Wednesday 30 November 2011

குறள் அமுது - (11)



குறள்:
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்”                                                 
                                                                      - 214

பொருள்:
ஒப்புரவாளன் தன்னை ஒத்த உயிர்களின் தன்மையை அறிந்து, உலக உயிர்களுக்காக வாழ்வதால் அவன் உயிரோடு வாழ்கின்றான். உலகத்திற்காக வாழாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவருள் ஒருவனாகவே வைக்கப்படுவான்.  

விளக்கம்:
உலகத்திற்காக வாழ்பவன் யார்? வாழாதவன் யார்? என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் என்ற விளக்கத்தை திருவள்ளுவர் ஒப்புரவு அறிதல் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்.  அதில் உலத்திற்காக வாழாதவனை உலகம் எப்படி நினைக்கும் என்பதை இக்குறளில் கூறுகிறார். 

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் ஒருவர்க்கு ஒருவர் சமமானவர். உலகில் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இருப்பதில்லை. அவரவர் பண்புகளாளேயே நாம் மாறுபடுகின்றோம். அதுபோல் அவரவர் செய்யும் தொழிலால் கிடைக்கும் புகழாலும் பெருமையாலும் வேறுபடுகிறோம். 

ஒத்தது எது? எல்லாவகையான தன்மையிலும் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருப்பது எதுவோ அதுவே மற்றதோடு ஒத்ததாக இருக்கும். சிலவேளைகளில் அது நிறத்தில் ஒத்திருந்தாலும் உருவத்தில் ஒத்திருந்தாலும் கூட நாம் அதனை ஒத்தது என்றே சொல்வோம். அதுபோல் மனிதர்களாகிய நாம் எமது உருவத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பெருமையாலும் கலாச்சாரப் பண்புகளாலும் வேறுபடினும் உயிர் என்னும் தன்மையில் ஒருவரோடு ஒருவர் ஒத்தே இருக்கின்றோம். இந்த உயிர் எனும் தன்மை உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் ஒன்றே. உயிர் எனும் தன்மையில் ஒத்து இருப்பதால் தன்னைபோன்ற மற்றைய உயிர்படும் துன்பத்தை பகுத்து அறிந்துகொள்ளக் 
கூடியவனே உயிரோடு வாழ்பவன். 

உயிர் போனபின் இருக்கும் உடல் ஒரு சடப்பொருளே. உயிரற்ற உடலுக்கு அறிவும் அறிவால் வரும் செயல்திறனும் இருப்பதில்லை. அது எதனையும் பகுத்து அறியாது. எனவே உயிர் உள்ளவனே உயிரோடு வாழ்பவன் என்று கூறப்படும் தகுதியுடையவன். தன்னோடு ஒத்த உயிரின் துன்பங்களை அறியமுடியாத பகுத்தறிவற்ற மனிதரை செத்தவராகவே கொள்ளவேண்டும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் முடிவு. அதனாலேயே அத்தகையோரை ‘மற்றையான்’ என விழித்து செத்தாருள் வைக்கப்படுமென்று அஃறினைப் பொருளாகக் காட்டுகிறார்.

தன்னுயிரை ஒத்த உயிர்களின் தன்மையை அறியக்கூடியவர் எவரோ அவரே உயிர்வாழ்பவர். அத்தன்மையை அறியமுடியாதவர் செத்தவராகக் கருதப்படுவர்.

Tuesday 29 November 2011

கள்ளவிழிச் சிரிப்பழகு



வவுனியாவில் உள்ள பாவற்குளத்தில் எண்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த காதலன் ஒருவன் அவனது காதலியின் தோழிக்குத் தன் நிலையைக் கூறுகிறான்.

ஆண்:  கள்ளவிழி சிரிப்பழகும்                      
                        கதைகூறும் சொல்லழகும்
            துள்ளுமிடை நடையழகும்
                        துணைக்கு வரசொல்லுதடி

ஆண்:  கருவண்டுக் கண்ணழகும்
                        கார்கூந்தல் பின்னழகும்
            குருவண்டாய் குடையிதடி
                        கிறுகிறுக்கும் என்மனச
                                   - நாட்டுப்பாடல் (பாவற்குளம்)
                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

சங்ககாலக் காதலன் ஒருவன் உழைப்பதற்காக தன் காதலியைப் பிரிந்து  வெளிநாட்டிற்குச் சென்றான். அவனது நெஞ்சம் காதலியை நினைத்துப் பார்கிறது. வெளிநாட்டிற்கு சென்று பொருள் தேடவேண்டுமென அவனது நெஞ்சம் தானே (மனஎண்ணம்) அடம்பிடித்து அவனை அங்கு அழைத்து வந்தது. அதனால் அவன் தனது நெஞ்சுக்குக் கூறுகிறான்.
"உள்ளினை வாழிஎன் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையின் பிரிந்த நீயே!"              
                                                            -(அகநானூறு: 343: 16 -19)
என் நெஞ்சே! கள்ளுக் குடித்துக்கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெருமகிழ்ச்சியைத் தந்தவள். அகன்ற குளிர்ந்த கண்களும் அறிவுள்ளவற்றைப் பேசும் அழகிய பவளம் போன்ற வாயும் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட காதலியை அறிவில்லாமல் பிரிந்துவந்த நீயே, நினைத்துப் பார்க்கிறாய்! ஆதலால் வாழ்வாயாக!

