Monday 10 July 2017

ஈழத்தின் நந்தீஸ்வரர் கோயில்

நந்தீஸ்வரர் [கொனா கோயிலய] இன்றையநிலை

இலங்கையில் பழம்பெருமை வாய்ந்த ‘நந்தீஸ்வரர்’ கோயில் இருந்தது, இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அக்கோயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையாவது  அறிந்திருக்கிறோமா? அக்கோயில் இருந்த வெட்சியூரை எமக்குத் தெரியுமா? வெட்சிப்பூ சங்ககாலப் பழமை வாய்ந்தது. அது பல நிறங்களில் இருந்ததை சங்க இலக்கியங்கள் சொல்வதால் அறியலாம். வெட்சிப்பூவை சிங்களத்தில் ரத்மல் என்பர். நாம் மேலைநாட்டு மோகத்தில் மயங்கி வெட்சியையும் ரத்மல்லையும் மறந்து Ixora என்கிறோம்.

இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் நந்தியைப் பார்த்து மலைத்து நிற்கும் எமக்கு இலங்கையில் அதைவிடப் பழமை வாய்ந்த நந்தீஸ்வரர் கோயிலில் இருந்த நந்தியைத் தெரியாது. அக்கோயிலில் பெரிய ‘நந்திக் கிணறு’ ஒன்று இருந்ததையும் அறிந்தோமில்லை. அக்கோயிலைக் கட்டியவன் கீழைத்தேச நாடுகள் பலவற்றை ஆட்சிசெய்தான் என்பதையும் கண்டும் காணாதவராய் வாழ்கிறோம்.  

நம் முன்னோர் போத்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் ஐந்நூறு ஆண்டுகள் முடங்கிக் கிடந்ததால் இந்நிலை வந்தது என்பது புரிகிறது. எனினும் கல்வெட்டுக்களும் இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் கூட நம் வரலாற்றை ஒன்றாக எடுத்துத் தருகின்றனவே! அவற்றிலிருந்து எமது வரலாற்றை அறிந்து கொள்வது தவறா?

புலம்பெயர் தேசத்து சைவத்திருக் கோயில் ஒன்றியங்களும் சைவ மகாநாடு நடாத்தி வருவோரும் இக்கோயிலைக் கண்டுகொள்ளாது இருப்பது பெருவியப்பே! ஏனெனில் அவர்களால் போற்றப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கழற்சிங்க நாயனாரால் கட்டப்பட்ட கோயில் வெட்சியூர் நந்தீஸ்வரர் கோயில்.  

பல்லவப் பேரரசனாக வாழ்ந்த கழற்சிங்க நாயனாரைப் புறக்கணிப்பதும் ஏனோ?  நந்தீஸ்வரர் கோயிலின் கோயில் மரமான ஆலமரம் அதன் பழமையை பறைசாற்றிக் கொண்டு ஆயிரவருடங்களுக்கு மேலாக இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது. அதன் அடியில் ஆலடிப் பிள்ளையாரும் அமர்ந்து இருக்கிறார்.

ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள பிள்ளையார்

ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு வருடப் பழமையான அக்கோயில் மறந்த சொத்து மக்களுக்கும் இல்லை என்பதற்கு அமைய இன்று ‘கொனா கோவில [Gona Kowila]’ என்ற சிங்களப் பெயரோடு இருக்கிறது. நந்திக் கோயில் என்பதையே சிங்களத்தில் கொனா கோவில என்றழைக்கின்றனர். நந்தீஸ்வரர் கோயில்  நந்திக் கோயிலாக மாறியதற்கும் காரணம் இருக்கிறது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகளான வீரமாதேவி, நந்தீஸ்வரர் கோயிலை கங்கா மணாளனுக்கு சங்கா மணாளன் கட்டினான் என்கின்றாள். அவள் புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தாள் என்பதை முன்னரும் பலமுறை எழுதியிருக்கிறேன்.

கங்கையை தலையில் வைத்திருப்பதால் சிவனை கங்கை மணாளன் என்பர். அவள் குறிப்பிடும் 'சங்கா மணாளன்' யார்? அவனே தமிழுக்காக தன் இன்னுயிரைக் கொடுத்தான் என்று சொல்லப்படும் ‘நந்திக்கலம்பகதின்’ நாயகன். கழற்சிங்க நாயனாரும் அவனே. அவன் அப்படி இறந்ததற்கான எந்தவொரு கல்வெட்டு ஆதாரமும் இல்லை. அவனை மூன்றாம் நந்திவர்மன் என அழைப்பர். சுந்தரமூர்த்தி நாயனாரால்
“கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
          காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”
                                                            - (ப.திருமுறை: 7: 39: 9)
எனப் போற்றப்பட்டனும் அவனே என்பதை ‘பல்லவர் வரலாறு’ என்னும் நூலில் மா இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.

