7.  அவலம்  -  துன்பம்                              8.  யாங்கனம்  -  எப்படி
9.  ஒல்லும்  -  முடியும்                             10.  உள்ளின்  -   நினைத்தால் 
11. உள்ளம்  -  நெஞ்சம்                         12.  உண்கண்  -  மையிட்டகண்
13. என்அணியியல் - என்போன்ற அழகு
14.  குறுமகள்  -  இளையமகள்              15.  மணியேர்  -  நீலமணிபோலும்
16.  தெற்றி  -  திண்ணை

இனிதே,
தமிழரசி.