சங்ககாலக் காதலனும் பாவற்குளத்து நாட்டுப்புறக் காதலனும் தம் காதற் கன்னிகையரின் கண்ணழகையும் சொல்லழகையும் தமது நெஞ்சிற்கு முதலில் சொல்வதை இந்த ஆசைக்கவிதைகள் காட்டுகின்றன.

இவைமட்டுமல்ல புதியமுகம் படத்தில் வரும்

"கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழியழகு
கார்கூந்தல் பெண்ணழகு"

பாடல் வரிகளும் அதே கருத்தையே சொல்கின்றன.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
1.  உள்ளினை - நினைத்தனை
2.  மகிழின் - மகிழ்வைவிட
3.  சின் - அறிவு
4.  சின்மொழி - அறிவுள்ள சொற்கள்
5.  துவர்வாய் - பவளம் போன்ற வாய்
6.  பன்மாண் - பல சிறப்புக்கள்

7.  பேதையின் - அறியாமையால் 

Sunday 27 November 2011

மாவீரம் தந்த இதயச்சுமை - பகுதி 1


பண்டைத் தமிழர் தமது வாழ்வியலை அகம் புறம் என இரண்டாகப் பிரித்து தமது இரு கண்ணாகப் போற்றினர். காதல் இன்பத்தால் ஏற்படும் உள்ளத்து உணர்வுகளையும் அவற்றால் ஏற்பட்ட எல்லா விளைவுகளையும் அகம் என்றனர். வெளியே நடக்கும் அரசியல் மாற்றங்களையும் ஒரு  நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் வலிமை சேர்த்த போரையும் வீரத்தையும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் புறம் என்றனர். அகமும் புறமும் சேர்ந்ததே மனிதவாழ்வு  என்பது பண்டைத்தமிழர் கண்ட முடிபாகும்.

அதனை சங்க இலக்கியங்கள் சங்கத்தமிழர் வாழ்வியல் மூலமாக எமக்குக் காட்டுகின்றன. நான் இங்கே அன்றைய தமிழரை பண்டைத்தமிழர் என்றும் சங்கத்தமிழர் என்றும் சொல்வதை நீங்கள் கொஞ்சம் உங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சங்கத்தமிழருக்கு முன்வாழ்ந்த தமிழரை பண்டைத்தமிழராய் சுட்டுகிறேன். ஏனெனில் தொல்காப்பியமும் புறநானூறு, பதிற்றுப்பத்து, மலைபடுகடாம் போன்ற சங்கநூல்களின் சில பாடல்களும் சங்கத்தமிழருக்கு முன் வாழ்ந்த பண்டைத்தமிழரின் வரலாற்றையும் கூறுகின்றன. அவற்றால் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த பழந்தமிழரின் மாவீரத்தை நாம் அறியலாம்.
அவர்களின் அகவாழ்வு எப்படி அன்பும் அறமும் பண்பும் உடையதாய் இருந்ததோ அதுபோல் புறவாழ்வும் அன்பும் அறமும் பண்பும் உடையதாய் இருந்தது. வீரம் நிறைந்த புறவாழ்வை மறம் என அழைத்தனர். அன்பே அவர்களது மறமாண்பைப் போற்றி வளர்த்தது. அதனை 
“அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை" 