மயிலைத்துறைமுகமும் மாமல்லைத் துறைமுகமும் அவனது ஆட்சிக்குள் இருந்ததைச் சொல்லும் நந்திக்கலம்பகம் அவனை
“ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்”
                                                           - (நந்திக்கலம்பகம்: 22)
என்றும் புகழ்கிறது. அதனால் அவனிடம் பெரிய கடற்படை இருந்ததையும் அறியலாம். 

அவனது கடற்படை சியாம்[Siam] தீபகற்பத்தையும் வெற்றி கொண்டிருக்கிறது. தாய்லாந்தையே அந்நாளில் சியாம் என அழைத்தனர். அங்கு கிடைத்த கல்வெட்டு, "தமிழ்நாட்டின் ‘மணிக்கிராமம்’ எனும் வணிக குழுவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தாய்லாந்தில் குளம் ஒன்றை வெட்டி, அதற்கு மூன்றாம் நந்திவர்மனின் விருதுப் பெயரான ‘அவனி நாராயணன்’ என்ற பெயரை அக்குளத்திற்கு வைத்தான்" என்கிறது. 

முதலாம் இராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு நூற்றம்பது வருடங்களுக்கு முன்பே மூன்றாம் நந்திவர்மனின் கடற்படை கீழைத்தேச நாடுகள் சிலவற்றை வெற்றி கொண்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

பல்லவ அரசனான மூன்றாம் நந்திவர்மன் கி பி 830ல் தெள்ளாறு [தற்கால வந்தவாசி] என்னும் இடத்தில் நடந்த போரில் சீமாற சீவல்லபன் எனும் பாண்டிய அரசனைத் தோற்கடித்து அவனை வைகையாற்றங்கரை வரை துரத்தினான். அதனை அவனது லால்குடி, திருவெற்றியூர் கல்வெட்டுக்களால் அறியலாம். எனினும் சீமாறன் மீண்டும் போர்புரிந்து இழந்த தன் நாட்டின் சில பகுதிகளை மீட்டுக்கொண்டான். [Dictionary of Battles and Sieges, Tony Jaques]. மூன்றாம் நந்திவரமன் பாண்டிய அரசை வெற்றி கொண்டதன் அடையாளமாக சீமாற சீவல்லபனின் மகள் 'மாறம்பாவை' என்பவளையும் மணந்தான். இந்த சீமாற சீவல்லபனின் மகன் இரண்டாம் வரகுண பாண்டியனையே சிவனை பிரம்பால் அடித்ததாக மாணிக்க வாசகர் வரலாறும் கூறுகிறது என்பர்.

சீமாற சீவல்லபனும் மனைவியும் - சித்தன்னவாசல்

பாண்டிய நாட்டில் கலகம் செய்த சிற்றரசன் ஒருவனை சீமாற சீவல்லபன் தோற்கடித்தான். அவன் ஈழத்து அரசனிடம் சரணடைந்தான். ஈழத்தரசன் பாண்டிநாட்டின் மேல் படையெடுத்து வர இருப்பதை சீமாற சீவல்லபன் அறிந்தான். அதனால் அவன் எதிரியும் தன் மகளின் கணவனுமான மூன்றாம் நந்திவர்மனின் உதவியை நாடினான். மூன்றாம் நந்திவர்மன் தன் மகன் நிருபதுங்கவர்மன் தலைமையில் கடற்படையை அனுப்பி வைத்தான். மூன்றாம் நந்திவர்மனின் தாயும் சீமாறனின் மனைவியும் கதம்ப குலத்தவர்கள். அதனால் இளைமையிலேயே நிருபதுங்கவர்மனும் இரண்டாம் வரகுணனும் மிகநெருங்கிய நண்பர்களாயினர் போலும். இருவரையும் திருவதிகை வீரட்டானக் கல்வெட்டும் நண்பர்களெனக் காட்டுகிறது.

இருவரும் சீமாற சீவல்லபனுடன் இலங்கைக்கு படையெடுத்துச் சென்றனர். அவர்களின் கடற்படை புங்குடுதீவில் நிலைகொண்டதாக வீரமாதேவி கூறுகிறாள். சீமாற சீவல்லபன் [கிபி 835ல்] வட இலங்கையில் வந்து இறங்கிய போது அங்கிருந்த தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து அநுராதபுர அரசை வெற்றிகொண்டதால் சிங்கள அரசனான முதலாம் சேனன் மலைப்பகுதிக்கு சென்றான் என சூளவம்சம் சொல்கிறது. சீமாறன் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று அநுராதபுர அரசைக் கைப்பற்றி பல நகரங்களையும் புத்தவிகாரைகளில் இருந்த பொன் படிமங்களையும் பொருட்களையும் சூரையாடினான் என்று சின்னமனூர் செப்பேடும் செப்புகிறது.