என திருக்குறளும் எடுத்துச் சொல்லும். வள்ளுவர் இக்குறளில், 'உண்மையை அறியாதோர் அறத்திற்குமட்டுமே அன்பு துணை செய்யும் என்பர். ஆனால் மறமாகிய வீரம் செறிந்த செயல்களைச் செய்யவும் அன்பே துணை செய்கின்றது' என்கிறர். 
அன்பு எப்படி மறத்திற்கு துணை செய்யும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் வெளியே சென்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களின் அன்பு மனைவி போட்டிருந்த நகைகளைக் கண்ட மாற்றார் சிலர் மனைவியை அடித்து நகைகளைப் பறிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவர்களை எதிர்த்து நொறுக்கியிருப்பீர்கள். உங்களுக்குள் மறைந்து இருந்த அந்த வீரம் வெளிப்படக் காரணம் என்ன? உங்கள் மனைவி மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பே. 
அந்த அன்பு தன்இனம், தன்மொழி, தன்நாடு, தன்தேசமென விரியும். அப்படி விரிந்த அன்புடன் தன்இனத்திற்காக தன்நாட்டிற்காக மறச்செயல் செய்தோரை மறவர் என்றனர். பொது நலனுக்காக வீரம் கொப்பளிக்க நின்ற அந்த மறவர் தம்முயிரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மானம் பெரிதென நினைந்து வீரம் விளைந்த நெஞ்சும் தீரம் தினவெடுக்கும் தோளுமாக மறத்தமிழன் புறப்பட்டான். மறக்குடி தோன்றிற்று. மறக்குடிப் பெண்டிர் தம் குழந்தைகளை மானமுள்ள மறவராக வளர்ப்பதையே தம் கடமையாகக் கருதினர். 
காவற்பெண்டு என்பவர் சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவராவார். அவரும் ஒரு மறக்குடிப் பெண்ணே. அவருக்கு ஒரே ஒரு மகன். மகனின் போராற்றலில் மறமாண்பில் அவருக்கிருந்த பெருமிதத்தையும் தமிழினத்தின் மானவீரத்தையும் புறநானூற்றிலுள்ள அவரது ஒரே பாடல் சொல்கிறது. அப்பாடலை  அவர் வடித்து இரண்டாயிர வருடங்கள் உருண்டோடிய போதும் இன்றும் என்றும் அவரது சொல்லாட்சி மறம் மேலிட ஒவ்வொரு தமிழ்த்தாய்க்கும் விம்மிதம் தரும். காவற்பெண்டிடம் உன்மகன் எங்கே எனக்கேட்க  அதற்கு அவர் சொன்ன பதிலாக அப்புறப்பாடல் அமைந்துள்ளது.
“சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!”      
                                                                 - (புறம்: 86)
சிறுவீட்டின் அழகிய தூணைப் பற்றிப்பிடித்து நின்று ‘உன்மகன் எங்கே உள்ளான்’ என்று கேட்கிறாய், என்மகன் எங்கே இருக்கிறான் என்பதை அறியேன். புலி கிடந்து சென்ற கற்குகை போல, அவனைப்பெற்ற வயிறு இதோ இருக்கிறது. அவன் போர்க் களத்திலே தான் தோன்றுவான்' எனக் காவற்பெண்டு சொல்கிறார். 

மகனின் வீரத்தில் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் அந்தத் தாயால் இப்படி பேசியிருக்கமுடியும்? புலி பசித்தால் குகையில் கிடவாது. அது வேட்டையாடப் புறப்பட்டுவிடும். பசி தீர்ந்த பின்னரே அது குகையைத் தேடிவரும். காவற்பெண்டின் மகனுக்கு இருந்த பசி போர்ப்பசி. போர்ப்பசி எடுத்தவன் போர்க்களத்தில் தானே இருப்பான். வீட்டிலா இருப்பான்? அவனது பசி தீர்ந்த பின்னரே அங்கு வருவான் என்பதையும் உவமையால் சொல்கிறார். ஆண்மகனின் சிங்கம் போன்ற போராற்றலுக்கு, இப்பாடலை எடுத்துக் காட்டுவர். 
இரண்டாயிர ஆண்டுகளுக்குப் பின்பும் காவற்பெண்டு போன்ற எத்தனை மறக்குடிப் பெண்களை நம் தாயகமும் தந்தது என்பதற்கு எமது வீரம் விளைந்த நிலமே சாட்சி. நம் விடியலுக்காக நடந்த களவேள்வியிலே ஆயுதமேந்தியறியாத ஆடவரும் பெண்டிரும் பாலகரும் ஏன் நோயுற்றோரும் கூட குண்டுகளால் சிதைக்கப்பட்டனர். வைத்தியசாலைகள் கல்விக்கூடங்கள் சிதறடிக்கப்பட்டன. வந்தாரை வாழ்வித்த வன்னி மண்ணுக்கு வானமே கூரையானது. அங்கு ஊறுகின்ற கிணற்றிலும் உதிரம் ஊறியது. ஆறு குளம் அதிலும் உதிரம் ஆடியது. சேறு சகதி எதிலும் சடலம் நாறியது.  

அதனால் ஈழமே ஈடழிந்து ஈமவனம் ஆனது. இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின் 1948ல் இயற்றப்பட்ட மனித உரிமைச் சட்டத்தில் உள்ள மிகமுக்கிய அடிப்படை உரிமையான நீரின் உரிமையும் மறுக்கப்பட்டது.  இந்த அவலம் எப்போது நடந்தது? நாகரீகம் மிக்க மனிதர்களாக தம்மையே நினைத்துக்கொள்ளும் இந்த உலகில் 21ம் நூற்றாண்டில் நடந்தது. 
ஆனால் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மறப்போரிலும் அறத்தையே பேணி மனித உரிமைக்கு வழிகாட்டியதை நெட்டிமையார் என்னும் சங்ககாலப் பெண்புலவர் புறநானூற்றில் வரலாற்றுப்பதிவாக பதித்து வைத்துள்ளார்.
"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈந்த
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!                
                                                                    - (புறம்: 9)

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பகைவர் நாட்டினுள் படையுடன் புகுந்ததும் முதலில் போர் நடைபெறப்போகும் இடத்திலுள்ள பசுக்கள், பசுக்களைப் பார்க்கும் பார்ப்பனர், பெண்கள், நோயுற்றோர், புதல்வரைப் பெறாதோர் யாவரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள், எமது அம்புகளை விரைவாகச் செலுத்துவோம் எனப் பறையறைவித்து எல்லோரையும் அவ்விடத்தில் இருந்து அகற்றிய பின்பே போர் செய்தான். 

ஆனால் தன் நாட்டின் உள்ளே தன் நாட்டு மக்களையே அது பாதுகாப்பு வளையம் எனக்கூறி அங்கு போகவைத்து குண்டுமழை பொழிந்து  கொன்றொழிப்பது இந்த நூற்றாண்டுப் வழக்கம். முதுகுடுமிப் பெருவழுதி அறத்தொடு நின்று மறப்போர் செய்தான். அதுவே தமிழர் பழக்கம். அதுவே மனிதப்பண்பு. மாவீரம் விளைந்த நெஞ்சிலேயே அது இருக்கும். அம்மாவீரன் பகைவரிடத்திலும் அறநெறி காத்ததால் பஃறுளி ஆற்றின் மணலிலும் அதிகநாள் அவனது செங்கோல் நிலைத்திருக்க நெட்டிமையார் வாழ்த்தியுள்ளார். 

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் நடந்த போரில் இருவரும் இறந்தழிந்தனர்.
"அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே”                                                                  
                                                                    - (புறம்:62: 7-8)
என அந்த அவலத்தைச் சொல்லுமிடத்தில், 
"வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?           
                                                   - (புறம்:62: 1)
போரிட்டு ஒருவரை ஒருவர் வெல்வோம் என நினைப்பது எவ்வளவு பேதமை, எனத்தொடங்கும் சங்கப்புலவரான கழாத் தலையர், அவ்வரசர்களின் அறத்தையும் மறத்தையும் கூறியதோடு நிற்காது அவர்கள் மானவீரத்தை மாவீரத்தை பொலிக நும் புகழே! என்று வாழ்த்துவதையும் அப்பாடல் சொல்கிறது. போர்களால் வந்த மனித அவலம் சங்கால அறிஞர் நெஞ்சை எப்படி உலுக்கியதோ அப்படியே உண்மையான மாவீரம் பெருமிதம் கொள்ளவைத்ததையும்  சங்கஇலக்கியம் காட்டுகிறது. 

இவ்வாறு  அன்றைய தமிழர் தம்குலமானம் காக்கச்செய்த மறப்போர்களையும் அறத்துடன் நின்றே செய்ததாக சங்கநூல்கள் சொல்லும்.  'அறன் எனப்பட்டதே இன்பம்' என்பதை உணர்ந்ததால் அறத்தை பகைவர்க்கும் செய்தனர். மாவீரத்தை நம் தமிழ் மூதாதையர் எப்படி போற்றினர் என்பதைத் தொடர்ந்து காண்போம். 
இனிதே, 
தமிழரசி.

பக்திச்சிமிழ் [6]

வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறாதவர்
- சாலினி -

வெளிநாடுகளுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் படிக்கவந்த பெற்றோர்களில் பலர் தம் பிள்ளைக்ளுக்கு  தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் அன்று இருக்கவில்லை. அப்படி தமிழ்படிக்க வாய்ப்புக்கிடைக்காதோரும் இப்போது பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களில் தமிழ்பேசத்தெரிந்தாலும் எழுத வாசிக்கத் தெரியாதோரும் தமக்கு முறையாகத் தமிழைக் கற்பிக்கவில்லை என பெற்றோரையே குறை சொல்கிறார்கள். இவர்களைப்போல திருநாவுக்கரசு நாயனாரும் வாயிருந்தும் தமிழைப்படித்து ஆளாகமுடியாது அழித்துவிட்டதாக குறைசொல்கிறார். பெற்றோரை அல்ல சமணரையே குறை சொல்கிறார்.

சமணர்கள் - உத்தமபாளயம்,  [படம்: தினமலர்]

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதற்கமைய அரசனான மகேந்திரவர்மன் சமணசமயத்தைத் தழுவியதால் அவனின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரால்  சமணசமயத்தைத் தழுவி சமணநூல்களையே படிக்க முடிந்தது. எம்பிள்ளைகளைப் போல் அவராலும் தாய்மொழியாம் தமிழைப்படிக்க முடியவில்லை. அன்றைய தமிழகத்தின் வடக்கே மகேந்திரவர்மனும் தெற்கே நின்றசீர்நெடுமாறனும் சமணர் கைப்பாவைகளாய் இருந்தனர். இந்த நிலையிலேயே திருநாவுக்கரசர் தமக்கை திலகவதியார் போன்றோர் மெல்லவிழித்தனர்.  இன்றைய நம் இளம் சந்ததியினரைப்போல் தமிழர் நிலையை எண்ணிக்கலங்கினர். வயதைப் பொருட்படுத்தாமல் தமிழை மிக ஆர்வத்துடன் கற்றனர். மெல்ல எழுந்தது பக்திப்புயல். அது சமணசமய அழிவுக்கு காரணமானது. சமணர் தமிழைப் படிக்கவிடாது அழித்தைத் திருநாவுக்கரசு நாயனாரே தமது தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.