அநுராதபுர வெற்றிக்குப்பின் நந்திவர்மனின் கடற்படை இலங்கையின் மேற்குக்கடற்கரை ஓரம் வாழ்ந்த தமிழரின் துணையோடு பாணந்துறை சென்று பாடியிட்டது. களுகங்கை, களனி கங்கை வழியாய் பொல்கொட ஆறு ஊடாகப் பொருட்களை ஏற்றி இறக்க கடற்படைக்கு அது உதவியிருக்கலாம். கடற்கழி அல்லது காயல் [lagoon] இடையே இருக்கும் மண்திட்டு ‘பூசலம்’ என்று சொல்லப்படும். அதாவது நிலத்திற்குள் [பூமிக்குள்] நீர் [சலம்] வந்தது என்ற கருத்தில் பூசலம் என்பர்.  வீரமாதேவி நந்தீஸ்வரர் கோயிலை பூசலக் கோயில் எனக்கூறுகிறாள்.
பழைய நந்தீஸ்வரர் கோயில் போத்துக்கீசர்களால் அழிக்கப்பட்ட காட்சி - கி பி1518

இக்கோயிலுக்கு என் தந்தையுடன் எழுபதுகளின் தொடக்கத்தில் இரத்மலானை புகையிரத நிலையத்தில் இறங்கி புகையிரதவீதியூடாகச் சென்றிருக்கிறேன். நான் சென்றபொழுது தற்போது இருக்கும் கோயில் இருக்கவில்லை. அதைப் பராமரித்து வந்த சிங்களக்குடும்பத்தாருடன் கதைத்து புகைப்படம் எடுத்து வந்தோம். நந்தீஸ்வரர் கோயில் போத்துக்கீசர்களால் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கி பி 1518ல் இடித்து அழிக்கப்பட்டது. அப்போதிருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் கிடைத்த வேல் ஒன்றையும் அக்குடும்பதின் முன்னோரே பாதுகாத்து வந்துள்ளனர். கொழும்பிலிருந்து மேற்குக்கடற்கரையோர புகையிரதப்பாதை 1870களில் போடப்பட்ட காலத்திற்கூட நந்தீஸ்வரர் கோயில் கற்களும் அதற்குள் சங்கமமாயின என்றும் சொன்னார்கள்.

 நந்திப்பீடம் கம்போடியாவில் உள்ள இக்கட்டிடம் போன்றது
2012ல் நான் கம்போடியா சென்றபோது 

சோழர்களை முறியடித்த கோப்பெருஞ்சிங்கனின் பேரன் பல்லவ நரசிம்மன் நந்திஸ்வரர் கோயில் கட்டப்பட்டு நானுற்றி அறுபது வருடங்களின் பின்னர் நந்திக்கிணற்றின் மேலே மூன்றடுக்குப் பீடத்தின் உச்சியின் மேல் 4கோல் உயரமான நந்தி ஒன்றை அமைத்தான். 1கோல் = 5.5அடியாகும்.   அந்தப்பீடத்தைப் போன்ற கட்டிடங்கள் கம்போடியாவில் இருக்கின்றன. நந்தீஸ்வரர் கோயிலை போர்த்துக்கீசப் படை உடைத்தழிக்கும் படத்திலும் பல்லவ நரசிம்மன் அமைத்த நந்தியைப் பார்க்கலாம். வீரமாதேவி, 'உடலில் இருந்து ஐம்புல ஆசைகள் வருவது போல அந்த நந்தியின் முகத்திலிருந்து செவ்வொளி பரவியது' என்கின்றாள்.  நந்தியின் புகழ் நந்தீஸ்வரர் கோயிலை நந்திக் கோயிலாக மாற்றியது.

இன்று நாம் கம்போடியா சென்று கோயில்களைப் பார்த்து அதிசயித்து நிற்கிறோம் அல்லவா! அதுபோல் ஈழத்து நந்தீஸ்வரர் கோயிலைப் பார்க்க அந்நாளில் கம்பூசியா [கம்போடியா], சியாம் [தாய்லாந்து], பாலி போன்ற கீழைத்தேய  நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்தார்களாம். அவர்கள் புங்குடுதீவுத் துறையில் இறங்கி பூநகரியூடாக மன்னார், புத்தளம் வழியாக அக்கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். புங்குடுதீவின் அமைவிடமே அதன் பெருமைக்குக் காரணமாகும்.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
1. இவ்வாக்கத்தை முதலில் 'சப்ததீவுகள்' என்ற நூலுக்காக 1978ல் எழுதினேன். இரத்மலானை நந்தீஸ்வரர் கோயிலை இப்போது தெரிந்த அளவு அப்போது பலருக்குத் தெரியாததால் 'பொன்கை நகர்' பற்றி எழுதியதைக் கொடுத்தேன். முன்பு எழுதியதுடன் சில தரவுகளும் சேர்த்துத் தருகிறேன்.

2. நந்திவர்மன் கடற்படையும் தென்கிழக்காசிய மக்களும் எதற்காகப் புங்குடுதீவுத் துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்? நந்தியின் புகழ் பரவக் காரணம் என்ன? இரத்மலானையின் பண்டைத் தமிழ்ப் பெயர்  என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளை இவ்வருடம் வெளியிட இருக்கும் நூலில் பார்க்கலாம்.

1 comment:

  1. Very useful article,i want to talk to you,please send me your contact number. My mail Id jayakanthan2007@gmail.com

    ReplyDelete