"வாயிருந்துந் தமிழே படித்து ஆளுறா
ஆயிரம் சமணும் அழிவாக்கினான்
பாயிரும் புனல் ஆறை வடதளி
மேயவன் என வல்வினை வீடுமே"            - (பன்னிரு: 5: 58: 9) 

பன்னிருதிருமுறைகளிலே நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாக 3000த்திற்கும் மேற்பட்ட தேவாரங்களைத்  தமிழில் இயற்றிய பேரருளாளரின் நெஞ்சின் குமுறல் இது. அவர் ஒரு சமணர் மேலோ இரண்டு சமணர் மேலோ பழி போடவில்லை. ஆயிரம் சமணும் என ஒட்டுமொத்த  சமணரையும் சுட்டுகிறார்.  திருநாவுக்கரசர் இத்தேவாரத்தில் 'வாயிருந்துந் தமிழே படித்து ஆளுறாதவர்' என தன்னைத் தானே கூறுகிறார். அன்றைய சமணர்களால் எத்தகைய பாதிப்பும் அழிவும் ஏற்பட்டிருந்தால் இத்தகைய ஒரு நெஞ்சைப் பிழியும் ஒரு வரலாற்றுப்பதிவை அவர் பதிந்திருப்பார்.

வருங்காலத்தில் நம் பிள்ளைகளும் அப்பரைப்போல் தம்மை நாம் அழித்ததாக குறைசொல்லாதிருக்க வேண்டுமா? அதற்கு ஒரேவழி அவர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதே. உத்தமபாளையத்திலுள்ள சமண பாளியில் செதுக்கப்பட்டிருக்கும் சமணமுனிவர்களின் புடைப்புச் சிற்பங்களே மேலுள்ள படத்தில் தெரிகின்றன.

அடிசில்.3

லெமன் சீஸ் கேக்
                                                 - நீரா -
தேவையானவை:
எலுமிச்சம் பழம்  -  4 (சாறு)
பிலடெல்பியா சீஸ் - 300 கிராம்
சீனி  -  100 கிராம்
முட்டை**  -  4
பட்டர்  -  75 கிராம்
டபிள் சொக்லேட் சிப் குக்கீஸ்  -  200 கிராம்
Springform Cake Tin

செய்முறை:

1-  குக்கீசை தூளாக்கி அரைப்பங்கு பட்டருடன் சேர்த்துக் கலந்து கொள்க.
2-  அக்கலவையை கேக்டின்னின் அடியிலும் ஓரத்திலும் அழுத்தி வையுங்கள்.
3-  சீசையும் சீனியையும் மிகுதியாக உள்ள பட்டரையும் பஞ்சுபோல் நன்றாக அடித்து தனியே வையுங்கள்.
4-  முட்டையை நன்கு அடித்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறும் சேர்த்து அடிக்கவும்.
5-  அதனுள் அடித்து வைத்துள்ள சீஸ் கலவையை கொஞ்சம் கொஞ்சமாகக் சேர்த்துக் கலக்கவும்.
6-  அக்கலவையை கேக்டின்னுள் இருக்கும் குக்கீஸ் மேல் மெதுவாக இட்டு மட்டமாகப் பரப்பவும்.
7-  அதனை 180° C சூடாக்கிய அவணில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்.

குறிப்புமறக்காது 50 நிமிடத்தால் பார்ப்பது நல்லது.

** முட்டையை நீக்கி சீஸ், சீனி, பட்டர், எலுமிச்சம் சாறு நான்கையும் நன்றாக அடித்து, குளிரூட்டக்கூடிய பாத்திரத்தில் முன்சொன்னது போல் குக்கீசை அடியிலும் ஓரத்திலும் அழுத்தி வைத்து அடித்த கலவையை அதனுள் இட்டு, 2 மணி நேரம் குளிரூட்டியும் எடுக்கலாம். 

செவ்வடிவேளே வருக!

       
                                     பல்லவி
செவ்வடிவேளே வருக சேவடி இன்பம் தருக
எவ்வடிவோடு வரினும் ஏழை எனக்கு அருள்க
                                                                         - செவ்வடிவேளே வருக
                                     அனுபல்லவி
எவ்வனம் போகுமுன்னே என்னெதிர் வந்து நின்று
ஒவ்வனம் யாவும் போக்கி ஒண்தமிழ் இன்பம் அருள்க
                                                                         - செவ்வடிவேளே வருக
                                     சரணம்
கௌவைகள் எல்லாம் தொலைய கணத்தினில் இங்கு வருக
கௌணியர் கோனைப் போல கவித்துவம் எனக்குத் தருக
பவ்வியமாக யானும் பாமாலை புனைந்து சூட பிறவி
பௌவம் தன்னைப் போக்கி பதமலர் சூட்டி அருள்க.
                                                                          - செவ்வடிவேளே வருக
இனிதே,
தமிழரசி.
                                                            

குறிப்பு:
                         சொல்விளக்கம்
1.   சேவடி  -  திருவடி
2.   எவ்வனம்  -  இளமை (எவ்வனம் என்பது வடமொழி சென்று யௌவனம் ஆனது)
3.   ஒவ்வனம்  -  கெட்ட குணம்
4.   ஒண்தமிழ்  -  அழகிய தமிழ்
5.   கௌவைகள்  -  துன்பம்/கலக்கம்
6.   கணம்  -  ஒரு நொடிப் பொழுது
7.   கௌணியர் கோன்  -  திருஞானசம்பந்தர் (மூன்று வயதில் தேவாரம் இயற்றியவர்)
8.   கவித்துவம்  -  கவிதை இயற்றும் திறமை
9.   பவ்வியம்  -  பணிவு
10.  பௌவம்  -  கடல் 

Tuesday 22 November 2011

ஆசைக்கவிதைகள் - 9

வாலைப்பசுங்கிளியே!

ஆண்:  பாப்பாரம் பண்ணை பரந்த
                    கொண்டைக்காரியரே!
           வாப்பா ஆனை! நான்வருவேன்
                     தாப்பாளை பூட்டிடாதே!

ஆண்:  சுற்றி ஒரு வேலி
                      சூழவர முள்வேலி
            எங்கும் ஒரே வேலி
                      எங்கால நான்வரட்டோ?

ஆண்:  வாப்பாவும் திண்ணையில
                     வளர்த்த நாயும் வாசலுக்க
            வாலப் பசுங்கிளியே!
                     வாரவழி எப்படியோ?
                                            - நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
                                            (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Monday 21 November 2011

குறள் அமுது - (10)


குறள்:
"அறிவற்றங் காக்கும் கருவி செருவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண்"                              
                                                                               - 421
பொருள்:
அறிவு என்பது அழிவுவராது எம்மைக் காக்கும் கருவியாகும். பகைவரும் எம்முள் புகுந்து அழிக்கமுடியாத உள்ளரண் ஆக இதுப்பதும் அறிவே.

விளக்கம்:
நெருப்புச்சுடும் என்பதை மற்றவர் சொல்லிப் புரிந்து கொண்டாலும் அன்றேல் நாமே நம் கையைச்சுட்டு அறிந்து கொண்டாலும் - நெருப்பு சுடும் எனும் அறிவைப் பெறுகிறோம். நன்மை எது? தீமை எது? என அறிதலும் அறிவே.

அற்றம் என்றால் அழிவு. மனிதன் காட்டிலும் குகையிலும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும் வாழ்ந்தவன். அவன் இயற்கையோடு போராடிப் பெற்ற அறிவால், இன்று மாடமாளிகையில் இயற்கையின் பல அழிவுகளிலிருந்து தப்பி வாழ்கிறான். மின்னலைப் பார்த்தோம். இடியைக்கேட்டோம். உடனே மழைவரப் போகிறது என அறிவு எமக்குக் கட்டளை இடுகின்றது. நனையாதிருக்க வழிதேடுவோம். அன்றன்றைய காலநிலைகளை அறிவதால் அதற்கேற்ற உடைகளை அணிந்து எமதுடலை அழிவிலிருந்து காக்கிறோம். இவ்வாறு மனிதன் தன்னை அழிவிலிருந்து காப்பதற்கு, தன் அறிவு எனும் படைக்கலத்தை மூலதனமாக்கியே புதுப்புதுப் பொருட்களை உருவாக்கிக் கொண்டான்.

செரு என்றால் சண்டை. எம்மோடு சண்டை, போர் செய்வோர் செருவார். அதனால் எமது எதிரிகளை செருவார் என்பர். யுத்தவிமானம் குண்டுகளைப் பொழிகின்றது. கட்டிடங்கள் நொருங்கிச் சிதறுகின்றன. கால்கள் பதுங்கு குழிகளை நோக்கி ஓடின. ஏன் கால்கள் பதுங்கு குழிகளை நோக்கி ஒடின? முன்னர் நடந்த யுத்தங்களில் குழிகளில் பதுங்கி இருந்தோர் உயிர் தப்பியதைப் பார்த்த அறிவால் மனிதன் பதுங்கு குழிகளை அமைக்கக் கற்றுக்கொண்டான். அப்பதுங்கு குழிகளில் இருந்தவாறே குண்டு போடும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் கருவிகளை உருவாக்கியதும் அவ்வறிவுத்திறனே.

பகைவர் எமது பொருளை, வீடு வாசல்களை, சொந்த பந்தங்களை, நாட்டை அழித்தாலும் அறிவு என்னும் படைக்கலமே பகைவரிடம் இருந்து தப்பும் வழியை எமக்குக் காட்டித்தரும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எமது அறிவையே படைக்கலமாகப் பயன்படுத்துகிறோம். எம் அறிவு எம்மைக் காக்கும் படைக்கலமாய் இருப்பதால் பகைவர்களால் அழிக்கமுடியாத அரணாக இருந்து எம்மைப் பாதுகாக்கிறது.

Sunday 20 November 2011

புரியாத புதிர்



இன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தாங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா?

நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும்  இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. 

எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள்.  திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை  போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். 

நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் "நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார்? அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். 

இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது? இது எனது அறியாமையா? அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா? எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் "தமிழ்கூறு நல்லுலகம்" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். 

அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன? நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம்.

திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் 
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். 
"கொடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கினான் தாழ்வு"           - (குறள்:117)
என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை "நயன்ஈன்று நன்றி பயக்கும்" எனச்சொல்கிறார். 

தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை 
"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது" என்கிறார். 

குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை
"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை"                           -(குறள்: 439)  
எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை"                              -(குறள்: 652)
என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

எமக்குத் தேவைப்பட்ட  நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்'  அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார்.

அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை
"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு"                     - (குறள்: 994)
என்று கூறுமிடத்தில் நன்றியை அறமாகக்  காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் அறத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். 

திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, அறம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை? உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். 

தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான்.
"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"                        - (குறள்: 67)

அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ! எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான்.
"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"     - (குறள்: 70)
தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும்.

இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர்  நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர்.

அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர்
"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது"                     - (குறள்: 101)
எனக்கூறியதோடு 
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து"        - (குறள்: 105)
என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார்.

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா?  அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா? இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள்? நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன்? இதுவும் எனக்குப் புரியாத புதிரே! 

நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம்? என்பதும் எனக்குப் புரியாத புதிரே! நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! பலகோடி நூறாயிரத்தாண்டு! என வாழ்த்துவது போல்  பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும்  Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம். யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ??
இனிதே,
தமிழரசி.

Saturday 19 November 2011

ஒன்றரைக் கண்ணன்



மனிதர் யாவருமே இரண்டு கண் உடையவராகவே இருக்கின்றோம். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு குருடராய் இருந்தாலும் இரண்டு கண்ணின் பார்வையையும் இழந்தவராயோ அன்றேல் ஒற்றைக் கண்ணின் பார்வையை இழந்தவராயோ இருப்பர். எவராவது அரைக் கண்ணின் பார்வையை இழந்திருக்கிறார்களா? அப்படி அரைக் கண்ணின் பார்வையை இழக்கமுடியுமா? எவராவது தனது கண்ணின் அரைக் கண்பார்வை போய்விட்டது என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? அரைக்கண் உள்ளவரையோ அன்றேல் ஒன்றரைக்கண் உள்ளவரையோ நீங்கள் என்றுமே பார்த்திருக்கமாட்டீர்கள்.

ஆனால் ஒன்றரைக் கண்ணன் ஒருவர் இருக்கிறார். நம்மில் பலரும் அவரை பார்த்திருக்கிறோம். எங்கே ஒன்றரைக் கண்ணரைப் பார்த்தோம் எனக்குழப்பமா?  திருநாவுக்கரசு நாயனார் அந்த ஒன்றரைக் கண்ணரைப் பார்த்து எமக்குக் காட்டுகிறார் நீங்களும் பாருங்கள்.

"இன்றரைக் கண்ணுடையார் எங்கும்
            இல்லை இமயம் என்னும்
குன்றரைக் கண்ணல் குலமகட்
             பாவைக்கு கூறிட்ட நாள்
அன்றைக் கண்ணும் கொடுத்து உமை
            யாளயும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர்
            ஒற்றியூருறை உத்தமனே"            
                                                    - (பன்னிருதிருமுறை: 4: 86: 7) 

முக்கண்ணனாகிய சிவன் மலையரசன் மகளுக்கு தன்னுடலின் பாதியப் பிரித்துக் கொடுத்த அன்று தன் நெற்றிக் கண்ணின் பாதியையும் கொடுத்தே உமையாளை அவரது இடப்பாகத்தில் வைத்துக்கொண்டார். நெற்றிக் கண்ணின் அரைக் கண்ணும் வலது கண்ணும் சேர்ந்து இப்போது ஒன்றரைக் கண்ணே சிவனிடம் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரராகிய சிவனே அந்த ஒன்றரைக் கண்ணன். மேலே படத்தில் இருப்பவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஒன்றரைக் கண்ணர்.  
இனிதே,
தமிழரசி.

Friday 18 November 2011

அடிசில்.2

கத்தரிக்காய் குடமிளகாய் தொக்கு
                                                                   - நீரா -

தேவையானவை:
கத்தரிக்காய்  -  450 கிராம் (சுட்டு தோலுரித்தது)
குடமிளகாய்  -  2 (சுட்டு தோலுரித்து வெட்டியது)
தக்காளி  -  100 கிராம் (சுட்டு தோலுரித்து வெட்டியது)
வெங்காயம்  -  1 (சிறிதாக வெட்டியது)
பச்சை மிளகாய்  -  6 (சிறிதாக வெட்டியது)
பூண்டு  -  2 (உரித்து நன்றாகத்தட்டியது)
இஞ்சி  - 1/2 தேக்கரண்டி (அரைத்த விழுது)
கறிவேற்பிலை  -  சிறிதளவு
ஒலிவ் எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம் சாறு  -  1 மேசைக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:
1.  தோலுரித்த கத்தரிக்காயை மிக்சியில் அரைத்துக்கொள்க.
2.  எண்ணெய்யில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை மூன்றையும்  வதக்கி இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
3.  பூண்டு வாசனை வரும் பொழுது வெட்டிய குடமிளகாய், தக்காளி, அரைத்த கத்தரிக்காயையும் உப்பும் சேர்த்து வெந்ததும் இறக்கி எலுமிச்சம் சாறு விட்டுக் கிளறிக்கொள்க.

குறிப்பு: காரமாகத் தேவையெனில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளை இஞ்சி விழுதுடன் சேர்க்கவும்.

Monday 14 November 2011

வந்தருள்வாய் வயலூரா!


ஊனடுத்த உடம்பெடுத்து
          உயிர்வைத்த காரணத்தை
நானுணரக் காட்டியவா
          நான்மறைகள் ஓதியவா
தேனடுத்த மலர்ப்பொய்கை
          தென்றலது இசைபாட
வானடுத்த மழைபோல
          வந்தருள்வாய் வயலூரா.
இனிதே,
தமிழரசி.

தமிழ் என்றன் தாய்


தமிழ் என்றன் தாய் ஆனதால்
          தாய் மடிமீது துயில் கொள்ளத்
தமிழ் நாடி நிதம் ஏங்குறேன்
          தாய் தந்த சுவைப்பாகு முத்
தமிழ் என்பதால் அச்சுவை தேடி
           தமிழ் கலை தோறும் நடமாடுறேன்
அமிழ்தான தமிழன்னை வளமூட்டுவாள்
          அவள் அடியொற்றி புகழ் கூட்டுவேன். 
                                                                         
இனிதே,
தமிழரசி.

சதிராட போயிட்டாரோ?

ஆசைக்கவிதைகள் 8

பண்டைநாளில் கூத்து என்றும் பின்னர் சதிர் ஆட்டம் என்றும் தாசியாட்டம் என்றும் அழைக்கப்பட்ட ஆட்டத்தையே இன்று நாம் பரதநாட்டியம் என்கிறோம். திருமதி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களே சதிர் ஆட்டம் என்றும் தாசியாட்டம் என்றும் அழைக்கப்பட்ட ஆட்டத்தை பரதநாட்டியமாக மெருகேற்றினார். காமரசம் மிகுந்திருந்த தாசியாட்டத்தை பக்திச்சுவையும் மிகுந்திருந்த சதிராட்டத்துடன் இணைத்து காமரசத்தைக் குறைத்து பரதநாட்டியமாக்கி பண்டைத்தமிழர் ஆடற்கலையைக் காப்பாற்றினார்.

வவுனியா மாவட்டத்தில் இன்று கலசனூர் என அழைக்கப்படும் பண்டைய கலைஞனூரில் வாழ்ந்த ஆண்கள் அந்நாளில் சதிராட்டம் என அழைக்கப்பட்ட பரதநாட்டியத்தை ஆடினார்கள் என்பதற்கு சான்றாக இருப்பது இந்தக் கலைஞனூர் நாட்டுப்பாடலே.

அந்நாளில் வவுனியாயில் கலைஞர்கள் வாழ்ந்தவூர் ஒன்று  இருந்தது. அது கலைஞனூர் என்று அழைக்கப்பட்டது. அங்கே வாழ்ந்த மங்கை ஒருத்தி தன் மச்சானைக் காதலித்துத் திருமணம் செய்தாள். அவள் அவனைக் காதலித்த போதும், திருமணத்தின் பின்னும் பாடிய நாட்டுப்பாடல்கள் இவை. அவனும் சதிராட்டக் காரணாக இருந்தது அவ்வூர் கலைஞனூர் என அழைக்கப்பட்டதற்கு சான்றாகிறது.


பெண்:  மச்சான் வளர்த்த சாவல்
                      மான்புள்ளி போட்டசாவல்
            தென்னமரச் சோலையில
                      சிறகடித்து கூவுதுபார்.

பெண்:  வான்கோழி குழம்புவச்சா
                      வாரனென்னு போனமச்சான்
             நான்கோழி ஆக்கு முன்னே
                      வந்திருக்கு மாயமென்ன!

பெண்:  சாமக்கோழி கூவயில
                      சத்தியமாய் வாரனென்னு
             சங்கற்பம் செஞ்சமச்சான்
                      சதிராட போயிட்டாரோ! 
                                                              - நாட்டுப்பாடல் (கலைஞனூர், வவுனியா)
                                            (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)